Sunday, July 11, 2010

யுத்தம் 69 -நக்கீரன் கோபால்


இன்ஸ்பெக்டர் கோபால்சாமி கட்டுக் கட்டாக ஃபைல் களைத் தூக்கிக்கொண்டு வந்தார். அந்த ஃபைல்களை என் முன் இருந்த மேஜையில் வைத்தார். என் முகத்தை மறைக்கும் அளவுக்கு இருந்தது ஃபைல்களின் மொத்த உயரம். டி.எஸ்.பி. முகத்தில் லேசான புன்னகை. அவர்தான் கந்தவேலு கொலை வழக்கின் விசாரணை அதிகாரி.

மாணவன் பக்தவத்சலத்துக்கு முன்பாக வீரப்பனால் கொல்லப்பட்டவர் கந்தவேலு. பக்தவத்சலம் கொலை வழக்கு பற்றி நம்மிடம் தேவையில்லாமல் போலீசார் துருவித் துருவி விசாரித்தார்கள். ஆனால், என்னை சிக்கவைப்பதற்கான எந்தப் பிடிமானமும் கிடைக்காததால், கந்தவேலு விவகாரம் சம்பந்தமான ஃபைல்களை திடுமெனக் கொண்டு வந்தார்கள்.

""கந்தவேலை ஏன் கொன்னான்?'' -டி.எஸ்.பி. நாகராஜன் கேட்டார்.

""யாரு...''

""வீரப்பன்....'' -டி.எஸ்.பி.

""ஏன் கொன்னான்னு வீரப்பன்ட்டதாங்க கேட்கணும். ஏன்ட்ட கேட்டா...'' என்றேன்.

கேள்வியின் தொனி மாறியிருந்தது. பக்தவத்சலம் கொலை வழக்கு விசாரணையின் போது, நக்கீரன் மீதே கொலைப்பழி சுமத்துவதுபோல கேள்விகள் இருந்தன. கந்தவேலு பற்றி விசாரிக்கும்போது, அப்படியே மாற்றி எடக்கு மடக்கா கேள்வி....

போலீஸ் இன்பார்மர் என்பதுதான் கந்தவேலு மீது வீரப்பனுக்கு இருந்த சந்தேகம்னு டேப்புல சொல்லியிருந்தான்.. வீரப்பனின் வலதுகரமாக இருந்தவன் பேபிவீரப்பன். உறவினனான அவன் அடிக்கடி வீரப்பனிடம் சண்டை போட்டுக்கொண்டு, காட்டுக்குள்ளேயே இன்னொரு பகுதிக்குப்போய், தனியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பான். கொஞ்ச நாள் கழித்து, சமாதான மாகித் திரும்பி வருவான். வீரப்பன் மீண்டும் தன்னுடன் சேர்த்துக்கொள் வான். இது அடிக்கடி நடக்கும்.



வீரப்பனைப் போலவே பேபி வீரப்பனையும் போலீஸ் பொறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தது. இந்த நிலைமையில்தான் வீரப்பனிடம் கோபித்துக்கொண்டு பேபி மீண்டும் தனியாக காட்டில் சுற்றிக் கொண் டிருக்கிறான் என்பதை போலீசார் மோப்பம் பிடித் திருக்கிறார்கள். தனியாக இருக்கும் பேபியைத் தீர்த் துக் கட்டும் அசைன்மென்ட் டை இன்ஃபார்மரான கந்த வேலுவிடம் ஒப்படைத்தார் களாம். கொடுத்த அசைன்மென்ட்டை சரியாக நிறைவேற்றி முக்கிய தளபதியான பேபி வீரப்பனின் கதையை முடித்தது கந்தவேலுதான் என்று வீரப்பனை நம்ப வைத்துள்ள னர். இந்தத் தகவல் வீரப்பனுக்குத் தெரியவந்ததும் அவன் தன் ஆட்கள் மூலம் நயமாகப் பேசி, கந்தவேலுவை தன் இடத் துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக் கிறான். வந்ததும், கந்தவேலுவை அடித்து, கைகளைப் பின்புறமாகக் கட்டி, மண்டியிட வைத்து என்ன நடந்தது என விசாரித்திருக் கிறான் வீரப்பன். கடைசியில் சேத்துக்குளி கோவிந்தனிடம், கந்தவேலுவை சுட்டுக்கொல் லச் சொல்ல, அதை அப்படியே புகைப்படமாக பக்தவத்சலம் கொண்டு சென்ற கேமராவால் படம் பிடித்தும் விசாரணையை டேப்பில் பதிவு செய்தும் உள்ளனர். கந்தவேலுவை கட்டிப்போட்டு விசாரிப்பது தொடர்பான படங்களும் ஆடியோ கேசட்டும் நக்கீரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அவைகளை பார்த்தும் கேட்டும் அதிர்ச்சியடைந்தோம்.

வீரப்பன் மீண்டும் மிருகமாகிவிட்டான் என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்தும் விதத்தில், ""வீரப்பன் கோர்ட்டில் விசாரணை- ஆள்காட்டிக்கு மரண தண்டனை'' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். காட்டுக்குள் புதைந் திருந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்காகத்தான் கந்தவேலு வழக்கில் நக்கீரனையும் விசாரிக்கத் தொடங்கியது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். அதாவது கொடுமையை வெளியில் கொண்டு வந்ததற்கு பரிசுதான் இது.

""எப்போதும் அப்படித்தானே...'' ஆன்மீகப் போர்வை போர்த்திக்கொண்ட நித்யானந்தர், நடிகை ரஞ்சிதாவுடன் மோன நிலையில் இருந்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது நக்கீரன். ஆன்மீகம் என்ற பெயரில் நித்யானந்தர் செய்த அக்கிரமத்தைப் பற்றிப் பேசாமல் இதையெல்லாம் பத்திரிகை யில் வெளியிடலாமா? கூடாதா? என்று விவா தங்கள் நடப்பதைப்போலத்தான், கந்தவேலு வை சுட்டுக்கொன்ற வீரப்பன் தரப்பை பிடிக்க வழியில்லாமல், அதனை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நக்கீரனுக்கு விசா ரணைக் குடைச்சல் கொடுத்தது போலீஸ்.

கந்தவேலு கொலை பற்றிய ஆடியோவும் ஃபோட்டோவும் நக்கீரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்து தகவல் தெரி வித்தோம். மடியில் கனம் இருந்தால்தானே, வழியில் பயப்படவேண்டும். ஃபைல்களை அடுக்கிவைத்துக்கொண்டு போலீசார் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர்களைவிட வேகமாக என்னிடமிருந்து பதில் வெளிப்பட்டது. அடுக்கிவைக்கப் பட்ட ஃபைல்கள் சரிவதுபோல, அவர்களின் பொய்க்குற்றச்சாட்டுகள் சரிந்தன. இந்தப் பொய் வழக்கை வைத்தும் கைதுக்கான வலையைப் பின்ன முடியாது என்பதை போலீசார் புரிந்து கொண்டார்கள். டி.எஸ்.பி. உள்பட எந்த அதிகாரியின் முகத்திலும் ஈயாடவில்லை. இறுக்கமாக இருந்தார்கள்.

சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தின் வாசலில் என்னை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் அத்தனை பேர் முகத்திலும் பதட்டம். அது மகிழ்ச்சியாக மாறப் போகிறதா, சோகமாகப் போகிறதா என்பதைத் தீர்மானிப்பதற்காக கடிகாரத்தின் முள் சுழன்று கொண்டிருந்தது.

சரியாக 3 மணி.


விசாரணை முடிவடையும் நேரம். வழக்கம்போல் கையெழுத்துப் போட்ட நான், விருட்டென எழுந்தேன். போலீசாரின் உத்தரவுக்காக காத்திருக்காமல் வாசலை நோக்கி அடியெடுத்துவைத்தேன். வெளியி லிருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருந்த நமது அட்வகேட் ப.பா.மோகன், கேட்டைத் தள்ளிவிட்டு ஓடி வந்தார். அவர் பின்னால் இருந்த நக்கீரன் தம்பிகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் உற்சாக குரல்.

உள்ளே வந்த ப.பா.மோகன், ""பி.பி. வந்தாரா? என்ன செஞ்சார்? உங்ககிட்டே ஏதாவது கேட்டாரா?'' -கேள்விகளை அடுக்கியபடியே இருந்தார். சார்.. ""பி.பி. இங்கே வந்து, உள்ளே உள்ள ரூமில் அதிகாரிகளோடு பேசிக்கிட்டிருந்தார். என்கிட்டே எதுவும் கேட்கலை.''

அதானே.. என்பதுபோல அவரது பார்வை இருந்தது. சட்டத் திற்குப் புறம்பான எந்த ஒன்றையும் அனுமதிப்பதில்லை என்பதில் அவர் கருப்புக் கோட் அணிந்த போராளி. அதனால்தான் அத்தனை சத்தியாவேசத்துடன் கேட்டார். நமக்காக வாதாடும், இல்லை போராடும் வழக்கறிஞர்கள் அனைவரும் இதே வகைதான்.

விசாரணை முடிந்து நான் வெளியே வருகிறேன். முதலில் கண்ணில் பட்டது அப்பாவின் டிரைவர் கணேசன். அந்தத் தம்பி கண்ணில்தான் எத்தனைப் பரவசம். அதையடுத்து, தம்பிகள் மோகன், ஜீவா, குண்டு பூபதி, முகவர்கள் தேவராஜ், பெரியசாமி, ஜூனியர் வழக்கறிஞர்கள் அனைவ ரையும் பார்க்கிறேன். எல்லோரிடமும் அதே பரவசம். பகலில் நட்சத்திரங் கள் மின்னுவதுபோல அப்படியொரு பிரகாசம் எல்லோர் முகத்திலும். பத்திரிகை சகோதரர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள்.

10 நாளும் செய்தி சேகரிப்பி லும் அதை வெளியிடுவதிலும் அவர்கள் காட்டிய அக்கறை மனதி லேயே நின்றது. நன்றி சொன்னேன். அவர்கள் கைகுலுக்கினார்கள். உடனடியாக நம் அலுவலகத்திற்கு போன் செய்து, தம்பிகளிடம் பேசினேன். "அண்ணே...வெற்றி... வெற்றி..' என்ற குரல்கள் தம்பி களிடமிருந்து தொடர்ந்து கேட்டது.

சி.பி.சி.ஐ.டி அலுவலகத் தைச் சுற்றிலும் போலீஸ் வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. நடுமச்சி கம்பெனியிலிருந்து புறப்பட்ட அந்த 3 கார்களில் ஒன்று மதுரைக் கும் மற்றொன்று கோவைக்கும் கிளம்ப, பவானிக்குப் புறப்பட்ட வண்டியில் யாருக்கும் தெரியாத வகையில் நான், வழக்கறிஞர் ப.பா.மோகன், ஜீவா, குண்டு பூபதி ஆகியோர் புறப்பட்டோம்.

பவானியில் ப.பா.மோகன் சார் வீட்டில்தான் மதிய சாப்பாடு. அவரது துணைவியார் வினி அக்கா சாப்பாட்டை ரெடியாக வைத்திருந்தார். ""அக்கா.. சாப்பாட்டைப் போடுங்க'' என்றேன். நல்ல சோறு. பொறுக்கச் சாப்பிட்டேன். விசாரணை நடந்த நாட்களில் இப்படி பொறுமையாகவும் நிறைவாகவும் சாப்பிட்டதில்லை.

அங்கிருந்து புறப்படும்போது, அப்பாவிடமிருந்து போன். அவர் குரலில் அத்தனை தெம்பு தெரிந்தது. தம்பிகள் காமராஜ், குரு, பெருசு, சுரேஷ், லெனின், பிரான்சிஸ், ஆனந்த், கௌரி, சந்திரமோகன், பிரகாஷ், இளையர் மற்றும் அலுவலகத்திலுள்ள அனைத்து தம்பிகளும் லைனில் வந்தார்கள். போலீசாரின் பிடியில் சிக்காமல் நக்கீரன் மீண்டது பற்றி பிரஸ்ஸில் பேசிக்கொள்வதைத் தெரிவித்தார்கள். தம்பி லெனினுடைய அப்பா கோவிந்தராஜன் திருவாரூரிலிருந்து பேசினார். ஐயா சின்னக்குத்தூசி, தோழர் நல்லகண்ணு, சங்கொலி ஆசிரியர் க.திருநாவுக்கரசு வாழ்த்துச் சொன்னார்கள்.

எழுத்தாளரும் இயக்குநருமான திருவாரூர்பாபுவின் அப்பா இரா.விஸ்வ நாதன் தொடர்புகொண்டு, வெற்றிகரமாக விசாரணையை எதிர்கொண்டதற்கு வாழ்த்தும், நெருக்கடியான விசாரணை நாட்களுக்காக வருத்தமும் தெரிவித்தார். எல்லாத் தரப்பிலிருந்தும் போன்கால்கள் வந்தபடியே இருந்தன. பயண வழியெங்கும் பேசியபடியே வந்தேன்.

இரவு 3 மணி. சென்னை.

வீட்டுக்கு வருகிறேன். என்னைப் பார்த்ததும் அம்மா அழறாங்க.

""உன்னை இவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்காங்களே...'' -அவரது கண்ணீர் நிற்கவில்லை.

நான் அம்மாவை சமாதானப்படுத்தினேன். ""உண்மை நம்ம பக்கம் இருக்கு. அதனாலதான் அவங்களால எதுவும் செய்யமுடியல. நாம ஜெயிக்கணும்னு எவ்வளவோ நல்லவங்க வேண்டிக்கிறாங்கம்மா. யாரும் நம்மள ஒண்ணும் செய்ய முடியாது.''

அம்மா சமாதானமாக வெகுநேரமானது.

30-ந் தேதி. காலை 9.30 மணி.

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அலுவலகம். 10 மணியாகும்போது, விசாரணைக்குப் போவது போன்ற பிரமை. என்னை நானே அதிலிருந்து விடுவித்துக்கொண்டு, தம்பிகளை அழைத்து விசாரணை நாட்களில் நடந்ததை விவரித்துக் கொண்டிருந்தேன்.

மதியம் 3 மணி. விசாரணை முடிந்து கிளம்புவது போன்ற பிரமை. போலீசின் நெருக்குதல் என்பது இயல்பு வாழ்க்கையை எந்தளவுக்கு பாதிக்கிறது என்பது பற்றி எத்தனையோ செய்திக் கட்டுரைகளை நக்கீரன் வெளியிட்டிருக்கிறது.

அதன் அனுபவப்பூர்வமான கசப்புணர்வுகளை நான் அப்போது உணர்ந்துகொண்டிருந்தேன்.

தம்பி காமராஜ் பரபரப்பாக என் அறைக்கு வந்தார்.

""அண்ணே... வைகோவை பொடாவில் கைது செய்ய எல்லா ஏற்பாடுகளையும் அரசாங்கம் ரகசியமா செய்துக்கிட்டிருக்குது. ஜெயலலிதாகிட்டேயிருந்து அறிவிப்பு வரப்போகுது ...''

No comments:

Post a Comment