Wednesday, June 16, 2010

நிஜ ஹீரோ!


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்று மனுநீதி நாள். பொதுமக்களின் வரிசையில் நின்ற அந்த முதியவர், கலெக்டர் ராஜேந்திரனிடம் கத்தை கத்தையாய் மனுக்களை கொடுக்க, அதை கலெக்டர் கவனமாக வாங்கி உடனடியாக பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளோ அந்த முதியவரை பயப் பார்வை பார்த்தபடி இருந்தனர்.

யார் இவர்?

""அவர் பேரு சின்னையன். சட்டத்துக்கு புறம்பா செயல் படறவங்களை குறிவச்சி பெட்டிஷன் போட்டு குடைச்சல் தருவாரு. அதனால்தான் இவரை கண்டா எல்லாருக்குமே பயம். குறிப்பா திருவண்ணாமலை மாவட்டத்துல 301 இடத்துல டாஸ்மாக் பார்கள் நடத்த முடிவுபண்ணி அரசாங் கம் ஏலம் விட்டப்ப... 46 பார்கள்தான் ஏலம் போச்சி. ஆனா மாவட்டத்துல அரசு கணக்கைவிட அதிகமா 350 இடங்கள்ல பார்கள் கள்ளத்தனமா நடக்குது. இந்த பார்களை உடனே மூடணும்னு சி.எம்.வரை புகார் மேல புகார் அனுப்புனாரு. விசாரணையில் அவரது புகார்கள் உண்மைன்னு தெரிஞ்சி ஏலத்தில் விடப்பட்ட பார்களைத் தவிர மற்றதை மூட உத்தர விட்டாங்க. இதனால் சின்னையனால் பாதிக்கப்பட்ட சிலர் போலீஸை வச்சி அவரை கைது செய்து உள்ளே தள்ளினாங்க. அதுக்கப்புறம் நடந்ததை அவர்கிட்டயே கேளுங்க'' என சின்னையனின் முகவரியைத் தந்தார் அங்கிருந்த ஊழியர்.

இராமலிங்கனார் தெருவில் தனது டீக்கடையில் இருந்த சின்னையனிடம் பேசியபோது... ""பார்களை நடத்தின தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு புள்ளி என்னைத் தூக்கி ஜெயில்ல போடச்சொல்லி டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு பணம் தந்தாரு. அவரும் பணத்துக்கு விசுவாசமா 23.10.2009-ந் தேதி காலை என்னை ஸ்டேஷனுக்கு அழைச்சி வரச்சொல்லி பொதுவா பேசுனவரு... "சின்னையா நீ கவிதை எழுதுவியாமே? ஒரு கவிதை எழுது, இதோ வந்துடறேன்'னு வெளியில போனாரு. நானும் எழுத ஆரம்பிச்சேன்.

மதியம் 1.30மணி இன்ஸ்பெக்டர் ரூமைவிட்டு வெளியில வந்தேன். "உங்களை அரெஸ்ட் பண்ணியிருக்கு. நீங்க வெளியில போகக் கூடாது'னு போலீஸ்காரர் ஒருத்தர் தடுத்தாரு. ஜட்ஜ் வீட்டுக்கு கொண்டு போனாங்க. அவங்க நீங்க பஜார்ல கத்திய காட்டி வியாபாரி ஒருத்தர மிரட் டியதா வழக்குன்னாங்க. என் வயசுக்கு நான் மிரட்டினா பயப்படுவாங்களா? இது பொய் வழக்குன்னேன். அவங்க கோர்ட்ல சொல்லுங்கன்னு 15 நாள் ரிமாண்ட் பண்ணாங்க.

திருவண்ணாமலை சப்ஜெயிலுக்கு கொண்டு வந்தப்ப ஜெயிலர் சாப்பிட் டீங்களான்னு கேட்டாரு. காலையில இருந்து சாப்பிடலைன்னு சொன்னேன். இங்க சாப்பாடு தர்ற டைம் முடிஞ்சிப் போச்சுன்னாரு. என்கூட வந்த போலீஸ் காரங்க பிரியாணி சாப்பிட்டுட்டு வரலாம் வான்னு கூப்பிட்டாங்க. நான் உங்க பணத்துல சாப்பிட விரும்பல, என்னை அரெஸ்ட்பண்ணி வச்சிருந்தப்ப அரசாங்க செலவுல சாப்பாடு வாங்கித் தரணும்னு விதியிருக்கு. மதியம் ஏன் வாங்கித் தரலை. அந்தப் பணம் என்னாச்சின்னு கேட்டேன். முழிச்சாங்க. அது தெரியிறவரை சாப்பிடமாட் டேன்னுட்டேன். இதப்பாத்த ஜெயிலர் இவரை இங்க வச்சிக்க முடியாது, வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு போங்கன்னுட்டாரு.

வேலூருக்கு நைட் 10.30-க்கு வண்டி போச்சு. என் உடம்பு ரொம்ப துவண்டுப் போயிருந்ததால அதிகாரிங்க என்னை, வேலூர் ஜி.ஹெச்.சுக்கு அனுப்பினாங்க. நைட் 11.30-க்கு டாக்டர் குளுக்கோஸ் போட பாத்தாரு. நான் மறுத்து உண் ணாவிரதம்னேன். மறுநாள் பெரிய டாக்டருங்க வந்து என்னை மனநல பாதிப்புன்னு அந்த பிரிவுக்கு அனுப்பி னாங்க. அங்கயிருந்த டாக்டர்கிட்ட உணவு விஷயத்தைச் சொன்னேன். அவர் கோபமாகி போலீஸை சத்தம் போட் டாரு. என்கூட வந்த போலீஸ்காரங்க பிரச்சினையை எங்கயோ சொல்ல, இன்ஸ்பெக்டர் ரமேஷே இரண்டுபேர தயார்பண்ணி எனக்கு ஜாமீன் வாங்கித் தந்து அனுப்பினாரு. அதுக்கப்புறம் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு மறுநாள் வந்து என்மேல பொய் கேஸ் போட்ட இன்ஸ்பெக்டர், மிரட்டினதா சொன்ன வியாபாரி, லஞ்சம் வாங்கின டாக்டர் எல் லார் மேலயும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி ஆதாரங்களோட மனு தந்திருக்கேன்'' என்றவர்...

""30 வருஷத்துக்கு முன்ன ரேஷன் கடையில வேலை பார்த்தேன். கடைக்கு வந்த எஸ்.ஓ. மாச மானா 300 ரூபா தரணும்னு சொன் னாரு. தப்புபண்ணச் சொல்றியான்னு அடிச்சிட்டேன். வேலையவிட்டு நீக்கிட்டாங்க. பொதுநல சேவை மையம்ங்கிற பேர்ல இதுவரைக்கும் 2500 மனுக்களுக்கு மேல தந்திருக்கேன்.

திருவண்ணாமலை நகராட்சிக் குச் சொந்தமா எத்தனை கடைங்கயிருக் குன்னு கேட்டேன். 270, 281, 356-ன்னு மாத்தி மாத்தி தகவல் தந்திருக்காங்க. பவன்குமார் (அ.தி.மு.க.) தன் பினாமி கமலக்கண்ணன் பேர்ல எடுத்திருக்கிற 2 கடைக்கு 2003-2009 வரை வாடகை பாக்கி 62,900-னு டாகுமெண்ட் சொல் லுது. 2 கடைக்கே இவ்வளவான்னு மொத்த கடைங்களோட வாடகைத் தகவல்கள் கேட்டு மனு தந்தேன், தக வல் வரலை. அதேமாதிரி 2500 மாணவிகள் படிக்கிற நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதிய இடிச்சிட்டு நகராட்சி சார்பா 20 கடைங்க கட்டறாங்க. பணத்துக் காக பள்ளிய இடிச்சிக்கிறாங்க. பணம் வேணும்னா என் பேர்ல 100 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் எடுத்துக்கட் டும். வாரிசா சேர்மன் ஸ்ரீதர நியமிக் கிறேன். அவர் கூலிப்படைய வச்சி என்னை கொன்னுட்டு இன்சூரன்ஸ் பணத்தை வாங்கிக்கட்டும். பள்ளிய விட்டுட சொல்லுங்கன்னு கலெக்டருக்கு மனு தந்திருக்கேன்'' என்றார் புன்னகைத்தபடி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அவரின் மனைவி தாமரைச்செல்வி, ""வீட்டுக்குன்னு அவரால 10 பைசாவுக்கு பிரயோஜனமில்லை. ஆனா இவர் தினமும் கடைக்கு வந்து 50 ரூபா எடுத்துட்டுப் போயிடறாரு. "மத்தவங்களை மாதிரி நான் குடிக்கவா எடுத்துட்டுப்போறேன். சிலருக்கு குடிக்கிறது பழக்கம், சிலருக்கு சிகரெட் புடிக்கிறது பழக்கம். எனக்கு பொதுமக்களுக்கு சேவை செய்றது பழக்கம்'னு சொல்றாரு.. அதுக்குமேல அவர்ட்ட என்ன கேட்கிறது'' என சலித்துக்கொண்டவரிடம் புகைப்படம் எடுக்கணுமே என்றதும், ""இதுல அது வேறயா போப்பா'' என மறுத்துவிட்டார்.

எந்த ஊரில் என்ன பிரச்சினை என்றாலும் உடனே வெள்ளை பேப்பர் வாங்கி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தந்துவிட்டு வருகிறார் சின்னையன். வித்தியாச மான மனிதர்.

No comments:

Post a Comment