Sunday, June 13, 2010

மக்கள் உயிரை மதிக்காத மத்திய அரசுகள்!




shockan.blogspot.com

""இந்தியாவில் ஏழைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு பன்னாட்டு பணக்காரர்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது'' -26 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பைக் கேட்ட மாத்திரத்தில் போபால் நீதிமன்றம் எதிரே திரண்டிருந்தவர்களில் ஒருவர் கண்ணீர் வழிய சொன்ன வார்த்தைகள் இவை.

1984-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இரவில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நடந்த அந்தக் கொடூரம் ஒட்டுமொத்த இந்தியாவை மட்டுமல்ல, உலகநாடுகளையும் அதிரவைத்தது.

என்னதான் நடந்தது அந்த இரவில்?

போபாலில் உள்ள அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையில் பைப்புகளை தண்ணீரால் சுத்தம் செய்யும் பணி இரவு 9 மணியளவில் நடக்கிறது. அந்தத் தண்ணீர் இரவு 10 மணியளவில் டேங்க் 610 என்ற உலைக்குள் புகுந்து விடுகிறது. அந்த உலையில் இருப்பது, அபாயம் ஏற்படுத்தக்கூடிய ரசாயனமான மீத்தைல் ஐசோ சயனைட். 412 டன் எடை அளவுக்கு அந்த டேங்க்கில் மீத்தைல் ஐசோ சயனைடு இருந்ததால், அளவுக் கதிகமான தண்ணீர் புகுந்ததும், கசிவு ஏற்பட்டு விஷவாயு வெளி யேறத் தொடங்குகிறது.

விஷவாயு மெல்ல மெல்ல போபால் நகருக்குள் பரவுகிறது. கண் எரிச்சல், மூச்சு அடைப்பு என பொதுமக்கள் அவதிப்படு கிறார்கள். மயங்கிவிழுவதும் மரணமடைவதும் தொடர்கிறது.

இரவு 12.30 மணிக்கு அபாய அலாரம் ஒலிக்க, தொழிற்சாலையில் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறுகின்றனர். 1 மணிக்குப் பிறகுதான் போலீசுக்கே ஏதோ அசம்பாவிதம் நிகழ்கிறது என்பது தெரியவருகிறது. யூனியன் கார்பைடு நிறுவன இயக்குநரோ எங்கள் ஆலையில் எந்த லீக்கேஜும் இல்லை எனப் பச்சைப் பொய் சொல்கிறார். இரவு 2 மணிக்குத் தான், தங்களைச் சூழ்ந்துள்ள ஆபத்தை போபால் மக்கள் உணர்கிறார்கள். மருத்துவமனைகளுக்கு ஓடுகிறார்கள். அவர்களை மரணதேவன் துரத்திக்கொண்டே ஓடுகிறான். விடியற்காலை 4 மணி வரை நீடித்த விஷவாயுக் கசிவு, ஆயிரக்கணக் கான மக்களின் உயிரைக் குடித்திருந்தது.

காலை 6 மணிக்கு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று போலீஸ் வாகனத்தின் ஸ்பீக்கர் அலற, இந்தியாவின் கறுப்பு பொழுதாக டிசம்பர் 4-ந் தேதி விடிகிறது.





விஷவாயுக் கசிவு நிறுத்தப் பட்டாலும், அது ஏற்படுத்திய பாதிப்பினால் அடுத் தடுத்த நாட்களிலும் மரணங்கள் தொடர்ந்த படியே இருக்க, சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கண் பார்வை பாதிப்பு, உடல் ஊனம் என சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். விஷவாயுக்கசிவின் தாக் கம் இன்றுவரை தொடர்வதால், போபாலில் பிறக்கும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பெரும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. மனிதகுலம் எதிர்கொண்ட மிகக் கொடூரமான ஆலைவிபத்து என வர்ணிக்கப்படும் போபால் விஷவாயுக் கசிவு சம்பந்தமான வழக்கில்தான், 2010 ஜூன் 7-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் 7 இந்திய அதிகாரிகளுக்கு தலா 2 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை அளித்து தீர்ப் பளித்தார் போபால் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் மோகன் பி திவாரி. 7 பேருக்கும் அன்றைக்கு சாயங்காலமே ஜாமீனும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்தத் தீர்ப்பு பற்றிய விவரங்களை யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவரான வாரன் ஆன்டர் சன், நியூயார்க்கில் உள்ள தன் வீட்டிலிருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தார். வழக்கின் முக்கிய குற்றவாளியான அவரது பெயர், தீர்ப்பில் இடம்பெறவேயில்லை. 89 வயதாகும் ஆன்டர்சன் சந்தோஷத்துடன் தன் வீட்டிலிருந்து கிளம்பி லாங்ஐலாண்டு தீவில் உல்லாசமாய் பொழுதுபோக்க போய்க் கொண்டிருந்தார்.

இந்தியாவின் ஆட்சியாளர்கள், நீதித்துறை, சட்டதிட்டங்கள் அனைத்தையும் உலகத்தின் பார்வையில் கண்டனத்திற்கும் கேலிக்கும் உரியதாக ஆக்கியிருக்கிறது போபால் விஷவாயு வழக்கு என்கிறார்கள் 26 ஆண்டுகாலமாக நீதிக்குப் போராடி வருபவர்கள். போபால் கொடூரம் நடந்த 4 நாட்களில் கைது செய்யப்பட்டார் ஆன்டர்சன். ஆனால், சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் வெளியேறி, மாநில அரசின் விமானம் மூலம் அமெரிக்கா தப்பிச் சென்றுவிட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடக்கவேயில்லை. ஆன்டர்சனையும் யூனியன் கார்பைடின் அமெரிக்க அதிகாரிகளையும் தனி வழக்கில் சேர்த்துவிட்டு, யூனியன் கார்பைடு நிர்வாகத் தில் இருந்த இந்திய அதிகாரிகள் மீது மட்டும் வழக்கு விசாரணை நடந்தது. அதிலும், தவறான செயலால் கொலை நோக்கமில்லாமல் மரணத்தை உண்டாக்குதல் என்கிற இ.பி.கோ 304 (2) செக்ஷனில் பதிவான வழக்கை யூனியன் கார்பைடு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மூலம், கவனக்குறைவால் உயிரிழப்பு களை ஏற்படுத்துதல் என்கிற இ.பி.கோ 304 (ஆ) என்ற பிரிவுக்கு மாற்றியது. தலா 2 ஆண்டு மட்டுமே சிறைத் தண்டனை என்ற தீர்ப்புக்கு இது ஒரு முக்கிய காரணம் என்று குமுறுகிறார்கள் விஷவாயு தாக்குதலால் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர்கள்.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ.யின் செய்தி தொடர்பாளர் ஹர்ஷ்பால், ""ஆதாரங்களையும் ஆவணங்களையும் நாங்கள் அமெரிக்காவிலிருந்து திரட்டுவதில் நிறைய சிரமம் இருந் தது. வழக்கின் பிரிவை உச்சநீதிமன்றம் மாற்றியதால் அதன்படி நாங்கள் செயல்படவேண்டியிருந்தது'' என்று சால்ஜாப்பு சொல்கிறார்.

முன்னாள் அதிகாரியான லால், ""ஆன்டர்சனை கைது செய்ய வேண்டாம் என்று நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை எங்களுக்கு உத்தரவிட்டது. அதன்படிதான் நாங்கள் நடந்துகொண்டோம்'' என்று உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

போபாலுக்கு நீதி கோரும் உலகளாவிய பிரச்சாரக் குழுவின் உறுப்பினரான நித்யானந்த் ஜெயராமன் நம்மிடம், ""தீர்ப்பு குறித்து இந்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி அதிருப்தி வெளி யிடுகிறார். சி.பி.ஐ. விசாரணையை குற்றம்சாட்டுகிறார். ஆன்டர்சன் மீதான வழக்கு முடியவில்லை. அவரைப் பிடிப்போம் என்கிறார். ஆனால், 2009-ல் கூட ஆன்டர்சனை ஏன் கைது செய்யவில்லை எனக் கோர்ட் கேட்டது. அதன்பிறகு அவரைப் பிடிக்க இந்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ராஜீவ்காந்தி காலத்தில் நடந்த கொடூரம் இது. அதைத் தொடர்ந்து வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் என 7 பிரதமர்களும் அவர்கள் தலைமையிலான அரசுகளும் அமைந்துவிட்டன. ஒரு அரசும் மக்கள் பக்கம் நிற்கவில்லை. நியாயமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டில் நெதர்லாந்து நாட்டுக் கம்பெனியின் அபாயகரமான திடக்கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, ஐவரிகோஸ்ட் தரப்பிலிருந்து நெதர்லாந்து நாட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நிவாரணமும் கிடைத்தது. ஆனால், அமெரிக்கா தப்பிச் சென்ற ஆன்டர்சன் மீது அந்நாட்டிலேயே வழக்குத் தொடர அனுமதிகேட்டு மனுதாக் கல் செய்தபோது, யூனியன் கார்பைடு ஆலைக்காக இந்திய வழக்கறிஞர் பல்கிவாலா ஆஜராகி, "எங்கள் நாட்டில் சிறப்பான சட்டதிட்டங்கள் இருக்கிறது. அங்கே விசாரிப்பதுதான் சரி' என்று வாதாட, அமெரிக்க நீதிமன்றமும் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. நம் நாட்டவர்களின் சமூக அக்கறை இப்படித்தான் இருக்கிறது'' என்றார் நியாயமான கோபத்துடன்.

பாதிக்கப்பட்ட 6 லட்சம் மக்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 12ஆயிரம் கோடி தரவேண்டும் என யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் கோரப்பட்டது. அது தந்ததோ வெறும் 1500 கோடி ரூபாய். அதாவது, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சராசரியாக 12ஆயிரத்து 410 ரூபாய்தான். இந்தியர்களின் உயிர் எவ்வளவு மலிவானது என்று உலகத்திற்கு காட்டிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரைத்தான் இந்திய ஆளும்வர்க்கம் கைது செய்யாமல் விட்டுவைத்திருக்கிறது.

மனித உரிமைப் போராளியான டாக்டர் வீ.புகழேந்தி, ""போபால் விஷவாயு கசிவு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட வரதராஜன் கமிட்டி, யூனியன் கார்பைடு ஆலையில் பாதுகாப்பு வடிவமைப்புகள் இந்திய சட்டங்களுக்கு முரண்பாடாக உள்ளன. போதிய பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த வடிவமைப்புக்கு நிறுவனத்தின் சார்பில் ஒப்புதல் கையெழுத்து போட்டுத் தந்திருப்பவர் ஆன்டர்சன்தான்.

அதனால் அவர் நேரடிக் குற்றவாளியாகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, நட்ட ஈட்டுத் தொகையை பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டும்'' என்கிறவர், "ஒரு போபால் மட்டுமல்ல, இந்தியாவில் நிறைய ஆபத்தான ஆலைகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் அத்தகைய ஆலைகளும், அவைகளின் ஆதிக்கத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களும் இந்தியர்களின் உயிரையும் வாழ்வையும் உறிஞ்சும் ஆபத்துகள்'' என எச்சரிக்கிறார்.

""போபால் விஷவாயு வழக்கில் உண்மையாகவே அரசாங்கம் அக்கறை செலுத்தினால் சி.பி.ஐ.யால் இதற்காகவே ஒரு சிறப்பு விசாரணை செல் உருவாக்கவேண்டும். அதுபோல, இன்றுவரை தொடரும் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கவும் சிகிச்சைகள் தருவதற்கும் ஒரு சிறப்பு ஆணையம் அமைக்கப்படவேண்டும். இதுபோன்ற விபத்துகள் இனி இந்தியாவில் நடக்காமல் இருக்கவும்-விபத்து நடந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கவும் இழப்பீட்டு சட்டம் உருவாக்கப்படவேண்டும்'' என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

மக்களின் உயிரை மதிக்கும் ஆட்சியாளர்கள் உள்ள நாட்டில்தான் இதையெல்லாம் எதிர்பார்க்கமுடியும். இந்திய ஆட்சியாளர்களிடம் மக்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

No comments:

Post a Comment