Sunday, July 18, 2010

பத்து கோடி மாணவ - மாணவிகளுக்கு மனநலம்...


மாணவ - மாணவிகளின் மன நலம் காக்க வேண்டிய ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் அது. கலெக்டர் வள்ளலாரின் முயற்சியால், திண்டுக்கல் பி.எஸ். என்.ஏ. கல்லூரியில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்தப் பயிற்சி முகாமுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 292 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 195 ஆசிரிய-ஆசிரியை கள் வந்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

பயிற்சி முடிந்து வெளியே வந்த பழனியைச் சேர்ந்த ஆசிரியை செல்லம்மா ளிடம் ""பயனுள்ள பயிற்சிதானே?'' என்றோம்.

""வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறைத் தலைவர் டாக்டர் பால்ரஸல் தலைமையிலான குழுவினர்தான் எங்களுக்கு பயிற்சி வகுப்பு எடுத்தார்கள். இப்படிப்பட்ட பயிற்சி எங்களுக்கு முன்பே கிடைத்திருந் தால் எத்தனையோ மாணவ-மாணவிகளை காப்பாற்றியிருப்போம்'' என்றார்.

""அப்படியொரு மாணவரைச் சொல்ல முடியுமா?'' என்றோம்.

""எங்க பள்ளியில் பயின்ற மாணவி ரூபா... அநாதை என்று சொல்லி, அவளைக் கூட்டி வந்து +1ல் சேர்த்தார் ஒரு பாதிரியார். 6 மாதத் திற்குப் பிறகு ஒருநாள், ஒரு அம் மாவிடம் உரிமை யோடு பேசிக் கொண் டிருந்தாள் ரூபா. விசாரித்தபோது... அந்த அம்மாதான் தன்னைப் பெற்றவர் என்றும், யாரோ ஒரு வருடன் ஓடிவிட்ட அம்மா இப்போது திரும்பி வந்துவிட்டதாகவும் மகிழ்ச்சியோடு சொன்னாள். +2 தேர்வு நெருங்கிய சமயத்தில், ஒருநாள் தனியே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தாள் ரூபா. விசாரித்தேன். அம்மா இன்னொருவனோடு ஓடிவிட்டதாகச் சொல்லி அழுதாள். மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆறுதல் சொன்னோம். அடுத்த சில நாளில் ரூபா தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். இன் றைக்கு நான் பெற்ற மனநலப் பயிற்சியை அப் போது பெற்றிருந்தால் ரூபாவுக்கு கவுன்சிலிங் கொடுத்திருப்பேன்'' -கலங்கிய விழிகளோடு சொன்னார் ஆசிரியை செல்லம்மாள்.

மாணவர் மனநலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற மற்றொரு ஆசிரியரான ஜம்புளியம் பட்டி சுரேஷ்பாபு, தான் பணியாற்றும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர் குமாரின் நிலையை விவரித்தார்.

""தன் அம்மா மீது பேரன்பு கொண்ட மாணவன் குமார். திடீரென இறந்துவிட்டார் அவன் அம்மா. கொஞ்ச நாளில் பள்ளிக்கு வருவதையும் நிறுத்திவிட்டான். அவனுடைய நண்பர் களிடம் கேட்டபோதுதான் தெரிந்தது அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாக. அம்மாவைப் பற்றிப் புலம்பியபடி தெருக்களில் அலைவதாகச் சொன்னார்கள். இப்போது எனக்குக் கிடைத்த பயிற்சி அப்போது இருந்திருந்தால் குமாரை மனநிலை பிறழாமல் காப்பாற்றியிருக்க முடியும்'' என்றார் சுரேஷ்பாபு.

மாணவர்களுக்கான மனநலத்திற்காக ஆசிரியர் களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யும் எண்ணம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வள்ளலாருக்கு எப்படி ஏற்பட்டது?

""ஏற்கனவே குழந்தைகளுக்கான மனநலத் திட்டத்தை தொடங்கி நடத்தியபோதுதான்... இளம் பருவ மாணவ-மாணவிகளின் மனநலம் குறித்து ஆய்வு செய்தோம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் மாணவர்களில் 75 ஆயிரம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் மனநலம் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அத னால்தான் டாக்டர் பால்ரஸல் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்தேன். ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த வழி செய்திருக் கிறேன்'' என்கிறார் கலெக்டர் வள்ளலார். திண் டுக்கல் மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் மாண வர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால்...?

பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திய வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மனநலத்துறை தலைவர் டாக்டர் பால்ரஸலிடம் கேட்டோம்...

""12 முதல் 19 வயது வரையிலான இளம் பருவ மாணவ-மாணவிகளில் சிலர் பாடத்தைக் கவனிக்காமல் தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அல்லது, சம்பந்தமே இல்லாமல் நோட்டில் எதையாவது கிறுக்கிக்கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கு மனநோய், மன அழுத்த நோய், மனச்சிதைவு நோய் உட்பட 7 வகையான நோய்கள் தாக்கியிருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவர்களை அப்படியே விட்டுவிட்டால் மனநலப் பாதிப்பு அதிகமாகிவிடும்.

உலக சுகாதார மைய ஆய்வுக் கணக்கின்படி இந்தியாவில் உள்ள 10 கோடி இளம் பருவ மாணவ- மாணவிகளை இப்படிப்பட்ட நோய்கள் தாக்கியுள்ளன. இவர்களுக்கு தொடக்கத்திலேயே மருத்துவ சிகிச்சை தந்து அந்த நோயைத் தடுக்கவேண் டும்.

மேலை நாடுகளில் 60 ஆயிரம் பேருக்கு 2 மனநல டாக்டர்கள் இருக்கி றார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 2 மன நல டாக்டர்கள்தான் இருக்கிறார்கள். இந்திய மருத்துவக் கழகமும் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. இந்த நிலையில்தான் கலெக்டர் வள்ளலார் என்னைத் தொடர்புகொண்டு, இந்தச் சிறப்பு மனநலப் பயிற்சி முகாமை நடத்த ஏற்பாடு செய்தார். இந்தியாவில் முதல் சிறப்பு மனநல முகாம் இது'' -பெருமையோடு சொன்னார் டாக்டர் பால்ரஸல்.
மற்ற மாவட்டங்களிலும் கட்டாயம் நடத்தப்படவேண்டிய மனநல முகாம் இது.

No comments:

Post a Comment