Friday, June 11, 2010

சசிகலாவுடன் மீண்டும் கொடநாடு சென்றார் ஜெயலலிதா


shockan.blogspot.com
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று தோழி சசிகலாவுடன் கொடநாடு புறப்பட்டுச் சென்றார்.

தனி விமானத்தி்ல் கோவை சென்ற அவருடன் சசிகலா தவிர உதவியாளர்கள் மட்டும் உடன் சென்றனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் கொடநாடு சென்றார். அங்குள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா ஒரு மாதம் தங்கி இருப்பார் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை சென்னை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார், நயினார் நாகேந்திரன், வளர்மதி, எம்.பிக்கள் மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் மற்றும் எம்.எல்.ஏக்கள் வழியனுப்பி வைத்தனர்.

கோவையில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்-ஜெ:

இந் நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவை இல்லாத காரணத்தாலும், போதிய மருந்துகள் இல்லாத காரணத்தாலும், மேற்படி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளையோ அல்லது வேறு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளையோ நாடிச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

நிதி வசதி இல்லாத ஏழை, எளிய உயிர்களை காப்பாற்ற முடியாத சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் கட்டிட வசதியின்மை காரணமாக, உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் கூட புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன.

கோவை மாவட்டத்தில் நிலவும் மின்வெட்டு காரணமாக சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் குடிநீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.

கோவை மாவட்டத்தில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவை இந்த லட்சணத்தில் இருக்கையில், தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்கள் போற்றி, துதிபாட உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற தன்னல மாநாட்டிற்கு மக்கள் வரிப்பணம் ரூ. 400 கோடி அளவுக்கு திமுக அரசால் வீணடிக்கப்படுகிறது.

கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டித் தருவதற்கு, இருதய அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைத்துத் தருவதற்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டும் இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.

ஏழை, எளிய மக்களுக்காக கோவை அரசு பொது மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தருதல் மற்றும் இருதய அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகிய இரு பிரிவுகளை அமைத்துத் தருதல், மருந்துகள் வாங்குதல் ஆகியவற்றிற்கு உடனடியாக போதுமான நிதி ஒதுக்கித்தர வலியுறுத்தி, கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment