Monday, June 14, 2010

ஜாபர் சேட் இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.


shockan.blogspot.com

அமைதிப் பூங்காவான தமிழகம் வன்முறையின் விதைக்கலனாக மாறுவது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. தீவிரவாதம் தமிழகத்தில் வேரூன்றுவது என்பது வருங்காலச் சந்ததியரின் வாழ்க்கையைச் சீர்குலைக்கும் என்பதிலும் கட்சிபேதமின்றி யாருக்கும் எந்தவிதச் சந்தேகமும் இருக்க வழியில்லை.

விழுப்புரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் 1 மீட்டர் நீளத்துக்கு ரயில்வே தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தி. இது நிச்சயமாகத் தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல.

சனிக்கிழமையன்று இந்த ரயில் தடத்தில் சென்ற மலைக்கோட்டை விரைவு ரயில் அதிர்ஷ்டவசத்தால் மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பியது. விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் அனைவரையும் தினமணி பாராட்டுகிறது.

தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர்கள் என்று குறிப்பிட்டு இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தைக் கண்டிப்பதாக அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தெரிவிப்பதாகக் காவல்துறை கூறுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றால் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மன்னிக்கப்படக் கூடாது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக் கூடாது. மேலும் பல அப்பாவி உயிர்களைப் பலி கொண்டு தங்களது பழியைத் தீர்த்துக்கொள்ள முயலும் யாரையும் அவர்களது லட்சியம் நல்லதாகவே இருந்தாலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேநேரத்தில் மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே ஒருசில மணிநேரங்களில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட் இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

சம்பவம் நடந்த இடத்தில் காணப்படும் சில துண்டுப் பிரசுரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவசர ஆத்திரத்தில் சாதாரண பொதுஜனம் முடிவு எடுப்பது சகஜம். பத்திரிகையாளர்கள்கூட பல சந்தர்ப்பங்களில் கண்ணில் தெரியும் தடயங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு எழுதிவிடுவதும் உண்டு. அப்படி நடக்கும்போதெல்லாம் காவல்துறையினர் அதை வன்மையாகக் கண்டிப்பதுடன் முழுமையான விசாரணை இல்லாமல் முடிவுக்கு வருவதும் கருத்துத் தெரிவிப்பதும் தவறு என்று பத்திரிகையாளர்களைக் கடிந்து கொள்வதும் உண்டு.

ஆனால் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல்துறையினர் முழுமையான விசாரணை செய்துஇ குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருந்திருந்தால் அவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள் என்பது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தலையெடுக்கும் தீவிரவாதம் எந்தவகையினது ஆனாலும் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியதுதான். ஆனால்இ இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு ஏதாவது சக்திகள் உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டிய கடமை காவல்துறைக்கு உண்டு.

எல்லா நாடுகளும் அண்டை நாடுகளில் தங்களது உளவுத்துறையின் மூலம் செயல்படுவது புதியதொன்றும் அல்ல. இந்திய நீதிமன்றங்களால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சர் என்கிற போர்வையில் தனது குழுவுடன் அழைத்துவந்து இந்தியப் பிரதமருடன் கைகுலுக்க வைத்து தனது தாயகம் திரும்பியிருக்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. இதனால் எழும்பியிருக்கும் சர்ச்சையும் இந்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கும் தர்மசங்கடமும் கொஞ்சநஞ்சமல்ல.

சமீபகாலமாக தமிழ்நாட்டில் மட்டுமே பேசப்பட்டு வந்த ஈழத்தமிழர் பிரச்னை இப்போது தேசிய அளவிலான ஊடகங்களில் முன்னுரிமை தரப்படுகின்றன. பிரச்னையைத் திசைதிருப்ப இலங்கை அரசின் உளவுத்துறையேகூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்னையை மூடி மறைக்க முற்பட்டிருக்கக்கூடாது?

துண்டுப் பிரசுரத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுப்பது சிறுபிள்ளைத்தனம். யாரும் யார் பெயரிலும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு சம்பவம் நடந்த இடத்தில பார்வையில்படுவதுபோல போட்டிருக்கலாம். பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு துப்புத்துலக்கி தக்க ஆதாரங்களுடன் உண்மையை வெளிக்கொணர்வதுதான் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்க்கும். தவறு இழைத்தது விடுதலைப்புலி ஆதரவாளர்களாக இருந்தாலும் இலங்கை அரசின் கைப்பாவைகளாக இருந்தாலும் வேறு தீவிரவாத இயக்கத்தவர்களாக இருந்தாலும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

சதிகாரர்கள் யாராக இருந்தாலும் அப்பாவி மக்களைப் பழி வாங்காதீர்கள். இந்த நாசவேலையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு ஆயிரம் நியாயங்கள் சொன்னாலும் ராமனுக்கு சடாயு சொன்னதைத்தான் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சீதையை ராவணன் கவர்ந்து செல்ல துக்கம் தாளாமல் காணும் அனைத்தின்மீதும் கடும்கோபம் கொள்ளும் ராமனிடம் சடாயு தன் உயிர் பிரியும் முன் சொல்கிறார்: "ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை; உள்ளம் ஆறுதி'.

தனிப்பட்ட ஒருவரின் துயரத்தை அனைவருக்குமாக மாற்றுகிற பழி வாங்கும் படலத்துக்கும் திசைதிருப்பும் முயற்சிக்கும்இ வெறிச்செயல்களுக்கும் எங்கள் தமிழகம் களமாவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது!

No comments:

Post a Comment