Saturday, July 3, 2010

யுத்தம் 67 -நக்கீரன் கோபால்


shockan.blogspot.com

ஒரு பெரும் திட்டத்தோடு போலீசார் செயல்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அதனை எதிர்கொள்ளும் வகையில் நாமும் நமது வழக்கறிஞர் டீமும் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தோம். என் நினைவுகள் 9 நாட்களும் எதிர்கொண்ட விசாரணை யுத்தத்தை நினைத்துப் பார்த்தது.

டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் அத்தனை இன்ஸ்பெக்டர்களும் விசாரணைக்காக குவிந்திருந்ததற்கு காரணம், நக்கீரனை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். ராஜ்குமார் கடத்தப்பட்டது தொடர்பான விசாரணைக்காகத்தான் கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த வழக்கின் விசாரணை அதிகாரி, லட்சுமணசாமி. ஆனால், அவரோடு இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்ரமணியம், மணிரத்னம் ஆகியோரும் விசாரணை யில் உடனிருந்தனர். இவர்கள் போதா தென்று கோபால்சாமி, கோவிந்த ராஜன் ஆகிய இன்ஸ்பெக்டர்களும் அடிக்கடி விசாரித்தனர். சம்பந்தமே யில்லாமல் இன்ஸ்பெக்டர் மோகன் நிவாசும் வந்து சென்றார்.

எதற்காக இத்தனை இன்ஸ்பெக் டர்கள்? இவர்கள் பொறுப்பில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் வீரப்பன் தொடர்பான வழக்குகள் பதிவாகியிருக் கின்றன. ராஜ்குமார் கடத்தல் வழக்கில் சிக்க வைப்பதற்கான பொய்சாட்சியங்கள் எதுவும் சரிப்படாவிட்டால், வீரப் பன் மேல் போடப்பட்டுள்ள மற்ற வழக்குகளில் என்னை கைது செய்தாக வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டம். ஏற்கனவே, தம்பி சிவ சுப்ரமணியன் மீது இப்படித்தான் வீரப்பன் தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் போட்டு, அவரை சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் செய்வதில் கர்நாடக-தமிழகப் போலீசார் கைகோர்த்து செயல்பட்டுக் கொண்டிருந்தார் கள். சிவாவைப் போலவே என்னையும் சிறைக்கம்பிகளுக் குப் பின்னால் தள்ள முடியுமா என்றுதான் இத்தனை இன்ஸ்பெக்டர்கள் சுற்றி நின்று விசாரித்தார்கள். 9 நாட்கள் விசாரணையைக் கடந்த நிலையில், 10-ஆம் நாள் விசாரணை முடிவில் என்னைக் கைது செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எல்லாத் தரப்பிலும் இருந்தது.

போலீசாரின் திட்டம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனென்றால், அவர்கள் சட்டத்தின்படி விசாரணையை நடத்தவில்லை. மேலிடத்திலிருந்து வரும் உத்தரவின்படிதான் விசாரணையின் போக்கு போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொன்றையும் நாம் சட்டரீதியாக எதிர்கொண்டு வந்தோம். ஒவ்வொரு நாள் விசாரணையையும் அபிடவிட்டாக கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தோம். அதுபோலவே, சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை முழுமையாக கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஆலோ சனையும் நமது வழக்கறிஞர்கள் தரப்பில் நடந்தது.

ஈரோட்டில் ஒரு வழக்கறி ஞர் டீமும், சென்னையில் தம்பி காமராஜ், அட்வகேட் பெருமாள், தம்பி சிவக்குமார் ஆகியோர் அடங்கிய டீம் சீனியர் கே.எஸ். ஸிடமும் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவிடமும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தது.

""ராஜ்குமார் அப்டக்ஷன் கேஸை சி.பி.ஐ. விசாரிக்கணும்னு சுப்ரீம்கோர்ட்டில் ஃபைல் பண்ணியிருக்கோமே.. அந்த கேஸில் இந்த வீடியோ ஆதாரத்தை ஒப்படைக்கணும்னு கேட்டு பெட்டிஷன் போடலாம்'' அது தான் சரியாக இருக்கும்.

-வழக்கறிஞர்கள் தரப் பில் இப்படியொரு ஆலோசனை நடந்தது. அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 29-ந் தேதி யுடன் 10 நாள் விசாரணை முடிகிறது. அன்றைக்கு சனிக்கிழமை என்பதால், முதல்நாளே சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி விசா ரணையின் கடைசிநாளில் என்னைக் கைது செய்ய போலீசார் சதித்திட்டம் தீட்டினால், இந்த மனு மீதான விசாரணையின்போது, போலீசாரின் நடவடிக்கைகள் பற்றி முறையிடுவதற்கும் நம் வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். ஆனால், வழக்கு விசாரணையை அடுத்த 3-ந் தேதிக்கு தள்ளிவைத்துவிட்டது சுப்ரீம் கோர்ட். சட்டரீதியான நமது போராட்டத்திற்கு நீதிமன்றத்தின் கதவு, சனிக்கிழமையில் திறக்கவில்லை. போலீசாரோ சட்டத்திற்குப் புறம்பாக எப்படிக் கைது செய்து, எங்கே கொண்டு செல்லலாம் என்று இரண்டு, மூன்று வேன்களை நிறுத்தி கதவுகளைத் திறந்து வைத்திருந்தார்கள்.

வழக்கறிஞர் ப.பா.மோகன் ரொம்பவும் பதட்டமாக இருந்தார். ஏதோ ஒரு திட்டத்தோடு போலீசார் இருக்கிறார்கள் என்பதை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரோடு அவரது ஜூனியர்கள் சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் இருந்தார்கள்.

""சார்... 9 நாளும் விசாரணையை பார்த்லி தாச்சு. நாளைக்கு நான் போய்ப் பார்க்கிறேன். என்ன சூழல்ங்கிறதை சிக்னல் மூலமா உணர்த்துறேன்'' என்றேன்.

""என்ன சிக்னல்?''

""சரியா பனிரெண்டரை மணிக்கு நான் ஜூஸ் கேட்டு எழுந்து நிற்பேன்.''

""நின்னா?''

""தலைவலியாவும் டயர்டாவும் இருக்கு. அதற்கு ஏதாவது தெம்பா சாப்பிட ணும். ஜூஸ் வேணும்னு கேட்பேன். அவங்க போய் வாங்கிட்டு வருவதை ஒத்துக்க மாட்டேன். நம்ம டிரைவர் மோகனைக் கூப்பிடச் சொல்வேன்.''

""சரி...''

""அப்படி நான் எழுந்து நின்று, மோகனைக் கூப்பிட்டால், உள்ளே எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு அர்த்தம். இதுதான் என்னோட சிக்னல். ஒருவேளை, அந்த டயத்துக்கு நான் எழுந்து நிற்கலைன்னா, வேற விதமான சூழல் இருக்குன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டு, சட்டரீதியா என்ன நடவடிக்கைகளை எடுக்கணுமோ அதைச் செய்யுங்க.''

""இது நல்ல ஐடியாதான்'' என்றார் ப.பா.மோகன்.

""சிக்னல் சரியாகவே இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன'' என்ற கேள்வி வந்தது.

""அப்பவும் நாம போலீஸை முழுசா நம்பிட முடியாதுங்க சார்... எச்சரிக்கையாகத்தான் இருக்க ணும். வெளியிலே கோபி நண்பர் நடுமச்சியின் ஸ்ரீபாலாஜி மெட்டல்ஸ்ங்கிற கம்பெனி உள்ளே மூணு கார் வெயிட் பண்ணணும். ஒரு கார் கோயம்புத்தூர் ரூட் டுல போகணும். இன்னொரு கார் மதுரைக்கு. மூணாவது கார், பவானி வழியா சென்னைக்குப் போகணும். எந்தக் காரில் போறேன்ங்கிறது போலீசுக்குத் தெரியக் கூடாது. அவங்க குழம்பிடுவாங்க. ஃபாலோ பண்ணுறது கஷ்டம். நான் எந்த ரூட்டிலாவது போயிடுவேன்.''

""இது நல்ல ஐடியாதான்'' என்றனர். நமது ஈரோடு முகவர் பெரியசாமி ஒரு கார், கோவை முகவர் வெங்கடாச்சலம் ஒரு கார், அப்பாவோட கார் என 3 கார்களும் ஏற்பாடாயின.

29-ந் தேதி. பதட்டம் நிரம்பிய எதிர்பார்ப்போடு அன்றைய பொழுது விடிந்தது. எது நடந்தாலும் எதிர் கொள்வது என்ற மனதிடத்துடன் நான் விசாரணைக்குத் தயாராகிக் கொண்டி ருந்தேன். சி.பி.சி.ஐ.டி அலுவலக வளாகத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள், நக்கீரன் வாசகர்கள், நமது நலன் விரும்பிகள் காலையிலேயே காத்திருந்தார்கள். கோபியில் நிலவிய பதட்டம், சென்னை அலுவலகத்திலும் தொடர்ந்தபடியே இருந்தது.

""நான் பெரம்பலூரிலேயிருந்து வாசகர் பேசுறேங்க. ஆசிரியரை இன்னைக்கு கைது செய்யப் போறதா சொல்லிக்கிறாங்க. அப்படிங்களா? இந்த அநியாயத்தை சும்மா விடக் கூடாதுங்க. நாங்க எப்பவும் நக்கீரன் பக்கம்தான் நிற்போம்.''

""ஹலோ.. நக்கீரன் ஆபீசுங்களா, நான் பழனியிலிருந்து பேசுறேன். ஏதாவது நியூஸ் உண்டுங்களா?''

""என்ன நியூஸ்?''

""ஆசிரியரைப் பற்றி..''

""அவர் கோபியில் இருக்காருங்க.''

""நிருபரு சிவசுப்ரமணியத்தை அரெஸ்ட் செஞ்சதுபோல, நம்ம ஆசிரியரையும் செய்யப்போறதா பேசிக்கிட்டாங்க. அதுதாங்க கேட்டேன்.''

""அப்படி எந்த தகவலும் இல்லீங்க.''

-சென்னையிலிருந்தும் வெளியூரிலிருந் தும் போன்கால்கள் வந்தபடியே இருக்க, வாசகர்களுக்கு நக்கீரன் தம்பிகள் தைரிய மூட்டும் பதிலைச் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

கோபி சி.பி.சி.ஐ.டி அலுவலக வாசல். முன்பக்கம், பின்பக்கம் என்று எல்லா பக்கங் களிலும் முன்பு சொன்னது போல் போலீஸ் வேன் நிற்கிறது. ரொம்பவும் எதிர்பார்ப்போடு பத்திரிகை நண்பர்கள் காத்திருந்தார்கள். தினமணி குமார், தினகரன் கணேசன், தினமலர் சம்பத்-ரமணி, தினத்தந்தி விஸ்வநாதன், காலைக்கதிர் தேவராஜ், மாலைமலர் ராகவன், சன் டி.வி. சிவா எல்லோரும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். தினமும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்துவிடும் நமது ஈரோடு முகவர் பெரியசாமி, கோபி முகவர் தேவராஜ் இருவரும் ஒருவித கலக்கத்தோடு இருந்தார்கள். என்ன நடக்குமோ என்கிற பதட்டம் நம் மீது அக்கறை கொண்ட எல்லோருக்கும் இருந்ததால்தான் அந்தப் பதட்டம்.

சென்னை அலுவலகத்திலும் அதே நிலைமை தான். அலுவலகத்தில் உள்ள தம்பிகள் போன் செய்து, என்ன நிலவரம் என்று தம்பி ஜீவாவிடம் கேட்க அவர் சும்மா இல்லாம, போலீஸ் ஜீப்புகள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதையும், போலீசார் வழக்கத்தைவிட அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதையும் சொல்ல, பதட்டம் இன்னும் அதிகமானது. போலீஸ் உயரதிகாரிகளின் அலுவலகங்களிலிருந்து கசிந்த தகவல்களும் என்னைக் கைது செய்யப் போவதாகவே கசிந்தன.

சி.பி.சி.ஐ.டி அலுவலக வாசலில் இருந்த நக்கீரன் தம்பிகள், சக பத்திரிகையாளர்கள், நம் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரிடமும், வெற்றி என்பது போல விரலால் சிக்னல் கொடுத்துவிட்டு விசா ரணைக்காக உள்ளே போகிறேன். வெளியே நமது அட்வகேட் ப.பா.மோகன் படுடென்ஷனாக இருக் கிறார். சி.பி.சி.ஐ.டி ஆபீஸ் கேட்டை பிடித்து ஆட்டியபடி, போலீசாரிடம் கடும்வாக்குவாதம் செய்து ரணகளப்படுத்திக்கொண்டிருந்தார்.

அலுவலகத்திற்குள் பி.பி. (அரசு வழக்கறிஞர்) ஒருவர் இருந்ததுதான் அவரது ஆவேசத்திற்கு காரணம். போலீஸ் விசாரணை நடக்கும் இடத்தில் அரசு வக்கீல் ஏன் நுழைந்தார். அப்படியென்றால், அவர்கள் போடும் திட்டம் என்ன?

-யுத்தம் தொடரும்

No comments:

Post a Comment