Saturday, June 26, 2010

கார்த்திக் ஐ.ஏ.எஸ்! -கை கொடுத்த நம்பிக்கை!


shockan.blogspot.com

விடுமுறையைக் கழிக்க தன் தாய் வள்ளியுடன் குன்றத்தூரி லுள்ள பாட்டி வீட்டுக்கு சென்றான் ஒன்பது வயது கார்த்திக். வீட்டின் முன்பு குழந்தையுடன் கார்த்திக் நின்றுகொண்டிருந்த போதுதான்... ரோட்டிலிருந்து விலகி நிலை தடுமாறி சீறிப் பாய்ந்து வந்த லாரியைக் கவனித்தான். தப்பித்து வீட்டிற்குள் ஓடுவதற் குள்ளேயே அவனது வலது காலை பதம் பார்த்தது வேல்முருகன் டி.யூ.வி.792 என்ற அந்த லாரி. இது பதினெட்டு வருடங்களுக்கு முன்பு 24.7.93 தேதியிட்ட நக்கீரனில் வெளிவந்த செய்தி. அந்த சிறுவன் கார்த்திக்தான்... இன்று கார்த்திக் ஐ.ஏ.எஸ். வெற்றியாள னாக தமிழ் மக்களின் நெஞ்சில் நிற்கிறார். எப்படி?

""சிகிச்சை செலவுக்குக்கூட பணம் இல்லாம ஆஸ்பிட்டலில் ரொம்ப கஷ்டப்பட்டோம். சின்ன வயதிலேயே என் வாழ்க்கையை முடக்கிப்போட்ட லாரியின் முதலாளி பண பலத்தால் தப்பிச்சுக் கிட்டே இருந்தது என் மனசை வேதனைப் படுத்தியது. வலதுகால் பறிபோய் நான் தாங்கித்தாங்கி நடக்கிறதைப் பார்த்துட்டு பலரும் பரிதாபமா அணுகியது என்னை கூனிக்குறுக வெச்சது. எல்லாரும் என்னை பிரமிப்பா பார்க்கணும்ங்கிற வெறி ஆழ்மனசுல தீயா பற்றி எரிஞ்சது. இந்த நிலையில், நான் என்ஜினியரிங் படிக்கும்போது இப்போ மத்தியபிரதேசத்துல ஐ.ஏ.எஸ். ஆக இருக்கிற சிபி சக்கர வர்த்தியோட நட்பு கிடைச்சது. "உன் னோட லட்சிய வெறிக்கு ஐ.ஏ.எஸ். ஆக வந்தாதான் பெஸ்ட்டாக இருக்கும்'னு நம்பிக்கையூட்டி கெய்டு பண்ணினாரு. 2007-லிருந்து ஐ.ஏ.எஸ்.ஸுக்கான பயிற்சியை ரொம்ப கடுமையா பெற்றேன். அதுக்கு எங்கப்பா மாணிக்கமும் அம்மா வள்ளியும் எல்லா விதத்திலேயும் உதவியா இருந்தாங்க'' என்கிற கார்த்திக் மாணிக்கத்தின் வீடு சைதாப்பேட்டையிலுள்ள தாடண்டர் அரசு ஊழியர் குடியிருப்புதான்.

""என் காலை இழந்ததுக்கு பத்து வருஷம் கழிச்சே நஷ்டஈடா மூணு லட்சம் கிடைச்சது. அது எதுக்கு? ஆனா உங்க முன்னால எழுந்து நிற்க... நடக்க முடியுதுன்னா அதுக்கு முக்கிய காரணம் பல்லாவரத்துல இருக்கிற முக்தி ஃபவுண்டேஷன்தான். என்னை மாதிரி விபத்துல கை, கால் இழந்த ஏழைகளுக்கு இலவசமாகவே செயற்கையான கை, கால்களைப் பொருத்தி நம்பிக்கையூட்டுறாங்க'' என்று நன்றியுணர்ச்சியோடு கூறியவர்...

""நம்பிக்கையும் வைராக்கியமும் இருந்தா யார் வேணும்னாலும் ஐ.ஏ.எஸ். ஆகலாம். என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களை மனிதாபிமானத் தோடு கவனிச்சுக்கிற சமூக நலத்துறைக்கு ஐ.ஏ.எஸ். ஆக பொறுப்பேற்கணும்ங்கிறதுதான் என் ஆசை'' என்றார் அக்கறையோடு.

ஆசை நிறைவேற வாழ்த்திவிட்டு கிளம்பினோம்.

No comments:

Post a Comment