Sunday, June 20, 2010

யுத்தம் 63 -நக்கீரன் கோபால்
shockan.blogspot.com

""ஏய்... சுட்டுடாதே, வந்திருக்கிறவரு நக்கீரன் ஆசிரியரு..''

-காட்டுவாசி சத்தம் போட, தம்பி சிவாவும், ""ஆசிரியர் வந்திருக்காரு.. சுடாதீங்க'' என்று குரல் கொடுத்தார். காட்டுக்குள் போகும்போதே, போலீசோ வீரப்பன் ஆட்களோ சுடுவதற்கு முயன் றால் சடாரென தரையில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்ததால் அதுபோல நாங்கள் படுத்துக்கொண்டோம். நக்கீரன் ஆசிரியரும் நிருபரும் வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட அந்த உருவம், துப்பாக்கியின் டிரிக்கரிலிருந்து கையை எடுத்தது.

இருபது நிமிடம் கழித்து, கீழே இறங்கி வந்த அந்த உருவம், என்னைப் பார்த்ததும், சாமி... என்றது. அவன்தான், பேபி வீரப்பன். வீரப்பனின் சொந்தக்காரன்.

""ஆசிரியரைப் போய் கொல்லப்பார்த்தியே'' என்றார் காட்டுவாசி. அதற்கு அவன், ""ஒரு ஆள்காட்டி (இன்ஃபார்மர்) வந்தான். போலீஸ்காரங்க மாறுவேடத்திலே உள்ளே வந்திருப்பதா சொன்னான். மாமாவும் (வீரப்பன்), பார்த்து தட்டிட்டு வந்திடுன்னு சொன்னாரு'' என்ற பேபி வீரப்பன் என்னைப் பார்த்து, ""நீங்களும் அரக்கனுங்க போலவே மீசை வச்சிருக்கீங்களா.. அதனால குறி வச்சிட்டேன். நக்கீரன் ஆசிரியருன்னு சத்தம் போடலைன்னா ஈடு கொடுத்திருப்பேன்'' என்றான்.

கிராமத்துக் குடிசையில், என்னுடைய மீசையை ஷேவ் செய்துவிட்டுப் போகச் சொன்ன அந்தப் பாட்டி, மீசையை எடுக்காமல் கிளம்பும்போது, "நீ முழுசா திரும்பிவருவேன்னு எனக்கு நம்பிக்கையில்லை'ன்னு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. வீரப்பன் ஆள் என்னைக் கொலை செய்ய முயன்றதற்கு காரணமே இந்த மீசைதான். ஆனால், அந்த மீசையை வீரப்பனைப் பார்த்து நான் வைத்தேனா என்று தேவையில்லாமல் குடைச்சல் கொடுத்தார்கள் போலீசார். மீசையினால் ஏற்படும் குடைச் சல்கள் ஒன்றும் புதிதல்ல.

நக்கீரன் ஆபீசில் பெரிய மீசை வச்சிக் கிட்டிருக்கிற ஆளு தான் கோபால். அவரைத்தான் குறி வைக்கணும் என்று ஜெயலலிதாவுக்கு விசுவாசமான புள்ளிகள், ஆட்டோவில் நக்கீரன் அலுவலகத்திற்கு ஆள் அனுப்புவது 1991-96 ஆட்சிக் காலத்தில் சர்வசாதாரணம்.

ஆட்சிக்கு வந்த 100 நாளில் ஜெ.வுக்கு களைப்பு ஏற்பட்டுவிட்டது. அதனால் ஓய்வுக்காக ஊட்டிக்குக் கிளம்பினார். கூடவே, தோழி சசிகலாவும் சென்றார். ஜெயலலிதா ஓய்வெடுக்கப் போகிற செய்தி பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது தம்பி காமராஜ் என் அறைக்கு வந்தார்.

""அண்ணே... ஊட்டியில் க்ரேக்மோர் எஸ்டேட்டை வாங்கப்போறாங்களாம். அதைப் பார்க்குறதுக்காகத்தான் இந்த ட்ரிப்'' என்றார். புதிய தகவல். நம்பிக்கையான தகவல். நான் உடனே பொதுமேலாளர் சுரேஷைக் கூப்பிட்டு, ஊட்டி ஏஜெண்ட்டிடம் பேசச்சொன்னேன். நம்ம ஏஜெண்ட் போட்டோ ஸ்டுடியோ வச்சிருக்கார். அவர் பேசிவிட்டு, ""அண்ணே.. ஊட்டியிலே இருக்கிற போட்டோ ஸ்டுடியோவையெல்லாம் பூட்டச் சொல்லிட்டாங்களாம். 6 நாளைக்கு மூடித்தான் இருக்கும். ஜெயலலிதா விசிட் முடிஞ்சுதான் திறப்பாங்களாம். வியாபாரம் பாதிக்கும்னு கடைக்காரங்க சொல்றாங்க. ஒண்ணுமே புரியலைன்னு சொல்றாங்க'' என்றார்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை. அப்போதிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா அதிசயமா வெளியூருக்குச் செல்கிறார். அதுக்காக ஊட்டியில் இருக்கிற எல்லா போட்டோ ஸ்டுடியோவும் பூட்டணும்னா இது என்ன ஹிட்லர் தர்பார். அந்தக் காலத்துல மகாராணி பவனிவரும் நேரத்தில் அந்த வழியில் யார் எதிரில் வந்தாலும் சிரச்சேதம் செய்வதுபோல் இருக்கிறதே என்று யோசித்தேன். ஊட்டி விசிட் தொடர்பா எந்த ஒரு படமும் பத்திரிகைகளில் வெளிவரக்கூடாது என்று போட்டோகிராபர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

மக்கள் பிரதிநிதியான முதலமைச்சரை போட்டோவே எடுக்கக்கூடாது என்பது என்ன நியாயம்? அப்போதுதான் தம்பி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. முதல்வரும் அவர் தோழியும் போயிருப்பது ஓய்வுக்காக அல்ல, ஒரு எஸ்டேட் மீது கண் வைத்துதான் என்பது புரிந்துவிட்டது. ஸ்டுடியோவைத் திறந்து வைக்கும் போட்டோகிராபர்களையும், ஜெயலலிதா விசிட் நேரத்தில் வெளியில் இருக்கும் போட்டோகிராபர்களையும் விரட்டி விரட்டிப் பிடிக்கிறார்கள். ஏன் இந்த பரபரப்பு?

நான் தம்பி காமராஜைக் கூப்பிட்டேன். ""தம்பி என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. அந்தம்மா ஊட்டியில் இருக்கிற படம் நமக்கு வேணும்'' என்றேன். அவரும் நிச்சயமா வரும் என்றார். ஊட்டியில் உள்ள ஸ்டுடியோக்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. ஆனாலும், நக்கீரனில் ஜெ.வின் ஊட்டிவிசிட் படம் இடம்பெறவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுபோன்ற சவாலான வேலைகளைச் செய்யும்போது நக்கீரன் தம்பிகள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான போட்டியில் இறங்குவார்கள்.

வீரப்பன் படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தபோதும் அப்படித்தான். அப்போது தம்பி சிவசுப்ரமணியன் , அந்தப் படத்தை எடுத்துக் கொண்டுவந்து ஜெயித்தார். ஆசிட் வீசப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகாவின் படம் , ஜெ.வின் ஹைதராபாத் திராட்சைத் தோட்ட படம் இவற்றை எடுத்து வருவதில் தம்பி காமராஜ் ஜெயித்தார். ஊட்டி விசிட் படத்தைக் கொண்டு வருவதில் வெற்றி என் பக்கம் இருந்தது.

ஜெ.வின் ஊட்டி விசிட் முடிந்த ஒருவாரத்தில் வெளியான நக்கீரனின் அட்டைப்படத்தில், ஜெ.வும் சசிகலாவும் சேர்ந்து நிற்கும் அந்தப் படம் வெளியானது. இருவரும் தோழிகள் என்று சொல்லப்பட்டுவந்தாலும் அதுவரை இரண்டுபேரும் சேர்ந்திருப்பது போன்ற படம் எதுவும் எந்தப் பத்திரிகையிலும் வெளியானதில்லை. சசிகலாவின் தனிப்படம் மட்டும்தான் வெளிவந்து கொண்டிருந்தது. ரெஸ்ட் எடுக்கப் போன தோழிகள் இருவரும் சேர்ந்து நிற்கும் படத்தை முதன்முதலில் வெளியிட்டது நக்கீரன்தான்.

ஜெயலலிதாவின் பக்கத்தில் இருந்தபடி சசிகலா தன் கையை நீட்டி, விளக்கிக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்திற்கு தம்பி காமராஜ் எழுதிக்கொடுத்த கமெண்ட்தான் ஹைலைட். "அதோ பாரக்கா... அந்த எஸ்டேட்தான்' என்று சசிகலா சொல்வது போல அமைந்த கமெண்ட் இது. அந்த அட்டைப்படத்துடன் வெளியான நக்கீரன், தீ போல விற்பனையானது. போயஸ் கார்டனிலும் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

"யாருடா நக்கீரனுக்குப் படத்தைக் கொடுத் தீங்க?' என்று கேட்டு போட்டோகிராபர்கள், பிரிண்ட் போட்டவர்கள், டார்க் ரூமில் வேலை பார்ப்பவர்கள் என 27 பேரை கார்டனுக்குத் தூக்கிக்கொண்டுபோய் செமத்தியான விசாரணை. இன்னும் யார், யார் மீது சந்தேகம் வந்ததோ எல்லோரையும் தூக்கிவிட்டார்கள். படத்தைக் கொடுத்ததாக சந்தேகப்பட்டவர்கள் மீதே இந்தளவுக்கு கடுமையான நடவடிக்கை என்றால், படத்தை வெளியிட்ட நக்கீரனை சும்மா விட்டுவிடு வார்களா?

அந்த நக்கீரன் இதழ் வெளியான பிறகு தம்பி காமராஜ் அவசரமாக வந்தார். ""அண்ணே... அரசு ஆவணங் களைத் திருடியதா குற்றம்சாட்டி நக்கீரன் மேலே 3 வழக்கு போடப்போறாங் களாம். கைது செய்றதுக்கும் ப்ளான் இருக்கு'' என்றார். வழக்கு வரட்டும் என்று எதிர் பார்த்திருந்தோம். வந்ததோ ஆட்டோ.

நக்கீரன் ஆபீசில் மீசை வச்சிக்கிட்டிருக் கிற ஆள்தான் கோபால் என்று சொல்லி அனுப்பியிருந்ததால் ஆட்டோவில் உருட்டுக்கட்டைகளுடன் ஏறிய அடியாள் கும்பல், நமது அலுவலகம் இருந்த தெருவுக்குள் வந்தது. 91-96 ஆட்சிக்காலத்தில் ஆட்சிக்கெதிராக எழுதினாலோ பேசினாலோ ஆட்டோவில் உருட்டுக்கட்டை ஆட்கள் வந்து, செமத்தியாக கவனித்துவிட்டுப்போவது ஆட்சியாளர்களின் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கையாக இருந்தது. அதுமாதிரிதான், அன்றைக்கும் ஆட்டோ வந்திருந்தது.

வந்தவர்களுக்கு அதிர்ச்சி. நக்கீரன் கோபால் மீசை வச்சிருப்பார் என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள். ஆனால், நக்கீரன் ஆபீஸ் வாசலிலேயே ஏழு, எட்டு பேர் மீசையோடு நின்றதால், இதிலே யாரு கோபாலு என உருட்டுக்கட்டைகள் குழம்பிப் போய்விட்டன. அப்போது என்னை அவ்வளவாக யாருக்கும் அடையாளம் தெரியாது. மீசைமட்டும் தான் அடையாளம். அதனால், ஆபீஸ் செக்யூரிட்டிகள் உள்பட பலரும், என்னைப் போலவே பெரிய மீசை வைத்திருப்பார்கள். அருப்புக் கோட்டை, கமுதி, முதுகுளத்தூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள், எங்க பெரியம்மா (அம்மாவுடைய அக்கா) மகன் பூபதி, இப்ப வீட்டு செக்யூரிட்டியாக இருக்கும் கண்ணன், அலுவலக பாதுகாவ லர் ராஜாமணி, தங்கமணி, சேகர், நல்லமுத்து தேவர், முருகன், பூமிநாதன் என்று 10 பேர் பலரும் என்னைப்போலவே மீசையுடன் இருப்பார்கள்.

ஆட்டோவில் வந்த ஆட்களுக்கு இதனால் தான் குழப்பம். இதிலே யார் நக்கீரன் கோபால்? இந்த மீசையா? அந்த மீசையா? ஆளை மாற்றி அடித்துப்போட்டால், வேற பிரச்சினை வந்து விடும். காசு கொடுத்து அனுப்பி யவர்களிடம் பதில் சொல்லியாக வேண்டும். அதனால் சரி யான மீசையை அடையாளம் காட்ட ஆளை கூப்பிடச் சென்றார்களா? அல்லது வேறு வழியில் யோசித்தார்களா? தெரியவில்லை. உருட்டுக்கட்டை ஆட்டோக்கள் திரும்பியது.

அலுவலகத்தின் கீழே உள்ள நிலைமையைப் பார்த்து விட்டு, சட சடவென மேலே வந்த தம்பிகள், ""அண்ணே... ஆட்டோவிலே ஆளுங்க வந்திருக்காங்க'' என்றனர். வந்திருப்பவர்கள் குழம்பிப் போயிருப்பதை சாதகமாக்கிக் கொண்டு, நான் அலுவலகத் திலிருந்து வெளி யேனேன்.

அந்த ஆட்சிக்காலத்தில் இப்படி எத்தனையோ முறை ஆட்டோக்கள் வருவதும், எந்த மீசை என்று தெரியாமல் குழம்பிப்போய் திரும்புவதும் நடந்துள்ளது. மீசை என்ற ஒரு அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு எனக்கு எதிராகப் போடப்பட்ட திட்டங்கள் ஏராளம். அதில் ஒன்று தான், ஊட்டி விசிட் போட்டோவை வெளியிட்டதற்காக போடப்பட்ட திட்டம். ஜெயலலிதாவும் அவரைச் சேர்ந்தவர்களும் கோபத்தோடு என்னைப் பழிவாங்கத் திட்டம் தீட்டும் அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது அந்தப் படம்.

அதை எங்கிருந்து நாம் எடுத்தோம்?

No comments:

Post a Comment