Sunday, July 25, 2010

யுத்தம் 73 - நக்கீரன் கோபால்


""சார்... கோர்ட்டில் முக்கால் மணி நேரம் கடுமையான ஆர்க்யூமென்ட். பி.பி. சங்கர நாராயணன் உளறிட்டாரு.''

-ஈரோடு செசன்ஸ் கோர்ட்டிலிருந்து வெளியே வந்திருந்த அட்வகேட் ப.பா.மோகனின் குரலில் உற்சாகமும் வெற்றிப் பெருமிதமும் தெரிந்தது.

தம்பி சிவசுப்ரமணியம் மேல் போடப்பட்ட ராஜ்குமார் கடத்தல் வழக்கில் பெயில் கேட்டு கோர்ட்டில் நமது அட்வகேட் ப.பா.மோகனுக்கும் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணனுக்கும் முக்கால் மணிநேரம் கடுமையான வாக்குவாதம்.

""அட்வகேட் ப.பா.மோகனின் குரல் வழக்கம் போல் ஓங்கி ஒலித்தது. ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சிவாவை கைது செய்து 63 நாட்களாகி விட்டது. இதுவரை அவரையோ நக்கீரனையோ சம்பந்தப்படுத்தி எந்த ஆதாரத்தையும் அரசுத் தரப்பால் எடுக்க முடியலை. சத்தியமங்கலம் கோர்ட் டில் கஸ்டடி ரிஜெக்ட்டானதால அரசுத்தரப்பு, உயர்நீதிமன்றத்திற்குப் போனது. அங்கே 2 நாள் கோர்ட் காம்பஸில் விசாரிப்பதற்கு பல நிபந்தனைகளோடு அனுமதி கொடுத்தாங்க. அந்த விசாரணையும் முடிந்துவிட்டது. அதற்கப்புறம் நக்கீரன் ஆசிரியரை ராஜ்குமார் கடத்தல் வழக்குங்கிற பேரில் கோபி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 10 நாள் விசாரித்து, சம்பந்தமில்லாத கேள்விகளையெல்லாம் கேட்டாங்க. வழக்கிற்கு தொடர்பேயில்லாத அதிகாரிகளெல்லாம் விசாரித்தாங்க. அந்த விசாரணையும் முடிந்துவிட்டது. வீடியோ பதிவுடன் நடந்த அந்த விசாரணையிலும் அரசாங்கத்துக்கு எந்த ஆவணமும் கிடைக்கலை. சிவா வீட்டில் ரெய்டு, அவரோட ஸ்டுடியோவில் ரெய்டுன்னு குடும்பத்துப் பெண்களையெல்லாம் டார்ச்சர் பண்ணியும் எந்த ஆதாரத்தையும் காட்ட முடியலை. வேண்டுமென்றே, பழிவாங்கும் நோக்கத் தோடு அரசாங்கம் செயல்படுவதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். உண்மையிலேயே இந்த கடத்தல் விவகாரத்தில் நக்கீரனுக்குத் தொடர் பிருப்பதாக அரசுத்தரப்பு நம்பினால் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும்''

-உரத்த குரலில் அட்வகேட் ப.பா.மோகன் வாதம் வைக்க, ""கையில் எந்த ஆவணமோ, ஆதாரமோ இல்லாமல் எப்படி வாதாடுவது'' என்ற யோசனையுடன், "நாகப்பா 164 வாக்குமூலம்...' என்று பி.பி. இழுக்க, நமது அட்வகேட் விடுவதாக இல்லை.

""நாகப்பா என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர் கொடுத்த 164 ஸ்டேட்மென்ட்டே தவறானது. கடத்தல் நடந்து பேச்சுவார்த்தையின் பொழுது காட்டிலிருந்து தப்பி வந்த நாகப்பா பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகு அவரை துன்புறுத்தியோ அல்லது ஆசை காட்டியோ வாங்கிய எந்த 164 ஸ்டேட்மெண்ட்டும் செல்லாது'' என்றார்.

-மீண்டும் ப.பா.மோகனின் வாதங்கள், அரசு வழக்கறிஞ ருக்கு டென்ஷன் தருவதாகவே அமைந்தது. அதனால் பதட்ட மான பி.பி. சங்கரநாராயணன், ""ராஜ்குமார் மீட்பு முயற்சியின் போது 40 கோடி ரூபாய் கை மாறியிருக்குது. அதில் 10 கோடி ரூபாயை ராஜ்குமாரின் மகன்கள் இருவரும் நேரிலேயே நக்கீரன் கோபாலிடம் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்கள்'' என்ற அபாண்டத்தை தன்னுடைய வாதமாக வைத்தார்.

துடித்தெழுந்தார் நமது அட்வகேட் ப.பா.மோகன். நீதிபதி தமிழ்வாணனைப் பார்த்து, ""யுவர் ஆனர்... பி.பி. சொன்னதை அவசியம் நீங்க ரெகார்டு செய்யணும்.''

பதறிப்போன பி.பி, ""நோ.. நோ..நோ... இதை ரெகார்டு செய்யாதீங்க யுவர் ஆனர்'' - தான் சொன்னதை நீதிபதி பதிவு செய்துவிடக்கூடாது எனப் பரிதவித்தார் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன்.

ப.பா.மோகன் ஏன் நீதி பதியைப் பார்த்து பி.பி. சொன்னதை ரெகார்டு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் என்பது எல்லோருக்கும் இருக்குற கேள்வி.

பூனைக்குட்டி மறுபடியும் மறுபடியும் வெளியே வந்து கொண்டே இருக்கிறது என்ற கதை, எங்கப்பன் குதிருக்குள் இல்லங்கற கதை, திருடனுக்கு தேள் கொட்டுன கதை இப்படி எக்கச்சக்கமா ஆகிப் போனதால் அரசு தரப்பு பதறியது கார ணம்...





நக்கீரன் மீது ஏற்கனவே இவர்கள் என்ன என்ன வழக்கு களை போடலாம், எப்படி எல்லாம் வழக்குகளை புனையலாம் என்று திட்டமிட்டு அந்த திட்ட மிடலுக்கு ஏற்ப ஆவ ணங்களையும் சாட்சி யங்களையும் ஜோடிக்க நினைத்தனர். ஒரு வழக்கில் சட்டப்படி புலனாய்வு செய்துதான் இறுதியில் ஒருவர் குற்றவாளியா, இல் லையா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். இங்கே முன்கூட்டியே 10 கோடி ரூபாய் கைமாறியது என்று இவர்களாக எந்த ஆதாரமும் இல் லாமல் முடிவு செய்து கொண்டு புலனாய்வை கொண்டு செல்வது. அதற்கேற்ப பொய் சாட்சிகளை புனைந்து ஒரேயடியாக எதிரி களை சமாதி கட்டுவது.

இதன் காரண மாகத்தான் ப.பா. மோகன் இதை ரெகார்டு செய்யும்படி நீதிபதியை வேண்டி னார். ஏற்கனவே கோடி கள் கைமாறியது பற்றி யாரேனும் கொடுத்த புகாரோ அல்லது அது சம்பந்தமான வாக்குமூலங்களோ இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இதுநாள் வரை இல்லை. யாரும் லட்சங்களோ, கோடிகளோ எங்கள் மூலமாக கொடுத்ததாக சொன்னதுமில்லை, புகாராக எழுத்து மூலம் கொடுக்கவுமில்லை. நீதிமன்றத்தில் அதற்காக தடயங்களை சமர்ப்பிக்கவும் இல்லை. அப்படி இருந்தும் பி.பி. 40 கோடி அதில் 10 கோடி என்று முன்பு அவர்கள் ரூம் போட்டு திட்டமிட்டதை அவர் அறியாமல் வெளியே சொன்னதுதான் பூனைக்குட்டி வெளியில் வந்த கதை.

நீதிபதி அவரை ஒரு பார்வை பார்த்தார். அதன் அர்த்தம், நீங்கள் சொன்னதைத்தானே எதிர்த்தரப்பு வழக்கறிஞர் பதிவு செய்யச் சொல்கிறார் என்பது போல இருந்தது. பி.பி.யால் எதுவும் சொல்லமுடியவில்லை.

தடுமாற்றத்துக்குள்ளான பி.பி..., ""யுவர் ஆனர், இதை ரெகார்டு செய்வதால் உடனே பத்திரிகையில் இது செய்தியாக வெளியாகிவிடும். டி.வி.யிலும் ஒளிபரப்பி விடுவார்கள். அது இன்வெஸ்டிகேஷனுக்கு இடையூறாக அமையும். அதனால்தான் ரெகார்டு செய்யக்கூடாது என வலியுறுத்துகிறேன்'' என்றார். எங்கே நக்கீரனை பழிவாங்க அரசாங்கம் போட்ட திட்டம் வெளியே தெரிஞ்சுடுச்சோன்னு பி.பி. கிடந்து தவிக்கிற தவிப்ப கோர்ட்டே பார்த்தது.

குறுக்கிட்ட நமது அட்வகேட் ப.பா.மோகன், ""பத்திரிகைகளில் போடக்கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. ஓப்பன் கோர்ட்டில் நடக்கும் விஷயங்களை வெளி யிடுவதற்கும் ஒளி பரப்புவதற்கும் அவர் களுக்கு உரிமை இருக்கிறது. பட்ங்ஹ் ட்ஹஸ்ங் ற்ட்ங் ழ்ண்ஞ்ட்ற் ற்ர் ல்ன்க்ஷப்ண்ள்ட் ண்ற்'' என்றார். மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் சட்டப்போராளி அல்லவா அவர்! அதிரடிப் படையினரால் அவதிக்குள் ளான மலைவாழ் மக்களின் கொடுமைகளை நம்மோடு சேர்ந்து வெளிக் கொண்டுவந்ததில் முன்னணியில் நின்றவர். கருத்து சுதந் திரத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அதனால்தான் பி.பிக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார்.

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள், கோர்ட் வளாகத்தில் திரண்டிருந்தனர். எல்லா டி.வி. சேனல்களின் நிருபர்களும் இருந்தனர். பி.பி. சொன்னதை எல்லோரும் குறித்துக் கொண்டனர். அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார் அரசு வழக்கறிஞர்.

நீதிபதி தமிழ்வாணன் அரசாங்கம் போட்ட வழக்குகளின் தன்மையை நன்கு உணர்ந்து அன்றே அடுத்ததாக வந்த கந்தவேலு கொலை வழக்கில் தம்பி ஜீவாவுக்கும், தம்பி பாலுவுக்கும் முன்ஜாமீன் வழங்கினார்.

கோர்ட்டில் நடந்த விவரங்களை போனில் நம்மிடம் பகிர்ந்துகொண்ட ப.பா.மோகன், ""சார்... ராஜ்குமார் கடத்தல் தொடர்பா நக்கீரனை சம்பந்தப் படுத்தி நாகப்பா ஏதாவது சொல்லியிருக்காரான்னு உறுதிப்படுத்திக்கணும்.''

""அதுதான் நாகப்பாவிடம் 164 வாக்குமூலம் வாங்குனது செல்லாது என்றாகி விட்டதே அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை சார்.''

""வேற யாரையாவது சொல்ல வச்சிருக்காங்களா?''

""அப்படி யாரும் வாக்குமூலம் கொடுக்கலீங்க சார்.. ஆனா, இனிமே யார்கிட்டேயாவது வற்புறுத்தி வாங்க முடியுமா?''

""பழைய தேதியைப் போட்டு ஸ்டேட்மெண்ட் வாங்குவதற்கு வாய்ப்பிருக்குது. ஆனா, வழக்கின் தன்மையை ஜட்ஜ் அறிந்திருப்பதால் அதை ஏற்க மாட்டார்.''

-நம்பிக்கையாகச் சொன்னார் அட்வகேட் ப.பா.மோகன். அவர் என்னுடன் பேசிக் கொண்டி ருக்கும்போதே எனக்கொரு யோசனை.

ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, உயிரைப் பணயம் வைத்து நக்கீரன் தனது தூதுப் படலத்தை மேற் கொண்டிருந்தது. அரசியல் காழ்ப்புணர்வாலும், பத்திரிகையுலகப் போட்டியினாலும் சில துரோகிகளும் வயிற்றெரிச்சல்காரர்களும் அதிகார பிச்சைக்கு ஏங்குறவர்களும் இன்னும் நெறைய பேர்களால்... நக்கீரனுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த மிஷனில் ராஜ்குமார் உயிருக்கு எப்படியாவது ஆபத்தை வரவழைத்து, 1 லட்சம் பேரை சாகடித்து, அதன் மூலமாக இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் செய்ய துடித்த அரசியல் அன்னகாவடிகளும் நம்மை காலிபண்ண கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தனர். ராஜ்குமார் மகன்களின் பெயரைப் பயன்படுத்தி 40 கோடி, 50 கோடி என விஷமப் பிரச்சாரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.

மீட்பு முயற்சியில் தனிப்பட்ட அக்கறை செலுத்தி, தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் எந்தவித உரசல்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனத்துடன் இரு தரப்பிலும் பேசிக்கொண்டிருந்தவர் ரஜினி. ராஜ்குமாரை எப்படியாவது மீட்டு வந்துவிடவேண்டும் என்பது தான் நமக்கும் அவருக்கும் ஒரே இலக்காக இருந்தது. ஆனால், மீட்பு முயற்சிக்கு குந்தகம் விளை விக்கும் வகையில் பொய்ப்பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருப்பதையும், ராஜ்குமார் மகன்களின் பெயர்களை அதில் இழுப்பதையும், இதுபற்றி அவர் களும் எதுவும் பேசாமல் இருப்பதையும் ரஜினியிடம் வருத்தத்துடன் தெரிவித்தேன்.

ரஜினி பதறிவிட்டார்.

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment