Sunday, July 25, 2010

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு!


இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாதிப்புக்கு ஆளாகிறாள். கடைசியாக எடுத்த புள்ளி விபரப்படி ஒரு ஆண்டில் 1,85,312 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.

அரசு அலுவலகங்களிலும் கூட பாலியல் ரீதியாக பெண்களைத் துன்புறுத்துவது தொடரவே செய்கிறது. பெண்களைச் சீண்டுவது தண்டனைக்குரிய குற்றம் என அரசு அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டிய நிலை இருக்கிறது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல. உதாரணத்துக்கு ஒரு சில-

"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா...' என்றார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை. இங்கே கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தமிழக அரசின் கரு வூலத்துறையில் பணியாற்றும் கருவூல அலுவலர் விநாயகம் பிள்ளையோ "கணக்கர் லதாவுக்கும் மாவட்ட கருவூல உதவி அலுவலர் சிவநேசனுக்கும் தகாத உறவு இருக்கிறது' என்று கடலூர் மாவட்ட ஆட்சியருக்கே இ-மெயில் வாயிலாக புகார் அனுப்பி யிருப்பதாகச் சொல்கிறார். அரசு ஊழியர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளரான பாலகிருஷ்ணன், ""தனக்கு கீழே பணிபுரியும் ஒரு பெண்ணை இந்த அளவுக்கு இழிவுபடுத்தி புகார் எழுதுவது எவ்வளவு பெரிய குற்றம்? கெட்ட நோக்கத்தோடு பெண் ஊழியர்களை இம்சிப்பது இவரது வாடிக்கை. இவர் ஏற்கனவே பணியாற்றிய சிதம்பரம், விழுப்புரத்திலும் இத்தகைய அடாவடித்தனம் செய்தவர்தான். அதனால்தான் விநாயகம் பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்'' என்றார் ஆவேசத்துடன்.

அவமானத்தில் கண்கள் சிவக்க நம்மிடம் பேசினார் கணக்கர் லதா...

""நான் நேர்மை யாகப் பணியாற்று வது ஒரு குற்றமா? அதனால் என்னென்ன இடைஞ்சல்கள்? ஒரு பெண்ணை சுலபத்தில் குற்றம் சுமத்தி இழிவுபடுத்திவிடலாம் என்ற போக்கு எத்தனை கொடுமையானது? இதனால் குடும்பத்திலும் பிரச்சினை, அலுவலகத்திலும் கேவலமாகப் பார்க்கும் நிலை என மன உளைச்ச லில் தவிக்கும் வாழ்க்கையாகி விட்டது. எனக்கெதிராக உள் நோக்கத்தோடு சுமத்தப்பட்ட இந்த அபாண்டத்திலிருந்து எப்படி மீளப் போகிறேனோ?'' என்றார் வேதனையோடு.

விநாயகம் பிள்ளையோ, ""அந்த சிவநேசன் ஒரு கபடதாரி. வள்ளலார் பெயரைச் சொல்லிக் கொண்டு பெண்களை வசியப்படுத்தும் ஆசாமி. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு செயல்படுகிறார்களே என்றுதான் பேசினேன். சிவநேச னையும் லதாவையும் இணைத்து புகார் கொடுத்திருப்பதாக அவர் களே தப்பாக எடுத்துக் கொண் டால் அதற்கு நானா பொறுப்பு? தான்தோன்றித் தனமாகச் செயல்படுபவர் லதா. நான் ஜென்டில்மேன். பெண்களைப் பெரிதும் மதிப்பவன்'' என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

""பெண்கள் அதிகமா வேலை பார்க்கிற இடத்துல இப்படியா கட்டிப்பிடிச்சு... முத்தம் கொடுத்து...? இதுக்கா அரசாங்கம் இவங்களுக்கு சம்பளம் கொடுக்கு?''.

ஏ-1382 விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சுயசேவைப் பிரிவில் வேலைபார்க்கும் சாந்தி, காணக்கூடாத அந்தக் காட்சியைப் பார்த்து ஆவேசக் கூச்சலிட, சம்பந்தப்பட்ட சூப்பிரண்டு பாண்டியிடமும் அந்தப் பெண் ஊழியரிடமும் விசாரணை நடத்த வேண்டியதாயிற்று எஸ்.ஓ. அண்ணாத்துரைக்கு. "எனக்கு மேலதிகாரியாச்சே... எப்படி புகார் தர்றது? அப்படி புகார் கொடுத்துட்டு இங்கே வேலைல நீடிக்க முடியுமா?' என்று அஞ்சிய அந்தப் பெண் ஊழியர் ""அப்படி ஒரு சம்பவமே நடக்க வில்லை'' என்று மழுப்ப... ""சரி... சரி...'' என்று விவகாரத் தைக் கிளறாமல் விட்டு விட்டார் எஸ்.ஓ. ஆனாலும் "தவறு செய்த அலுவலர் மீது நடவடிக்கை இல்லையே... இது மேலும் மேலும் தவறு செய்ய, பெண் ஊழியர்களைத் தன் இச்சைக்குப் பணிய வைக்க வழி செய்து விடுமே? இங்கே பத்து வருஷமா விடாப்பிடியா சீட்ல உட்கார்ந்துக்கிட்டிருக்கிற சந்திரசேகருக்கு எங்களுக்கு நடக்குற கொடுமையெல்லாம் தெரியும். அவரோட கணக்கே வேற. அதனால, இதயெல் லாம் கண்டுக்க மாட்டாரு. எங்களுக்கு என்ன பாதுகாப்பு?' என பெண் ஊழியர்கள் சிலர் தங்களின் தவிப்பை வெளிப் படுத்த... நாம் சந்திரசேகரை அந்த ஸ்டோரில் சந்தித்தோம்.

""நான் எதுவும் சொல்லக் கூடாதே...'' என்று தயங்கியவர்,

""அந்தப் பெண்ணே இது என்னோட வாழ்க்கைப் பிரச்சினை, விட்ருங்கன்னு சொல்லிடுச்சு. அப்படியும் இத வெளிய தெரிஞ்சு யாரோ ஒரு ஆள் இங்க வந்து சத்தம் போட்டுட்டுப் போனாரு. சூப்பிரண்டு பாண்டியை இனிமே இந்த ஸ்டோரு பக்கமே வரக்கூடாதுன்னு எஸ்.ஓ. சொல்லிருக்காரு'' என்றார்.

"போதையில் பெண் ஊழியர்களைச் சீண்டுவதை வெகு சிரத்தையோடு செய்து வரும் பேர் வழி' என்கிறார்களே? -நிர்வாக அலுவலகத்தில் இருந்த பாண்டியிடமே கேட்டோம்.

""அய்ய... நான் பேரன்-பேத்தி எடுத்தவன். இந்த வயசுல அப்படிப் பண்ணுவேனா? குடிக்கிற பழக்கம் எனக்குண்டு. அத மறுக்கல...'' என்று முதலில் அழுத்தம் காட்டியவர், பிறகு பேச்சுவாக்கில் ""ஆமா... என் கெட்ட நேரம்... அன்னைக்கு சபலப்பட்டுட்டேன். இதப் பெரிசுப்படுத்தாதீங்க...'' என்று ஒத்துக் கொண்டார்.

""குடும்ப சூழ்நிலை, அவமானங்களுக்கு அஞ்சி பெரும்பாலான பெண் ஊழியர்கள் தங்களிடம் அத்துமீறும் அலுவலர்கள் குறித்து புகாரே செய்வதில்லை. சகித்துப் போவதால், ஒரு கட்டத்தில் தவறுகளுக்கு அவர்களே உடன்படவும் நேர்கிறது. எங்கோ, யாரோ ஒருவர்தான் பிரச்சினையை துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இத்தகைய விழிப்புணர்வு நிச்சயம் வேண்டும். கருவிலிருந்து கல்லறை வரை பிரச்சினைகள் பெண்களைத் துரத்துகின்றன. இதற்கு நிச்சயம் தீர்வு காண முடியும். அதற்கு நாம் சட்டத்தை அணுக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் பயனுள்ள சட்டங்கள் பல இருக்கின்றன'' என்கிறார் வழக்கறிஞர் ரேவதி.

பெண்கள் நாட்டின் கண்கள். பெண்களைப் போற்றி பாதுகாக்கும் நெறிகள் காப்பாற்றப்பட வேண்டும்.

No comments:

Post a Comment