Sunday, June 20, 2010

நியாய தராசில் - ராவணன்


உலக அரங்கில் பேசப்படும் இயக்குனர் மணிரத்னம் இயக்கதில் 'ராவணன்'. தமிழ் ரசிகர்களை முழுக்க முழுக்க ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கும் படம்
என்பதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. இது படம் பார்த்த அனைவருக்கும் தெளிவாவே விளங்கியிருக்கும். அப்படி என்ன ஏமாற்றம்? தமிழுக்கு நியாயம் செய்வதை விட இந்திக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணி. இது இராமாயண்ம் அல்ல, ராவணன் என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் புனைபெயர் என்று
தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார் இயக்குனர்.


வீரா என்கிற வீரய்யனாக விக்ரம். வீரா, ஊர் மக்களைப் பொருத்த அளவில் அவன் காவல் தெய்வம். சட்டத்தின் பார்வையில் தீவிரவாதி. அதனால் அதிரடிப்படை அவனை தேடி வருகிறது. ஆனால் வீரா தீவிரவாதி என்று சொல்லப்படுவதற்கு ஒரு நியாயமான காரணம் கூட திரையில் காட்சியாக வரவில்லை. டி.ஜி.பி தேவின் மனைவியை (மனைவி ராகினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன்) வீரா கடத்தி சென்ற பிறகே வீரா குற்றவாளியாக கருதப்படுகிறான். அந்தக் குற்றத்திற்காகத் தான் சட சடவென குண்டுகள் தெரிக்க வீராவை சுட்டுத் தள்ளுகிறார் தேவ். அப்படியானால் வீரா முதலில் தேடப்பட்டு வருவதற்கான காரணம்???

படத்தில் காட்டப்படும் மலைப் பகுதிகள் திருநெல்வேலியை சார்ந்தவை என சொல்லப்படுகிறது. அனால் அம்மக்கள் எதை சார்ந்தவர்கள், அவர்கள் கலாச்சாரம், அவர்கள் வாழ்க்கை முறை எதுவுமே படத்தில் காட்சியாக காட்டப்படவில்லை. அவர்கள் பிரச்சனை தான் என்ன? வீராவை எதற்காக அவர்கள் நம்புகிறார்கள், எதுவுமே படத்தில் இல்லை.

வீராவின் தங்கை வெண்ணிலாவாக ப்ரியாமணி. ஃப்லாஷ் பேக்கில் வரும் ப்ரியாமணிக்கு அரண்மனையில் திருமணம் நடக்கிறது. என்னடா இது! சரி அதை விடுங்கள், திருமணத்தின் போது வீட்டுக்குள் அரவாணிகளின் ஆட்டம். தமிழ் நாட்டில் இப்படி ஒரு திருமணமா? இதுபோன்ற காட்சிகளில் மிகவும் தெளிவாகவே புரிகிறது. தமிழ் ராவணன் இந்தி ராவனின் போட்டோ காப்பி என்று!


வீராவாக வரும் ராவணன், தான் ஒரு ’எச்சக்கை’ என்று தானே சொல்கிறான். தன்னைத் தானே அவன் அப்படி இகழக் காரணம்?? காவல் தெய்வமாக கருதப்படும் வீரா ’எச்சக்கையா’? அதுவும் அதை அவன் வாயாலேயே சொல்வதா? இராமாயணத்தில் இராவணன் தன்னைத் தானே இகழ்ந்துகொண்டதாக எதுவும் இல்லையே. ஒரு காட்சியில் உடைந்துபோன கடவுள் சிலை காண்பிக்கப்படுகிறது. அந்தக் கடவுளிடம் சென்று தன்னை காப்பாற்றும்படி கேட்கிறாள் ராகினி. அப்போது தன் கணவனைப் பற்றி வீராவிடம் சொல்லும் ராகினி. தன் கணவன் ஒரு கடவுள் மாதிரி என்று சொல்ல, உடனே வீரா மிகவும் ஆக்ரோஷமான குரலில், கடவுளா? நான் பிசாசு, அனைத்தையும் விடப் பெரியவன் என்று கத்துகிறான்.அப்படியானல் கடவுளை எதிர்கிறவனா இராவணன். அப்படியானால் இராவணன் சிவபெருமான் பக்தன் என்பதும் அவன் பல பூஜைகளை ஆதரித்தவன் என்பதும் மணிரத்தினதிற்கு தெரியாமல் போனதா??


இப்படி பல கேள்விகள் இருந்தாலும், இவை அனைத்தும் சினிமாவிற்கான சமரசங்கள் என்று எடுத்துக் கொள்வோம். டெக்னிகல் விஷயத்திற்கு வருவோம். இராவணன் படத்தைப் பொருத்த அளவில் பல ’செட்டு’கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இவை அனைத்தும் ’செட்டு’தான் என்று பார்க்கும் ரசிகனுக்கு நன்றாகவே தெரியும். இதுவே படத்தின் முதல் பலவீனம். படத்தில் இயல்பு தொலைந்து வண்ணம் பூசப்பட்ட அட்டை சுவருகளாய் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சத்தமாகவோ மௌனமாகவோ எதையோ ஒன்றை செய்துகொண்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். விக்ரம் மலைமேல் இருந்து சரிந்து விழும்போது துவங்கும் ’உசுரே போகுது’ பாடல்... மெய் சிலிர்க்குது. அனால் ’காட்டு சிரிக்கி’ போன்ற பாடல்கள் வீணடிக்கப்படிருப்பதே இங்கு வேதனை. அதில் மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்! கூடவே வைரமுத்துவின் வரிகளும் ஓரம் கட்டப்பட்டுவிட்டன.

சுஹாசினி மணிரத்னத்தின் வசனங்கள், சில காட்சிகளில் சாதாரன தமிழில் இருக்கிறது, அடுத்தக் காட்சியில் வட்டார வழக்காக மாறிவிடுகிறது. சில வசனங்கள் புரிந்தாலும் அது எதற்காக வருகிறது என்பது புரியவில்லை.


படத்தின் காட்சிக் கோர்ப்புகள் கத்தரி போட்ட கதர் துணி மாதிரி சிதறிக்கிடந்தன. பிரபு, ப்ரியாமணி, கார்த்திக் ஏன் விக்ரம், ஐஸ்வர்யா ராய் அனைவரின் கதாப்பாத்திர படைப்பிலும் ஒரு அழுத்தமான பதிவு இல்லாமல் போனது என்பதே உண்மை. இந்த நடிகர்களின் உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதே இதில் இன்னொரு உண்மை. ராவணன் படத்தின் மூலம் விக்ரமிற்கு கிடைத்த ஒரே பலன் இந்திக்கு ஒரு எண்ட்ரி மட்டுமே. அனால் இவை அனைத்தையும் சரிசெய்யும் வகையில் சந்த்தோஷ் சிவன் - மணிகண்டன் கேமரா வித்தைகள். கேமரா வித்தைகளுக்காகவே படத்தை இன்னொரு முறை பார்க்கலாம்.


இராவணன் இறக்கும் போது வரும் பாடல் இது, நான் வருவேன்... மீண்டும் வருவேன்... உனை நான் தொடர்வேன், உயிரால் தொடுவேன்... இதற்கான அர்தத்தை மணி அடுத்த படத்தில் சொல்வாரோ!


இராவணனின் மைனஸ்:


கதாப்பாத்திர படைப்பு, காட்சிக் கோர்ப்புகள், வீணடிக்கப்பட்ட விக்ரமின் மெனக்கெடல், கலை,


இராவணனின் ப்ளஸ்:


கேமரா வித்தைகள்

1 comment:

  1. ஸ்ரீனிJune 21, 2010 at 9:44 PM

    //இதற்கான அர்தத்தை மணி அடுத்த படத்தில் சொல்வாரோ!// இன்னொரு ராவணனா..தாங்காது
    சாமியோவ்.. ஆளை வுடுங்க...

    சொன்ன மாதிரி, மணிரத்னம் இத்தோட படமெடுக்கறதை மூட்டை கட்டி வெச்சுட்டு ரிட்டயராயிடட்டும்னு அந்த ராமரை வேண்டிக்கறேன்!!

    ReplyDelete