Sunday, June 13, 2010

கல்விக் கொள்ளை!


shockan.blogspot.com

"அரசு ஆணை! அஞ்சாமல் மிரட்டி வசூலிக்கும் முரட்டுப் பள்ளிகள்!'

-மாணவர் சேர்க்கையின் போது சில தனியார் பள்ளிகளுக்குச் சென்று நேரில் பார்த்தவைகளை அப்படியே பதிவு செய் திருந்தோம் கடந்த இதழில்.

""அரசு நிர்ணயித்த கட்டணத்தை நாங்கள் ஏன் அமுல்படுத்தவில்லை? அதற்கு வலுவான காரணம் இருக்கிறது. எங்களின் கருத்துக்கும் இடமளிக்க வேண்டும்''.

-தனியார் பள்ளி தாளாளர்களிடமிருந்து வேதனை வெளிப்பட, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணராஜை கோவையில் சந்தித்தோம்.

""நடைமுறைக்கு சாத்தியமே இல்லாத அளவுக்கு கல்வி கட்டணத்தை குறைத்து நிர்ணயித்திருப்பது நீதியரசர் கோவிந்த ராஜன் குழுவில் இடம்பெற்ற கல்வித்துறை அதிகாரிகள் தான். தஞ்சாவூரில் ஒரு பிரைமரி ஸ்கூலுக்கு எல்.கே.ஜி.மாணவர் ஒருவரிடம் ஒரு வரு டத்துக்கு வசூலிக்க வேண்டிய கட்ட ணம் ரூ.120 என்று அரசு உத்தரவு சொல்கிறது. இந்தக் கட்டணத்தை அப்படியே அமுல்படுத்தினால் அந்த வகுப்பு ஆசிரியைக்கு ரூ.400-க்கு மேல் மாதச் சம்பளம் கொடுக்க முடியாது. இது கொடுமை யல்லவா? மாவட்டம் ஒன்றுக்கு 10 பள்ளிகள் வீதம் 32 மாவட்டங்களுக்கும் பட்டியல் தருகிறேன். இந்தப் பள்ளிகள் நீதியரசர் கோவிந்தராஜன் குழுவினரின் நேரடிப் பார்வையிலேயே இயங்கட்டும். அவர்கள் நிர்ணயித்த ஆண்டுக் கட்டணத்தை வசூலித்து குறைந்தது மூன்று மாதங்கள் கூட பள்ளி நடத்த முடியாது.

கட்டணம் எவ்வளவு வசூலிக்கின்றீர்கள் என குழுவினர் விவரம் கேட்டபோது, வரி எதுவும் போட்டு விடுவார்களோ என பயந்து கட்டணத் தைக் குறைத்துக் காட்டிய பள்ளிகளுக்குத்தான் கட்டணத்தைக் குறைவாக நிர்ணயித்து விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. மதுரையில் இருக்கும் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒரு குண்டூசி வாங்கினால் கூட அதற்கு கணக்கு எழுதி விடும். எல்.கே.ஜி. ஆசிரியைக்கே ரூ.22,000 சம்பளம் கொடுக்கும் பள்ளி அது. அந்தப் பள்ளிக்கு கமிட்டி நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு தெரியுமா? எல்.கே.ஜி.க்கு ஒரு மாணவனுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.4000 தான். இந்தக் கட்டணத்தை அப்படியே வசூலித்து பள்ளி நடத்தினால் இரண்டே மாதத்தில் மூடிவிட வேண்டியதுதான்.

மெட்ரிக் பள்ளி ஆய் வாளர்கள் மூலம் தமிழகத்தில் இங்கே "ஏஜென்ஸி' தான் நடக்கிறது. அதனால்தான், கல்வித்துறை அதி காரிகள் பலரும் விமானத்தில் பறக்கிறார்கள். மிஞ்சிப் போனால் 500 பள்ளிகள்தான் அநியாயக் கட்டணம் வசூலிப்பவையாக இருக்கும். அந்தப் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு முனைவதில் தவறில்லை. அதற்காக ஒரேயடியாக அத்தனை தனியார் பள்ளிகளையும் மூடிவிடும் அளவுக்கு, இத்தனை குழப்பமும் குளறுபடியுமான கட்டணத்தை நிர்ணயித்தால் எப்படி ஏற்க முடி யும்? இந்தப் பாதிப்பினால்தான் திருச்சியில் மூன்று பள்ளிகளை மூடப் போகிறோம் என திருச்சி ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது'' என்றார் ஆதங்கத் தோடு.

மதுரை மேரி ஆன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ஜெயபால்,

""தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களால் இன்ஃபோசிஸ் போன்ற இடங்களில் 70,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர முடிகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவனுக்கு மேற்படிப்புக்குப் பிறகு ரூ.7,000 கிடைப்பதே அரிதான விஷயம். மூன்றாம் வகுப்பிலேயே ஒரு மாணவனுக்கு தனியார் பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவு கிடைத்து விடுகிறது. அரசாங்கம் சொல்லியா இதை நாங்கள் செய்கிறோம்? பெற்றோருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து இதை நாங்கள் செய்து வருகிறோம்'' என்றார்.

மதுரையிலேயே மேலும் சில பள்ளி நிர்வாகிகள் நம்மிடம் பேசினார்கள்.

""அரசாங்கச் சம்பளம் பெறும் கடைநிலை ஊழியர் கூட அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளெல்லாம் கான்வென்ட்டுகளில் பிள்ளைகளைச் சேர்க்க கியூவில் நிற்கிறார்கள். இவ்வளவு ஏன்? கல்வித்துறை அதிகாரிகளுக்கே தங்களின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கையில்லாமல்தானே மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பலரும் அங்கே ஒழுங்காக வேலை செய்வதில்லை. அதே ஆசிரியர், வெளியில் டியூஷன் சென்டர் நடத்தி, தன் முழுத் திறமையை வெளிப்படுத்தி லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார். ஒவ்வொரு ஊரிலும் இத்தகைய டியூஷன் சென்டர்களைப் பார்க்க முடியும். இத்தகைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய கவனம் செலுத்தினாலே போதும். சிங்கப்பூரில் அரசுப் பள்ளிகளும் உண்டு. தனியார் பள்ளிகளும் உண்டு. ஆனால், அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கவே அங்கு ஆர்வமாக இருக்கிறார்கள் மக்கள். அப்துல் கலாம் அரசுப் பள்ளியில் படித்தார் என்று எத்தனை காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? அந்தக் காலம் வேறு. இந்தக் காலம் வேறு. முன்பு இந்தி படிக்காதே என்றார்கள். இப்போது சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்து ஆங்கிலத்தையும் ஒரு வழி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் நல்ல பெயர் எடுக்க புதுப்புது உத்திகளைக் கையாள்கிறது இந்த அரசு. தேர்தல் நெருங்கிவரும் நேரம் பார்த்து "கல்விக் கட்டணக் குறைப்பு' என்னும் அஸ்திரத்தை ஆட்சியாளர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள்'' என்றனர்.

"14 வயது வரை கல்வி பெறுவது ஒரு மாணவனின் அடிப்படை உரிமை' என்னும் அரசின் கல்விக் கொள்கையை வலியுறுத்தி வரும் சென்னை-நவபாரத் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

""தரமான ஆங்கிலத்தைக் கற்றுக் கொடுப்பதற்குத்தான் மெட்ரிக் பள்ளிகள் இருக்கிறதென்றால் அது தேவையே இல்லை. ஆங்கிலம் மிக மிக அவசியம் என்று சொல்லப்படுகிற கால் சென்டர் போன்ற வேலைகளெல்லாம் இப்போது பூர்த்தி நிலைக்கு வந்துவிட்டது. இந்தியைக் கற்றுக் கொடுக்க இந்தி பிரச்சார சபா இருப்பது போல், ஆங்கிலம் பயில்வதற்கு வேறொரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். கற்றல் திறன் தாய்மொழியில் இருப்பதே சிறப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள்தான் சமச்சீர் கல்வியையும் எதிர்க்கிறார்கள்.

29 மெட்ரிக் பள்ளிகள் மட்டுமே இருந்த 1977-லேயே "மாநில பாடத் திட்டத்தோடு இணைந்து செயல் படுங்கள். இதற்கு உடன்பட வில்லையென்றால் வேறு சேவை செய்யப் புறப்படுங்கள்' என்று அப்போது சுற்றறிக்கையே அனுப்பினார் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மால்கம் ஆதிசேஷய்யா. மெட் ரிக் பள்ளிகள் கேட்கவில்லையே. இப் போதும்கூட கட்டண நிர்ணயத்தில் குறைபாடு கண்ட தனியார் பள்ளிகள் என்ன செய்திருக்க வேண்டும்? "இந்தக் கட்ட ணத்தில் பள்ளி நடத்துவது இயலாத காரியம்?' என்று பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைக் கூட்டி விவாதித்திருக்க வேண்டும். பெற் றோர்களின் ஆதரவோடு "ஒரு ஐந்து ஆசிரியர்களுக்காவது மானியம் தந்தால்தான் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியும்' என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். ஒரு மெட்ரிக் பள்ளியாவது இதைச் செய்ததா?

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட டாக்டர் ஞானம் தலைமையிலான குழுதான் 2004-ல் மெட்ரிக் பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தது. இவைகளுக்கென்று தனித்தன்மை எதுவுமில்லை. சொல்லப் போனால், மெட்ரிக், சி.பி.எஸ்.இ. மாநில பாடத் திட்டம் இம்மூன்றுமே ஏறத்தாழ ஒரே மாதிரியானவைதான். "கடவுளை சம்பந்தப்படுத்தி, சாதி ஏற்றத் தாழ்வு கண்டு தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா' என்ற தனித்தன்மையை இந்த தேசம் பெற்றிருப்பது போல்தான் மெட்ரிக் பள்ளிகளின் தனித்தன்மையும் விகாரமாக இருக்கிறது. தமிழகத் தின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விதத்தில் இங்கே கல்வி இருக்காது. அரசுப் பள்ளி மாணவர்களிடம் உள்ள சமூகப் பார்வை, பாசம், பரிவெல்லாம் மெட்ரிக் மாணவர் களிடம் காண முடியாது. ஒற்றைக் கலாச்சாரத்துக்கு மாணவர்களைத் தள்ளும் வேலைதான் இந்தப் பள்ளிகளில் நடக்கிறது.

பொதுத் தேர்வில் வெற்றிபெற்ற மெட்ரிக் மாணவர்களின் பேட்டியை டி.வி.யில் பார்த்தவர்களுக்கு இந்த உண்மை புரியும். "நான் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவேன், அப்ராட் போவேன்' என்றே பலரும் சொன்னார்கள். இதற்கு மாறாக- அரசுப் பள்ளியில் படித்து மாநில அளவில் "ரேங்க்' வாங்கிய மாணவர்களோ "மருத்துவம் படிப்பேன்- மக்களுக்கு சேவை செய்வேன்' எனச் சொல்லியிருக்கிறார்கள். முழுக் கல்விச் செலவையும் மாணவனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. பள்ளிக் கல்வி "பிசினஸ்' கிடையாது. நிர்ணயித்த கட்டணத்துக்கு எதிராக கொடி பிடித்திருக்கும் மெட்ரிக் பள்ளிகள் எடுத்த முடிவு மாணவனுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாகும்.

தனியார் பள்ளிக் கட்டிடங்கள், அங்கிருக்கும் உபகரணங்கள் எல்லாமே மாணவர்களிடம் வசூலித்துச் சேர்த்தவை. அது மாணவர் களின் சொத்து. இதை வைத்துக் கொண்டு குறைந்த கட்டணத்தில் பள்ளி நடத்த முடியாது என்றால் தாராளமாக மூடி விட்டுப் போகட்டும். அதுவே மாணவ சமுதாயத்துக்கு நன்மை பயப்பதாக இருக்கும்'' என்றார் அழுத்தமாக.

சுயநலத்தை மட்டுமே வார்த் தெடுக்கும் கல்வியால் மனிதனை மனித வளமாக மாற்ற முடியுமா என்ன? தேசத்தின் முன்னேற்றம் இத்தகையோர் கைகளில் நிச்சயம் இல்லை.

No comments:

Post a Comment