Sunday, June 20, 2010

பெற்றோர்களை மறந்த பிள்ளைகள்! -சே... சே... சென்னை!


shockan.blogspot.com

ஆசியாவிலேயே அழகான நகரங்களில் நம்ம சீர்மிகு சென்னையும் சிறப்பான இடத்துல இருக்கு. ஆனா, சமீபத்துல எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் சே... சே... சென்னை என்று டென்ஷன் பட வைத்திருக்கிறது.

வயசான பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள்.. அவர்களின் பிள்ளைகளாலும், உறவினர்களாலும் வெறுத்து ஒதுக்கப்படுறது எங்க அதிகமா இருக்குன்னு இந்தியா முழுக்க எடுக்கப்பட்ட சர்வேயில்தான்... சென்னை நம்பர்-1 இடத்தைப் பிடித்து வேதனை பட்டியலில் இடம்பெற்று தலை குனிய வைத்திருக்கிறது.

உதாரணத்துக்கு சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ருக்மணி நம்மிடம், ""என் கணவரோட பிறந்த நாலு தம்பிகளையும்... என் அம்பது பவுன் நகையெல்லாம் வித்து படிக்க வெச்சு ஆளாக்கினேன். அதுக்கப்புறம் புருஷனோட சென்னை மயிலாப்பூருக்கே வந்துட்டேன். மூணு பையன் ஒரு பொண்ணு பொறந்தது.

என் கணவர் ராஜ கோபால் சைக்கிளில் போகும்போது... ஆட்டோ இடிச்சு கை, கால் நொறுங்கி படுத்த படுக்கையாகிட்டார். இந்த கஷ்டமான சூழ்நிலையிலயும் பெரிய பையன் சந்திரசேகரனை படிக்க வெச்சு கப்பலுக்கும், ரெண்டாவது பையன் ராஜசேகரை படிக்க வெச்சு ஏர்போர்ட் வேலைக்கும்னு... வெளிநாட்ல இருக்கானுங்க. மூணாவது பையன் கோபாலகிருஷ்ணனுக்கு என் கணவர் மூலமா ரெயில்வேயில் வேலை கிடைச்சது. நாலாவது பொண்ணு கீதாவை பி.எஸ்.சி., பி.எட். வரை படிக்க வெச்சு பாண்டிச்சேரியில அட்வகேட்டுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். நாலு பிள்ளைகளும் நல்ல வசதி வாய்ப்போடுதான் இருக்குதுங்க. ஆனா, நான் தான் இப்போ முதியோர் இல்லத்துல இருக்கேன்'' என்று மனம் நொந்து போன ருக்மணி பாட்டி... மேலும் சொன்ன தகவல் பரிதாபத்தின் உச்சம், ""மூணாவது பையன் வீட்லதான் இருந்தேன். நாலு வீடு வாடகை விட்டு ஒரு பக் கம் வருமானம் வந்துக்கிட்டு தான் இருந்தது. ஆனா, மருமக ராஜலட்சுமி, "சும்மாவே உட்கார்ந்திருக் கீங்க... எதாவது வேலைக்குப் போக வேண்டி தானே'ன்னு அடிக்கடி சொல் லிக்கிட்டே இருப்பா. 70 வயசுல என்னால எந்த வேலைக்குப்பா போக முடியும்? அப்படியிருந்தும் பூ கட்டி விக்கிறது, வீட்டு வேலை செய்யுறதுன்னு போயி பார்த்தேன். உடம்புக்கு முடியாம போச்சுய்யா. மனைவி எந்த வார்த்தை சொன்னாலும்... பெத்த புள்ள கண்டுக்க மாட்றானேங்குற வேதனை ஒரு பக்கம். அப்பாவோட சாவுக்கே வராத புள்ளைங்க ரெண்டும் வெளி நாட்டுல. பொம்பளப்புள்ள மட்டும் எப்படி நம்மள பாத்துக்கும்? இனி புள்ளைங்களாவது நல்லாயிருக்கட்டும்'' என்று வாழ்த்துகிறார் கண்ணீர் மல்க 75 வயதாகும் ருக்மணி.

வடிவம்மையோ ""பையன் ஆறு முகம் டிரைவர் வேலை பார்த்துக்கிட்டி ருந்தான். என்னைக்கு கல்யாணம் ஆச்சோ... அன்னையோட என்னை விட்டுட்டு பொண்டாட்டி வீட்டுக்கே போயிட்டான். சரின்னு பொண்ணு வீட்டுக்கு போனேன். மருமகனுக்கு நான் இருக் கறது புடிக்கலங்கிறதை புரிஞ்சுக் கிட்டேன். நம்மளால நம்ம பொண்ணு வாழ்க்கை வீணாயிடக் கூடாதுன்னு தான் முதி யோர் இல் லத்துக்கு வந்துட்டேன். இங்க வந்தாதான் என் னை மாதிரி எத்தனையோ பேர் பிள்ளைங் களால வெறுத்து ஒதுக்கப்பட்டு இங்க வந்திருக்காங் கன்னு புரிஞ்சது. ஹூம்'' பெருமூச்சு விடுகிறார் வேதனை யுடன். இதே நிலைமைதான் 75 வயது கோதையம்மாளுக்கும்.

""படிக்க வெச்சு நல்ல நிலைமைக்கு வர்றவரைக்கும்தாங்க அம்மா-அப்பா எல்லாம். நல்ல வாழ்க்கை அமைஞ்சுருச் சுன்னா போதும் நம்மள தூக்கி எறிஞ்சுட்டு போய்க்கிட்டே இருப்பாங்க புள்ளைங்க'' என்ற குமுறலுடன் பேசுகிறார் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ராமச்சந்திரன். ""ரெண்டு பையன், மூணாவது பொண்ணுங்க. சின்ன வயசிலே யே ஹார்ட் அட்டாக்ல என் மனைவி அமிர்தவள்ளி எங்களை விட்டுப் போய்ட்டா. மூணு பிள்ளைகளையும் மாமியார் வீட்ல விட்டுட்டு... அப்பவே ஆவின் லைசென்ஸ் வாங்கி பால் வியா பாரம் பண்ணி முதல் பையன் லட்சுமி நரசிம்மனை படிக்க வெச்சேங்க. நல்லா படிச்சான்... அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டுல அப்போ சீஃப் என்ஜினியரா இருந்த ஜானகிராமன் மகள் மீனாட்சிக்கும்... என் பையனுக்கும் பெரிய அளவுல கல்யாணம் பண்ணி வெச்சேன். அதோட போனவன்தான்... எப்படித்தான் என்னை மறக்க முடிஞ்சுதோ தெரியல...'' -கலைச்செல்வி "தபஸ்கா' முதியோர் இல்லத்திலிருந்தவரின் குமுறல்.

""இதாவது பரவாயில்லை. பல பெற்றோர்களை வய சானதும்... ரோட்டோரமா வீசிட்டு போய்டுறது. ஆஸ்பத்திரி யில அட்மிட் பண்ணிட்டு அப்படியே எஸ்கேப் ஆயிடுறது. சொத்து எழுதிக் கொடுக்குறவரை பாசமா வெச்சிருந்து எழுதிக் கொடுத்ததும்... கொடுமைப்படுத்தி முதியோர் இல்லங் களுக்கு அனுப்புற கொடுமைகள் அதிகமாகிடுச்சு'' என்று கவலையுடன் சொல்லத் தொடங்குகிறார்... முதியோர்கள் குறித்த சர்வேயை வெளியிட்ட "ஹெல்ப் ஏஜ் இந்தியா' தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் இந்திராணி ராஜதுரை. ""ஜூன்-15 உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம். இதையொட்டி சென்னை, டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத்னு மாநில தலைநகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில்தான் தமிழக தலைநகரான சென்னையில் 63.3 சதவீதம் இந்த கொடுமை அதிகமா இருக்குன்னு தெரியவந்து அதிர்ச்சி ஆகிட்டோம். அதனால சென்னையை மையப்படுத்தி அப்பா, அம்மா எவ்ளோ முக்கியம்ங்கிற விழிப்புணர்வை பல விதங்களில் ஏற்படுத்திக்கிட்டிருக்கிறோம்'' என்கிறார் அவர்.

ஆதரவற்ற ஏழை, எளிய கொடுமைப்படுத்தப்படும் முதி யோர்கள் குறித்த தகவல் கொடுக்க இந்தியாவில் 18 மாநிலங் களில் 1253 என்கிற ஹெல்ப் லைன் நம்பர் அரசின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கு. அதே நம்பர் சென்னை, பாண்டி, கடலூர்ல இருக்கு. தமிழ்நாடு முழுக்க தொடர்புகொள் ளும் வசதி செய்ய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கு.

பெற்றோர்கள் இப்படி ஒதுக்கப்படுறதுக்கு என்ன காரணம்? புதிதாக திருமணமான ஆசைத்தம்பியோ ""திருமணமான பிறகு அதே பாசத்தோடு இருந்தால் கூட... வயது ஆக ஆக தன் பிள்ளைகள் மனைவியிடம் மட்டுமே பாசம் வைக்குறாங்கன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. அதே மாதிரி சென்னையை எடுத்துக் கிட்டோம்னா கணவன்-மனைவி ரெண்டுபேருமே வேலைக்குப் போனாதான் வாழ முடியும். இதனால பிள்ளைகளை கவனிச்சுக்கிறதுக்கே முடியாத சூழல். அப்படியிருக்கும் போது வயதான நோய்வாய்ப்படும் பெற்றோர்களை கவனிக்க முடியாமப் போய்டுது. இப்படி பல நெருக்கடிகள் இருந்தாலும் நம்ம பெத்தவங்களை கஷ்டத்தோடு கஷ்டமா நாமளே பாத்துக்கிறதுதான் நல்லது. பெரும்பாலும்... திருமணமாகி வரும் பெண்கள்... நாளைக்கு நமக்கும் இந்த நிலைமை வரக்கூடும்கிறதை புரிஞ்சுக்கிட்டு மாமியார்-மாமனாரை... அம்மா-அப்பாவா நெனைச்சு பாதுகாக்கணும்'' என்கிறார் அவர்.

"அன்னை' முதியோர் இல்லம் நடத்தும் ராணி கிருஷ்ணனோ ""சென்னையில் ஜனத்தொகை அதிகரிப்பில் இடநெருக்கடியும் அதிகம். நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும் பெற்றோர்களை பார்க்கும் போது குறிப்பாக... கழிவுகளின் நாற்றமும்... குழந்தைக்கும் நோய் தொற்றி விடுமே என்கிற அச்சமும் திருமணமான பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. இதனால் பலர் வாடகை வீடுகளில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டு பல பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்கப்படுகிறார்கள்'' என்கிறார் அவர். இதற்கு தீர்வுதான் என்ன?

உதவும் கரங்கள் தொண்டு நிறுவனம் வித்யாசாகரோ ""வெளிநாடுகளில் சமூக பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் ஒரு நபர் வயசானதுமே அவருக்கு என்ன செய்யணும்ங்கிறதை அரசே தீர்மானிக்குது. நாம் குழந்தைகளாக இருக்கும்போது நம் கழிவுகளை அள்ளியவர்கள் நம் பெற்றோர்கள். அதே வயதான குழந்தைகளாகத் தான் முதியவர்கள். அதை புரிந்து கொண்டு அவர்களை பராமரிக்க வேண்டும். அதிக படிப்பும், வாழ்க்கை மாற்றமும் நம் முன்னோர்களை கொடுமை செய்தால்... வருங்கால சந்ததி நம்மை கொடுமை செய்யும் என்பதை மறந்துடக்கூடாது'' என்கிறார்.

தமிழகத்தில் இதற்கு சட்டரீதியான தீர்வு என்ன? முதியோர்களின் பிரச்சினைகளுக்கு இலவசமாக தீர்வு காணும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவகுமார், ""பெற்றோர் மற்றும் வயதானவர்கள் பராமரிப்புச் சட்டம் 2007-லேயே மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த வருடம் 1-1-2010-ல் தான் தமிழகத்தில் அமலுக்கு வந்திருக்கிறது. உணவு, உறைவிடம், மருத்துவ வசதி என அடிப்படை தேவைகளை செய்யாத மகன், மகள், பேரன், பேத்திகள் மீது வயதான பெற்றோர்களும், சந்ததியில்லாத முதியவர்கள் இரத்த சொந்தத்தில் உள்ளவர் மீதும் வழக்கு போடலாம்.

நீதிமன்றங்களில் அலையவோ பணம் செலவழிக்கவோ தேவையில்லை. எதாவது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமே வழக்கு தொடரலாம். இச்சட்டப்படி 10,000 ரூபாய் வரை மெயின்டென்ஸ் சார்ஜ் கேட்கலாம்.

அந்தந்த வட்டாரத்திலுள்ள ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுக்க லாம். இந்த புகாரை விசாரிக்க முதல் வகுப்பு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கான அதிகாரம் ஆர்.டி.ஓ.வுக்கு உண்டு. வக்கீல்கள் வாதாட அனுமதியில்லை. 90+30 நாட்களுக்குள் வழக்கை முடிக்கவில்லை என்றால் ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை பாயும். தீர்ப்பு திருப்தி இல்லை என்றால் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்யலாம். சொத்து எழுதிக் கொடுத்தபிறகு பிள்ளைகள் கொடுமைப் படுத்தினால் திரும்பவும் தன் பெயருக்கே மாற்றி எழுதவும் இந்த சட்டத்தில் இடம் இருக்கு. அதனால... முதியோர்கள் தானே என்று ஏமாற்ற முடியாது'' என்கிறார் அதிரடியாக.

ஆனால், மனவேதனையை சுமந்தபடி பெற்றோர்களோ ""என் னது புள்ளைங்க மேல வழக்கா... வேணாம்யா எங்க இருந்தாலும் எங்க புள்ளைங்க சந்தோஷமா நல்லபடியா வாழட்டும்'' -வலிகளை பொறுத்துக் கொண்டு வாழ்த்துகிறார்கள் முதியோர் இல்லங்களில் இருந்தபடி. இந்த அன்பையும், பாசத்தையுமாவது புரிந்துகொண்டு பெற்றோர்களை பாசத்தோடு பாதுகாப்பார்களா பிள்ளைகள்?

No comments:

Post a Comment