Friday, July 9, 2010

வேலூர் மண்டலம்! 36 தொகுதி! எந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு?
தமிழகத்தின் அரசியல் சூழலும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அது எப்படி எதிரொலிக்கும் என்பதையும் கடந்த இதழ் முதல் வெளியிட்டு வருகிறது உங்கள் நக்கீரன். வாசகர்களிடமும் அரசியல் மட்டத் திலும் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கும் இந்த கள ஆய்வுகள், தமிழகத்தை 9 மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்தின் நிலவரத்தையும் வழங்கி வருகிறது. கடந்த இதழில் சென்னை மண்டலத்திற் குட்பட்ட 24 தொகுதிகளில் கட்சிகளின் நிலவரம், மக்களின் மனநிலை, முடிவுகளை மாற்றக்கூடிய அடிப்படை பிரச்சினைகள் ஆகியவை வெளியிடப் பட்டன. அத்துடன், மாநிலம் தழுவிய அளவில் நகரங்களிலும் கிராமங்களிலும் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதையும் தெளிவாக அளித்திருந்தோம். இந்த இதழில்....


வேலூர் மண்டலம்
பழைய வடாற்காடு மாவட்டமே வேலூர் மண்டலத்தின் பிரதான பகுதியாகும். அத்துடன், காஞ்சி மாவட்டத்தின் ஒரு பகுதியும் இம்மண்டலத்திற்குள் வருகிறது. குறிப்பாக, பாலாற்றுப் பாசனப் பகுதிக்குட்பட்ட பகுதிகளே இந்த மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் ஆகிய 6 நாடாளுமன்றத் தொகுதிகள் இதனுள் அடங்குகின்றன. இந்த 6 நாடாளுமன்றத் தொகுதி களுக்குட்பட்ட செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர், காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், அரக்கோணம், திருத்தணி, காட்பாடி, சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ்ப் பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி, செஞ்சி, மயிலம், வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 36 சட்டமன்றத் தொகுதிகளும் வேலூர் மண்டலத்திற்குள் வருகின்றன.

இந்த மண்டலத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு பலம், வரைபடத்தின் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.

வேலூர் மண்டலத்திற்குள் அடங்கிய வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களி லும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதி யிலும் கிராமப்புறங்கள் அதிகமிருந்தும் இங்கு அ.தி.மு.க.வைவிட தி.மு.க பலம் மிகுந்ததாக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் குறிப்பிடத்தக்க செல்வாக்குடன் திகழ்கிறது. தி.மு.க.வின் இந்த செல்வாக்கிற்கு காரணம், ஆட்சியின் திட்டங்களும் தி.மு.க வின் மாவட்டப் புள்ளிகளின் தனிப்பட்ட செல்வாக்கும்தான் என்கிறார்கள் வேலூர் மண்டல அரசியல்வாதிகள். அ.தி.மு.க.வின் பலம் வாய்ந்த தலைகளெல்லாம் சோர்வடைந் திருப்பதாகக் கூறும் அவர்கள், திருவண்ணா மலையில் மட்டும் அ.தி.மு.க.வில் 20 கோஷ்டி கள் இருக்கிறது என்கிறார்கள். அ.தி.மு.க.வை பலப்படுத்தும் முயற்சி களை அதன் தலைமை ஒழுங்காக ஒருங்கிணைக்கவில்லை என்ற வருத்தம் அக்கட்சிக்காரர்களிடமே இருப்பதை கள ஆய்வின் போது காண முடிந்தது.

இந்த மண்டலத்தில் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வன்னியர் சமுதாயத்தினரின் வாக்கு பலமே முன்னணியில் உள்ளது. எனினும் பா.ம.க.வின் வாக்குபலம் ஒற்றை இலக்க சதவீதத்திலேயே இருப்பது கள ஆய்வில் ஆச்சரியமளித்த தகவலாகும். வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில தொகுதிகளில் பா.ம.க வலிமையாக உள்ளது. அதே நேரத்தில், திருவண்ணா மலை மாவட்டத்தைப் பொறுத்தவரை வன்னியர்கள் மிகுந்துள்ள பகுதிகளில் 70 சதவீதத்தினர் தி.மு.க ஆதர வாளர்களாக உள்ளார்கள். கிராமப்புறங்களில் பா.ம.க.வை வளர்ப்பது என்கிற அக்கட்சியின் புதிய திட்டம் சரிவர நடைமுறைப்படுத்தப்பட்டால் , கட்சியின் வளர்ச்சி நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். பா.ம.க இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணி என்று அக்கட்சித் தலைமை முந்தைய தேர்தல்களில் சொல்லி வந்த நிலைமை தற்போது இல்லை என்பதே கள நிலவரம்.

வன்னியர் சமுதாயத்தினருக்கு அடுத்தபடியாக அதிகமாக இருப்பவர்கள் தலித் மக்கள். காங்கிரசுக்கும் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் வலு வான வாக்கு வங்கியாக இருந்த தலித் மக்களின் அரசியல் நிலைப்பாடு தற்போது பெருமளவு மாறியிருப்பதைக் காண முடிகிறது. விடுதலைச் சிறுத்தைகளின் கொடி தலித் பகுதிகளில் பறக்கிறது என்றாலும், இப்பகுதிகளில் புதிய செல்வாக்குப் பெற்றிருக்கும் கட்சியாக தே.மு.தி.க விளங்கு கிறது. குறிப்பாக, கிராமப் புற-தலித் பெண்களிடம் தே.மு. தி.க.வின் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

இம்மண்டலத்தில் மூன்றாவது முக்கிய சக்தியாக விளங்குவது, முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகள். குறிப்பாக, வேலூர் மாவட்டத்தில் பலம் வாய்ந்துள்ள சிறுபான்மையினரின் வாக்குகளில் பெரும்பாலானவை தி.மு.க ஆதரவு நிலையிலேயே உள்ளன. அ.தி.மு.க கூட் டணி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி களில் மட்டுமே இந்த வாக்குகளில் மாற்றம் ஏற்படும் வாய்ப் புள்ளது.

இங்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை முதலியார் சமுதாயம் கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ் இந்த மூன்று கட்சி களுக்கும் இவர்களின் வாக்குகள் பிரிகின்றன. இவற்றில் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் இந்த வாக்குகளைப் பெறுவதில் சமபலத்துடன் இருக் கின்றன.

வேலூர் மண்டலம் விவசாயம், தொழில் இரண்டையும் சார்ந்த பகுதியாகும். பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணைகட்டும் முயற்சியைத் தடுப்பதில் தி.மு.க அரசு முனைப்பாகச் செயல் படவில்லை என்கிற விவசாயிகளின் கருத்தும், அதற்கு ஆதரவான எதிர்க் கட்சிகளின் போராட்டமும் ஆளுங்கட்சிக்கும் கூட் டணிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதுபோலவே, பாலாற்றின் வயிற்றைச் சுரண்டு வதுபோல வாரி எடுக்கப்படும் மணல் விவகாரம் இன்றைய- முந்தைய ஆளுங்கட்சிகள் இரண்டுக்குமே விவசாய மக்களிடம் எதிர்ப்பான மன நிலையை உருவாக்கியுள்ளது.

ராணிப்பேட்டை தொழிற்பேட்டை, ஆம்பூர் தோல் தொழிற்சாலை உள் ளிட்டவற்றின் கழிவுகள் பாலாற்றுப் படுகையில்தான் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள் ளது. இந்த சுற்றுச்சூழல் சிக்கலைக்களைவதற்கு உறுதியான நடவடிக்கை எதையும் அரசாங்கம் எடுக்கவில்லை என்ற அதிருப்தி பொதுமக்களிடம் உள்ளது.

திருப்பத்தூர், நாட் ராம்பள்ளி, வாணியம்பாடி ஆகியவற்றை உள்ளடக்கிய தனி மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அ.தி.முக. ஆட்சியின்போது இந்த கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க, இப்போது இந்த கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டதும் ஆளுந்தரப்புக்கு எதி ரானதாக இருக்கிறது.

திருவண்ணா மலை மாவட்ட செங்கம் பகுதி பூ விவசாயிகள் ஒரு சென்ட் தொழிற்சாலை அமைக்கும் கோரிக்கையைத் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். பட்டுக்குப் பெயர் பெற்ற ஆரணியின் நெசவாளர்கள், நசிந்து வரும் தங்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில் ஜவுளிப்பூங்கா ஒன்று அமைக்கவேண்டும் எனக் கோரி வருகிறார்கள்.

நிறைவேற்றப்படாத இந்த கோரிக்கைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்பட எந்தக் கட்சியும் பெரியளவில் குரல் எழுப்பாதது, ஆளுந் தரப்புக்கு பாதகமில்லாத சூழலை உருவாக்கி யுள்ளது.

திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரி, ஆரணியில் அரசு பொறியியல் கல்லூரி, கலசபாக்கத்தில் பாலி டெக்னிக் போன்றவற்றை தி.மு.க தரப்பு தனது சாதனைகளாக முன்னிறுத்து வதையும் அவை மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருப்பதையும் காண முடிகிறது.

-வேலூர் மண்டலத்தின் தற்போதைய நிலவரப்படி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி பலமான நிலையில் உள் ளது.

அ.தி.மு.க உள்கட்சிக் குழப்பங்களால் பழைய பலத்தை இழந்துள்ளது. பா.ம.க தன் பழைய செல்வாக்கைப் பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இம்மண்டலத்தின் 36 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலையை காண முடிகிறது.

(-வரும் இதழில் கடலூர் மண்டலம்)


அரசின் நிர்வாகத் திறமை!

இந்தியாவில் உள்ள மாநில அரசுகளிலேயே சிறந்த முறையில் செயல்படும் அரசுகளில் தமிழக அரசு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கான முழு பொறுப்பும் முதல்வர் பொறுப்பில் உள்ள கலைஞரையே சாரும் என்கிறார்கள் தேசிய அளவிலான ஆய்வாளர்கள். 86 வயதிலும் குறையாத ஞாபக சக்தி, அதி நுட்பமான நிர்வாகத்திறமை, கடுமையான உழைப்பு, மக்கள் நலத் திட்டங்களுக்கான அர்ப்பணிப்பு, நேர்மையும் கடமையுணர்ச்சியும் கொண்ட அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட முதல்வரின் திறமையே அரசு எந்திரத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு காரணம் என இவர்கள் தெரிவிக்கிறார்கள்.பொதுமக்களிடமும் இதே கருத்தை நமது கள ஆய்வின் போது காண முடிந்ததுடன், ஊடகங்களும்கூட தமிழக அரசு நிர்வாகம் பற்றி ஒட்டுமொத்தமாக பெரியளவிலான குறைகளை இந்த 4 ஆண்டுகளில் முன்வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகம் தழுவிய அளவில் மூன்று முக்கிய மதங்களைச் சார்ந்த வாக்காளர்கள் எந்தெந்த கட்சிகளை ஆதரிக்கிறார்கள் என்பதை இந்த வரைபடங்கள் காட்டு கின்றன.இந்து மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களில் 34% பேர் அ.தி.மு.கவையும் 32% பேர் தி.மு.கவையும் ஆதரிக் கிறார்கள். குறைந்த இடை வெளியில் அ.தி.மு.க முன்னிற்க காரணம், அதன் தலைமைதான். மென்மையான இந்துத்வா என்கிற அடையாளம் ஜெ.வுக்கு இருக்கிறது. இந்து அமைப்பு களின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருக்கிறார். ஜெயலலிதாவின் தனிப்பட்ட பக்தி மார்க்கமும் இந்த வாக்குபலத்திற்கு ஒரு காரணமாகும்.தி.மு.க தலைமை மீதான நெடுநாளைய நாத்திக முத்திரையும் எப்போதும் சிறுபான்மை யினருக்கு ஆதரவாகவே தி.மு.க இருக்கும் என்கிற கருத்தும் இந்து மத வாக்கு பலத்தில் தி.மு.கவை சிறிதளவு பின்தங்க வைத்துள்ளது. எனினும், இந்து மத வாக்காளர்களை அ.தி.மு.க. அளவுக்கு நெருக்கமாகப் பெறுவதில் தி.மு.க பல படிகள் முன்னேறியிருப்பதை ஆய்வில் அறிய முடிகிறது. காங்கிரசும் தே.மு.தி.க வும் இந்துமத வாக்குகளைப் பெறுவதில் சம அளவிலான பலத்தைப் பெற்றுள்ளன.இஸ்லாமியர் வாக்குகளில் 61% தி.மு.க பக்கமே இருப்பது, அக்கட்சிக்கு பெரிய பலம். அ.தி.மு.கவோ அதில் 5-ல் ஒரு பங்கு பலத்தையே பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இஸ்லாமியரின் வாக்குகளைப் பெறுவதில் காங்கிரசுக்கும் அடுத்தபடியாக அ.தி.மு.க இருப்பதற்கு காரணம், அ.தி.மு.க தலைமை மென்மையான இந்துத்வா என்கிற அடை யாளமேயாகும். எந்த நேரத்திலும் இந்துத்வா அமைப்புகளோடு ஜெ கைகோர்ப்பார் என்ற பயம் இஸ்லாமியர்களிடம் உள்ளது. முஸ்லிம்கள் மீது தி.மு.க அரசு காட்டும் அக்கறை, தனி இடஒதுக்கீடு ஆகியவை தி.மு.கவுக்கு இஸ்லாமிய வாக்குவங்கியை உறுதிப்படுத்தியுள்ளது.


அரசியல் ரீதியாக வளர்ந்து மனித நேய மக்கள் கட்சி (த.மு.மு.க) உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் தங்கள் சமுதாயத்து வாக்காளர்களை ஈர்ப்பதில் முன்னேற்ற மடைந்து வருகின்றன என்பதை கள ஆய்வுகள் காட்டுகின்றன. பழைய இஸ்லாமிய கட்சி களைவிட, புதிய அமைப்புகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களின் செல்வாக்கு நல்ல அளவில் உள்ளது. தே.மு.தி.க.. "பா.ம.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரியளவில் இஸ்லாமிய வாக்குகளைக் கவரவில்லை.


மதமாற்றத் தடைச் சட்டத்தின் காரணமாக அ.தி.மு.க.வுக்கு எதிராக கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட மனநிலை இன்றளவிலும் பெரிய மாறுதலை அடையவில்லை என்பதையே களத்தின் நிலவரம் தெரிவிக்கிறது. அ.தி.மு.க வெறும் 18% கிறிஸ்தவர்களின் வாக்குகளைக் கவர, தி.மு.க வுக்கு 54% வாக்குகள் கிடைக் கின்றன. அ.தி.மு.கவுக்கு இணையாக, தி.மு.க கூட்டணி யில் உள்ள காங்கிரசும் 18% வாக்குகளைப் பெறுகிறது. தே.மு.தி.கவுக்கு 3% ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கன்னியா குமரி , திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ வாக்கு வங்கியில் கம்யூனிஸ்ட்டு களுக்கு பங்கு கிடைக்கிறது.


பெரும்பான்மை சமுதாயமான இந்து மதத்தினரின் வாக்குககளை அ.தி.மு.க.வும் தி.மு.கவும் நெருக்கமாகப் பங்கிட்டுக் கொள்ள, சிறுபான்மையினர் வாக்குகளை அதிகளவில் அறுவடை செய்யும் நிலை யில் தி.மு.க அணி உள்ளது.


வளரும் பெரும்தொழில்கள், முடங்கும் சிறுதொழில்கள்!தி.மு.க ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் தொழில் துறையில் தமிழகம் பிரம்மாண்டமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். வெளிநாட்டு மோட்டார் வாகனத் தொழில் கம்பெனிகள் இந்தியாவில் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாநிலமாக தமிழகம் மாறி யுள்ளது. இதனால் கார் உற்பத்தி மட்டுமின்றி, அதன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் தமிழகத்தில் பெருகியுள்ளன. இதுபோலவே தகவல்தொழில்நுட்பத்துறை (ஐ.டி) தமிழகத்தில் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. திறமையான தொழிலாளர்கள், ஆதரவுக்கரம் நீட்டும் ஆட்சி யாளர்கள், உதவி செய்யும் அதிகார எந்திரம், எளிதில் அணுகக்கூடிய ஆட்சித்தலைமை, பெருகிவரும் 4 வழிச்சாலைகள், விமானநிலையம்-துறைமுகம் உள்ளிட்ட வசதிகள் இவை யாவும் பெருந்தொழில்களைத் தொடங்குவோருக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன.சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கப்படுகின்ற அளவுக்கு தமிழகத்தின் மற்ற பகுதிகளில் தொழில்வாய்ப்புகள் உருவாகவில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, சிறுநகரங்களில் பாரம்பரியமாக நடைபெற்றுவந்த சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு அரசு ஊக்கமளிக்கவில்லை என்ற கோபம் சிறுதொழில் முதலீட்டாளர்களிடம் உள்ளது. அவர்களின் முதல் பிரச்சினை, மின்தடை. இதனால் சிறுதொழில்கூடங்களில் உற்பத்தி பெருமளவு பாதிக்கப் பட்டு, நாள்கூலி தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைமை உருவாகியுள்ளது. தீப்பெட்டி, விசைத்தறி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், ஆபரணங்கள், தொழிற்கருவிகள் உள்ளிட்ட பலவகையான சிறுதொழில்களும் கடந்த 4 ஆண்டுகளில் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. வரிச்சலுகை போன்ற அரசாங்க ஆதரவும் சிறுதொழில்களுக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment