Friday, June 11, 2010

காட்டுக்குள் வீரப்பனாக... ராவணன் விக்ரம்


இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள ராவணன் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கிடையே வரும் ஜூன் 18ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படம், ஹிந்தியில் ராவண், தெலுங்கில் வில்லன் என்ற பெயர்களில் வெளியாகிறது.

தமிழ் ராவணனில் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரபு,கார்த்திக், பிருத்விராஜ், பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். விக்கிரமின் கதாப்பாத்திரத்தை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நடித்துள்ளார். படம் வெளியாகவிருக்கும் இந்நேரத்தில் ராவணன் குறித்து நடிகர் விக்ரம் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

தமிழ் ராவணனைப் பொருத்தவரைக்கும் எனக்கு ஒரு பயமும் இல்லை. நிச்சயம் அது ஹிட் ஆகும்.

ஆனால்,ஹிந்தி ’ராவண்’ பொருத்த வரைக்கும் கொஞ்சம் பயம் இருக்கு.

ஏனென்றால், நான் முதன் முதலா ஹிந்தியில் நடித்துள்ளதால், எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருக்கு. மேலும், நானே ’டப்பிங்’கும் பேசியுள்ளேன்.

ஹிந்தி ரசிகர்கள் என்னை எப்படி ஏற்றுக் கொள்வார்களோ என்ற அச்சம் கொஞ்சமிருக்கு. காட்டுக்குள் நடித்ததைப் பற்றி நிச்சயம் நான் சொல்லியாகனும்.

நடித்ததுன்னு சொல்றத விட வாழ்ந்ததுன்னே சொல்லலாம். தங்கக்கூட உருப்படியா ஒரு இடம் இல்லாம சூட்டிங் நடத்தியிருக்கோம்.

சில நேரங்களில், எப்படா சூட்டிங் முடியும் என்று நினைக்கத்தோணும். அந்த அளவிற்கு எல்லோருக்குமே டென்ஷனா இருக்கும்.

படத்துல நடித்துக் கொண்டிருக்கும் போது, கிட்டத்தட்ட ஒரு ’காளை’ யப் போல நடிச்சேன். பத்து பேரக் கூட அடிச்சுப் போட்டிட முடியும் என்கிற மாதிரியான ஒரு உணர்வு இருந்தது. என்னையப் பார்த்தாலே எல்லோரும் பயப்படுற மாதிரி இருப்பேன்.

ஆனால்,ஹிந்தி ராவண்ல அப்படியே நேர் எதிர்.அழகான, மென்மையான ஒரு கதாப்பாத்திரம். இரண்டுக்கும், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்ல. இரண்டு கதாப்பாத்திரங்களிலும் ஒரே நேரத்திலும் நடிக்க வேண்டி இருந்தது. அப்ப என்னோட மனநிலைய இரண்டுக்கும் ஏற்றற்போல பக்குவமாக மாற்றிக்கொண்டேன்.

‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில், தமிழ் ராவணனும், ஹிந்தி ராவணும் வெளியிடப்பட்டப் பொழுது,அனைவரும் வியந்து பார்ர்த்து பாராட்டினார்கள்.



ஐஸ்வர்யாராயுடன் நடித்தது மகிழ்ச்சியா இருந்தது. அபிஷேக் பச்சன் நல்ல நண்பர். அவர், என்னோட படங்கள் நிறையா பார்த்திருக்கிறார். பிரியாமணியும் கூட என்னோடு சிறப்பா நடிச்சிருக்காங்க. ஹிந்தியில், நானும் பிரியாமணியும் நடித்துள்ள காட்சிகள் நிச்சயம் பாராட்டப்படும்.

காட்டுக்குள் வாழ்ந்த போது, வீரப்பன் எப்படி எல்லாம் வாழ்ந்திருப்பார் என்று யோசிக்கத் தோணுச்சு. வீரப்பனப் பத்தி மணிரத்தினம் சார் சொல்லக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.

போலீஸ் என்னைத் துரத்தும் காட்சிகளில், வீரப்பன் எப்படி எல்லாம், போலீஸிடம் இருந்து தப்பித்திருப்பார் என்ற உணர்வு தான் எனக்குள் எழும். அவர மனசுல வச்சுத்தான் நடிச்சேன் என்றே கூட சொல்லலாம்.

நான்,அன்னியன் படத்துல நடித்தப் போது, தெரிந்த நடிகர்கள் சில பேரு சொன்னாங்க. ஏன் இப்படி 2,3 வருசமுன்னு, வருசக் கணக்கில் நடிச்சு காலத்த விரயமாக்குறீங்க, இந்தக் கால இடை வெளியில் 4,5 படங்களில் நடித்தால் உங்களுக்கும் பேரும், புகழும் கிடைத்திருக்குமே என்றார்கள். ஆனால், அந்த அன்னியன் படம் தான் ஹிந்தியிலும் வெளியாகி எனக்குப் புகழத் தந்தது.

அதே மாதிரிதான், இந்த ராவணன் படமும், தமிழ், ஹிந்தி,தெலுங்கில் மட்டுமன்றி உலகெங்கும் எனக்கு புகழைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு, விக்ரம் ஆனந்தப் பூரிப்புடன் பேட்டியளித்தார்.

No comments:

Post a Comment