Wednesday, July 7, 2010

ஆணும் பொண்ணும் பேசினா கல்யாணம்!



shockan.blogspot.com

""என்னது... அந்தப் பொண்ணும் பையனும் பேசிக்கிட்டிருந்தாங்களா? அடிடா தண்டோராவ... கூட்றா பஞ்சாயத்தை... கட்றா தாலியை... இதுதாண்டா என்ற தீர்ப்பு... தீர்ப்பு...'' என்று எக்கோ மைக் இல்லாமலேயே உச்சநீதிமன்ற நீதிபதியைவிட மிக அதிகமான அதிகாரத்தை பெற்றவர்போல் தீர்ப்பைச் சொல்லிவிட்டு... சொம்பில் வெற்றிலைப்பாக்கு எச்சிலை பொளிச் பொளிச் என்று துப்பும் நாட்டாமைகளை இப்போது வரும் புதிய படங்களில்கூட காமெடியர்களாகத்தான் பார்க்க முடிகிறது.

ஆனால், இன்னமும் சில கிராமங்களில் சீரியஸ் நாட்டாமைகளின் சேட்டைகள் சைலன்ட்டாக அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை உணர்த்தியது நமக்கு வந்த தகவல்.

மயிலாடுதுறை கமுக்கானிமுட்டம் (செப்பேடுகள் எடுக்கப்பட்டதே) அருகேயுள்ள "அப்பங்குளம்' கிராமத்துக்குச் சென்றோம்.

முதலில் வாய் திறக்கவே பயந்தவர்கள் (வெளியில் பேசினாலே பத்தாயிரம் அபராதமாம்!) "எப்படியோ இந்த செய்தி நக்கீரன் மூலமா வெளியில தெரிஞ்சாலாவது இந்த கிராமத்துக்கு விமோசனம் கிடைக்காதா?' என்ற ஏக்கத்தோடு குமுறலை கொட்டத் தொடங்கினார்கள்.
""இந்த ஊர்ல வசதி வாய்ப்பு உள்ளவங்களா இருந் தாலும் எட்டாவ துக்கு மேல யாரும் படிக்கலைங்க. அதுக் குக் காரணமே பாபு, குமார், சுப்பிரமணி நாட்டாமைன்னு சொல்லிக்கிட்டு அட்டகாசம் பண்ற வங்களாலதான். இதுக் குத் தலைவனே 60 வயசு கண்ணன்ங்கிறவர்தாங்க.

வெளியில போயி படிக்கப்போனா பசங்க-பொண்ணுங்க பேசிக்குவாங்க. இது இந்த நாட்டாமைக் கும்பலின் காதுக்குப் போயிடுச்சுன்னா பெருமாள் கோயிலுக்கிட்ட பஞ்சாயத்தைக் கூட்டி அசிங்கப்படுத்தி அபராதமும் கட்டுறதுமில்லாம அண்ணன்- தங்கச்சி முறைன்னுகூட பார்க்காம கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்க. இந்த பயத்தி லேயே பிள்ளைங்கள வெளியில அனுப்பி படிக்க வைக்கிற தில்ல'' என்கிறார் உடைந்த குரலில்.

இன்னொரு பெண்மணியோ... ""இது மட்டுமில்லைங்க. கல்யாணம் ஆனவங்க பேசிக்கிட்டா அவ்ளோதான். உடனே தலா 20,000-னு ரெண்டு பேர் வீட்லேயும் அபராதம் விதிக்கிறதோட புளியமரத்துல கட்டிவெச்சு... புளியமர சிம்பாலேயே அடிச் சுக் கொடுமைப்படுத்து வாங்க.

அப்படித்தாங்க சேவை உள்ளத்தோடு செயல்படுற மாலதிங்கிற பெண்ணை ஊராட்சிமன்றத் துணைத் தலைவரா போட்டியில்லாம தேர்ந்தெடுத்தோம். அவங்க ளோட கணவர் வெளிநாட்டுல இருக்காரு. ஊராட்சிமன்ற துணைத்தலைவிங்கிற அடிப்படையில அந்தம்மா வைப் பார்க்க பலர் வருவாங்க. அவங்களையே தப்பு தப்பா சொல்லி... கூட்டத்தைக் கூட்டி அசிங்கப்படுத்தி தண்டனை யும் கொடுக்கப் பார்த்ததுங்க இந்த கண்ணன் தலைமையி லான நாட்டாமைக் கும்பல். அவங்க போலீஸ்ல சொன்ன தால தப்பிச்சுட்டாங்க. ஊராட்சிமன்ற துணைத் தலைவருக்கே இந்த கதின்னா எங்களுக்கு என்ன நிலை?'' என்று வேதனை பெருமூச்சுவிட்டவர் மேலும் சொன்ன ஆதார தகவல்கள் கொந்தளிப்பின் உச்சகட்டத்திற்கே கொண்டு சென்றது.

""கருணாநிதிங்கிற பையனும், பிரேமாங்கிற பொண்ணும் பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போயிட்டு வரும்போது பேசிக்கிட்டே வந்திருக்காங்க. தாலி கட்ட வெச்சுட்டாங்க. அதே மாதிரி போனமாசம் சத்தியமூர்த்திங்கிற பையன்... மணிமேகலைங் கிற பொண்ணு வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற பைப்ல தண்ணி குடிச்சிருக்கான். அதுக்குள்ள 14 வயசு மணிமேகலையை அந்தப் பையனுக்கு மிரட்டி கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இதைவிடக் கொடுமை... சின்னத்தம்பிங்கிற பையனுக்கு சித்தி முறை வேணும் கவிதா. இவங்க மாயவரத்துல வேலைக்குப் போயி ஒண்ணா வர்றதால "தொடர்பு' இருக்குன்னு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அடுத்த வாரம் சுந்தர்-அஞ்சம்மாள்னு 16 வயசுகூட ஆகாத பச்சப்புள்ளைங்களுக்கு இதே மாதிரி மிரட்டல் கல்யாணம் நடக்கப் போகுதுங்க'' என்ற தகவலையும் சொல்ல... அவர்களின் வீட்டைத் தேடிச் சென்றோம்.

சுந்தரின் அம்மா லதா கண்ணீருடன் நம்மிடம்... ""அய்யா... அந்தப் பொண்ணுக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. அபராதமா ரெண்டு வீட்லயும் சேர்ந்து 40,000 ரூபாய் கிடைக்கும்னு இந்த நாட்டாமை கும்பல் பண்ற சதிங்க. இதோட விட் டானுங்களா? இவனையும் இவனோட ஃப்ரெண்டு மனோவையும் விசாரிச்சு அடிச்சவனுங்க... மனோ ஒரு ஊமைன்னுகூட பார்க் காம அடிச்சு ஆணுறுப்பை வீங்கவெச்சு நாலு நாளா ஆஸ்பத்திரியில இருக்கான். அவன் டிஸ்சார்ஜ் ஆனதும் திரும்பவும் கூட்டம்கூடி... என் பையனுக்கு கல்யாணம் பண்ணிவைக்கப் பாக்குறாங்க'' என்று கதற... அடிபட்ட மனோவின் தாய் சாந்தியும் கதறி அழுகிறார்.

ஊராட்சிமன்ற துணைத்தலைவி மாலதியோ... ""செங்கல்சூளை வெச்சிருக்கேங்க. கல்லு வாங்க வருவாங்க. பஞ்சாயத்து விஷயமாகவும் வருவாங்க. என்னை இப்படி அசிங்கப்படுத்துனதுனால சூளை வேலையும் நின்னுப்போச்சு. இவங்களால பல குழந்தை திருமணங்களும் நடக்குதுங்க'' என்று குற்றம்சாட்டுகிறார் பரிதாபமாக.

இப்படி ஒரு கிராமத்தையே அடக்கி அட்டகாசம் பண்ணும் நாட்டாமை குரூப்பின் தலைவர் கண்ணனிடம் ஏன் இப்படிச் செய்றீங்க? என்றோம். ""அப்படி யெல்லாம் இல்லீங்களே'' என்று முதலில் மறுத்தவரிடம்... முழு விபரங்களைச் சொன்னதும் சைலன்ட்டாக தலை குனிகிறார்... எதுவும் பதில் சொல்ல முடியாமல்.

இந்தக் கொடூர சம்பவங்களைக் குறித்து நாகை மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது... ஒரு நிமிடம் அதிர்ந்து போனவர், ""உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார் உறுதியான குரலில்.

குழந்தை திருமணங்கள் நடத்தி -அதிலும் வருமானம் பார்க்கும் இந்தக் கும்பலை என்ன செய்வது?

No comments:

Post a Comment