Sunday, June 13, 2010

ஹூண்டாய் தொழிலாளர்களின்...


ஹூண்டாய், ஃபோர்டு, நிசான், நோக்கியா போன்ற பன்னாட்டு கம்பெனிகளும் அதன் துணை தொழிற்சாலை களும்... நேற்றுவரை வானம் பார்த்த பூமியாக இருந்த நிலங்களையெல்லாம் அதிநவீன வசதிகளுடன் கூடிய தொழிற்சாலைகளாக மாற்றிவிட்டன.

இந்த தொழிற்புரட்சிக்கு பின்னால் ஒரு சோகம் இருக்கிறது. இந்த தொழிற்சாலை முதலாளிகள் எல்லாம் வெறும் சொற்ப கூலி கொடுத்து நமது கிராமத்து இளைஞர்களின் இளமையை பிழிந்தெடுக்கிறார்கள். அவர்கள் கேட்கும் எந்த நியாயமான உரிமையையும் அவர்களுக்கு தருவதில்லை என்கிற எதிர்ப்புக் குரல் பலமாக ஒலிக்கிறது.

ஹூண்டாய் தொழிற்சாலையில் சுமார் 9,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் தொழிற்சங்கம் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டார்கள். உடனே அந்த கம்பெனி நிர்வாகம் தொழிலாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. அதை வீரத்துடன் எதிர்கொண்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையின் வாசலில் தொழிற்சங்க கொடியை பலத்த எதிர்ப்புக்கிடையே ஏற்றினார்கள். அதைப் பார்த்ததும் நிர்வாகம் போர்க்கோலம் பூண்டு தனது பழிவாங்கும் போக்கை அதிகரித்தது. கடந்த ஜனவரி மாதம் வேலைநிறுத்தம் என தொழிலாளர்கள் அறிவித்தனர். வேலைநிறுத்தத்திற்கான முதற்கட்ட போராட்டங்களில் ஈடுபட்ட 67 தொழிலாளர்களை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. அத்துடன் பணியாளர்கள் குழு என்ற பெயரில் நிர்வாகமே ஒரு தொழிற் சங்கத்தை ஏற்படுத்தியது.

அந்த நேரம் ஹூண்டாயின் சொந்த நாடான தென்கொரியா நாட்டின் அதிபர் அத்தொழிற்சாலைக்கு வருவதற்கு ஏற்பாடாகியது. அதிபர் வரும் சமயம், வேலைநிறுத்தம் வேண்டாம் என நிர்வாகம் தொழிற்சங்கத்துடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோஅன்பரசன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அதன்படி "வேலைநீக்கம் செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களையும் படிப்படியாக வேலைக்கு எடுத்துக் கொள்கிறோம், தொழிற்சங்கத்தையும் அங்கீகரிக்கிறோம்' என ஒத்துக்கொண்டது.

சி.ஐ.டி.யு. சங்கத் தலைவரான சவுந்தரராசன், ""இந்த ஒப்பந்தத்தை ஹூண்டாய் நிர்வாகம் முழுமையாக அமுல்படுத்தவில்லை. அத்துடன் சமீபத்தில் தொழிலாளர்கள் 4 பேரை அற்ப காரணங்களை காட்டி இடை நீக்கம் செய்தது. அதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் உதவி யுடன் அப்புறப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத் திருக்கிறார்கள்'' என்றார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன் ""பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் இருக்க தடை இல் லை. ஆனால் அந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது, மறுப் பது எல்லாம் அந்த நிர்வாகத்தின் முடிவுக்குட்பட்டது.

ஹூண்டாய் நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து நான் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். நிர்வாகம் சில கோரிக் கைகளை ஏற்றுக்கொண்டிருந்தது. விரைவில் இருதரப்பும் சமாதான மடைவார்கள்'' என்றார் நம்மிடம்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள் மட்டும் வளர்ச்சி அல்ல. அதில் உரிமையையும் மரியாதையையும் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதும் ஒரு சுயமரியாதை இயக்க கோரிக்கைதான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

1 comment:

  1. நிஜத்தை கூறினால் சிலருக்கு வலிக்கத்தான் செய்யும். சரியாக சொன்னீர்கள் நீங்கள் நம் வீரமான இளைஞர்களை மிக குறைவான கூலியை கொடுத்து அதிக வருமானம் பார்க்கும் கம்பெனிகளில் இதுவும் ஒன்று . by
    ரோமியோ நாடார்

    ReplyDelete