Wednesday, July 28, 2010

யுத்தம் 74 - நக்கீரன் கோபால்


ரஜினி பதறிய அந்த நாள், செப்டம்பர் 8-2000.

""கோபால்.. கோபால்.. இது பற்றி நான் ராஜ்குமார்சார் ஃபேமிலிகிட்டே பேசுறேன். நீங்க எவ்வளவு பெரிய காரியத்தில் இறங்கியிருக்கீங்கன்னு எனக்குத்தான் தெரியும். இதில் எவ்வளவு ஆபத்து இருக்குன்னு புரியும். இதெல்லாம் தெரியாத சில பேர், ஏதாவது வயித்தெரிச்சலில் எதையாவது சொல் லுவாங்க. நீங்க அதற்கெல்லாம் கவலைப்படாதீங்க. நீங்க வருத்தப்படக்கூடாது. நான் ராஜ்குமார் சார் சன்ஸ்கிட்டே பேசுறேன்'' என்றார்.

சொன்னதுபோலவே, ராஜ்குமாரின் மகன்கள் இருவரிடம் ரஜினி பேசினார். அன்றே அவர் வீட்டின் மொட்டை மாடியில் நான், ரஜினி, ராஜ்குமாரின் மகன்கள் ஆகியோர் சந்தித்தோம். பத்திரிகைகளின் அவதூறு பிரச்சாரம் அப்போது தான் ராஜ்குமாரின் மகன்களுக்குத் தெரிய வந்திருக்குது.

""ரஜினிசார்... நாங்க அப்பாவைக் காப்பாத்திக்கொண்டு வரணும்ங்கிற நினைப்பிலே இருக்கோம். கோபால்சார்தான் அதை சரியா செய்வாருன்னு நாங்க மட்டுமில்லை, எங்க கர்நாடகா கவர்மெண்ட், இங்கே உள்ள பப்ளிக் எல்லோரும் நம்பு றாங்க. பேப்பரில் என்ன வருதுங்கிறதை நாங்க கவனிக்கலை. இப்படி எதையாவது எழுதி, மிஷனைக் கெடுத்திடக் கூடாது. நக்கீரன் சார் மேலே எங்களுக்கு முழு கான்ஃபிடன்ட் இருக்கு. அவர் டிஸ்டர்ப் ஆகிற மாதிரியான காரியங்கள் எதுவும் நடக்கக்கூடாது. நீங்க என்ன சொல்றீங்களோ அதன்படி நடந்துக்குறோம்.''

""உண்மை என்னவோ, அதை மட்டும் நீங்க அஃபிடவிட்டா கொடுத்தா போதும். அப்பதான் இந்த மிஷன் சக்ஸஸ்ஃபுல்லா நடக்கும்.''

-ரஜினி சொன்னது இதுதான். நக்கீரனின் உண்மையான மீட்பு முயற்சிக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ராஜ்குமார் மகன்களின் ஒத்துழைப்பு கிடைத்தது.

அடுத்த நாள்.

நாங்கள் மீண்டும் ரஜினி வீட்டில் சந்தித்தோம். "எங்கள் அப்பாவை மீட்கும் முயற்சியில் எந்தவிதமான பண மும் கைமாற வில்லை' என ராஜ்குமார் மகன்கள் தனித்தனியாக அஃபிடவிட் தந்தனர். ரஜினியிடம் இந்த அஃபிடவிட்டை அவர்கள் கொடுத் தனர். ரஜினி நேரில் தலையிட்டு வாங்கிய அந்த அஃபிட விட்டுகளை அவரே தன் கையால் நம்மிடம் கொடுத்தார்.

கடத்தல் விவகாரத்தில் பணம் கைமாறுகிறது என்றும், பணத்திற்காகத்தான் நாம் இந்த வேலையைச் செய்கிறோம் என்றும் நம் மீது வீண்பழி சுமத்திக்கொண்டிருந்தவர்களுக்கு நெத்தியடி தருவது போன்ற அஃபிடவிட் அது.


கோர்ட்டில், இதே பண விவகாரம் தொடர்பாக நமது வழக்கறிஞருக்கும் அரசு வழக்கறிஞருக்கும் கடும் வாக்குவாதம் என்றதும் அந்த அஃபிடவிட் என் ஞாபகத்திற்கு வந்தது. அவசர அவசரமாக தம்பி சிவக் குமாரை வரச் சொல்லி, அந்த அஃபிடவிட்டை எடுத்து வைக்கச் சொன்னேன். மேற்படி அஃபிடவிட்களை உட னடியாக ப.பா.மோகனுக்கு அனுப்பி வைத்தேன்.

அடுத்தடுத்த நாட்கள் நடந்த விசாரணை யில் இந்த விஷயம்தான் பெரும் பரபரப்பாக அமைந்தது. பணம் கைமாறியதாக அரசு வழக்கறிஞர் வைத்த குற்றச்சாட்டுக்கு எதிராக, ராஜ்குமார் மகன்களின் அஃபிடவிட்டை தாக்கல் செய்தார் நமது வழக்கறிஞர். பணவிவகாரம் பற்றி கோர்ட்டில் நடந்த வாக்குவாதங்கள் தொடர் பாக டி.வி.யில் செய்திகளிலும் பத்திரிகைகளிலும் ரிப்போர்ட்டாக, அது கர்நாடகா அரசியலில் புயலைக் கிளப்பியது.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்..கிருஷ்ணா தனது மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியைப் பெறுவதற்காகவும், கூடுதல் நிதி வழங்கும்படி மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதற்காகவும் டெல்லிக்குச் சென்றிருந்தார். ராஜ்குமார் கடத்தல் விவகாரம் பற்றி தமிழக கோர்ட்டில் பதிவான விஷயங்கள் குறித்தும் டெல்லியிலுள்ள தனது கட்சி எம்.பிக்களிடம் ஆலோசித்தவர், வெளியே வரும்போது பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.பல கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளர்கள், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பான கேள்விகளைக் கேட்கத் தவறவில்லை. அது சம்பந்தமான கேள்விகள் வந்தபோது, எஸ்.எம். கிருஷ்ணா கொஞ்சமும் தயங்கவில்லை.

""ராஜ்குமாரை மீட்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் எல்லாம் வெறும் ரப்பிஷ்... நான்சென்ஸ்... இந்த ஆங்கில வார்த்தைகள் போல தமிழில் என் னென்ன மோசமான வார்த்தைகள் உள்ளதோ அதையெல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். மிக மோசமான வார்த்தைகளால் வர்ணிக்கப்பட வேண்டிய மோசமான தகவல் அது'' என்று சொல்லி சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிருஷ்ணா.

கர்நாடக முதல்வர் டெல்லியில் இருந்த நிலையில், பெங்களூரில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வந்தனர். அரசின் விளக்கத்தை அளிக்க வேண்டிய இடத்தில் இருந்தவர் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே. ராஜ்குமார் மீட்பு முயற்சியின் போது கர்நாடக அரசின் சார்பில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியத் துவம் வாய்ந்தவை. நடந்தது என்ன என்பதை அறிந்திருந்த அவரிடமிருந்து அதிகாரப் பூர்வ அறிக்கை வெளியானது.

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து 2000-ஆம் ஆண்டில் நடிகர் ராஜ்குமாரை மீட்பதற்காக 40 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுவதில் அடிப்படை உண்மை துளியும் இல்லை. இது முற்றிலும் பொய் என்று தெரிவித்தார் மல்லிகார்ஜூன கார்கே.

தமிழக அரசின் வழக் கறிஞர், ஈரோடு செசன்ஸ் கோர்ட்டில் பதிவு செய்த அவதூறு அகில இந்திய அளவில் விவாதத்திற்குள்ளானது. இந்த விஷயத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த ஜெ அரசும், கர்நாடகத்தை ஆட்சி செய்த கிருஷ்ணா அரசும் எதிரெதிர் நிலையில் நின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே காரணத்தால், தமிழகத்தில் பழி வாங்கும் நோக்குடன் அர சாங்கம் தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தது. கர்நாடகத்தில், ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தின் போது ஆட்சியிலிருந்தவர் களே 2002-ஆம் ஆண்டிலும் நீடித்ததால், நடந்த உண்மைகளை அவர்கள் வெளிப்படையாகத் தெரிவித்தனர்.

இரு மாநில அரசுகளுக்கிடையிலான இந்த உரசல், தேசிய அளவிலான மீடியாக்களுக்குத் தீனியாக அமைந்தது. வீரப்பன் விவகாரத்தின் உண்மை நிலை என்ன, மலைவாழ் மக்களின் அவல நிலை என்ன என்பதையெல்லாம் அறியாமல் வெறும் வாயை மென்றுகொண்டி ருக்கும் மீடியாக்களுக்கு, ஜெயலலிதா அரசு அவல் அள்ளிக் கொடுத்ததுபோல ஆனது. ஆனால், அது அவல் அல்ல, உமி என்பதை கர்நாடகத் தரப்பின் விளக்கங்கள் நிரூபித்தன.

இதற்கிடையே, கர்நாடக மாநிலத்தில் டி.ஜி.பியாக இருந்து ஓய்வு பெற்ற தினகர் தன் பங்குக்கு ஒரு வதந்தி குண்டை பற்ற வைத்தார். ராஜ்குமார் கடத்தலின்போது பணம் கைமாறியதாக தனது புத்தகத்தில் அவர் எழுத, அது பற்றியும் மீடியாக்கள் பரபரப் பாக்கின.

இதுபற்றி கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டார்கள். "எனக்குத் தெரிந்தவரையில் ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் எதுவும் கைமாறவில்லை. அப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை' என்று தெரிவித்த கலைஞர், ""இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் தினகருக்கும் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் இதுபோல அவர் எதை வேண்டுமானாலும் எழுதிக்கொண்டிருப்பார். ஓய்வுபெற்ற எத்தனையோ டி.ஜி.பிக்கள் தாங்கள் எந்த முதலமைச்சரின் கீழ் பணியாற்றினார்களோ அவர்களைப் பற்றியே விமர்சித்து எழுதியது உண்டு. தமிழ்நாட்டில் கூட மோகன்தாஸ் என்ற ரிடையர்டு டி.ஜி.பி எழுதிய புத்தகத்தில், "பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களைக் கொடுத்தார்' என்று எழுதியிருந்தார்.

தினகரன் தன்னுடைய புத்தகத்தில், ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் என்னை என்னுடைய வீட்டில் சந்தித்தார் என்று எழுதியிருக்கிறார். இது தவறான செய்தி. அவர் என்னை வீட்டில் சந்திக்கவில்லை. தலைமைச் செயலகத்தில்தான் அவர் என்னை சந்தித்தார்'' என்று கலைஞர் குறிப்பிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கிளப்பப்படும் அவதூறுகளை மறுத்தார்.

எல்லாத் திசைகளிலிருந்தும் மறுப்பு வெளியாகும் நிலையில், ராஜ் குமார் குடும்பத்தினர் என்ன சொல்லப்போகிறார்கள் என்ற ஆர்வத்துடன் அவர்களை நோக்கி மீடியாக்களின் பார்வை திரும்பியது. டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகையின் பெங்களூரு பதிப்பு, ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம், பணம் கைமாறியதாக தமிழக அரசு கிளப்பிய புகார் பற்றிக் கேட்டது. அதற்கு பதிலளித்த பர்வதம்மாள், ""தமிழக அரசு வழக்கறிஞர், கோர்ட்டில் என்ன சொன்னார் என்று எனக்கு எதுவும் தெரியாது. என் கணவரைக் காப்பாற்றுவதற்காக எங்கள் குடும்பத்தினர் எந்தப் பணமும் கொடுக்கவில்லை'' எனத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்.
இதுபோல டெக்கான் ஹெரால்டு பத்திரிகையும் ராஜ்குமார் குடும்பத்தின ரிடம் கருத்து கேட்டிருந்தது. ராஜ்குமாரின் மகன்கள் மூவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், தாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்பதைத் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்களே தெளிவாக இது பற்றி விளக்கியதால், மீடியாக்களில் விவாத அலைகள் ஓய்ந்தன. ஜெ அரசின் வழக்கறிஞர் கோர்ட்டில் உளறியதால் தேசிய அளவில் ஒரு பரபரப்பு உருவாகி, அடங்கிப்போனது.

சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் விசாரணை என்ற பெயரில் நக்கீரன் மீது 2 ஆண்டுகளாக சுமத்தி வந்த வீண்பழியை சுக்குநூறாக்கும் வகையில் கர்நாடக அரசிடமிருந்தும் ராஜ்குமார் குடும்பத்திடமிருந்தும் கலைஞரிடமிருந்தும் மறுப்புகள் வெளிப்பட்டு, இந்த அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அடுத்தநாள் காலை நக்கீரன் அலுவலக வாசலில் பவானி இன்ஸ்பெக்டர் போலீஸ் டீமுடன் ஜீப்பில் வந்து இறங்க...

அடுத்த இடி...?

No comments:

Post a Comment