Sunday, June 20, 2010

வறுமையில் சோமசுந்தரப்புலவரின்..



shockan.blogspot.com

தமிழின் புகழ்பெற்ற உரையாசிரியர் மேலப்பெருமழை சோமசுந்தரப் புலவரின் குடும்பத் தினர்... வறுமையில் வாடுகிறார்கள். அரசுதான் இவர்களுக்கு நல்வழி காட்டவேண்டும்’ என்று நமக்கு அழைப்புவர.... கோவையில் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு தகவலா என்று... திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மேலப்பெருமழை கிராமத்தை நோக்கி விரைந்தோம்.

வேதாரண்யத்தில் இருந்து முத்துப்பேட்டைக்குச் செல்லும் வழியில்... இடும்பாவனம் அருகே இருந்தது மேலப்பெருமழை.

அங்கு தேநீர்க் கடையில் அமர்ந்திருந்த பெரியவர் மாணிக்கம் ""யாரு பெரும்புலவர்பத்தியா விசாரிக்க வந்திருக்கீங்க? ரொம்ப சந்தோசம்யா. உட்காருங்க. எனக்குத் தெரிஞ்ச சில விசயங்களைச் சொல்றேன்''’என நம்மை அமரவைத்து விரிவாகப் பேச ஆரம்பித்தார்.

""புலவரோட அப்பா பேரு வேலுத்தேவர். அம்மா பேரு சிவகாமியம்மா. 1909-ல் பிறந்த புலவர்... இயல்பா தமிழார்வம் கொண்டவர். ஏர் பிடிச்சி வாழற குடும்பத்தில் பிறந்த இவர்.. வீட்டுக்குத் தெரியாம கோயில்கள்லயும் குளக்கரைகள்லயும் உட்கார்ந்து... தமிழ் நூல்களைப் படிச்சி... படிச்சி அறிவை வளர்த்துக் கிட்டார். சித்தியோட நடத்தை காரணமா வீட்டை விட்டு வெளியேறி தன் மாமா வீட்டில் போய் படிப்பைத் தொடர ஆரம்பிச்ச இவரோட திறமையைப் பார்த்த சர்க்கரைப்புலவர்... அவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருக்கும் தன் நண்பர் மூலம்... படிக்க ஏற்பாடு செஞ்சார். அங்க ஏராளமான நூல்களைக் கற்றறிந்தார் புலவர். படிப்பு முடிஞ்சதும் பட்டமளிப்பு விழா நடந்தது. எர்ஸ்கின் பிரபுங்கிற கவர் னர்தான் பட்டமளிப்பு விழாவுக்கு அழைக் கப்பட்டிருந்தார். தமிழ் தெரியாத கவர்னர் கையால் கொடுக்கப்பட்ட பட்டம் எனக்குத் தேவை இல்லைன்னு அதைக் கிழிச்செறிஞ்சிட்டார் புல வர். பண்டிதமணி கதி ரேசன் செட்டியார்... இவ ரோட புலமையை அறிந்து... தான் எழுத ஆரம்பித்த திருவாசக உரையை... புலவரைக் கொண்டு எழுதி முடிச்சார்.

உரை எழுதுவதில் ஆர்வம் கொண்ட புலவர் சோமசுந்தரம்... சங்க இலக்கியங்களுக்கு உரை எழுத ஆரம்பிக்க... தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்... இவரோட உரைகளை வெளியிட ஆரம்பிச்சாங்க. சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் சித்தர் பாடல்கள் வரை அவர் எழுதிக் குவிச்ச உரைகள் எல்லாம்... தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரு மை சேர்த்துக்கிட்டு இருக்கு.. அப்படிப்பட்ட புலவர் பக்கவாத நோய் தாக்கி 92-ல் இறந்து போனார். அவரை எங்க ஊர்லயே தகனம் செஞ்சாங்க. புலவரோட படைப்புகளும் நாடகங்களும் பல்கலைக் கழகங்கள்ல பாடமா இருக்கு. தமிழுக்கு இப்படி பல வகைகளிலும் வளம் சேர்த்த அவரது குடும்ப வாரிசுகள்... பாவம் இப்ப வறுமை யில் வாடிக்கிட்டு இருக்காங்க. அதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு''’என்றார் வருத்தமாக.

பெரும்புலவர் சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி, மாரிமுத்து ஆகியோரைப் பற்றி விசாரித்தபோது... 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலிவேலை செய்யப் போயிருப்பதாகச் சென்னார்கள்.

புலவர் வீட்டை தேடிச் சென்றோம். பசுபதியின் மகள் வயிற்றுப் பேத்தி யோகாம்பிகை "முதல்ல தண்ணீர் குடிங்கண்ணா'’என உபசரித்தார். அடுத்த கொஞ்ச நேரத்தில் புலவரின் மகன்களான பசுபதியும் மாரிமுத்து வும் வந்துசேர்ந்தனர்.

அவர்கள் நம்மிடம் ""எங்க அப்பாவை பெரிய புலவர்னு ஊரே கொண்டாடுது. ஆனா அவரோட பெருமை அவர் வாழ்ந்தப்ப எங்களுக்குத் தெரியலை. எப்பப் பார்த்தாலும் படிச்சிக்கிட்டும் எழுதிக்கிட்டும் இருப்பார். சில நேரம் யாரையாவது எழுதச்சொல்லி டிக்டேசன் பண்ணுவார். தமிழை நேசிச்சி அக்கறை காட் டிய அளவுக்கு அவர் எங்க மேல அக்கறை காட்டலை. அதனால் எங்களை படிக்கவைக்கவும் இல்லை. எங்களுக்கு சொத்து சேர்த்து வைக்கவும் இல்லை. எங்க அப்பா எழுதிய புத்தகங்கள் எல்லாம் பாடப்புத்தகமா இருக்குன்னு சொல்லிக்கிறாங்க. அதையெல்லாம் வாங்கிப்பார்க்கக் கூட காசு இல்லை. எங்க வாரிசுகளை யாவது தமிழ் படிக்கவைக்கலாம்னு பாக்கறோம். ஆனா அதுக்கு வசதி வேணுமே. எங்க நிலைமையை சமீபத்தில் முதல்வர் கலைஞரய்யாவுக்கும் துணை முதல்வருக்கும் கடிதமா எழுதியிருக்கோம். அது அவங்க கைல கிடைச்சா அவங்க கட்டாயம் எங்களுக்கு உதவுவாங்க. ஏன்னா கலைஞரய்யா எங்க அப்பா மேல் அதிகமதிப்பு கொண்டவர்''’என்றார்கள் சலனமில்லாமல்.

புலவரின் படைப்புகள் குறித்து வாரிசுகளுக்கு அதிகம் தெரியவில்லை. புலவரின் எழுத்துக்கு உதவி யவர்களில் ஒருவரான இடும்பாவனம் தியாகராஜனை நாம் சந்தித்தபோது “""57 வாக்கில் எஸ்.எஸ்.எல்.சி. படிச் சிட்டு ஊர்ல சும்மா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப புலவர்... "என்கிட்ட நீ எழுத்து வேலை பார்க்க வர்றியா. கூலி தர்றேன்'னு கூப்பிட்டார். நானும் போனேன். அப்ப 300 ரூபா கூலி தருவார். கட்டிலில் உட்கார்ந்துக்கிட்டு சங்க இலக்கிய நூல்களுக்கு உரை... சொல்லிக்கிட் டே இருப்பார். நான் எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி தொல் காப்பி யம், மணிமேகலை, குண்டல கேசின்னு பல நூல்களுக்கு அவர் சொல்லச்சொல்ல உரை எழுதியது நான்தான். அகநானூறுக்கு உரை எழுதும்போது அவரோட வேகத் துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியலை. அதனால் நின்னுட் டேன். அவரைப்போல் வேகமா உரை எழுத யாராலும் முடியா துங்க. அவர்ட்ட இருந்த நாட் களை பெருமையா நினைக்கிறேன்''’என்றார் மலரும் நினைவுகளில் மூழ்கியவராய்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான ராஜமாணிக்கம் சொல்கிறார்... "மூணு வருசத்துக்கு முன்ன திருவாரூருக்கு ஒரு வேலையாப் போயிருந்தேன். அப்ப ஒரு தமிழாசிரியர் நீங்க எந்த ஊருன்னு கேட்டார். நான் மேலப்பெரு மழைன்னு சொன்னதும்... ஆஹா பெரும்புலவர் பிறந்த ஊரான்னு கேட்டு என் காலைத் தொட்டு வணங்கினார். நான் திகைச்சுப் போயிட்டேன். அதுக்கு பெரும்புலவரை வணங்கும் வாய்ப்பு எனக் குக் கிடைக்கலை. அதனால் அவர் ஊர்க்கார ரான உங்களை வணங்கறேன்னு சொன்னார். நெகிழ்ந்துபோன நான்... நேரா ஊருக்கு வந்து... புலவர் பேரில் ஒரு சாலையோர பூங்காவை அமைச்சேன். ஊராட்சி மன்றத்தில் புலவரின் படத்தையும் திறந்துவச்சேன். தமிழுக்கு பெரு மை சேர்த்த புலவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு தாராளமா உதவுவதோடு... அவருக்கு எங்க ஊரில் மணிமண்டபம் கட்டி... அங்க புலவரின் அத்தனை புத்தகங்களையும் வைக்கணும். அங்க ஆய்வாளர்கள் அதிகம் வரணும். இது எங்க ஆசை''’’ என்றார் உணர்ச்சி வசப்பட்டவராய்.

தமிழக அரசு மேலப்பெருமழை பக்கம் தன் கருணைப் பார்வையைத் திருப்பவேண்டும்.

No comments:

Post a Comment