Thursday, June 24, 2010

தொடர் விபத்துகள்!

shockan.blogspot.com

கும்பகோணத்துல இருந்து இரவு 10 மணிக்கு மதுரைக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறினோம். இரவு 1 மணிக்கு புதுக்கோட்டையின் எல்லையைத் தொட்ட அந்தப் பேருந்து புதுக்கோட்டையின் சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்து வழிதெரியாமல் ஒண்ணரை மணி நேரம் சுற்றி... கடைசியில் உள்ளூர்க்காரர் ஒருவரின் வழிகாட்டுதலோடு இரண்டரை மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கிருந்து மதுரை நோக்கிப் புறப்பட்டது. 16-வது கிலோமீட்டரில் எதிரில் வந்த லாரியின் ஓட்டுநர் ""என்ன சார்... மதுரை வண்டி பொன்னமராவதிக்கு போவுது?'' என்றதும் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாதை தெரியவில்லை என்பது பயணிகளுக்கு தெரிந்தது. 16 கி.மீ. திரும்பி வந்த பிறகு மதுரை ரோட்டை கண்டுபிடித்தார்.

""நான் என்ன செய்வேன். நான் சென்னை பஸ் ஓட்டுறவன். டிரைவர் வரலனு இந்த பஸ்ஸை ஓட்டச் சொல்றாங்க. தொடர்ந்து 3-வது டியூட்டி பார்க்கிறேன். கண்ணெல்லாம் எரியுதே... டயம் வேஸ்ட் மட்டுமில்லை... டீசலும் செலவு, என்ன பதில் சொல்றது?'' -புலம்பிக்கொண்டே ஓட்டினார் அந்த ஓட்டுநர்.

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய அரசுப் பேருந்து அச்சு முறிந்து சக்கரங்கள் கழன்றுகொண்டு ஓடி... பஸ்சுக்காக காத்திருந்த இரண்டு பயணிகளின் உயிரைப் பறித்தது.

அடுத்த இரண்டாம் நாள். நாகப்பட்டினத்தில் இருந்து மயிலாடுதுறைக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்புற "சக்கரங்கள்' கழன்றோட ஆற்றுக்குள் தலைகுப்புற குட்டிக்கரணம் போட்டு 65 பேரை படுகாயப்படுத்திவிட்டது. இவர்களில் பள்ளிக் குழந்தைகள் ஒன்பது பேரும் அடக்கம்.

இந்தக் கொடுமையான விபத்து ஏற்பட்ட மறுநாள்... மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்து மயிலாடுதுறை மேம்பாலம் ஏறியிறங்கிய போது முன்புற அச்சு முறிந்து, சந்தைக்குள் கவிழ்ந்து ஒரு பயணியைச் சாகடித்தது. 60-க்கும் மேற்பட்டவர்களை படுகாயத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிப்போக வைத்தது.

ஏன் இந்த மோசமான விபத்துகள்? ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் பேசினோம்.

""பேருந்துகள் சரியான பராமரிப்பு இல்லீங்க. அதிகாரிகள் இருப்பதற்கு ஏ.சி. ரூம்கள் இருக்கு. "சார் இந்த வண்டி சரியில்லை... பிரேக் பிடிக்கலை... ரொம்ப சவுண்ட் வருது... கிளட்ச் சரியில்லை'னு சொன்னால்.... "யோவ் இஷ்டம்னா அந்த வண்டில டூட்டி பாரு. இல்லைனா டெப்போவுல நிறுத்திட்டு வீட்டுக்குப் போ'ன்னு மிரட்டுறாங்க'' என்கிறார்கள்.

""கும்பகோணம் கோட்டத்தில் இவ்வளவு மோச மான மெயின்டனன்ஸ்... விபத்துகள் இதற்குக் கொஞ்ச மும் குறையாமல்தான் மற்ற கோட்டங்களிலும் அதிகாரி களின் நிர்வாகச் சீர்கேட்டால் உயிர்ப்பலிகள்... ஊனமாகி றார்கள். எதற்காக பணிமனைகள் இருக்கிறதோ? போ.வ. துறை அமைச்சரும் முதல்வர் கலைஞரும் நேரடியாக தலையிட்டால்... இவற்றைச் சரிசெய்ய முடியும்?'' என்கிறார் பொதுவுடமைச் சிந்தனையாளர் சத்தியநாராயணா.

கும்பகோணம் கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இல்லாததால் ஏ.இ. ஸ்ரீதரிடம் கேட்டோம்.

""இந்த விபத்துக்களுக்கான விசாரணை இப்ப நடக்கிறது. என்ன காரணம் இருக்கப் போகிறது? ஓவர் டேக்... ஸ்பீடு... டிரைவரோட அசால்ட்... இவைகள்தான் காரணமாக இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர்.

மக்களின் உயிருக்கு யார்தான் பொறுப்பு?

No comments:

Post a Comment