Thursday, July 15, 2010

யுத்தம் 70 - நக்கீரன் கோபால்


தம்பி காமராஜ் சொன்ன தகவல் ரொம்பவும் எக்ஸ்க்ளூசிவ் தகவல். ஒரு மாநிலக் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருப்பவரைப் பொடா சட்டத்தில் கைது செய்ய ஜெயலலிதா முடிவெடுத்திருக்கிறார் என்பது, சட்டநெறிமுறைகள் பற்றி அவர் எந்தவித கவலையும் படவில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியது. தனக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்கவேண்டும், அதற்காகச் சட்டத்தை எப்படியும் பயன்படுத்தலாம் என்பதே ஜெ.வின் போக்கு.

பொடாவில் கைது செய்வதற்கான ப்ளான் உருவாகிக்கொண்டிருந்தபோது வைகோ அமெரிக்கா வின் சிகாகோ நகரில் இருந்தார்.

""என்ன காரணத்துக்காக வைகோ மேலே பொடா?'' -தம்பியிடம் கேட்டேன்.

""அண்ணே.. விடுதலைப்புலிகள் ஆதரவுங்கிற பேரில்தான் அவரைக் கைது பண்ண ப்ளான் போட்டி ருக்காங்க. உள்ளுக்குள்ளே வேற சில காரணங்கள் இருக்குது'' என்ற தம்பி காமராஜ், அது பற்றியும் சொன் னார்.

மத்தியில் அப்போது வாஜ் பாய் பிரதமராக இருந்தார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்து கொண்டி ருந்தது. இதில் தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை முக்கிய பங்காளிகள். தி.மு.க.வை வெளியேற்றிவிட்டு, அ.தி.மு.க. அந்த இடத்தில் உட்கார வேண்டும் என்பது ஜெயலலிதா வின் கணக்கு. ஆனால், ஏற்கனவே 1998-ல் ஜெ.வின் தயவில் ஆட்சியமைக்க வேண் டிய சூழல் ஏற்பட்டு, தன் அரசியல் வாழ்வில் அதுவரை கண்டிராத கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருந்தார் வாஜ்பாய். அதனால் அவர் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கைகோர்க்க விரும்ப வில்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு அ.தி.மு.க. வர விரும்புவதை தி.மு.க..வை விடவும் வேகமாக அப்போது எதிர்த்துக் கொண்டிருந்தவர் வைகோ தான்.

ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் மத்திய அரசு அப்போது போட்டிருந்த வழக்குகள் சில நிதித்துறையில் இணையமைச்சர் பொறுப்பில் இருந்த செஞ்சி ராமச்சந்திரன் துறையுடன் சம்பந்தப்பட்டிருந்தன. அந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என அ.தி.மு.க. தலைமை விரும்பியது. வெவ்வேறு ரூட்டில் இது பற்றி பேசிப்பார்த்தும்கூட வைகோவும் செஞ்சி ராமச் சந்திரனும் இந்த விஷயத்தில் ஜெ.வுக்கு சாதகமாக நடக்கவில்லை.

""இவங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் இப்படி கெஞ்சிக்கிட்டிருக்கணுமா? நான் யாருன்னு காட்டுறேன்'' என்று கார்டனில் கோபத்தைக் கொட்டியிருக்கிறார் ஜெயலலிதா. பொடா சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது அதற்கு அ.தி.மு.க. ஆதரவு தந்தது. பாரதிய ஜனதா வுடன் நெருங்க வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்கு அடிப்படைக் காரணம்.

ராஜ்யசபா நியமன எம்.பி.யாகவும் இருந்த தமிழ்நாட்டுப் பத்திரிகைக்காரரான "சோ' இந்த விஷயத்தில் ஜெ.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் அனுமார் போல பாலம் போட்டுக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. உறவை வாஜ்பாய் விரும்பாததால், அத் வானி மூலமாக இந்தப் பாலம் போடும் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பா.ஜ.க வுக்குள் எழுந்த உள்புகைச்சல் காரணமாக துணைப்பிரதமரானார் அத்வானி. அதன்பிறகுதான், பொடா சட்டம் வந்தது.

தூதுவர் மூலம் அத்வானிக்கு தகவல் அனுப்பினார் ஜெ. "உங்கள் அமைச்சரவையில் ம.தி.மு.க. அங்கம் வகிக்கிறது. அதன் தலைவரை எங்கள் மாநில அரசு பொடாவில் கைது செய்ய முடிவெடுத்திருக்கிறது. நீங்கள் தலையிடாமல் இருக்கவேண்டும்' என்பதுதான் தூதுவரான பத்திரிகையாளர் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்ட செய்தி. அங்கிருந்து அப்ஜெக்ஷன் எதுவுமில்லை. இதன்பிறகுதான், வைகோவை பொடாவில் தள்ளும் நடவடிக்கைகள் வேகமெடுத்தன.

சிகாகோவில் இருந்த வைகோ, அங்கிருந்த படியே தனது கட்சியின் நிர்வாகிகளைப் போனில் தொடர்புகொண்டு பேசிக் கொண்டி ருந்தார். ""பொடாவில் தள்ளப்பட்டால் ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாது'' என்பதை கட்சிக்காரர்கள் கவலையோடு சொன்னபோது, ""நீங்க கவலைப்படவேண்டாம். நம்ம கட்சி வளர ஒரு நல்ல சந்தர்ப்பம், நமக்கு ஒரு நாள் கிடைக்கும்னு அடிக்கடி நான் சொல்வேனே.. அந்த சந்தர்ப்பம்தான் இப்ப வந்திருக்குது. இதை நாம சரியா பயன்படுத்திக்கணும். என்னை கைது செய்தால் கட்சி தீவிரமா வளரும். நீங்க யாரும் சோர்ந்து போயிடக்கூடாது'' என்பதுதான் கட்சிக்காரர்களுக்கு வைகோ சொன்ன தகவல்.துணை பிரதமருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டதுபோல ஜெ செயல்பட்டுக்கொண்டிருக்க, அமெரிக்காவிலிருந்த வைகோ டெல்லி யில் பிரதமர், துணைபிரதமர், பா.ஜ.க. அமைச்சர்கள் பலரையும் தொடர்பு கொண்டு, "என்னைப் பொடாவில் கைதுசெய்தால் மத்திய அரசு தலையிட வேண்டாம். நான் ஜெயலலிதாவை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப் பேன்' என்று தனக்கேயுரிய உரத்த குரலில் சொல்லிவிட்டார்.

ஜூலை 11ந் தேதி. 2002.

அன்றுதான் சிகாகோவிலிருந்து மும்பை வழியாகச் சென்னை வருகிறார் வைகோ. அவரைக் கைது செய்வதற்காக முதல் நாள் இரவிலிருந்தே போலீஸ் காத்திருக்கிறது. மதுரை திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளை ஆத ரித்து வைகோ பேசினார் என்பதுதான் பொடாவில் அவரை உள்ளே தள்ளு வதற்கு ஜெயலலிதா அரசு முன்வைத்த காரணம். வைகோவுடன் இந்த கூட்டத் திற்கு பொறுப்பு வகித்த ம.தி.மு.கவின் 9 பேர் மீதும் பொடா வழக்குப் போடப் பட்டிருந்தது. அவர்களை ஜூலை 9-ந் தேதியே கைது செய்து சிறையி லடைத்தது காவல்துறை. நள்ளிரவில் சென்னையில் உள்ள ம.தி.மு.க.வினரின் வீட்டுக் கதவைத் தட்டி முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார்கள். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இப்படி 2000 பேர் கைது செய்யப்பட்டனர். ம.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்த எல்.கணேசனும் முன்னெச்ச ரிக்கை கைதுக்குத் தப்பவில்லை. ஆனாலும், போலீசுக்கு சிக்காமல் ம.தி.மு.க.வினர் பலர் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார்கள். இந்திய அளவிலான மீடியாக்கள் அனைத்தும் குவிந்திருந்தன. வைகோவின் குடும்பத்தார், அவருக்குத் தேவையான துணிமணிகளுடன் விமான நிலையத்தில் காத்திருந்தார்கள்.

மாலை 5.10 மணி. மும்பையிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கிய வைகோவை உள்ளே சென்று கைது செய்ய போலீசார் நினைத்தனர். விமான நிலைய அதிகாரிகள் அதற்கு அனுமதிக்கவில்லை.

குடும்பத்தினரிடம் விமான நிலையத்தில் சிறிது நேரம் பேசிவிட்டு, கைது பற்றி கவலைப் படாமல் வெளியே வந்த வைகோவிடம், பிடிவாரண்ட்டைப் போலீசார் காட்டினார்கள். சிரித்தபடியே அதைப் படித்துவிட்டு, கைதான வைகோ அங்கே திரண்டிருந்த மீடியாவிடம் ஆவேசமாகப் பேசினார்.

""கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகளான கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரை தர்மபுரியில் பேருந்துக்குள் வைத்து உயிரோடு எரித்த சண்டாள ஆட்சி இது. சதிகாரியின் ஆட்சி இது. இந்தக் கைது நடவடிக்கையால் எங்கள் கொள்கைகளை விட்டுவிடமாட்டோம். தாயகத்தின் விடுதலைக் காகப் போராடும் விடுதலைப்புலிகளை ஆத ரிப்போம். இந்த வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா ஆட்சியை மக்கள் சக்தியுடன் விரட்டியடிப்போம்'' என்றார் வைகோ. பத்திரிகையாளர்கள், கட்சிக்காரர்கள், பொதுமக்கள் எனப் பெரு மளவில் கூட்டம் திரண்டிருந்தது. வைகோ வைக் கைது செய்த போலீசார், அவரை மதுரைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதன்பின் வேலூர் சிறையில் அடைத்தனர்.

வைகோவும் அவருடன் 9 பேரும் பொடாவில் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் பரபரப்பை உண்டாக்கியது. அந்த பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில், ""ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்'' என்று கோட்டையில் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா தெரிவித்தார்.

ம.தி.மு.க.வின் எதிர்காலம் பற்றிய கேள்விகள் எல்லா இடங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருந்த நிலையில், டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் நடந்த கேபினட் அமைச்சர் கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டம் நடந்து முடிந்தது. அதிகாரிகள் வெளி யேறிய நிலையில் பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் பேச ஆரம்பித்தார்.

""பொடாவில் கைது செய்யப்பட்ட கூட்டணிக் கட்சித் தலைவரை நம்மால் காப்பாற்ற முடியலை. பா.ஜ.க.வின் நிலை என்ன என்பது எனக்குப் புரியவில்லை.''

"புலிகளை அவர் ஆதரித்துப் பேசியது சரியா?'- என்று அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி கேட்டிருக்கிறார்.

அதற்கு மாறன், ""பார்லிமெண்ட்டில் வைகோவை பார்த்து மணிசங்கரய்யர், "நீங்க ராஜீவைக் கொன்ற விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்' என்றபோது, "நான் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்' என்றவர்தான் வைகோ. அப்போது நீங்கள் எல்லோரும் பார்லிமெண்ட்டில்தான் இருந்தீங்க. அப்போது தவறாக தெரியாத பேச்சு, இப்போது பொடா சட்டத்திற்குட்படு கிறதா? கூட்டணியில் உள்ள ஒரு தலைவ ரைக் காப்பாற்ற என்ன முயற்சி எடுக்கப் போகிறோம்?'' என்று முரசொலி மாறன் குரலை உயர்த்திக் கேட்டிருக்கிறார்.

துணை பிரதமர் அத்வானி இதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டார். ஏனென்றால், அவருக்குத்தானே தூதுவர் மூலம் வைகோ மீதான நடவடிக்கை பற்றி முதலிலேயே தெரியவந்தது! அந்த தூதுவரும் ஜெயலலிதாவும் நடத்திய ஆலோசனையில் அவர்களின் அடுத்த பொடா டார்கெட் யார் தெரியுமா?

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment