Thursday, July 15, 2010

ஆந்திராவில் கொத்தடிமைகளாக தமிழர்கள்!

""ரொம்ப கொடுமைங்க. ஆந்திராவில் கொத்தடிமைகளா இருந்த... நம்ம தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர்... கொடுமைகள் தாங்காம.. அங்கிருந்து தப்பிச்சி... பசிபட்டினியோடு வந்திருக்காங்க. அதிலும் நடந்தே வந்திருக்காங்க. இந்த விசயத்தை அரசு எந்திரங்களின் கவனத்துக்கு நக்கீரன்தான் கொண்டுபோகணும்''’-நம்மைத் தொடர்புகொண்ட திருவண்ணா மலை டைஃபி தோழர் ஒருவரின் வேண்டுகோள் தகவல் இது.

அந்த நள்ளிரவில் திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே துவண்ட நிலையில் இருந்த அவர்களை நாம் சந்தித்தோம். முதியவர் கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என 19 பேர் இருந்தனர். அவர் களின் கண்களில் பசி மயக்கம். முகத்தில் வாட்டம். உடலில் பலவீனம்.

களைப்பு விலகாத நிலையில் இருந்த அவர்களில்... ராசுவும் ராமுவும் அந்த கொடுமையான ஆந்திர அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினர்.

""நாங்க திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகாவில் இருக்கும் பொய்யாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். 25 நாளைக்கு முன்னாடி... எங்க ஊருக்கு வந்த மதுரைக்காரப் பொம்பளை ஒருத்தி... "ஆந்திர மாநில சித்தூர்ல மாம்பழ ஜூஸ் பேக்டரிக்கு ஆள் கேட்கறாங்க. தலைக்கு 5 ஆயிரம் ரூபா அட்வான்ஸும் நாள் கூலியா 200 ரூபாவும் தருவாங்க. உங்களுக்கெல்லாம் வேலைக்கு வரச் சம்மதமா'ன்னு கேட்டா.

இதை நம்பி எங்க ஊரைச் சேர்ந்த 35 பேர் அவகூட கிளம்பிப்போனோம். "செக் இன்னும் வரலை. அதனால அட்வான்ஸை சித்தூர் போய் வாங்கித் தர்ரேன்'னு அந்த பொம்பளை சொன்னாள். இதன்பிறகு சித்தூர்ல இருந்து 20 கி.மீ.தூரத்தில் இருக்கும் முதுவலந்தூர் என்கிற கிராமத்தில் அருண்குமார்ங்கிறவர் நடத்தும் அந்த ஜூஸ் கம்பெனியில் எங்களைக் கொண்டுபோய் அவள் சேர்த்துவிட்டாள். போனதுமே மாட்டுக்கொட்டாய் மாதிரியான இடங்கள்ல பத்துப் பத்துபேரா பிரிச்சி எங்களைத் தங்க வச்சாங்க.

அந்தக் கம்பெனியில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 700 பேர் கொத்தடிமைகளா இருந்தாங்க. அவங்களோட எங்களையும் கொத்தடிமைகளா ஆக்கிட் டாங்க. மாம்பழ லோடுகளை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை லாரியில் இருந்து இறக்கும் வேலைதான் எங்களுக்கு. கடுமையா வேலை செய்தும் 2 வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்தாங்க. கொஞ்சம் அசந்தாலும் திட்டி அடிப்பாங்க.

அட்வான்ஸும் கொடுக் காம நாள் சம்பளமும் கொடுக்காம அவங்க கசக்கிப் பிழிஞ்சு எங்களை சக்கையா ஆக்கியதால்... இனியும் தாங்க முடியாது... இதுவரை வேலை செஞ்சதுக்கான சம்பளத்தை யாவது கொடுங்கைய்யா... ஊருக்குப் போய்சேரறோம்னு கேட்டோம். தொடர்ந்து வேலை பார்த்தாத்தான் சம்பளம் தருவோம். இல்லைன்னா சல்லிப் பைசா தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. இவங்கக் கிட்ட எதுவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சதால் எங்கள்ல 15 பேர் செல்போன், வாட்சையெல் லாம் வித்துட்டு ஊருக்குக் கிளம்பிட்டாங்க.

எதுவும் இல்லாத நாங்க... அங்க இருந்தே பசியோட... நடந்தே ஊர் திரும்பிக்கிட்டு இருக்கோம். திருவண்ணாமலை யைச் சேர்ந்த 50 பேரும் அங்க கொத்தடிமையா சிக்கிக்கிட்டு இருக்காங்க. அவங்க அட்வான்ஸ் வாங்கிட்டு வேலையில் சேர்ந்ததால் அவங்களை அந்தக் கம்பெனிக்காரங்க விடமாட் டேங்கறாங்க. அவங்களை விரைவா மீட்கலைன்னா... அவங்க தற்கொலைதான் பண்ணிக்குவாங்க''’என்றவர்கள்... ""அங்க இருந்து தப்பிப்போம்னு நினைச்சுக்கூட நாங்க பார்க்கலை. அதே சமயம் எங்க ஊர்ப்போய்ச் சேர்றவரை... எங்க உடம்பில் உயிர் இருக்குமான்னு தெரியலைங்க. அந்த அளவுக்கு களைச்சிப் போய்ட்டோம். உடம்பில் தெம்பே இல்லை''’என்றார்கள் கண்ணீர் வழிய.

அவர்களது ஊரைத் தொடர்புகொண்டு அவர்களது நிலைமையைச் சொல்ல... பதறிப்போன பொய்யாம்பட்டிக் காரர்கள்... அவர்களை அழைத்துக்கொள்ள வேனோடு வருவதாகச் சொன்னார்கள். .சொன்னபடியே வந்து அழைத்துச்சென்றனர்.

டைஃபி பிரமுகரான ரகுமான் ""ஆந்திராவில் கொத்தடிமைகளாக சிக்கியிருக்கும் எங்க திருவண்ணாமலைக்காரர் களை மீட்க மாவட்ட நிர்வாகம்தான் முயற்சியெடுக்க வேண்டும். மேலும் அங்க இருக்கும் தமிழக கொத்தடிமைகளை மீட்கவும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கணும்'' என்கிறார் எதிர்பார்ப்போடு.

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் பிழைப்புத் தேடிப் போன நம் தமிழக பாட்டாளிகள்... அங்கு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை. ரத்தம் உறியும் அட்டையாக இருக்கும் அந்த ஆந்திரக் கம்பெனி மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இதுகுறித்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் கூறியபோது... முழு விபரங் களையும் கேட்டுக் குறித்துக் கொண்டவர், ""என் மாவட்ட மக்கள் ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருப்பதை என் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. இப்பொழுதே காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசுகிறேன். உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொத்தடிமைகளாக இருப்பவர்கள் மீட்கப்படுவார்கள்'' என்றார் மிக உறுதியாக.

No comments:

Post a Comment