Wednesday, July 7, 2010

2200 மாணவர்களின் உயிருக்கு ஆபத்து

shockan.blogspot.com

இரவு-பகல் எந்நேரமும் உயர்மின் அழுத்த அதிர்வுகளால் நடுங்கிக்கொண்டிருக்கிறது இந்தப் பள்ளிக்கூட வளாகமும் பள்ளிக் கட்டடங்களும்.

இரவு நேரத்தில் மின்விபத்து ஏற்பட்டால், இதன் விடுதியில் தங்கியிருக்கும் 1000 மாணவர்களுக் கும் உயிர் ஆபத்து.

பகலில் விபத்து ஏற்பட்டால் இந்தப் பள்ளியில் பயிலும் 2200 மாணவர்களுக்கும் பெரும் ஆபத்து.
மாணவர்களையும் பெற்றோர்களையும் பய முறுத்துவதற்காக இந்தச் செய்தியை சொல்லவில் லை. 2200 மாணவர்களின், ஆசிரியர்களின் உயி ரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பணம்தின்னிப் பள்ளி நிர்வாகத்தையும் கல்வித்துறையையும் எச்சரிப்பதற்காகவே பதட்டத்தோடு இந்தச் செய்தியை வெளியிடுகிறோம்.

திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் சமய புரம் அருகில் உள்ளது இந்த எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேசன் பள்ளி. திருச்சி மாவட்டத்தி லேயே முதல்தரமான பள்ளியென்று தின மும் விளம்பரம் கொடுத்தே 4 ஆண்டு களில் 2200 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. முதல்தரமான பள்ளி தான். பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண் பெற்றால்தான் +1ல் இங்கே அட்மிஷன் கிடைக்கும். முதல் தரத்தின் ரகசியம் இதுதான். திருச்சியில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களின் குழந்தைகள்தான் இங்கே படிக்கிறார்கள்.

+1ல் அட்மிஷன் பெறுவதற்கு 80 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டது இந்தப் பள்ளி. சமீ பத்திய நமது செய்தியில் இதை வெளியிட்டிருந் தோம். இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ப்பதற்காக, தன் மகன் சோமசுந்தரத்தை கூட்டிக்கொண்டு போனார் பெரியமிளகுப்பாறை மாணிக்கம்பிள்ளை.

""ஏராளமான வசதிகள் இருக்கும்னு நினைத் துக்கொண்டு போனேன். பள்ளி வளாகத்திற்கு காலடி வைத்ததும் அதிர்ச்சியடைந்தேன். மின் அதிர்வுகள் என் உடம்பை உலுக்கியது. மின் கோபுர ராட்சச இரும்புத்தூண்கள்... அதில் உயர்அழுத்த மின்சார இஎச்டி கம்பிகள்... வகுப் பறைகள் மேலும், விளையாட்டு மைதானத்தின் நடுவிலும், ஹாஸ்டல் கட்டடத்தை ஒட்டியும் தலைக்கு மேல் பயமூட்டும் அந்த மின்கம்பிகள் சென்றுகொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்ததும் குடந்தையில் எரிந்து செத்த 93 குழந்தை களும், ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் மின் கசிவால் கொல்லப்பட்ட 55 பேரும்தான் என் ஞாபகத்திற்கு வந்தார்கள். அவற்றைப்போல பலமடங்கு பாதிப்பு இந்த உயர் அழுத்த மின் கம்பிகளால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதே... அதனால்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் போட்டோம்'' என்கிறார் மாணிக்கம்பிள்ளை.

மாணிக்கம்பிள்ளை சார்பாக வழக்கைத் தொடர்ந்த வழக்கறிஞர் சக்திவேல் நம்மிடம், ""இந்த ஆபத்தான இடத்தில் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? என்று தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் இயக்குநருக்கும், அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறைக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி னோம். அதற்கு "அங்குள்ள உயர்மின் அழுத்தக் கோபுரங்களை உடனே அகற்ற வேண்டும் அல்லது பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என்று நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பதிலளித்தார்கள். இதுதான் இவர்கள் லட்சணம்'' என்றார்.

இவர்களது புகாரின் அடிப்படையில் 24.3.10 அன்று லால்குடி கல்வி அலுவலகமும் திருச்சி மெட்ரிக் பள்ளி அலுவலரும் எஸ்.ஆர்.வி. பள்ளியை பார்வையிட்டிருக்கிறார்கள்.

""மின்கோபுரங்கள் அடியில்தான் 2200 மாணவர்களும் தினமும் காலையில் இறைவணக்கம் பாடுகிறார்கள். இந்த மின் கோபுரங்களால், கண்டிப் பாக மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இவற்றை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கடிதங்களை அனுப்பிவிட்டு தங்கள் பொறுப்பை முடித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த அலுவலர்கள்.

மதுரை உயர்நீதிமன்றமோ ""மின்கோபுரங்களை அல்லது பள்ளியை மாற்ற வேண்டும்'' என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரண்டு வருடமாக இங்கே வேலை செய்து இன்றோ நாளையோ ஓய்வு பெறப்போகும் மாவட்ட கல்வி அதிகாரி சுவாமிநாதனிடம் இதுபற்றிக் கேட்டோம்.

""வழக்கு நடக்குதே... மின்சார வாரியம் தான் கம்பங்களை அகற்றணும்'' என்கிறார் அவர்.

திருச்சி மாவட்ட மின்வாரிய மேற்பார் வைப் பொறியாளர் வெங்கட்ராமனிடம் கேட்டோம்.

""பள்ளிக்கூடம் கட்டி 4 வருடம்தான் ஆகிறது. ஆனால் இந்த மின் கோபுரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டவை. குறைந்த விலையில் நிலம் கிடைக்கிறதென்று மின்கம்பங்களுக்கு நடுவில் இடத்தை வாங்கிக் கட்டினார்கள். கட்டும்போதே கட்டாதே என்று நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். இப்போது அகற்றுவது ரொம்ப கஷ்டம். பலகோடி ரூபாய் செலவாகும். மாற்று நிலம் வாங்க வேண்டும். எல்லா செலவுகளையும் அந்தப் பள்ளி நிர்வாகம்தான் செய்ய வேண்டும். விபத்து ஏற்படும் முன்பு அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' -பொறுப்போடு சொன்னார் வெங்கட்ராமன்.

எஸ்.ஆர்.வி. பள்ளி நிர்வாகியை சந்திக்கச் சென்றோம். பள்ளித் தலைமை ஆசிரியர் துரைசிங்கத்தைதான் சந்திக்க முடிந்தது

""இதைப்போய் பெரிசு படுத்தலாமா? இப்படிப்பட்ட செய்தியையெல்லாம் வெளி யிடாதீங்க. என்ன சரியா... ஒண்ணும் ஆகாது. பர்சனலா கூட நாம பேசிக்கலாம். இப்போ தைக்கு செய்தி வரக்கூடாது சரியா?'' -தலைமை ஆசிரியரின் வார்த்தைகள் பள்ளி நிர்வாகத்தின் பணத்தைக் கொண்டு எதையும் சரிக்கட்டி விடலாம் என்ற தோர ணையில் வெளிப்பட்டன.

மற்றதை சரிப்படுத்தி விடலாம்.... ஆனால் 2200 மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்....?

No comments:

Post a Comment