Wednesday, June 16, 2010

யுத்தம் 62 -நக்கீரன் கோபால்


வீரப்பனை நக்கீரன் சந்திப்பது பற்றி பொதுமக்களுக்கு ஆச்சரியம். போட்டி பத்திரிகைகளுக்கு வயிற்றெரிச்சல். போலீசுக்கு கடுங்கோபம். ஆட்சியாளர்களுக்கு பழிவாங்கும் எண்ணம். இப்படித்தான் அன்றைய நிலைமை இருந்தது. இதுபற்றி நானும் பல முறை விளக்கியிருக்கிறேன். 16,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காட்டை நக்கீரன் பூட்டி சாவியை பைக்குள் வைத்துக்கொள்ளவில்லை. வீரப்பனை சந்திக்க முயற்சி எடுப்பவர்கள் தாராளமாக முயற்சிக்கலாம். யாரும் தைரியமாக முயற்சி எடுக்கவில்லை.

பல முறை காட்டிலிருந்து தகவல் வந்திருக்கிறது. வீரப்பனை சந்திப்பதற்காக நக்கீரன் குழு செல்லும். ஆனால், உடனடியாக சந்தித்துவிடமுடியாது. 100 முறை முயற்சி செய்தால், 1 முறை வெற்றி பெற்றிருப்போம். கார ணம், வீரப்பனுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, உரிய முறையில் தகவல் தொடர்புகிடைத்து, அதன்பின் காட்டுக்குள் பய ணித்து அவனை சந்திக்க வேண்டும். இடைப்பட்ட நேரத் தில், போலீஸ் தொடர்ந்து வருவதாகவோ, வேறு சூழல் களால் தடங்கல் ஏற்படுவதாகவோ வீரப்பன் ஆட்கள் நினைத் தால் அவ்வளவுதான் அம்போன்னு விட்டுட்டு போயிருவாங்க.

வீரப்பனிடமிருந்து தகவல் வரும்போது, ஈரோடு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு நகரப்பகுதியில் நாங்கள் இருப்போம். அங்கிருந்து, அவர்கள் குறிப்பிடும் கிராமத்திற் குச் செல்லவேண்டும். அங்கே ஒரு கிராமத்து ஆசாமி எங்களை அழைத்துக்கொண்டு, காட்டுப் பகுதிக்குப்போய் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரிடம் விடுவார். அந்த நபர், காட்டுக்குள் எங்களை அழைத்துக்கொண்டுபோய் காட்டுவாசி ஒருவரிடம் விடுவார். அவர் வழிகாட்டியபடியே அழைத்துச்செல்லும்போது, ஏதேனும் ஓரிடத்தில் வீரப்ப னின் ஆள் நின்றுகொண்டிருப்பான். அந்த ஆள் எங்களை அடையாளம் கண்டபிறகு, அவனுடன் பயணத்தைத் தொடர்ந்தபிறகே, வீரப்பன் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடியும். இதுதான் காட்டுக்குள் செல்வதற்கான நடைமுறை.

அப்படித்தான் பயணம் செய்து, காட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு கிராமத்திற்கு இரவு நேரத்தில் போகிறோம். அங்கே ஒரு குடிசை வீடு. ராத்திரி நேரத்தில் அங்கேதான் தங்கியாக வேண்டும். சிறிது ஓய்வுக்குப்பிறகு இரவோடு இரவாக காட்டுவாசியோடு நடக்க வேண்டும். அந்தக் குடிசைக்கு நாங்கள் போனபோது, ஒரு பாட்டியம்மா இருந்தார். எங்களைப் பார்த்ததும் பக்கத்தில் வந்து, தன் நெற்றியின் மீது கையை வைத்து, பார்வையைக் கூர்மையாக்கி, உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் ஏதோ ஒரு மாற்றம். நானும் தம்பிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம்.
பாட்டியம்மா என்னைப் பார்த்து, ""சாமி... உள்ளே போய் உட்காரு'' என்கிறார். நாங்கள் போய் உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் ஒரு பிளேடை கொண்டு வந்தார்.

""சாமி... இந்த பிளேடால மீசையை எடுத்திடு. அப்பதான் நாங்க இங்கிருந்து உன்னை அனுப்ப முடியும். இல்லேன்னா அனுப்ப மாட்டோம்.''

-பாட்டியம்மா சொன்னதும் எனக்கு வியர்த்து விட்டது. ""மீசையை எடுத்தால்தான் அனுப்புவேன்'' என்று சொல்கிறாரே, ""இங்கே இருப்பது பாதுகாப் பானதுதானா? இவர் போலீஸ் ஆளாக இருப்பாரா?'' என்று எனக்குள் பல குழப்பங்கள். நான் தம்பி சிவாவைப் பார்க்கிறேன்.

""என்ன தம்பி... சரியான இடத்துக்குத்தானே வந்திருக்கோம்''.

""இதுதாங்கண்ணே அவங்க சொன்ன இடம்'' -சிவா உறுதிப்படுத்தினார். "எங்களை அழைத்துக் கொண்டு வந்தவரும், நம்பிக்கையான இடம்தான்' என்று சொன்னார். ஆனால், பாட்டியம்மாள் பிளேடும் கையு மாக நின்றுகொண்டு, மீசையை எடுக்கச் சொல்லி வற்புறுத்தினார்.

""சாமி... உங்கள அசப்பிலே பார்த்தா எங்க எச மான் (வீரப்பன்) மாதிரியே இருக்கீங்க. இன்னொரு பக்கம் பார்த்தா அரக்கனுங்க (போலீஸ்) மாதிரியும் இருக்கீங்க. இந்த காட்டுக்குள்ள எங்க எசமானும் இருக்காரு. அரக்கனுங்களும் சுத்திக்கிட்டிருக்காங்க. நீ இப்படியே மீசையோடு போனீன்னா, உன்னை அரக்கன்னு நினைச்சு எங்க எசமானோட ஆளுங்க கொன்னுடுவாங்க''. அதேபோல, உன்னை எங்க எசமான்னு நினைச்சி அரக்கனுங்களும் சுட்டுடுவாங்க. அதனாலதான் மீசையை எடுத்திடுன்னு சொன்னேன்'' என்றபடி பிளேடை நீட்டினார்.

எனக்கு ரொம்பவும் குழப்பமாகிவிட்டது. பல பேரைக் கொன்று, ஏகப்பட்ட வழக்குகளை சந்திக்கும் ஒரு நபரை சரணடைய வைக்கும் நல்ல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். இதற்காக எதற்கு மீசையை எடுக்க வேண்டும்?

""அம்மா... நான் மீசையை எடுக்கலை. ஒரு துண்டை முண்டாசு கட்டி, அதை ஒரு முனையை தொங்கவிட்டு ஒரு பக்க மீசையை மறைச்சிடுறேன். இன்னொரு பக்கத்து மீசையை, கன்னத்தில் கை வைத்து மறைச்சிக்கிறேன். அப்படியே நான் இருட்டில் போயிடுறேன். போதுமா''
-பாட்டியம்மாளுக்கு அது, போதும் என்று பட வில்லை போலும். அவர் ஒப்புக்கொள்ளாததுபோல தலை யாட்டினார். நான் அவ்வாறு மறைத்துக் காட்டினேன்.

""சாமி.. எனக்கென்னவோ நீ சொல்றது சரியா தெரியல. உசுரோடு திரும்பி வருவேன்னு நம்பிக்கை இல்லை'' என்று கலங்கியபடி சொல்கிறார். ""பயப் படாதீங்க... நான் பத்திரமா வருவேன்''- நம்பிக்கை வார்த்தைகளை சொல்லிவிட்டு, நாங்கள் அந்த குடிசை யிலிருந்து கிளம்பியபோது இரவு 2 மணி. அதுவரையிலும் பாட்டியம்மாளும் தூங்கவே யில்லை.

""நான் சொல்றத கேட்கல. ம்... பத்திரமா போயிட்டு வாப்பா..'' என்று வழியனுப்பி வைத்தார். காட்டுப்பகுதிக்குள் நடக்க ஆரம்பித்தோம். காட்டு வாசி துணைக்கு வந்து கொண்டிருந்தாலும், அடர்த்தி யான காடும், மிருகங்களின் சத்தமும், சருகுகளில் பாம்புகள் நெளிகிற ஓசையும் திக்.. திக்.. மனநிலையை உண்டாக்கி யிருந்தது.

""பார்த்து வாங்க சாமி... ராத்திரி நேரத்திலே கூட்டமா யானைங்க நிக்கும். காட் டெருமைகள் வேற, ஜாக்கிர தையா போகணும்'' என்று சொல்லி, இருதயத்துடிப்பை அதிகரிக்க வைத்தார் காட்டு வாசி. இரவு முழுவதும் காட் டுக்குள் நடந்துகொண்டே இருக்கிறோம். ஒரு மலை மீது ஏறுவதும், பிறகு இறங்குவதும், அடர்ந்த காட்டுக்குள் நடந்து செல்வதும், பிறகு இன்னொரு மலையில் ஏறி இறங்குவதுமாக ராத்திரி நேரப் பயணம் தொ டர்ந்துகொண்டே இருக்கிறது. மறுநாள் காலை 8 மணி வரை நாங்கள் நடந்தோம்.

நான், தம்பிகள் சிவா, பாலு, அழைத்துச்சென்ற காட்டு வாசி, ஊர் பெருசு ஒருவர் என நடந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் போய்க்கொண்டிருந்த பகுதியில் பாறைகள் இருந்தன. அதில் ஒரு பாறைக்குப் பின் னால் ஏதோ ஒரு உருவம் மறைவது போல எனக்குத் தெரிந்தது. குடிசையில் இருந்த கிழவி சொன்னதுதான் ஞாப கத்துக்கு வந்தது. இருதயம் இன்னும் கூடுதலாகத் துடித்தது. மீண்டும் அந்தப் பாறையைப் பார்க்கிறேன். உருவம் எதையும் காணவில்லை. என்னால் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை.

தம்பி சிவாவைக் கூப்பிடுகிறேன்.

""என்னண்ணே?''

""தம்பி... அந்த பாறைக்குப் பின்னாடி யாரோ போனது போலத் தெரிஞ்சுது.''

அவரும் உற்றுப் பார்க்கிறார். எதுவும் தெரிய வில்லை. மேகத்தின் நிழல் செல்வதுகூட அப்படி இருக்கலாம் என்கிறார் ஊர் பெருசு.

""ம்..ம்.. நேரமாச்சு. எசமான் ஆளுங்க இருக்கிற இடத்துக்கு சீக்கிரமா போகணும். எதையாவது யோசிச் சிக்கிட்டே இருந்தீங்கன்னா சரி வராது. அரக்கனுங்க வந்திடுவாங்க''. -காட்டுவாசி அவசரப்படுத்தினார்.

எனக்கு அந்த பாறையின் பின்னால் பதுங்கிய உருவம்தான் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது. ஏதோ ஒரு பயங்கரம் நடக்கப்போவதுபோல உள்ளுணர்வு சொன்னது. இப்படியே திரும்பிவிடலாமா என்று ஒரு நொடி யோசித்தேன். மறுநொடி, ஒரு நல்ல முயற்சிக்காக ரிஸ்க் எடுக்கிறோம். காட்டில் ஒரு பொழுது நடப்பதற்கே நாம் இத்தனை பயங்கரங்களையும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் போது, இங்கேயே உள்ள கிராமங்களில் வாழ்ந்துகொண்டு வீரப்பன் தரப்பையும், அவனைத் தேடுவதாகச் சொல்லிக்கொண்டு அத்துமீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிற இரு மாநில அதிரடிப்படைகளையும் எதிர்கொள்கிற மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கை எத்தனை கடினமாக இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்.

வீரப்பனின் படத்தையும் பேட்டியையும் நக்கீரன் வெளியிட்டபிறகுதான், இங்குள்ள மக்களுக்கு தங்கள் பிரச்சினையைப் பற்றி சொல்வதற்கு ஒரு பத்திரிகை இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அந்த மக்களுக்காக பாடுபடும் மலைவாழ் பழங்குடி மக்கள் சங்கத்திற்கும் தங்கள் கோரிக்கைகளை எடுத்துச்சொல்ல ஒரு வழி பிறந்திருக் கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வீரப்பனை சரணடையச் செய்வதன் மூலம், இருமாநிலப் போலீசாரின் கொடுமைகளிலிருந்து நிச்சயமாக இந்த மக்கள் மீட்கப்படுவார்கள். 6 லட்சம் மக்களின் உண்மையான விடுதலைக்காக, காட்டில் உள்ள ஆபத்துகளை கடந்து செல்வது ஒன்றும் பெரிதல்ல என்று மனதுக் குள் முடிவு செய்துகொண்டேன்.

நாங்கள் நடந்து கொண்டிருந்த இடம், 500 அடி உயரத்தில் இருந்தது. ரொம்ப கவனமாக நடக்கவேண்டும். கொஞ்சம் தவறினாலும் அப்படியே பள்ளத்தில் உருளவேண்டியதுதான். வீரப்பன் ஆட்கள் இருக்கும் இடத்திற்கு வேகமாக போயாக வேண்டும். அப்புறம், அவர்கள் எங்களை வீரப்பன் இருக்கு மிடத்திற்கு அழைத்துக்கொண்டு போவார் கள். இதெல்லாம் எவ்வளவு சீக்கிரமாக நடக்கிறதோ அவ்வளவு நல்லது. அதனால், கீழே உள்ள பள்ளத்தின் பக்கம் பார்வையைத் திருப்பாமல் நடந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு 50 அடி தூரத்தில் ஒரு நபர், சம்பந்தமேயில்லாமல் நடந்து போய்க்கொண்டிருக்கிறார்.

""தம்பி சிவா... அங்கே பாருங்க, எருமை மாடு மாதிரி நாம இங்க உட்கார்ந்து இருக்கோம். சம்பந்தமே இல்லாம இந்த அடர்ந்த காட்டுல யாரோ ஒருத்தர் போய்க்கிட்டிருக்காரு..''

நான் காட்டிய திசையில், சிவா பார்க்கிறார். நான் வேறு யாராவது இருக்கிறார்களா என்று இன்னொரு திசையில் பார்க்கிறேன்.

எங்களை விட 50 அடி உயரத்தில், ஒரு ஆள் துப்பாக்கியோடு நின்றுகொண்டு எங்களைக் குறி பார்க்கிறான். எனக்கு பகீர் என்றிருந்தது.

அவனது விரல்கள், துப்பாக்கியின் டிரிக்கரை நோக்கி வேகமாக நகர்கிறது...

""ஏய்... ஏய்...''- காட்டுவாசி அலறுகிறார். அடுத்த நொடி...

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment