Sunday, July 18, 2010

பத்து மார்க்குக்கு 2 லட்சம்! +2 ரிசல்ட் மோசடி!


மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளை நோக்கி படையெடுத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ரொம்பவே திடுக்கிட வைத்திருக்கிறது +2 போலி மதிப்பெண் விவகாரம்.

மருத்துவ சீட் கேட்டு... குவிந்த விண்ணப்பங்களை ஆராய்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகள்... மறுகூட்டல் மூலம் ப்ளஸ் டூவில் பாஸான 10 பேரின் மார்க் ஷீட்டைப் பார்த்துக் குழம்பினர். குறிப்பாக ஒரு மாணவரின் கட் ஆஃப் மார்க் ரீ டோட்டலிங்கிற்கு முன்பு 140 ஆக இருந்தது. ஆனால் ரீடோட்டலுக்கு பிறகு கட் ஆஃப் மார்க் 195 ஆனது. இதைப் பார்த்து அதிர்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் மொத்த சான்றிதழ்களையும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தது. அப்போதுதான் பல மார்க் ஷீட்களில் சீக்ரெட் குறியீடாக இருக்கும் வாட்டர் மார்க் இல்லாமல் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அத்துடன் மறுகூட்டலின் மார்க்ஷீட் வெளியீட்டு நாளான ஜூன் 25-க்கு பதில்... பொதுத் தேர்வு மார்க்ஷீட் விநியோக நாளான மே 14-ஐ பொறித்திருந்தனர்.

இதனால் சந்தேகப்பட்ட அதிகாரிகள்... மதிப்பெண்களை அச்சிடும் டேட்டா சென்டருக்கு அவற்றை அனுப்பி வைத்தனர்.

அவை அச்சு அசல் போல் உருவாக்கப்பட்ட போலி மார்க்ஷீட் என்பதை உறுதிசெய்த... டேட்டா நிறுவன அதிகாரிகள், இவை டுபாக்கூர் மார்க் ஷீட்டுகள்தான் என மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்குத் தெரிவித்ததோடு.... பொறியியல் கல்லூரி களுக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தையும் தொடர்புகொண்டு... விபரத்தைக் கூறி... எச்சரிக்கை செய்தனர்.

இதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம்... தன்னிடம் வந்த அத்தனை மார்க் ஷீட்டுகளையும் கண்களில் விளக்கெண் ணையை ஊற்றிக்கொண்டு சோதித்தது. இதில் 41 பேர் போலி மார்க்ஷீட் அனுப்பியிருப்பதும்... அவர்களில் 4 பேருக்கு பிரபல கல்லூரிகளில் தான் இடம் ஒதுக்கி விட்டதையும் கண்டுபிடித்து அண்ணா அதிர்ந்தது. உடனடியாக... அந்த 4 பேரின் இட ஒதுக்கீட்டையும் நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது.

போலி மார்க்ஷீட் விவகாரம் கண்டுபிடிக்கப்பட்டதுமே அதிர்ச்சியடைந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வந்து விசாரித்தார். பின்னர் ""போலி மார்க்ஷீட்டைக் கொடுத்த மாணவ-மாணவிகள் 5 வருடங்களுக்கு தேர்வெழுத முடியாது என்றதோடு... போலி களைக் தயாரித்த டுபாக்கூர் ஆசாமிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுகக்கப்படும்'' என்றும் எசசரித்தார்.

இந்த விவகாரம் பெரிய அதிர்வலை களை ஏற்படுத்த ஆரம்பித்ததால்.. தேர்வுத் துறை ஆணையர் வசுந்தராதேவி காவல் துறையிடம் புகார் செய்ய... விசாரணைக் களத்தில் தீவிரமாகக் குதித்திருக்கிறது காவல்துறை.

நாம் விசாரணை அதிகாரிகளிடம் இது குறித்துக்கேட்டபோது ""ஒரு பெரிய கும்பலே இந்த போலி மார்க்ஷீட் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கலாம்னு நாங்க சந்தேகப் படறோம். ஒரு மாணவி ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் நல்லா படிச்சி... 1200-க்கு 1,101 மார்க் வாங்கியிருந்தார்.

ரீ-டோட்டலுக்கு அப்ளை பண்ணினா... மேலும் மார்க் கிடைக்கும்னு இந்த மாணவி நினைச்சி பணம் கொடுத்திருக்கா. 1115 மார்க் வந்திருக்கு. இப்ப போலி சான்றிதழில் மாட்டிக்கிட்டா. இன்னொருவன் டி.பி.ஐ. வளாகத்தில் வேலை பார்க்கிற ஒரு நபரிடம் பேசியிருக்கான். 2 லட்ச ரூபா கொடுத்தா ரீ-டோட்டல்ல 10 மார்க் அதிகமா போட ஏற்பாடு பண்றேன். ஒரு மார்க்குக்கு 20 ஆயிரம் ரூபான்னு ஆசை காட்டியிருக்கார். நல்ல காலேஜ்ல அதிலும் சென்னைலயே சீட் வாங்கறதுன்னா ஏழெட்டு லட்ச ரூபாயைக் கொட்டிகொடுத்தாகணும். அதுக்கு ரெண்டு மூணு லட்சத்தை ரீ-டோட்டல் மார்க்குக்கு கொடுத்துடுவோம்னு அந்த மாணவனும் பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கான்.

ஆனா அந்த டுபாக்கூர் ஆசாமி... ரீ டோட்டலுக்குப் போகாமலே போனமாதிரி... டுபாக்கூர் மார்க் ஷீட்டை ரெடி பண்ணிக் கொடுத்திருக்கான். அதிக மார்க்குக்கு ஆசைப்பட்டு... தவறான வழியில் அதை அடைய முயற்சி செஞ்ச அந்த மாணவ, மாணவிகள்... இன்னும் 5 வருஷத்துக்கு தேர்வே எழுத முடியாது. போலி மார்க் ஷீட் கொடுத்த மாணவ மாணவிகளை எல்லாம் எங்க விசாரணை வளையத்துக்கு உட்படுத்துவோம். அதே போல்... இந்த போலி மார்க் ஷீட்டுகளை தயார் பண்ணுகிற கிரிமினல்கள், இதை மாணவர்களுக்கு வாங்கித் தரும் புரோக்கர்கள் போன்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்போம். இப்ப டி.பி.ஐ.யில் வேலை பார்க்கும் ஏகாம்பரம் என்ற ஊழியரை நாங்க மடக்கியிருக்கோம். தீவிர விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு. விசாரணையில் இன்னும் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வரலாம்'' என்றார்கள் மீசையை முறுக்கி விட்டபடியே.

எத்தனை ஆண்டுகளாய் இப்படி நடக்கிறதோ என போலி மார்க்ஷீட் விவகாரம் பகீரூட்ட... இன்னொரு பக்கம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில மாணவ- மாணவிகள் சிலர்... தமிழக மாணவர்களின் கோட்டாவில் இடம்பிடிக்க... போலி இருப்பிட சான்றிதழ் களைக் கொடுத்திருக்கிறார்கள். இந்த விவகாரமும் பல்கலைக் கழகங்களுக்குத் தலைவலியை உண்டாக்க ஆரம்பித்திருக்கிறது.

கேரள மாணவி ஒருவருக்கு... அம்பத்தூர் தாசில்தார் போலி இருப்பிட சான்று வழங்கி அவரைத் தமிழ்நாட்டு மாணவியாக்கியிருந்தார். தமிழக மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கவேண்டிய சீட்டை வெளி மாநிலத்தவருக்கு தாரைவார்க்க அதிகாரிகள் துணைபோயிருப்பது வெட்கக்கேடு.
போலி மார்க் ஷீட் விவகாரம் எல்லா மட்டத்திலும் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

No comments:

Post a Comment