Thursday, June 17, 2010

உண்மையானவர்கள் யார்?


மறக்க முடியுமா?' -நிறைவுறும் கட்டம் வருவதுபோல் தெரிகிறதே என நண்பர் ஒருவர் கேட்டார். எத்தனையோ பணி களுக்கிடையில் வாரம் இரு கட்டுரைகள் எழுதுவது சிரமமாக இருக்க வில்லையா எனவும் தொடர்ந்து வினவினார்.

வாரம் இரு கட்டுரைகளென்பது சற்றே சவாலானது தான். எனினும் என்னைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க வைத்தவை இரண்டு. ஆசிரியர் அண்ணன் கோபால் அவர்களும், இணை ஆசிரியர் தோழர் காமராஜ் அவர்களும் சந்திக்கிறபோதெல்லாம் ஒன்றை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவார்கள். அண்ணன் கோபால் எனக்கு மிக மூத்தவர், எனினும் என்னையும் அவர் உரிமையோடு அண்ணே என்றுதான் அழைப்பார். காமராஜோ நெருங்கிய நண்பரென்றாலும் ஃபாதர், ஃபாதர் என்பார். இருவருமே, ""அண்ணே, ஃபாதர்... ஈழவிடுதலை மீதான தமி ழகத்து மக்களின் உணர்வுகள் மங்கிவிடக்கூடாது. அவர்களுக்கு இன்று இருக்கிற சிறு நம்பிக்கை புலம் பெயர் தமிழர்களும், தமிழகத்து உணர்வாளர்களும்தான். ஆதலால் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்'' என்பார்கள்.

ஈழத்தமிழினம் என்றல்லாது உலகத் தமிழினம் தன் வரலாற்றுப் பயணத்தில் சந்தித்த மிகவும் வலி நிறைந்த, இருள் சூழ்ந்த காலகட்டத்தில் அந்த உணர்வுகளோடு இணைந்திருக்க வேண்டிய ஆன்மீகக் கடமை உணர்வும், அக்கடமையில் நக்கீரன் காட்டிய நேர்மையுமே என்னைத் தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டிருந்தன.

"இதை எழுதுங்கள், இதனை விடுங்கள், இவ்வாறு எழுதுங்கள்' என்று ஒருபோதும் எனக்குச் சொல்ல வில்லை. எழுதியது எதையும் தணிக்கை செய்யவும் இல்லை. ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை காலத்திற் கேற்றவாறு வண்ணம் மாற்றிக்கொண்ட பத்திரிகையுமல்ல நக்கீரன்.

நீங்கள் எழுதியவற்றில், பின்னோக்கிப் பார்க்கிற போது எதையேனும் பிழையானதென இப்போது கருதுகிறீர்களா எனவும் அந்த நண்பர் கேட்டார். ஒன்றினை மட்டும் அவ்வாறு கருதத் தலைப்படுகிறேன் என்றேன். அது கேணல்ராம் தொடர்பானது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்பின் போராட்டத் திற்காக மிச்சமிருந்த நம்பிக்கைகளில் ஒன்றாக கேணல்ராம் கருதப்பட்ட காலத்தில்தான் நான் அவரைப்பற்றி எழுதியிருந்தேன். ஆனால் இன்று அவர் அப்படி இல்லையென்றே எனக்கு மிகவும் நம்பிக்கையான தகவல்கள் கூறுகின்றன. அப்படியானால் கேணல்ராம் இன்று துரோகியா என்ற கேள்வி எழும். அவரும் இன்றை கே.பி.யைப். போல என்று வைத்துக்கொள்ளலாம். அரசோடு ஒத்துழைக்கிறவர்கள். சித்ரவதை, கொடூர மரணத்திற்குப் பதிலாக ஒத்துப்போக முடிவு செய்துவிட்டவர்கள்.

போராட்ட மீள் எழுச்சியின் நம்பிக்கையாக இருந்த கேணல் ராம் இந்நிலைக்கு வரக்காரணம் என்பதற்குத் தெளிவான காட்சிகள் இல்லை. ஆனால் அங்கொன்று இங்கொன்றாகக் கிடைத்த தகவல்களின்படி முள்ளிவாய்க்காலுக்குப்பின் கேணல்ராமுடன் தளபதி நகுலனின் அணிகள் உட்பட சுமார் 600 போராளிகள் மட்டக்களப்பு- திருகோணமலை காடுகளுக்குள் நின்றது உண்மை. ஆனால் தயாமோகன் என்ற இன்னொரு மூத்த போராளியால் ராம் முதலில் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார். ராமை பயன்படுத்தி மெச்சத்தகு போராளி நகுலனையும் சிங்கள ராணுவம் மடக்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

தளபதி நகுலனை முள்ளிவாய்க்காலுக்குப்பின் தொலை பேசி வழி பேட்டி காண எனக்கு வாய்ப்பு அமைந்தது. முன்பொருமுறை போராளி ஒருவர் சொல்லியதாக நான் எழுதியிருந்ததை வாசகர்கள் நினைவுகூரலாம்.

எனது கேள்வி : ""எப்படியிருக்கிறீர்கள்?''

அவரது பதில்: ""செத்தும் நாறாத பிணங்களாய் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.''

அவரது பதிலில் உள் அர்த்தம் இருந்ததோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது. நான் பேட்டி கண்ட காலத்திலேயே சூழ்ச்சியாலும் சூதாலும் நகுலன் சிங்களப் பிசாசுகளின் பிடிக்குள் வந்துவிட்டிருந்தாரோ... அந்த வலியில்தான் ""செத்தும் நாறாத பிணங்களாய் இங்கு வாழ்கிறோம்'' என விரக்தியில் சொன்னாரோ என்றெல்லாம் இன்று நான் எண்ணத் தலைப்படுகிறது.

பதினாறு வயதில் இயக்கத்தில் இணைந்த போராளி நகுலன். எண்ணிலா களங்களில் வீரப்போர் புரிந்தவன். ""ஃபாதர், 1998-ல் கிளிநொச்சியை பிடிக்க நாங்கள் அடித்து முன்னேறிக் கொண்டிருந்தபோது காதில் வானொலியை கட்டி வைத்து உங்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும் ஊடறுத்தோம்'' எனக்கூறி என்னை சிலிர்க்க வைத்த போராளி. இன்றோ, செத்தும் நாறாத பிணமாய்... துரோகத்தின் சங்கிலிகள் தமிழினத்தின் வரலாற்று நீட்சியாய் தொடர்ந்து வருகின்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் படைத்த வீர வரலாற்றினை துரோகம் மங்கலாக்கி விடுமோ என சில வேளைகளில் அச்சமாயிருக்கிறது.

எனில் யார்தான் இன்று உண்மையாக இருக்கிறார்கள்? இன்னும் நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தமிழீழக் கனவை மட்டுமே நம்பிக் களமாடி இன்னுயிர் நீத்த 37,000 போராளிகளைப் போல் ஏராளம்பேர் எங்கோ நீறுபூத்து மீண்டும் தமக்கான நாள் வருமெனக் காத்து நிற்பார்கள் என்பது மட்டும் உண்மை.

வெளிநாடுகளில் உள்ளவர்கள்? பெருவாரியானவர்கள் எப்போதுமே நல்லவர்கள். ஆனால் பொறுப்புகளில் உள்ள பலர் மோசடிப் பேர்வழிகளாகவும் அயோக்கியமான துரோகிகளாகவும் மாறி, போராட்டம் சிதைய முக்கிய காரணமானவர்கள் -இன்று போராட்ட தியாகங்களின் புனிதமான நினைவுகளை கபளீகரம் செய்துகொண்டு பணத்திலும் அதிகாரத்திலும் படுத்துப் புரள அரிப்பெடுத்து நிற்கிறவர்கள். "அதிர்வு' போன்ற இணையதளங்கள் இத்தகு துரோகிகளின் புகலிடம். வெளியே பார்க்க பயங்கர உணர்வாளர்கள் போல் தெரியும். பின்புலம் துரோகமாயிருக்கும்.

எனில் நம்பிக்கைக்கு இடமில்லையா? நிரம்ப உண்டு, நிச்சயம் உண்டு. 37,000 போராளிகளின் தியாகங்கள் வீணாகிப் போய் விடுமா என்ன? ஈழம் வரும். அந்த என் நம்பிக்கைகளை நிறைவாக அடுத்த இதழில் பதிவு செய்வேன்.

சில மாதங்களுக்கு முன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். மாலை உணவோடு உரையாடிக் கொண்டிருந்தோம். ஊடே அவர் கேட்டார், ""இந்த நூற் றாண்டு முடியும்போது இன்று வரையான தமிழினம் கண்ட தலைவர் களில் யார் யாரை வரலாறு நினைவில் வைத் திருக்கும்? என நீங் கள் கருதுகிறீர்கள்?'' எனக் கேட்டார். நான் ஐந்து தலைவர் களின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டேன். அவர் மெல்லிதாகச் சிரித்தார். பெரிய பேராசிரியர் அவர். அவர் தமிழரே அல்ல. இரண்டு பேரைத்தான் வரலாறு நினைக்கும். "ஈ.வே.ரா. பெரியார், வேலுப் பிள்ளை பிரபாகரன்'. நான் அவரது முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். ""இந்தியத் தமிழர்களுக்கு மிகப்பெரும் சமூக எழுச்சியை கொடுத்தவர் பெரியார். அதே எழுச்சியை உலகத் தமிழர்களுக்குத் தந்திருப்பவர் பிரபாகரன். அவரது ஆளுமையின் வீச்சு நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளாக எதிர்காலத்தில் வரும்'' என்றார்.

இப்படியொரு வீரனை தமிழ் வரலாறு இதுவரை கண்டதில்லை. இந்திய அமைதிப் படையின் காலம். மணலாறு பகுதியென நினைக்கிறேன். பிரபாகரன் அவர்களை இந்திய ராணுவம் நான்கு முனைகளிலும் சுற்றி வளைக்கிறது. பிரபாகரனோடு இருந்தவர்களோ நூற்றுக்குக் குறைவான போராளிகள்தான். மணலாற்றுக் காடுகளின் மரங்களது இலைகள் கூட புலிகளுக்காய் போர் புரிந்த காலம் அது. ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் சுற்றி வளைத்து பெரும் ஆயுத பலத்தோடு நின்றபோதும் முற்று கைக்குள் பெட்டி அடித்து (இர்ஷ்) வீரச்சமர் புரிந்த பிரபாகரனின் பிள்ளைகளை வெற்றிகொள்ள முடியவில்லை. அப்போது இந்தியத் தளபதியாயிருந்த ஜெனரல் கல்கத் அவர்களிடம் ""மணலாற்றில் புலிகளின் நிஜபலம் என்ன?'' என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது அவர் கூறிய பதில் மறக்கவே முடியாதது! ""அவர்களின் எண்ணிக்கை பலத்தை என்னால் எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனால் அவர்களின் மனபலத்தை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. எங்களால் அவர்களை வெல்ல முடியாதிருப்பதற்கும் அதுவே காரணம்!''

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முல்லைத்தீவு ஆனந்தபுரம் தென்னந்தோப்பிலும் அதுவேதான் நடந்தது. அங்கு சிறு முகாம் அடித்து போரை வழிநடத்திய பிரபாகரன் அவர்களின் வீட்டைச் சுற்றி சிங்கள ராணுவம் நான்குபுறமும் பெட்டி அடிக்க (இர்ஷ்), கேணல் தீபன், விதுசா, துர்கா ஆகியோரின் அணிகள் நடத்திய எதிர்தாக்கு தல் என்னைச் சிலிர்க்க வைப்பவை. பெட்டியடித்த ராணுவத்தினரை சுற்றி வளைத்து பெட்டியடித்துத் தாக்குதல் தொடங்கிய தளபதி கடாஃபி அவர்களின் வியூக வகுப்பு உலக ராணுவ வரலாற்றில், எதிர்காலத்தில் பேசப்படும். பல்லாயிரம் ராணுவத்தினரை நான்கு முனைகளிலும் எதிர் கொண்டு, கடைசியில் ரசாயன ஆயுதங்களை சந்தித்தவரை, வீரச்சமர் புரிந்த விடுதலைப் புலிகளின் வீரம் உலகறியா சரித்திரம். அந்த நிலையிலும் நிலைகுலையாது களத்திலும் புலத்திலுமான கட்டளைத் தேவைகளை செய்து கொண்டிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் புறநானூற்றையும் வென்றவரே.

No comments:

Post a Comment