Monday, June 28, 2010

தமிழக முதல்வர் கலைஞருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி!


shockan.blogspot.com

உலகத்தமிழர்களின் முதல்வர் கலைஞருக்கு வணக்கம்!

ஈழத்தமிழ் மக்களின் வேரடி மண் எங்கள் தமிழ் நாடு!.. வேர் பிடுங்கி நாங்கள்
விடை பெற்று வந்தாலும் எங்கள் உறவுகளை இணைத்து நிற்கும் தொப்புழ் கொடி உணர்வுகளை யாராலும் அறுத்துவிட முடியாது!...

நீராடும் கடலலை தாண்டி இலங்கை தீவில் நாங்கள் விழுதுகளாக வந்து விழுந்தாலும் எங்கள் வேரோடிய தமிழகத்தை மறந்துதான் போவோமா?...

தமிழகத்தின் தலைமகன் நீங்கள்!... உலகத்தமிழர்களின் முதல்வர் நீங்கள்!!...

உலகப்பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியை
செம்மொழியாக்கி அதற்கு உயரத்தின் சிகரத்தில் சிம்மாசனம் அமைத்து கொடுத்த உங்களை ஈழத்தமிழர்கள் சார்பாக முதலில் வாழ்த்துகின்றேன்!...

மொழி என்பது மனிதர்கள் வெறுமனே பேசிக்கொள்ளும் ஓசை மட்டுமல்ல!
அது ஒரு இன சமூகத்தின் அடையாளம்!!

ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கையர்களாக மட்டுமன்றி தமிழர்களாகவும் எங்கள் தேசத்தில் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். அதற்கு நாம் பேசும் தமிழ் மொழியே எங்கள் அடையாளம்!

எங்கள் அடையாளங்கள் அழிந்து போகாமல் தமிழ் என்ற எங்கள் மொழியின் முகங்கொண்டு ஏனைய இன சமூகத்தவர்களோடு உறவுக்கு கரம் நீட்டி உரிமைக்கு குரல் காட்டி நாங்கள் இன்னமும் உழைத்து வருகின்றோம். இழந்தவைகளை பெறவும், இருப்பவைகளை பாதுகாக்கவும் எங்கள் பயணம் இன்னமும் பழுது படாமல் தொடர்கிறது.

ஆனாலும் இழந்து போனவைகளில் எங்கள் மொழியும் ஓன்றாகி விடும் என்ற ஏக்கம் இன்று உலகத்தமிழர்களின் மனங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் தருணத்தில் நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு நம்பிக்கைகளை விதைத்துள்ளது...

எங்கள் மொழியின் வேர்கள் இலங்கை தீவில் இன்னமும் விருட்சங்களாகவே எழுந்து நிற்கின்றன. கடும்புயல் வந்த போதும் வரும் தடை யாவையும் எதிர் கொண்டு இன்னமும் பட்டுப்போகாமல் மக்கள் மனங்களை தமிழ் பற்றி நிற்கிறது!

நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு எங்கள் மொழியின் வேர்களுக்கு நீர் வார்க்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். தமிழ் மொழியை தாங்கி நிற்கும் தேசங்களில் ஒன்றான ஈழத்தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்கள் செம்மொழி மாநாட்டு செய்தியறிந்து பூரித்து புளகாங்கிதம் அடைந்துள்ளது.

இந்த சிறப்பான செம்மொழி மாநாட்டிற்கு ஈழத்தமிழ்; அறிஞர்களையும் ஆராட்சியாளர்களையும் அவர்களின் கருத்துக்களையும் முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கும் புகழ்பெற்ற உலக அறிவாழிகளின் மத்தியில் மேடையில் கௌரவிப்பு வழங்கியமைக்கும் ஐயா உங்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் சார்பாக நன்றிகூறுவதில் நான் பெருமையடைகிறேன்.

ஈழத்தமிழ்களுக்கு இன்னல்கள் வரும்போதெல்லாம் தீயாக பற்றி எரியும் கலைஞர் இருட்டில் தொலைந்து விடுமோ தமிழ் மொழி என்று ஏங்கித்தவிப்போருக்கு தீபச்சுடராக எழுந்து வெளிச்சம் பாய்ச்சுவது பாராட்டுக்குரியது!

மாநிலத்தில் அதிகாரங்களை ஏற்று மத்திய அரசின் அனுசரணைகளை பெற்று நீங்கள் நடத்தும் இணக்க அரசியலுக்கு வெற்றியின் விருது பெற்ற வாலாறுகள் ஏராளம்! இதில் நீங்கள் நடத்தும் செம்மொழி மாநாடு ஒரு சரித்திர சாதனை!

தொல்காப்பியத்தின் தொன்மை... அகத்தியத்தில் ஆரம்பம்... என்று ஆய்வுகளுக்குள் மட்டும் முடங்கியிருக்காமல் தமிழ் மொழியின் தேவைகளுக்கான புதிய தேடல்களை நோக்கி தமிழ் சமூகம் புறப்பட வேண்டும்!

தமிழுக்கு நீங்கள் சிறுவயதிலே தொண்டாற்ற ஆரம்பித்தீர்கள். அந்தப் பெரும் பணியை இன்றைக்கும் உலகம் போற்றும் அளவில் நடாத்திக்கொண்டிருக்கின்றீர்கள்.

இன்னும் பல்லாண்டு பல்லாண்டு உங்களின் இந்த சிறப்புமிக்க தொண்டு தமிழ்த்தாய்க்குச் சிறப்புச் சேர்க்கட்டும்.

அதற்கு நீங்களே வழி காட்டி! மொழியின் மீது கொண்ட பற்றுதலால் எங்கள் நேசக்கரம் நீட்டி தமிழ் மொழியின் சம கால தலைமகனான உங்களை ஈழத்தமிழர்கள் சார்பாக வாழ்த்தி வணங்குகின்றோம்!

மனித குலத்தின் பொது மொழியாக என்றும் மனித நேயம் இருக்கட்டும். எம்மொழியும் எமக்கு சம மொழியாகட்டும்!

ஆனாலும்... எங்கள் செம்மொழி மாநாடு செழிப்புற வாழ்த்துகின்றேன்!...


டக்ளஸ் தேவானந்தா பா. உ.
செயலாளர் நாயகம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்

No comments:

Post a Comment