Saturday, July 17, 2010

தலைக்கு 200! தி.மு.க. கூட்டணியில் தே.மு.திக.! சிரஞ்சீவி மூலம் விஜயகாந்த் புது மூவ்!
""ஹலோ தலைவரே... .... ரொம்ப நாள் ஓய்வுக்குப்பிறகு கொட நாட்டிலிருந்து ரிட்டன் ஆன ஜெ.வின் கோவை பொதுக்கூட்டம் தான் இந்த வார ஹைலைட்.''

""கண்டன ஆர்ப்பாட்டம்னுதானே ஜெயா டி.வி.யில் 10 நிமிசத்துக்கொருமுறை விளம்பரம் வந்துக்கிட்டிருந்தது. ஆர்ப்பாட்டம் எப்படி கண்டனப் பொதுக்கூட்டமானது?''

""கோவையில் அ.தி.மு.க. தேர்ந்தெடுத்த இடத்தில், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதிக்கிறதில்லைன்னு போலீஸ் சொல்லிட்டதால, ஜெ. டென்ஷனாயிட்டார். இவ்வளவு விளம்பரங்கள் செய்தபிறகு என்ன செய்வதுன்னு மாவட்ட கட்சி நிர்வாகத்தோடு ஆலோசித்ததில்தான் பொதுக்கூட்டம் நடத்துவதுன்னு முடிவானது. ஆர்ப்பாட்ட நேரமான மதியம் 2 மணிக்கே பொதுக்கூட்டம் நடத்தலாம்னு தீர்மானிக்க, ஜெ.வும் சரின்னு சொல்லிட்டார்.''

""கோவையில் பொதுக்கூட்டம்னாலும் தமிழகம் முழுக்க இருந்து ர.ர.க்களைத் திரட்டும் வேலை முதல்நாள் வரைக்கும் நடந்துக்கிட்டிருந்ததே...''

""ஆமாங்க தலைவரே... கூட்டத்தைக் கூட்டுறது தொடர்பா ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் ஸ்ட்ராங்கா உத்தரவு போடப்பட்டிருந்தது. சில மா.செ.க்கள் அப்படி இப்படின்னு ஆரம்பத்தில் அலட்சியமா இருந்தாங்க. ஆனா, மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 20 வண்டி களாவது ரெடி பண்ணி ஆட்களை அழைச்சிட்டு வரணும்னும், எத்தனை வண்டிகளை ரெடி பண்ணுறாங் களோ அதற்குத் தகுந்தபடிதான் கட்சியில் மதிப்பு மரியாதை இருக்கும்னும் மேலிடம் சொன்னதால அ.தி.மு.க மா.செ.க்களெல்லாம் கோவை பொதுக் கூட்டத்துக்காக வரிஞ்சி கட்டிட்டு இறங்கிட்டாங்க.''

""அ.தி.மு.க தொண்டர்களோட ரியாக்ஷன் எப்படி?''

""ஜெ கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு வந்தாகணும்னு கட்சிக்காரங்களை மா.செ.க்கள் கூப்பிட்டப்ப, உங்களுக்கு எம்.எல்.ஏ சீட்டு வேணும்ங்கிறதுக்காக எங்களை கூப்புடுறீங்களா... விலைவாசி உயர்வு திடீர்னா ஏற்பட்டிச்சி. இத்தனை நாளா அந்தம்மா ரெஸ்ட் எடுத்துட்டு இப்ப வந்து போராட்டம், பொதுக்கூட்டம்னு எங்களை கூப்பிட்டா, எங்க பொழைப்பு என்னாகுறதுன்னு தொண்டர்கள் பலரும் ரியாக்ஷன் காட்டியிருக்காங்க. அதற்கப்புறம் தான், சொகுசான வண்டி ஏற்பாடு, நல்ல பிரியாணி சாப்பாடு, தலைக்கு 200 ரூபாய்னு வசதிகளை அதிகப்படுத்தி ர.ர.க்களை மா.செ.க்கள் அழைச்சிட்டுப் போனாங்க. எல்லா செலவும் மா.செ.க்க ளோடது தான். காங்கிரஸ்-தே.மு.தி.க கட்சிகளோட கார்டன் பேசிக்கிட்டிருப்பதா தகவல் வர்றதால நல்ல கூட்டணி அமையும்னும், அப்ப தங்களுக்கு சீட் கிடைக்கும்னும் எதிர்பார்ப்போடுதான் அ.தி.மு.க மா.செ.க்கள் கூட்டத்தைச் சேர்த்தாங்க.''

""கூட்டணி நிலவரம் எப்படி இருக்குது? காங்கிரஸ் தரப்பிலிருந்து கார்டனுக்கு ஏதாவது சிக்னல் வந்திருக்கா?''

""அ.தி.மு.க தரப்பில் எல்லாவிதமான முயற்சி களும் நடந்துக்கிட்டிருக்குது. ஆனா, டெல்லியில்தான் காங்கிரஸ் தரப்பில் இதை சீரியஸா கவனிக்கக்கூடிய யாரும் இதுவரை கவனிக்கலை. டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் இது பற்றி விசாரித்தேங்க தலைவரே... அவங்க என்ன சொல்றாங்கன்னா, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ஜெ தோல்வியை சந்தித்தால் அதற்கப்புறம் அரசியலில் அவர் நீடிக்க மாட்டார். அதற்கப்புறம் நாங்களா, தி.மு.க.வாங்கிறதுதான் தமிழக அரசியலின் நிலவரமா இருக்கும். முக்கியமான ஒரு போட்டியே தேர்தல் களத்தில் இல்லாமல் போகக்கூடிய நிலையில், ஜெ.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து அவருக்கு ஏன் நாங்க அரசியல் வாழ்க்கை தரணும்னு கேட்குறாங்க.''

""தே.மு.தி.க.வுடனான கூட்டணி முயற்சிகள் எப்படி இருக்குது? கொடநாட்டில் ஜெ.வை பிரேமலதா சந்திச்சதா நியூஸ் வந்ததே?''""இப்பவும் பல ஸ்கூப் நியூஸ் வந்துக்கிட்டுத் தான் இருக்குது. லேட்டஸ்ட் தகவலைச் சொல்றேன்... கூட்டணி விஷயத்தில் விஜயகாந்த் தன்னோட கட்சிக்காரங்களையோ தமிழக காங்கிரஸ் பிரபலங்களையோ நம்பலையாம். சோனியாகிட்டே ஒரு முக்கியமான பிரமுகர் மூலமா தன்னோட நிலையை தெரிவிச்சிடுறாராம். அந்த பிரமுகர் யாருன்னா, விஜயகாந்த்தைப் போலவே நடிகரா இருந்து அரசியல்வாதியான பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவிதான். ஆந்திராவில் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளால், சிரஞ்சீவியின் தயவு தேவைப்படுது. சமீபத்தில், சோனியாவிடம் சிரஞ்சீவி பேசியபோது, விஜயகாந்த் பற்றி பேசியிருக்கிறார்.''

""சோனியா என்ன சொன்னாராம்?''

""தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நாங்களும் தி.மு.க.வும் கூட்டணியில் இருக்கிறோம். இந்த அடிப்படையில்தான் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முடியும்னு சோனியா சொல்லியிருக்கிறார். அதற்கு சிரஞ்சீவி, பா.ம.க இல்லாதபட்சத்தில் அந்த கூட்டணியில் இடம்பெற விஜயகாந்த் ரெடியா இருக்காருன்னு சொல்லியிருக்காரு. அ.தி.மு.க கூட்டணியிலும்தான் பா.ம.க இல்லை, அங்கே போவாரான்னு சோனியா கேட்க, அவரோட சாய்ஸ் காங்கிரஸ்தான். மேடம் தரப்பிலிருந்து சிக்னல் கிடைத்தால் மற்ற விஷயங்கள் பற்றிப் பேச விஜயகாந்த் ரெடியா இருக்காருன்னு சிரஞ்சீவி சொன் னாராம். சரி..பார்ப்போம்னு சோனியாவிட மிருந்து பதில் வந்திருக்குது. 30-ந் தேதி வரைக்கும் விஜயகாந்த்துக்கு மலேசியாவில் ஷூட்டிங். அதனால அங்கிருந்தபடியே சிரஞ்சீவியை அடிக்கடி காண்டாக்ட் பண்ணி கூட்டணி விஷயமா பேசிக்கிட்டிருக்காராம்.''

""ஒரே கூட்டணியில் இருந்தாலும் ஜெ.வை வைகோ சந்திச்சிப் பேசியது அபூர்வமான செய்தியா வெளியாகுதே?''

""ஜெ.தான் வைகோவை கார்டனுக்கு வரச்சொல்லி பேசியிருக்கிறார். கோவையில் ஆர்ப்பாட்டத்தை பொதுக் கூட்டமா செ.ம.வேலுச்சாமி மாத்திட்டாருன்னும் வெயில் நேரத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடானதையும் பற்றி வருத்தத்தோடு வைகோகிட்டே பேசிய ஜெ, மீனவர் பிரச்சினைக்காக ஆளுங்கட்சியான தி.மு.க.வே ஆர்ப்பாட்டம் நடத்துது. நாம எப்படி ஸ்கோர் பண்ணுவதுன்னு கேட்டிருக்கிறார். அதற்கு வைகோ, சிங்கள ராணுவத்தின் அட்டகாசத்தைத் தாங்க முடியாம தமிழக மீனவர்கள் கொதிச்சுப்போயிருக்காங்க. முதலமைச்சர் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதிக்கிட்டிருக்கிறார். நாம நேரடியாக வே பிரதமரை சந்திச்சி மனு கொடுக்கலாம்னு சொல்லி யிருக்கிறார். ஜெ.வுக்கு இந்த ஐடியா பிடிச்சுப்போச்சு.''

""டெல்லிக்குப்போய் பிரதமரை சந்தித்தால் அதுவும் கூட்டணிக்கான அச்சாரம்னு மீடியாக்களில் செய்தி வரும். ஜெ எதிர்பார்க்கிறபடி அ.தி.மு.க ஸ்கோர் பண்ணுமே?''

""அதனாலதான் உடனடியா சி.பி.எம் பிரகாஷ்காரத்தையும் சி.பி.ஐ.யின் டி.ராஜாவையும் தொடர்புகொண்டு மீனவர் பிரச்சினைக்காக பிரதமரை சந்திப்பது பற்றி சொல்லியிருக்கிறார். அவங்களும் சந்திப்புக்கு ரெடி. சனிக்கிழமை மாலைக்குள் பிரதமரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கணும்னு ஏற்பாடுகள் நடந்தது. காஷ்மீர் பிரச்சினையில் சீரியஸா இருந்த பிரதமர், ஜெ.தரப்பின் அப்பாயிண்ட்மென்ட் பற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் கருத்து கேட்டிருக்கிறார். ப.சி.யோ, மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி கலைஞர் உங்களுக்கு எழுதியிருந்தார். அதன்படி, இலங்கை அரசை வலியுறுத்தி, மீனவர்களின் நலன் காப்பாற்றப்படும்னு நீங்களும் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கீங்க. இதற்கப்புறமும், மீனவர் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யணும்னுதான் இந்த சந்திப்பு முயற்சின்னு சொல்லியிருக்கிறார். இதையடுத்து, காஷ்மீர் பிரச்சினையில் பிரதமர் பிஸின்னு சொல்லி, ஜெ.வுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் அப்பாயிண்ட்மென்ட் தரலை.''

""இலங்கையைப் பற்றி பேசியதும், நடிகை அசின் சர்ச்சை ஞாபகத்துக்கு வருதுப்பா... தமிழ்த் திரையுலகத்தின் தடையை மீறி இலங்கையில் படப்பிடிப்பில் கலந்துக்கிட்டதோடு, ராஜபக்சே மனைவியோடு அசின் இருக்கும் படங்கள் வெளியாகியிருக்குதே..''

""தலைவரே... தமிழ்த்திரையுலகமும் தமிழ் உணர்வாளர்களும் வெளிப்படுத்திய எதிர்ப்பினால் இலங்கையில் நடந்த சர்வதேச இந்தியத் திரைப்படவிழாவுக்கு அமிதாப் போகலை. அவருக்குப் பதிலா சல்மான் கான் போனார். அந்த சல்மான்கானோடுதான் இந்தி படத்தில் அசின் நடிக்கிறார். அந்த நெருக்கத்தில், தன் அப்பாவைக்கூட அசின் கண்டுக்கிற தில்லையாம். ஷூட்டிங்கிற்கோ அவுட்டோருக்கோ அப்பாவை அழைச்சிட்டு வரக்கூடாதுன்னு சல்மான்கான் போட்ட கண்டிஷனால், அப்பாவையே கழற்றிவிட்டுவிட்டு, சல்மானோடு பயணித்துக்கொண்டிருக்கிறார் அசின். சல்மானோடு இலங்கைக்குப் போய் ராஜபக்சே மனைவியை சந்தித் திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவரான அசின், தமிழ்த் திரையுலகினரின் கட்டுப்பாட்டையும் அவங்க உணர்வையும் கண்டுக்கலை.''

""இலங்கைக்கு ரஷ்யா உதவி செய்யக்கூடாதுன்னு உணர்வோடு போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தின் சீமான், வன்முறையைத் தூண்டி விடும்படி பேசினாருங்கிறதுக்காக அவரைத் தேடித்தேடி கைது செய்திருக்கிறதே போலீஸ்?''

""தன்னை யாரும் தேட வேண்டியதில்லைன்னு சொல்லி, திங்கட் கிழமையன்னைக்கு, சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளிக்கப்போவதாக சீமான் அறிவித்தார். இதையடுத்து, பிரஸ் கிளப் ஏரியாவில் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டாங்க. அங்கே வந்த சீமானை போலீஸ்படை முற்றுகையிட்டு கைது செய்ததால் பெரும் பரபரப்பாயிடிச்சி. அவரை புழல் சிறையின் வாசல் வரைக்கும் கொண்டு போயிட்டு, அதன்பிறகு வேலூர் சிறைக்கு கொண்டுபோனதால கூடுதல் பரபரப்பு.''

""வன்முறையைத் தூண்டும் பேச்சுங்கிற வழக்கின் அடிப்படையில் இயக்குநர் சீமானை கைது செய்றதுக்காக இந்தளவுக்கு போலீசாரைக் குவித்து பரபரப்பை உண்டாக்கணுமா? பேசறதாலேயே வன்முறை உருவாயிடுமா?''

""நானும் அதைப்பற்றி போலீஸ் வட்டாரத்தில் கேட் டேன்.... விழுப்புரத்தில் ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில், ஏற்கனவே பல கூட்டங்களில் சீமான் பேசிய பேச்சுகள்தான் குண்டு வைக்கத் தூண்டுதலாக இருந்ததுன்னு தெரியவந்திருக்குதாம். அது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடந்திடக்கூடாதுங்கிறதுக் காகத்தான் இத்தனை பாதுகாப் போடு கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதாம்.''

No comments:

Post a Comment