Sunday, August 1, 2010

யுத்தம் 75 - நக்கீரன் கோபால்


அலுவலக வாசலில் இரண்டு ஜீப்புகள் திடீரென வந்து நிற்கின்றன. எப்போதும் நெரிசல் அதிகமாக இருக்கும் ஜானி ஜான்கான் தெருவில் போலீஸ் ஜீப் வந்தால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இரண்டு ஜீப்புகள் ஒரே நேரத்தில், நக்கீரன் அலுவலக வாசல் முன் நின்றதால் அக்கம் பக்கத்திலிருந்தவர்களும் பரபரப்பாகி விட்டனர்.

லோக்கல் ஸ்டேஷனான ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருடன் வந்திருந்த இன்னொருவர், பவானி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். மிரட்டும் தொனியில் வந்து நின்றது அவர்களின் வாகனங்கள்.

பெருசு சுந்தர்தான் இதை முதலில் கவனித்தார். எப்போதும் அலர்ட்டாக இருப்பார். போலீசாரின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொண்டு பேசுவார். நோட்டம் பார்ப்பதுபோல, மஃப்டியில் அலுவலகம் முன் சுற்றிக் கொண்டிருக்கும் போலீஸ்காரர்களையும் அடையாளம் கண்டு, அவர்களிடம் பேச்சுக்கொடுத்து மெல்ல அனுப்பி வைப்பதில் பெருசு சாமர்த்தியசாலி.

இரண்டு ஜீப்புகளில் வந்த அதிகாரிகளிடமும் அவர்தான் பேசினார்.

""வெயிட் பண்ணுங்க...'' என்று அவர்களை கேட்டி லேயே நிறுத்திவிட்டு, இன்டர்காமில் என்னைத் தொடர்பு கொண்ட பெருசு, ""அண்ணே... நம்ம லோக்கல் இன்ஸ்பெக்டரோடு புதுசா ஒரு இன்ஸ்பெக்டரும் வந்திருக்காரு. சம்மன் கொடுக்க வந்திருக்காராம்'' என்றார்.

போலீசின் நோக்கம் நிச்சயமாக நமக்கு எதிராகத்தான் இருக்கும். அதனால், ""பெருசு... அவங்க யாரையும் மேல அனுப்ப வேண்டாம். நான் தம்பி சுரேஷை கீழே அனுப்புறேன்'' என்றேன்.

நமது பொது மேலாளர் தம்பி சுரேஷ், கீழே சென்று போலீசாரிடம் விசாரிக்கிறார்.

""என்ன விஷயமா வந்திருக்கீங்க சார்..''

""சம்மன் கொடுக்கணும்.''

""என்ன கேஸ்?''

""அதை சம்மனை சர்வ் பண்றப்பதான் சொல்வோம்.''

""சாயங்காலம் வாங்களேன் ...''

""சார் இல்லையா?''

""மாலை 4 மணிக்குத்தான் பார்க்க முடியும்...''

சாயங்காலம் வரச் சொன்னதும், சரி என்று புறப்பட்டார்கள். போலீஸ் ஜீப்புகள் நம் வாசலிலிருந்து கிளம்பியதும்தான் பரபரப்பு புழுதி அடங்கியது.

மாலையில் மீண்டும் அதே பரபரப்பு புழுதி. லோக்கல் இன்ஸ்பெக்டருடன் பவானி இன்ஸ்பெக்டர் வந்து நின்றார். தம்பி சிவக்குமார் சம்மனை வாங்கிய பின் என்னிடம் காண்பித்தார். ஏதோ புது பூதத்தைக் கிளப்பப் போகிறார்கள் என்று நினைத்தால், பாட்டிலில் அடைக்கப் பட்ட பழைய பூதம் ஒன்றைத் திறந்து காட்டுகிறார்கள். ஆமாம்... பேராசிரியர் கிருஷ்ணசாமி கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு. நக்கீரன் மீது போடப்பட்ட அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று.

வீணாப் போன காளிமுத்து ஐ.ஜி.யால் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஏற்பாடு செய்து காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்தித்த ஒரு டீமுடன் சேர்ந்து சென்றவர் சட்டப் பேராசிரியரான கிருஷ்ணசாமி. போலீசால் இவர்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்ற சந்தேகத்தில் எல்லோரையும் ஃபைன் போட்டு உட்கார வைத்து விட்டான் வீரப்பன். பலவித உபாயங்களுக்குப்பிறகு அவனிடமிருந்து இவர்கள் மீண்டு வந்தனர். நக்கீரன் சொல்லித்தான் வீரப்பன் தங்களை பிணைக் கைதியாக்கினான் எனப் போலீசுடன் சேர்ந்து இவர்கள் எழுதிய திரைக்கதையின் அடிப்படையில் 1998-ல் போடப்பட்ட இரண்டு பழைய வழக்கு கள் சம்பந்தமான சம்மனைத்தான் புதிய பூதம் போலக் கொண்டு வந்து மிரட்டிக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். இந்தப் பொய் கேஸ் தொடர்பாகவும் 10 நாள் விசாரணையில் சகட்டுமேனிக்கு கேள்விக்கொக்கிகளைப் போட்டுப்பார்த்தது டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையிலான டீம். அந்தக் கொக்கியில் மீன் அல்ல, புழு கூட மாட்ட வில்லை. உண்மை இருந்தால்தானே ஆதாரம் இருக்கும்!

ஏற்கனவே இந்த வழக்கில் பல குளறுபடிகள் இருந்தன. போலீஸ் தரப்பு இதை அவசர அவசரமாக கையிலெடுத்து எங்களுக்கு சார்ஜ்ஷீட் கொடுக்க வேண் டும் என்று கோர்ட்டில் தெரிவித்து, தேதி வாங்கி சம்மன் அனுப்பி யிருந்தார்கள். சம்மனைப் பெற்றுக்கொண் டேன். எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று பார்த்தால், மறுநாள் காலையிலேயே ஆஜராகவேண்டும் என்று இருந்தது. நாளை ஆஜராக வேண்டிய வழக்கிற்கு, இன்று சம்மன் கொண்டு வந்து கொடுக்கும் போலீசின் அவசரமும் அதற்குள் ஒளிந்திருக்கும் நோக்கமும் புரிந்தது.

கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கில் என்னையும் தம்பிகள் சிவசுப்ரமணியன், ஜீவா ஆகியோரையும் சேர்த்திருந்தது போலீஸ்.

நம்மைப் பொறுத்தவரை நீதி மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதனால், கோர்ட்டையும் சட்டதிட்டங்களையும் மதித்தே நக்கீரன் நடந்துகொள்ளும். போலீசார் போடுவது பொய்வழக்குதான் என்று தெரிந்தாலும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமோ அதனை மேற்கொள்வதுதான் வழக்கம். கோர்ட்டைப் புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அடுக்கடுக்கான வழக்குகள் போடப்பட்டபோதும், அனைத்து வழக்குகளிலும் ஆஜராகி சட்டரீதியாக வெல்வதே நக்கீரனின் இயல்பு. அதனால், கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கிலும் ஆஜராவது என்று முடிவெடுத்தேன். அதற்கொரு காரணமும் இருந்தது.

இந்த வழக்கில் தம்பி சிவா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால், அவரையும் ஆஜர் படுத்துவதற்காக கோவை சிறையிலிருந்து சத்தியமங்கலம் கோர்ட்டிற்கு அழைத்து வருவார்கள். அப்போது, தம்பியைப் பார்க்கலாம், பேசலாம் என்பது என் கணக்கு. ஏனென்றால், சில நாட்களுக்கு முன் தன் துணைவியாரிடம் தம்பியும் இதைத்தான் எதிர்பார்ப்புடன் சொல்லியிருந்திருக்கிறார்.

அன்று காலையில், சிவாவின் துணைவியார் ஜெயந்தியிடமிருந்து போன்.

""அண்ணே.. மாமனார் உடல்நிலை ரொம்ப சீரியஸா இருக்கு. மாமாவை (சிவாவை) பார்க்கணும்னு சொல்றார். மாமனார் ஒரு வாரம்தான் தாங்குவார்னு எல்லோரும் பயமுறுத்துறாங்க. எப்படியாவது மாமாவை அழைச்சிட்டு வந்து, மாமனாரை பார்க்க வைக்க முடியுமா?''

-பதட்டம் மிகுந்த குரலில் பேசி னார் தங்கை ஜெயந்தி.

சிறைக் கெடுபிடிகள் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அதுவும் நக்கீரன் சம்பந்தப்பட்டது என்றால் ஸ்பெஷல் ட்ரீட் மெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் சிறை அதிகாரிகள். மேலிட உத்தரவு தினந்தோறும் வந்துகொண்டே இருக்கிறது. சிவாவின் அப்பாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னாலும் மனிதாபிமானத்தோடு சிறை அதிகாரிகள் நடந்துகொள்வார்களா என்பது சந்தேகம் தான். இருந்தாலும், முயற்சிக்கிறேன் என்று தங்கை ஜெயந்தியிடம் தெரிவித்தேன்.

விறுவிறுவென வேலைகள் ஆரம்ப மாயின. அட்வகேட் ப.பா.மோகனைத் தொடர்புகொண்டு, அப்பாவைப் பார்க்க சிவாவை வெளியில் கொண்டு வர முடியுமா என விசாரித்தேன். அவர், வக்கீல் அபுபக்கரை கோவை சிறைக்கு அனுப்பி விசாரிக்கச் சொன்னார். தம்பி சிவா, ஒரு ஆள் மூலம் அபுபக்கருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

""அப்பாவை எப்படியாவது பார்த்தாகணும். அது சம்பந்தமாகத்தான் எங்க ஆசிரியர்கிட்டே பேசணும்'' என்று சொல்லியிருக் கிறார் சிவா.

நான் தம்பி பாலுவைத் தொடர்பு கொண்டேன். அவரது முத்தூரிலிருந்து சிவாவின் அப்பா இருக்கும் பெருங்கரணைப் பாளையம் பக்கம். ""தம்பி.... நீங்க உடனே சிவா அப்பாவைப் போய் பார்த்து, அவரோட உடல்நிலை எப்படி இருக்குன்னு எனக்குத் தகவல் கொடுங்க.''

""சரிங்கண்ணே..''

உடனடியாக பெருங்கரணைப்பாளை யத்துக்குக் கிளம்பிச் சென்ற பாலு, கொஞ்ச நேரத்தில் தொடர்புகொண்டார்.

""அண்ணே... சிவா அப்பாவோட உடல்நிலை மோசமாகத்தான் இருக்கு. ஊர் மக்களெல்லாம் நம்பிக்கையில்லாமத் தான் பேசுறாங்க. அந்த கிராமத்திலே சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்காது'' என்றார்.

பாலுவிடம் பேசியதும் உடனடியாக, ஜீவாவை லைனில் பிடித்தேன். ""தம்பி... நீங்க உடனே சிவா அப்பாவைப் போய் பாருங்க. அங்கிருந்து அவரை அழைச்சிக்கிட்டு, ஈரோட்டுக்குப் போய் ஆஸ்பிட்டலில் சேர்த் திடுங்க. கவனம் தம்பி...''

""சரிங்கண்ணே..''

சிவாவின் அப்பா, ஈரோட்டில் அட்மிட் செய்யப்பட்டார்.

இணையாசிரியர் தம்பி காமராஜ் கோவைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார். தம்பி சிவாவைப் பார்ப்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

""தம்பி.. நீங்க சிவாவைப் பார்த்து தைரியம் சொல்லுங்க. அவர் அப்பாவோட உடல் நிலையையும் விசாரிச்சிட்டு வாங்க'' என்றேன். கோவை சென்று திரும்பிய தம்பி காமராஜ் சிறையில் சிவாவை சந்தித்தபோதும், என்னைப் பார்க்க வேண்டும் என்பதை சிவா சொல்லி யிருக்கிறார்.

""அண்ணனை எப்படியும் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜராகச் சொல்வாங்க. அப்ப என்னையும் ஆஜர்படுத்துவாங்க. அந்த சமயத்தில் அண்ணனை சந்திச்சிடலாம் ...''

-இதெல்லாம் நடந்த சில நாட்களில் தான், சம்மனோடு வந்து நின்றார் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன். பொய் வழக்குக்கு இத்தனை முஸ்தீபு என்றாலும், அந்தப் பொய் வழக்கும் நமக்கு ஒரு விதத்தில் பய னுள்ளதாகத்தான் இருக்கிறது என்று நினைத்தேன்.

சிவாவை சந்திக்கும் ஆர்வத்துடன் சத்தியமங்கலம் புறப்பட்டேன். மறுநாள், வழக்கறிஞர்களுடன் கோர்ட்டில் ஆஜர். தம்பி சிவாவை எப்போது அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

""போலீஸ்தான் வந்தது... ...''

""சிவா...?''

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment