Sunday, June 13, 2010

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பல வியூகங்களை விவாதித்துக்கொண்டி ருக்கிறார்-ச.ம.க. தலைவர் சரத்குமார்


சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி துவங்கி மூன்று வருடம் முடியப்போகிறது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த கட்சி, முடங்கிப்போயிருப்பதாக வரும் செய்திகளைத் தொடர்ந்து... கட்சியின் கட்டமைப்புகளை வலிமையாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ச.ம.க. தலைவர் சரத்குமார். சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பல வியூகங்களை விவாதித்துக்கொண்டி ருக்கிறார். மக்கள் பிரச்சினைகளுக்காக வலிமையான போராட்டங்களை நடத்த வேண்டுமென்பது இந்த வியூகங்களில் ஒன்று. இந்நிலையில், சரத்குமாரை நாம் சந்தித்தோம்.

சமத்துவ மக்கள் கட்சி துவக்கப் பட்டபோது இருந்த பரபரப்பும் எதிர்பார்ப்பும் இப்போது இல்லையே?

அரசியலில் நிதானமாகவும் தெளிவாகவும் அடிகளை எடுத்து வைப்பது தான் எனது அரசியல். பரபரப்பான, ஆர்ப்பாட்டமான, அதிரடியான அரசிய லில் எனக்கு உடன்பாடில்லை. என்னைக் கவனிக்கும் அரசியல் தலைவர்கள், என்னிடம் விவாதிக்கும் அரசியல் தலைவர்கள், பல்வேறு சமூக அமைப்பு களின் தலைவர்கள் என பலரும்... நிதானமான ஆரோக்கியமான அரசியலை நாங்கள் செய்வதாகத்தான் மதிப்பீடு செய்கிறார்கள். இந்த அரசியலில் நாங்கள் வலிமையாகத்தான் முன்னேறிக் கொண்டி ருக்கிறோம்.

தி.மு.க.விற்கு தோழமையாக இருக்கும் நீங்கள், கள் இறக்க அனுமதி கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தியிருப்பதன் மூலம் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்கிறார்களே?

இந்தப் போராட்டத்தை நாங்கள் இன்றைக்குத்தான் கையிலெடுத்திருக் கிறோம் என்பதல்ல. கடந்த இரண்டு வருடங்களாகவே இதற்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கள் என்பது தமிழக பனை, தென்னை விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. கள் என்பது உணவின் ஒரு பகுதி என்கிறார் கள் விவசாயிகள். அதனால், மதுபான கடைகளை நடத்தும் அரசு, விவசாயிகளின் இந்தப் பிரச்சினையில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்கிற கவன ஈர்ப்புப் போராட்டம்தானே தவிர அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. ஒரு போராட்டம் எதற்கு நடத்தப்படுகிறது? எதனால் நடத்தப்படுகிறது? யாருக்காக நடத்தப்படுகிறது? என்பதை சிந்தித்துப் பார்க்கிற அரசாகத்தான் இன்றைய தி.மு.க. அரசு இருக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் என்றில்லை. கூட்டணிக் கட்சிகளும் தோழமைக் கட்சிகளும்கூட மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்துவதை வரவேற்கவே செய்பவர் கலைஞர்.

கள்ளுக்கு அனுமதி கேட்டு நீங்கள் போராடுகிறபோது, பனைத்தொழிலாளர் நல வாரியத் தலைவர் குமரி அனந்தன், கள்ளுக்கு அனுமதி கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறாரே?

எதிர்ப்பு தெரிவிக்கிற இவர், கடந்த காலங்களில் கள்ளுக்கு ஆதரவாக பேசியவர்தான். இப்போது ஏதோ சில காரணங்களுக்காக எதிர்க்கிறார். அவ்வளவுதான். பொதுவாக மதுபானங்களில் உள்ள ஆல்கஹாலைவிட கள்ளில் ஆல்கஹால் குறைவு என்கிற விவாதம் நடக்கிறது. இந்த சதவீத கணக்குகளுக்குள் நான் புக விரும்பவில்லை. காரணம் பொதுவாகவே ஆல்கஹாலுக்கு எதிரானவன் நான். ஆனால், கள் என்கிற விசயத்தில் கள்ளைப் பதப்படுத்தி அதனை ஒரு "எனர்ஜி டிரிங்'காக -மக்களின் பானமாக பயன்படுத்த முடியாதா என்று அரசு முயற்சிக்கலாமே என்பதுதான் என் கருத்து. அந்த வகையில் இதற்கு அனுமதி தருவதன் மூலம் ஒரு புதிய இண்டஸ்ட்ரி தமிழகத்தில் உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. புதிய புதிய தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டிவரும் அரசு, கள்ளை ஒரு தொழில் சார்ந்த விஷயமாக ஏன் அணுகக்கூடாது? கள்ளை அனுமதிப்பதால் தமிழகத்தில் கிராமியத் தொழில்கள் வளர்ச்சி பெறும். அதனால்தான் கள்ளுக்காக போராடுகிறேன், போராடுவேன்.






ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் எதிர்ப்புகள் வருகிறபோதுதானே, இலங்கை விழாக்களுக்குச் செல்வதை தமிழ்த் திரையுலகத்தினர் தவிர்க்கிறீர்கள்?

இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் போய் வருவதுதான் உணர் வாளர்களுக்குத் தெரிகிறது. ஆனால், தொழில் ரீதியாக தமிழகத்தில் உள்ள பலரும் வர்த்தக உறவுகளை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள், மருத்துவர்கள், வியாபாரிகள், தொழில்நுட்பவியலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பல்வேறு இந்திய நிறுவனங்கள் என பல தரப்பினரும் இலங்கைக்குப் போய் வருவதும் அரசோடு உறவுகளை வைத்துக்கொள்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு எதிரான எந்தக் கிளர்ச்சியும் தமிழகத்தில் நடக்கவில்லை. அதேசமயம், திரையுலகத்தினர் மீது பாய்வது மட்டும் நடக்கிறது. ஏன், திரையுலகத்தினரை மட்டும் குறி வைக்க வேண்டும்? உணர்வாளர்களின் ஆதங்கமும் கோபமும் எனக்குப் புரிகிறது. அதனை மதிக்கிறேன். ஆனால், இந்த உணர்வு பொதுவானதாக இருக்க வேண்டும்.

ஈழப் பிரச்சினை என்பது ஒரு தேசிய பிரச்சினை. இதில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையே தெளிவற்றதாக இருக்கிறபோது... திரையுலகம் என்ன செய்ய முடியும்? அதாவது இந்தியாவின் எதிரி நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவைச் சுற்றி களம் அமைக்கிறது. இதற்கு இலங்கை அரசு உதவுகிறது. இதனால் எதிர்காலத்தில் இந்தியா பெரிய ஆபத்துகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

அப்படிப்பட்ட நிலையில், இலங்கையை கண்டிக்கவோ அந்த நாட்டுடன் உறவுகளை துண்டிக்கவோ விரும்பாத இந்தியா... ராஜ பக்சேவுடன் நல்லுறவு வளர்க்கவே கரம் நீட்டு கிறது. இதே அணுகுமுறைதான் ஈழத்தமிழர்கள் விவகாரத்திலும். அதாவது... யுத்தத்திற்குப் பிறகு ஈழத் தமிழர்களை மீள்குடியேற்ற வும் அவர்களுக்கான அரசியல் தீர்வை முன்னெடுக்கவும் இலங்கை அரசு தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஆனால், இதற்கு எதிராகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. அப்படியிருந்தும் இலங்கையுடனான உறவு களை துண்டிக்காமல் நட்பை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை. ஆக... ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அரசியல் தீர்வு கிடைக்காத வரையில் இலங்கை யுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளவேண் டாம் என்று இந்திய அரசு வெளிப்படையாகத் தெரிவித்து விட்டால்... தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல வேறு யாருமே இலங்கையை எட்டிப்பார்க்க மாட்டார்களே? அந்த வகையில் இந்திய அரசை வலியுறுத்த வேண்டிய உணர்வாளர்கள், திரையுலகத்தின் மீது மட்டுமே ஆதங்கப்படுவது தேவையில்லாதது என்று கருதுகிறேன். இலங்கையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விருது விழாவை நம் நடிகர்கள் புறக்கணித்ததை ஆதரிக்கிறேன்; வரவேற்கிறேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையையும் தாண்டி உணர்வுபூர்வமாகத்தானே பார்க்கப்படுகிறது?

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் பிரச்சினையில் மற்றவர் களைப் போலவே அதிக கவலையும் அக்கறையும் கொண்டிருப்பது தமிழ்த்திரையுலகம்தான். இதனை பலமுறை ஒன்றிணைந்து நாங்கள் நிரூபித்திருக்கிறோம். ஈழப்பிரச்சினைக்காக உண்மையான, நேர்மை யான அக்கறையுடன் வலிமையான குரல் கொடுத்தது தமிழ்த்திரையுலகம்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால்தான் இலங்கையுடனான உறவுகளை துண்டிக்க இந்தியாவை வலியுறுத்துவதை விட்டுவிட்டு திரையுலகத்தினர் மீது மட்டுமே பாய்வது ஏன் என்றுதான் கேட்கிறேன்.

நீங்கள் ஈழ ஆதரவாளர். ஆனால் நளினியின் விடுதலைக்காக ச.ம.க. எந்த ஒரு போராட்டத்தையோ கருத்தையோ தெரிவிக்கவில்லையே?

ஈழ ஆதரவாளன்தான். ஆனால் நளினி விஷயத்தில் முரண்படுகிறேன். நளினி விடுதலை செய்யப்படக்கூடாது என்பதே சரி. முன்னாள் பிரதமரின் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவரை எப்படி மன்னிக்க முடியும்?

காமராஜருக்கு மணிமண்டபம், நடிகர் திலகம் சிவாஜிக்கு மணிமண்டபம், நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் என 3 பிரச்சினைகளும் இழுத்துக்கொண்டே போகிறதே?

காமராஜருக்கு மணிமண்டபம் என்பது என் சொந்த செலவில் உருவாக்குவது. அதனால் முதல்கட்டமாக மணிமண்டபத்திற்கான நிலம் தேர்வு செய்து வாங்கப் பட்டிருக்கிறது. அடுத்து மண்டபத்திற்கான வரைபடம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளில் பவர் கனெக்ஷன் மிக முக்கியமானது. அதற்கு அப்ளை செய்திருக்கிறோம். அது கிடைத்ததும் கட்டிடப் பணிகள் துவங்கும்.

இது தவிர பணப்பிரச்சினைகளும் இருக்கத்தானே செய்கிறது. சிவாஜிக்கான மணிமண்டபத்தை பொறுத்தவரை... அரசு ஒதுக்கிய நிலம் மிகக்குறைவாக இருக்கிறது. மேலும் நிலம் ஒதுக்கப்பட்ட இடம் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவும் இருக்கிறது.

அதனால் கூடுதல் நிலம் கேட்டும் வேறு இடத்தில் நிலம் ஒதுக்க வேண்டியும் அரசை அணுகியிருக்கிறோம். விரைவில் இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நடிகர் சங்க கட்டிடத்திற்கான வரைபட தேர்வு நடந்துகொண்டிருக்கிறது.

ஆக... இந்த 3 பிரச்சினைகளையும் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளேன்.

No comments:

Post a Comment