Saturday, July 31, 2010

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெறுகிறார் சாய்னா நேவால்


டெல்லி: உலகின் நம்பர் 2 பாட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக சாய்னா பாட்மின்டன் விளையாட்டில் சிறந்து விளங்குவதை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் இருந்து இந்த விருதை பெறுகிறார். விருதுடன் ரூ.7.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

இது குறித்து சாய்னா கூறியதாவது:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு நான் தேர்வாகியுள்ளதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தேசிய விருதுகள் என்னைப் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மேலும், தாய்நாட்டுக்காக சாதிக்க உந்து சக்தியாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். அன்மையில் நான் 3 பட்டங்களை வென்றது என் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். அதில் பட்டம் வெல்வேன் என நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு சாய்னா அர்ஜுனா விருது பெற்றார். வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் போட்டியின் 6 தூதர்களில் ஒருவராக சாய்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக தர வரிசை பட்டியலில் சாய்னா தற்போது 2-வது இடத்தில் உள்ளார். கடந்த மார்ச் மாதம் நடந்த இங்கிலாந்து சூப்பர் சீரிஸ் போட்டியின் அரைஇறுதி வரை சென்றார் சாய்னா. அன்மையில் அவர் இந்திய கிராண்ட்பிரீ, சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசிய ஓபன் ஆகிய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment