Sunday, August 8, 2010

யுத்தம் 77 - நக்கீரன் கோபால்


சிவாவை எல்லா வழக்குகளிலிருந்தும் பெயிலில் எடுக்கவேண்டிய அவசியம். ஆனால், அவர் மீது முதன்முதலில் போடப்பட்ட வழக்கு (100/2001) கொள்ளேகால் கோர்ட்டில் நடந்துகொண்டிருந்தது. ஜாமீனில் வரக்கூடிய செக்ஷன்களில்தான் முதலில் அந்த வழக்குப் போடப்பட்டிருந்தது. தம்பி சிவாவுக்கும் ஜாமீன் எடுத்துவிட்டோம். அதன்பிறகு, தமிழக-கர்நாடக அதிரடிப்படையின் கூட்டு முயற்சியால் ஜாமீன் கிடைக்காத செக்ஷன்களுக்கு வழக்கு மாற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும், தம்பி சிவாவுக்கு முதலில் கொடுக்கப்பட்ட பெயில், இந்த வழக்கில் தொடர்ந்து கொண்டிருந்தது.

கோவை சிறையில் சிவா இருக்கிறார். வழக்கோ கர்நாடக மாநிலத்தில் உள்ள கொள்ளேகால் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. விசாரணைக்கு சிவா சார்பில் வக்கீல் ஆஜராகாவிட்டால் பெயிலை கேன்சல் செய்துவிடுவோம் என்று நீதிபதி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பெயிலபிள் வழக்கை, நான்-பெயிலபிளாக மாற்றியதற்கு நம் தரப்பில் கவுண்ட்டர் பெட்டிஷனும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கு, நமக்கு முக்கியமான வழக்காகிவிட்டது.

கர்நாடகாவில் நம் வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர் அட்வகேட் ஈஸ்வர சந்திரா. அவரை அழைத்துக்கொண்டு கொள்ளேகாலுக்குப் போனால் பெயில் கேன்சலாகாமல் இருக்கும். இன்னும் இரண்டு வழக்குகளில் தம்பி சிவாவுக்கு பெயில் எடுக்க வேண்டிய நிலையில், ஏற்கனவே எடுத்த பெயில் கேன்சலாகி போச்சுன்னா அதுவேற வம்பா போயிடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தோம்.

நமது பெங்களூரு நிருபர் தம்பி ஜெ.பி.யைத் தொடர்புகொண்டேன்.

""தம்பி.. .. நீங்க ஈஸ்வரசந்திராகிட்டே பேசிடுங்க. கொள்ளேகால் கோர்ட் கொடுத்த பெயில் கேன்சலாயிடக் கூடாது. பிரச்சினையில்லாம பார்த்துக்கச் சொல்லுங்க.''

""சொல்லுறேங்கண்ணே... இன்னொரு தகவல். கொள்ளேகால் கோர்ட்டில் கேஸ் வர்ற அதே 30-ந் தேதிதான் மைசூர் தடா கோர்ட்டிலும் சிவாவோட வழக்கு வருது.''

""அதுவும் முக்கியமான வழக்கு தம்பி.. நாங்க இங்கே அவருக்கு மற்ற வழக்குகளில் பெயில் எடுப்பதில் வேகமா இருக்கோம். அதனால நீங்க அந்த இரண்டு வழக்கு விவரங்களையும் பார்த்துக்குங்க.''

மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர், பெங்களூரு என்று கர்நாடகாவில் போடப்பட்ட பொய் வழக்குகள் சம்பந்தப்பட்ட விவரங்களையெல்லாம் தொடர்ந்து கவனித்துக்கொண்டவர் ஜெ.பிதான். ஆனால், கர்நாடகத்தில் ஏற்பட்ட ஒரு திடீர் பதட்டம், நமக்கு பெரும்சோதனையாக அமைந்துவிட்டது.

கர்நாடகாவில் ஹெக்டே அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் நாகப்பா. அவரை வீரப்பனும் அவரது ஆட்களும் கடத்திவிட்டார்கள். ராஜ்குமார் கடத்தலுக்குப்பிறகு நடந்த மிக முக்கியமான கடத்தல் சம்பவம் இது. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி. கடத்தப்பட்ட மாஜி மந்திரியை மீட்க தமிழக அரசு எந்தளவில் ஒத்துழைக்கும் என்பது கர்நாடக அரசுக்குத் தெரியும். அதனால், முந்தைய மீட்பு முயற்சிகள்போல பெரியளவில் எதுவும் நடக்கவில்லை. தமிழக-கர்நாடக அதிரடிப்படைகள் கூட்டு நடவடிக்கையின் மூலம் நாகப்பா வை மீட்டு விடலாம் என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாகப்பா கடத்தல், கர்நாடகாவில் அரசியல்ரீதியாக பதட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தது. கடத்தப்பட்ட மாஜி மந்திரியின் கட்சி வேறு, கர்நாடகத்தை ஆள்கின்ற கட்சி வேறு. அதனால், இந்த கடத்தல் விவகாரம் வேறு வேறு கோணங்களில் அரசியலாக்கப்பட்டு வந்தது. போதாக்குறைக்கு, நாகப்பாவைக் கடத்திய வீரப்பன் வைத்த கோரிக்கை இன்னும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காவிரியில் தமிழகத்திற்குள்ள தண்ணீரைத் திறந்து விடவேண்டும் என்று நாகப்பாவைப் பணயக்கைதியாக்கி நிபந்தனை விதித்தான் வீரப்பன். அதனால், கர்நாடகாவின் பல பகுதிகளிலும் கலவரம் வெடித்தது. தமிழர்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டார்கள். ரயில் பெட்டிகள் கொளுத்தப்பட்ட தால், கர்நாடகத்தில் ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்திவிட்டது. சாலைகளின் குறுக்கே மரங்களை வெட்டிப்போட்டும், டயர்களைக் கொளுத்தியும் பஸ் போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டார்கள் .

ஜெ.பி. போன் செய்தார்.

""அண்ணே... பஸ், ட்ரெயின் எதுவும் கிடையாது. எல்லா இடமும் கலவரமா இருக்குது.''

மைசூர் தடா கோர்ட்டிலும், கொள்ளேகால் கோர்ட்டிலும் முக்கியமான வழக்குகள் இருக்கிற நிலையில், எந்தப் போக்குவரத்தும் இல்லாமல் தம்பி ஜெ.பி.யால் எப்படி போக முடியும் என்று நான் யோசித்தேன்.

ஜெ.பி.யோ, ""அண்ணே.... நான் டூவீலர் எடுத்துக்கிட்டுப் போயிடுறேன்.''

""எவ்வளவு தூரம் தம்பி?''

""இரண்டு இடத்துக்கும் போயிட்டு திரும்பி வரணும்னா 600 கி.மீ. ஆகும்ணே...''


என்னுடைய மனசு கேட்கலை. 600 கி.மீ. டூவீலரில் போவதென்பது சாதாரணமான காரியமல்ல. அதுவும் கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரண்டு கோர்ட்டுகளுக்குப் போகவேண்டும். தமிழர்கள் என்றால் குறிவைத்து தாக்கப்படுகிற நேரம். ஒரு தமிழ்ப் பத்திரிகையின் நிருபர், அதுவும் வீரப்பனை பேட்டிகண்டும்- அவனிடம் சிக்கியவர்களை மீட்டுவந்தும் பெயர் வாங்கிய பத்திரிகையின் நிருபர் கன்னட வெறியர்களிடம் சிக்கினால் என்ன ஆகும் என்று யோசிக்கும் போதே அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், பழி வாங்கும் வேகத்துடன் செயல்படும் அதிரடிப் படையிடமிருந்து அவரைக் காப்பாற்றக் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிட்டுவிடக்கூடாது என்பதால் ரொம்பவும் ஜாக்கிரதையாக செயல்படவேண்டியிருந்தது. அதனால், தம்பி ஜெ.பி. எப்படியாவது கோர்ட்டுக்குப் போனால்தான், சிவாவுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை.

""தம்பி ஜெ.பி.. நீங்க டூவீலரில் கிளம்புங்க. சிவாவைப் பார்த்து அவங்கப்பா உடல்நிலை சரியில்லைங்கிறதை சொல்லணும். நான் போய் அவங்கப்பாவை பார்த்த விவரத்தையும் இன்னும் இரண்டு நாட்களில் எல்லா கேசிலும் பெயில் எடுத்திடலாம்ங்கிறதையும் சொல்லணும். அதற்கு முன்னாடி கோவை ஜெயிலிலிருந்து தம்பி சிவாவை எப்ப அழைச்சிட்டுப் போறாங்கங்கிற தகவலை தெரிஞ்சுக்கிட்டு உங்ககிட்டே சொல்றேன்.. அப்புறம் கிளம்பலாம்.''

""சரிங்கண்ணே...''

கோவை நிருபர் தம்பி மகரன் மூலம் தகவல் கேட்டுச் சொல்லலாம் என பல முறை முயற்சித்தும், மகரன் லைனில் கிடைக்கவில்லை. நேரம் கடந்துகொண்டே இருக்கிறது. ஜெ.பி. பல மைல்கள் பயணிக்கவேண்டும். தாமதமானால் பயணம் செய்தும் பலன் இருக்காது. அதனால், அவரைப் புறப்படச் சொல்லிவிட்டேன்.

மனசு கேட்கவில்லை.. திக்..திக்.. என்றிருந்தது. தம்பி ஜெ.பி டூவீலரில் புறப்பட்டுவிட்டார். பதட்டமான பயணம். மாண்டியா வழியாக கொள்ளேகால் போகவேண்டும். மாண்டியாவிலிருந்து 20 கி.மீ. தூரத் தில் ஒரு ஜீப் எரிக்கப்பட்டது. அதையடுத்து, பஸ் களுக்கு தீவைக்கப்பட்டன. ரோட்டில் மரங்கள், டயர்கள் எல்லாம் எரிந்துகொண்டே இருந்தன. அந்த சமயத்தில்தான், தம்பி ஜெ.பி. டூவீலரில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்.

மாண்டியாவை அடுத்து மலுவல்லி, சென்னபட்னா என கொள்ளேகால் ஏரியாக்களில் 100 கி.மீ. சுற்றுவட்டாரம் முழுவதும் கலவர பூமியாக மாறியிருந்தது. எல்லா இடங்களையும் கடந்து, கொள்ளேகால் நீதிமன்றத்திற்குப் போய்ச் சேர்ந்தார் ஜெ.பி. அட்வகேட் ஈஸ்வரசந்திராவின் ஜூனியரை கொள்ளேகாலில் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போயிருந்தார். ஆனால், தம்பி சிவாவை போலீசார் அழைத்து வரவில்லை. வக்கீல் ஆஜரானதால், சிவாவின் பெயிலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.

கொள்ளேகால் கோர்ட்டிலிருந்து வெளியே வந்ததும் தம்பி ஜெ.பி. எனக்கு போன் செய்து விவரம் தெரிவித்தார். அடுத்ததாக, மைசூர் தடாகோர்ட்டுக்குப் போகவேண்டும். சிவா வருவாரா, மாட்டாரா என்பது உறுதியில்லாத நிலையில், அங்கே போகாமல் இருந்தால் 250 கி.மீ. பயணம் மிச்சமாகும். ஆனால், அவரிடம் தகவலை சொல்லவும், கோர்ட் நடவடிக்கைகளை கவனிக்கவும் வேண்டியிருந்த தால், தம்பி ஜெ.பி. டூவீலரிலேயே மைசூருக்குப் பயணம் செய்தார். ஆனால், அங்கும் சிவாவை ஆஜர்படுத்தவில்லை. என்ன ஆனார் என்ற பதட்டம் அதிகரித்தது.

கலவரச் சூழலில் 600 கி.மீ. டூவீலரில் பயணம் செய்த களைப்புடன் திரும்பினார் ஜெ.பி. அதன்பிறகு தான் நிருபர் மகரனிடமிருந்து எனக்கு போன். சிவாவை கோவை சிறையிலிருந்து அழைத்துச் செல்லவில்லை என்ற தகவலைச் சொன்னார். அவர் மேல் எனக்கு வருத்தம். மறுநாள் காலையில், வக்கீல் அபுபக்கர் மூலமாக சிவாவுக்கு எல்லா விவரங்களும் பாஸ் செய்யப்பட்டது.
அப்பாவின் உடல்நிலையை நினைத்து கவலைப்பட்ட சிவா, தனக்கு பெயில் உத்தரவுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். அந்த சமயத்தில்தான், நாம் கொஞ்சமும் எதிர்பாராத அந்த அதிர்ச்சித் தகவல் வந்தது.

போலீசின் பொய்வழக்கால் தம்பி சுப்பு தலைமறைவாக இருந்த நிலையில், அவரது குடும்பத்தினரைக் குறிவைத்தது போலீஸ். மேட்டூரையடுத்த நாய்க்கன் தண்டாவில் சுப்புவின் அக்கா லட்சுமி அவரது கணவர் முருகேசனோடு வசித்து வந்தார். அவர்களின் வீட்டுக்கு அதிரடிப்படை வீரர் கோபி வந்தார்.

""முருகேசன்... இருக்காரா?''

-வீட்டில் சுப்புவின் அக்காதான் இருந்தார்.

""அவர் இல்லீங்க.''

""அவர்கிட்டே சில விவரங்கள் கேட்கணும். வந்தா கேம்ப்புக்கு வரச் சொல்லுங்க'' என்றார் கோபி. சுப்புவின் அக்காவுக்கு சந்தேகம்.

""என்ன விவரமோ இங்கேயே விசாரிச்சிடுங்க சார். அவர் வந்ததும் சொல்றேன்.''

""ஒண்ணும் பயப்படவேண்டாம். எங்க கேம்ப்புக்கு அழைச்சிட்டுப் போய் சில விவரங்களை கேட்டுட்டு விட்டுடுறோம். வரச்சொல்லுங்க'' என்று அதிரடிப்படை வீரர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

தன் கணவர் முருகேசன் வீட்டிற்கு வரும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார் சுப்புவின் அக்கா.
முருகேசன் வீடு திரும்பவேயில்லை.

-யுத்தம் தொடரும்

தமிழகத்தில் பாகிஸ்தான் கைவரிசை!


கம்பளி, பெட்ஷீட்களை தோளில் சுமந்தபடி, கன்னியா குமரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்தான் அந்த வட நாட்டு வாலிபன். ""பீ.பீ. ரெண்டு குவார்ட்டர் தே தோ'' என்ற படி புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான்.

நோட்டை வாங்கிப் பார்த்த டாஸ்மாக் ஊழியர் பத்மகுமாருக்கு சந்தேகம் பிறந்தது. நோட்டை எந்திரத்தில் வைத்து சோதித்தார். சந்தேகம் தீர்ந்தது. அந்த நோட்டு கள்ளநோட்டு. சக ஊழியர் மூலம் போலீசுக்குத் தகவல் கொடுத்தார் பத்மகுமார். தாமதிக்கவில்லை போலீஸ்.

டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் வந்த போலீஸ், அந்த வடநாட்டு வாலிபனை, அவன் தங்கியிருந்த லாட்ஜுக்கு தள்ளிக்கொண்டு போனது. அந்த அறையில் இருந்த அவனது கூட்டாளிகளான முகம்மது முஸ்தபா ஷேக், முகம்மது சலிக் ஷேக், முகமது அஷ்ரா ஜல்ஷேக், மஜிபுர் ஷேக், நாஜிக் ஷேக், அன்பது ஷேக், முகம்மது மத்யூர் இஸ்லாம் ஆகியவர்களையும் கைது செய்தது. அவர்களிடம் இருந்த 6 லட்சத்து 21 ஆயிரத் திற்கான கள்ள நோட்டுகளையும் நல்ல நோட்டுகளாக அவர்கள் மாற்றிய 8 ஆயிரத்து 600 ரூபாயையும் கைப்பற்றினார்கள்.

இந்தக் கும்பல் ஜார்கண்ட் மாநிலம் பியாக் பூரைச் சேர்ந்தது. இவர்களுக்கு கள்ள நோட்டுகளை சப்ளை செய்து, கமிஷன் அடிப்படையில் தமிழகத் திற்கு அனுப்பியவன் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷேக். ""இந்த ஷேக்தான் கள்ளநோட்டை அச்சடிக்கிறானா? ""இல்லை சார்... பாகிஸ்தானில் இருந்து வருகிறதாம்'' -இது போலீசாரிடம் அந்தக் கும்பல் சொன்ன தகவல்.

""இவர்கள் ஜார்கண் டில் இருந்து சென்னைக் கும், சென்னையில் இருந்து குமரிக்கும் வருவதற்கு ரயில் டிக்கெட்டைக்கூட கள்ள நோட்டைக் கொடுத்துதான் எடுத்திருக் கிறார்கள். வந்த முதல்நாளே 11 நோட்டுகளை மாற்றியிருக்கிறார்கள்'' என்கிறார் எஸ்.பி.ராஜேந்திரன்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம், திருவாடானை, ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்க ளாகவே 1000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் நடமாட்டம் அதி கரித்துக்கொண்டிருக்கிறது.

ஏ.டி.எம். சென்டர்களில் எடுக்கும் நோட்டுக்களில்கூட கள்ள நோட்டுகள் கலந்திருக்கின்றன.

""ஏ.டி.எம்.மில் மட்டுமில்லை... வங்கியில் பணம் போட்டுவிட்டு வந்த அரைமணி நேரத்தில் வங்கியிலிந்து போன்வரும். "நீங்க டெபாசிட் செய்த தில் 5 ஐநூறு ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள். நீங்கள் எங்கள் ரெகுலர் கஸ்டமர் என்பதால் போலீசில் புகார் செய்யவில்லை. உடனே நல்ல நோட்டு களை கொடுத்துவிட்டு, இதை வாங்கிச் செல்லுங்கள்' என்பார்கள். பதட்டத் தோடு போய் மாற்றிக் கொடுப்போம். இல்லையென்றால் போலீஸ் நம்மை அல்லவா கைது செய்வார்கள்'' என்கிறார்கள் இராமநாதபுரம் வியாபாரிகள்.

கள்ளநோட்டுப் பிரச்சினை பெரிதானதால் 27.7.10-லிருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது க்யூ பிராஞ்ச் போலீஸ். கீழக்கரை, ஏர்வாடி பகுதியில் கள்ளநோட்டுப் பேர்வழி என்று அடையாளம் காணப்பட்ட பாலகிருஷ்ணனுக்கு போன் போட்ட க்யூ பிராஞ்ச் அதிகாரி ""என்னையும் உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு லட்சத்திற்கு நான் எவ்வளவு நல்ல நோட்டுத் தரணும்? எங்கே வரணும்?'' என்றார்.

""அறுபதாயிரத்தோடு ராம்நாடு சின்னக்கடை தெருவுக்கு வாங்க'' என்றார் பாலகிருஷ்ணன்.

சின்னக்கடை தெருவில் வசமாக மாட்டிக்கொண்ட பால கிருஷ்ணனை, தூக்கி வந்து முறைப்படி விசாரித்தார்கள் இன்ஸ்பெக் டர் ரவியும், எஸ்.ஐ. பரக்கத்துல்லாவும். அவர் கொடுத்த தகவலால் ஏர்வாடி ஹோட்டல் அதிபர் மகன் செய்யது முகம்மது அல்தாப்பும், ராமநாதபுரம் சிவக்குமாரும், கீழக்கரை அபுதாகீரும் சிக்கினார்கள்.

இவர்களிடம் இருந்து 1 லட்சத்து 63 ஆயிரத்துக்கான கள்ள நோட்டுகளை மட்டும் கைப்பற்ற முடிந்தது.

""எங்கே பிரிண்ட் பண்றாங்களோ தெரியாது சார்... பாகிஸ்தான்ல இருந்தும், பங்களாதேஷ்ல இருந்தும், மேற்கு வங்களாம், உத்தர்பிரதேஷ், ஜார்கண்ட் வழியா சென்னை, கேரளா வந்து கன்னியாகுமரிக்கு வருது. எங்களுக்கு கன்னியாகுமரியில இருந்துதான் வருது. ராமநாதபுரம், கீழக்கரை, சித்தார்கோட்டை, தொண்டி ஏரியாவுக்கு நிறைய ஹவாலா பணம் வரும். அந்த சப்ளையர்களிடம் உடனுக்குடன் நாங்க கை மாற்றிவிடுவோம். இந்த மூணு, நாலு மாசத்துல 10 கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் விட்டிருக்கிறோம்'' என்றார்களாம் பிடிபட்டவர்கள்.

இவர்கள் பிடிபட்ட இரண்டாம்நாளே, செய்தித்தாள்களில் விஷயம் வெளியானதால், இவர்களுடைய கஸ்டமர்கள் எச்சரிக்கையாக தலைமறைவாகிவிட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு, சென்னை தாம்பரத்தில் ஜமீல் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

""சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஊர்களைக் குறிவைத்தே கள்ளநோட்டுக் கும்பல் செயல்படுது. ரியல் எஸ்டேட்காரர்கள், நகைக் கடை, கல்விக்கடை முதலாளிகள் இந்த நெட் வொர்க்கில் தொ டர்பில் இருப்ப தாகத் தெரிகிறது. தகுந்த ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறோம். நிச்சயம் முக்கியப் புள்ளிகள் மாட்டுவார்கள்'' என்கிறார்கள் க்யூ பிராஞ்ச் அதிகாரிகள். இராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை பார்த்தாலே, சராசரி மக்கள் மிரள்கிறார்கள். அந்த அளவுக்கு கள்ள நோட்டுப் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் டீலிங்! ஜெ. சொன்ன ரகசியம்!


""ஹலோ தலைவரே... .... கார்டனில் அ.தி.மு.க. வோட முக்கிய நிர்வாகி கள்கிட்டே ஜெ. பேசியிருக் கிறார். காங்கிரஸ் கூட்டணி பற்றித்தான் சில விஷயங் களை சொல்லியிருக்கிறார். நாம காங்கிரஸ் கூட்டணிக்குப் போறோமோ இல்லையோ, கூட்டணி வரப்போறதா செய்தி வெளியிலே போய்க்கிட்டே இருக்கணும்னு ஜெ சொன்னாராம்.''

""புரியலையே...?''

""அ.தி.மு.க. நிர்வாகிகளும் இதே வார்த்தையைத் தான் ஜெ.கிட்டே சொல்லியிருக்காங்க. அதற்கப்புறம்தான் ஜெ. விளக்கமா பேசியிருக்கிறார். அதாவது, சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல், பார்லி மெண்ட்டில் தம்பிதுரை பக்கத்தில் திடீர்னு வந்து உட்கார்ந்து, உங்க மேடம் எப்படி இருக்காங்கன்னு கேட்டி ருக்காரு. அதாவது என்னைப் பற்றி விசாரித்தாருக் காருன்னு சொன்ன ஜெ., தி.மு.க. எம்.பி.க்கள் பார்த்துக்கிட்டிருக்கும்போதே அகமது பட்டேல் வந்து விசாரித்ததையும் சொல்லியிருக்காரு.''

""நலன் விசாரிப்புங்கிறது கூட்டணிக்கான அச்சாரமா!''

""இன்னும் சில விசாரிப்புகள் பற்றியும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெ. சொல்லியிருக்கிறார். சோனியா வின் நெருக்கமான தோழியான அம்பிகா சோனி, தி.மு.க. எம்.பி.க்கள் பார்க்கும்படி அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்கிட்டே பார்லிமெண்ட்டில் பேசியிருக் காராம். சோனியா-ராகுல் இருவரோட எம்.பி. தொகுதிகளையும் கவனித்துக்கொள்ளும் ஒருவரும் தம்பிதுரைகிட்டே சகஜமா பேசிகிட்டி ருக்காராம். ராஜீவ்காந்திக்கிட்டே விசேஷ அதிகாரியா இருந்த ஒருவர் தன் கிட்டே அப்பாயிண்ட் மெண்ட் கேட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகிகளிடம் சொன்ன ஜெ., இதனாலெல் லாம் காங்கிரஸ் நம்ம கூட்டணிக்கு வந்தி டும்னு நினைச்சிடக்கூடாது. அவங்க இந்த எலக்ஷனில் தி.மு.க. பக்கம்தான் இருப் பாங்கன்னும் சொல்லியிருக்கிறார்.''

""அப்புறம் இந்த நலன்விசாரிப்பு, அப்பாயிட்மெண்ட் கேட்பதற்கெல்லாம் என்ன காரணமாம்?''

""இப்படியெல்லாம் தி.மு.க. எம்.பி.க்கள் முன்னாடி பேசுறதன் மூலமா, அ.தி.மு.க. கூட்டணிக்கு காங்கிரஸ் ரெடிங்கிற மாதிரி சிக்னல்காட்டி, தி.மு.க.விடம் எலெக்ஷன் நேரத்தில் பிஃப்டி, பிஃப்டி ஷேர் வாங்குவதும், சுழற்சி முறையில் முதல்வர் பதவின்னு வலியுறுத்துவதும்தான் காங்கிரஸின் நோக்கம். அதற்காகத்தான் நம்மோடு டீலிங் போடுவது போல காங்கிரஸ் நாடகம் போடுதுன்னு சொன்ன ஜெ., 50% சீட் கொடுக்க கருணாநிதி என்ன அரசியல் தெரியாதவரா? அங்கே கிடைக்கலைன்னு இங்கே வந்து கேட்டா, 50% கொடுக்க நாம என்ன இளிச்சவாயங்களா? அதற்குப் பேசாம, அ.தி.மு.கவைக் கலைச்சிட் டுப் போயிடலாம். ஆனாலும், நாம காங் கிரசோட இந்த டீலிங்கை சாதகமா பயன்படுத்திக்கிட்டு, அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணிங்கிற தோற் றத்தை உருவாக்கிக்கிட்டே இருக்க ணும்னு சொல்லியிருக்கிறார்.''

""எதற்காக அப்படியொரு தோற்றமாம்?''

""அந்த ரகசியத்தையும் ஜெ.வே சொல்லியிருக்கிறார். எவ்வளவுக்கெவ்வளவு அ.தி.மு.க. பக்கம் காங் கிரஸ் நெருங்கி வர்ற மாதிரி தெரியுதோ, அந்தளவுக்கு தி.மு.க.வும் கூடுதல் இடங்களை காங்கிரசுக்கு கொடுத்து கூட்டணியை மெயின்டெய்ன் பண்ணும். காங்கிரசுக்கு கிடைக்கிற இடங்களெல்லாம் நமக்கு பாசிட்டிவ்வா அமையும். எம்.பி. எலக்ஷனில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில்தான் நம்ம கூட்டணி அதிக இடங்களை ஜெயித்தது. அதுபோல, எம்.எல்.ஏ. எலக்ஷனிலும் காங்கிரசுக்கு கிடைக்கிற இடங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவைத்தால் நம்ம வெற்றி ஈஸியாயிடும். நமக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும். இதுதான் நம்ம ப்ளான். இதற்குத் தகுந்தமாதிரி நம்ம அரசியல் மூவ் இருக்கணும்ங்கிறதுதான் நிர்வாகிகளிடம் ஜெ. சொல்லியிருக்கும் விஷயம்.''

""கூட்டணி விஷயமா யாரும் பேசக் கூடாதுன்னு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சொன்னபிறகும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசாமல் இருக்கப்போறதில் லைன்னு போனமுறைதான் நாம பேசிக்கிட் டோம். அதற்குள்ளே, ஈரோட்டில் நடந்த கட்சிக் கூட்டத்தில் மறுபடியும் பரபரப்பா பேசியிருக்காரே இளங்கோவன். மத்திய அரசின் 45ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு கட்டப்படுற வீடுகளுக்கு கலைஞரின் பெயரால் திட்டத்தை உருவாக்குவதான்னும், இப்படி பேசுவதெல்லாம் கூட்டணியை வலிமைப் படுத்தத்தான்னும் சொல்லியிருக்காரே?''

""முன்னாள் மத்திய அமைச்சரா இருந்த இளங்கோவன் சொல்ற திட்டம் வேற, கலைஞர் வீட்டு வசதி திட்டம்ங்கிறது வேறன்னு விளக்கமா பதில் சொல்லியிருக்கும் முதல்வர், அது ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு அங்கமான இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம்ங்கிறதையும், கலைஞர் வீட்டு வசதி திட்டம்ங்கிறது மண்சுவரால் ஆன 21 லட்சம் கூரை வீடு களை மாநில அரசின் நிதியில் 6 ஆண்டுகளில் நிரந்தர வீடு களாகக் கட்டித் தரும் திட்டம்ங் கிறதையும் சொல்லியிருக்கிறார். இந்த நிதியாண்டில் மட்டும் 1800 கோடி ரூபாய் செலவில் 3 லட்ச நிரந்தர வீடுகள் கட்ட மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப் பட்டிருக்குதுன்னு விளக்கியிருக்கும் கலைஞர், இரண்டு திட்டங்களுக்கும் வித்தியாசம் புரியா மல் இளங்கோவன் பேசுவது, வலுப்படுத்துகிற செயல் அல்ல, வலிப்படுத்துகிற காரியம்னு பஞ்ச் வச்சிருக்காரு.''

""அடுத்த மேட்டர்?''

""புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பி வைத்த பணமெல்லாம் ராஜபக்சே கைக்குப் போன செய்தியை போன முறை பேசிக்கிட்டோமே.. அதன் தொடர்ச்சி யான விஷயத்தைத்தான் சொல்லப்போறேன். இலங்கை அரசாங்கத்தின் புனரமைப்பு பணிகள் துறையின் அமைச்சரான குணரத்னா அந்த நாட்டு பார்லிமெண்ட் டில் பேசும்போது, கே.பி.ங்கிற பெயரிலோ குமரன் பத்மநாபாங்கிற பெயரிலோ யாரும் அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களிலோ சிறைச்சாலையிலோ இல் லைன்னு ஒப்புதல் வாக்குமூலம் போல சொல்லி யிருக்காரு. அதாவது, மலேசியாவில் இன்டர்போல் போலீஸ் துணையோடு பிடிபட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி. இப்ப சுதந்திரமாகவும் அனைத்து வசதிகளும் பெறக்கூடிய ஸ்பெஷல் கெஸ்ட்டாகவும் இலங்கையில் நடமாடிக் கிட்டிருக்கிறார்ங்கிறதுக்கு அமைச்சரோட பதில்தான் சாட்சியம். இந்த நிலையில், புனரமைப்புக்காக உருவாக்கப் பட்டிருக்கும் நேர்டோ அமைப்பிற்கு கே.பி.யையே தலைவரா நியமிச்சி ருக்கிறாரு ராஜபக்சே.''

""விடுதலை உணர்ச்சியோடு, வியர்வையை காசாக்கிக் கொடுத்தாங்க உலகத் தமிழர்கள். அந்தப் பணத்தை ராஜபக்சேவிடம் விலையா கொடுத்து, தன்னோட விடுதலை யையும் புதுப்பதவியையும் பெற்றிருக்கிறார் கே.பி. தமிழர்கள் வரலாற்றில் எட்டப்பன்கள் கதை தொடர்ந்துகிட்டுத்தான் இருக்குது.''

""தலைவரே... அடுத்த மேட்ட ருக்கு வர்றேன். சென்னையில் கருத்துரிமை சம்பந்தமான ஒரு கூட்டத் திற்கு சமீபத்தில் ஏற்பாடானது. இதில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்துக்கணும்னு சிறை யில் இருக்கும் சீமான்கிட்டே கேட்டாங்க. எந்த அரசியல் கட்சியும் கலந்துக்காம, அரசியல் சாயம் பூசாமல் இருந்தா எங்க கட்சி பிரதிநிதிகள் கலந்துக்குவாங்கன்னு சொல்ல, கூட் டத்தை ஏற்பாடு செய்தவங்களும் சரின்னாங்க. ஆனா, கருத் துரிமை கூட்டத்தில் அ.தி.மு.க., ஆதரவுக் கட்சிகள் அழைக்கப்பட்டிருந்ததை அறிந்ததும், சீமானுக்கு அவரோட கட்சியினர் தகவல் தெரிவிக்க, தன் கட்சியின் பிரதி நிதிகள் கலந்துக்க மாட்டாங்கன்னு சீமான் சொல்லிட்டார். புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களிடமும், இங்கேயுள்ள தமிழ் உணர்வாளர்களிடமும் சீமானுக்குத்தான் இப்ப முதல் வர வேற்பு. இதே பிரச்சினைக்காக புயலாகச் சீறும் தலைவருக்கு இது பிடிக்கலையாம். அதனாலதான் சீமான் மீது அ.தி.மு.க. சாயத்தைப் பூசிட்டால் அந்த வரவேற்பு குறைஞ்சிடும்ங்கிற திட்டத்தோடுதான் கருத்துரிமை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்குது. சீமானுக்கு இது தெரிஞ்சதால தன் கட்சி பிரதிநிதிகளை அனுப்பலையாம்.''

""ஜெயலலிதாவுக்கு வாய்தா ராணின்னு மு.க.ஸ்டாலின் கொடுத்த புதுப் பட்டத்தையே முழக்கமா எழுப்பி தமிழகம் முழுக்க தி.மு.க. இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தி யிருக்குதே?''

""எழுச்சியோடு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு கூட்டம் வந்ததுங்கிற ரிப்போர்ட்டை இப்ப கலைஞரும் ஸ்டாலினும் பார்த்துக் கிட்டிருக்காங்க. திருச்சியிலும் திருவண்ணாமலையிலும்தான் மற்ற எல்லா இடங்களைவிட அதிக கூட் டம். 40 ஆயிரத்துக்கு மேலே தொண்டர் கள் திரண்டு இரண்டு நகரங்களையும் திணறடிச்சிட்டாங்க. கரூரில் 15ஆயிரம், சேலத்திலும் கிட்டதட்ட அதே அளவு, வடசென்னையில் 10ஆயிரம் பேர், தென் சென்னையில் 8ஆயிரம் பேர். தென்மாவட் டங்களில் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு இருக்காதுன்னு எதிர்க்கட்சிகள் எதிர்பார்த் துக்கிட்டிருக்க, மதுரையில் 15 ஆயிரத்துக் கும் அதிகமான தொண்டர்கள் கூடிட் டாங்க. மக்கள் தொகை குறைந்த சின்ன மாவட்டமான கன்னியாகுமரியில்கூட 2000 பேர் ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்தாங்க. பெரிய மாவட்டமான ஈரோட்டில் இரண் டாயிரத்துக்கும் குறைவான அளவில் ஆட் கள் கலந்துக்கிட்டாங்க. இதுபோல குறை வான கூட்டம் கூடிய மற்ற மாவட்டங்கள் பற்றியும் லிஸ்ட் எடுக்கப்பட்டிருக்குது.''

""சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகி கள் கவலைப்பட வேண்டிய விஷயம்...''

""தலைவரே... ... பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷனோடு தமிழ்நாட்டுக்குள்ளே ஓடிக்கிட்டிருக்கிற வாகனங்களுக்கு, இங்கே டாக்ஸ் கட்டணும்ங்கிறதில் போக்கு வரத்துத் துறை ஸ்ட்ரிக்ட்டா இருக்குது. துறை மந்திரியின் உத்தரவுப்படி ஆர்.டி.ஓ ஆபீஸ் அதிகாரிகள், பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் வாகனங்களை வெரிஃபை பண்றாங்க. அப்படித்தான் போன சனிக்கிழமையன்னைக்கு கள்ளக்குறிச்சி கடைவீதியில் நின்ற, பாண்டிச்சேரி ரிஜிஸ்ட்ரேஷன் இன்னோவாவை மோட்டார் வாகன ஆய்வாளர் செக் பண்ணினார். வண்டிக்குள் இருந்தவர் ஆதிசங்கர் எம்.பி. அவ்வளவுதான். எம்.பி. வண்டியையே செக் பண்ணுவீங்களான்னு அவர் சூடாக, ஆய்வாளர் ஸாரி கேட்க, விஷயம் உடனே மந்திரி நேருவுக்கு செல்போன் மூலம் போயிடிச்சி. நேரு வோ ஆதிசங்கர் கிட்டே, நாங்கதான் செக் பண்ணச் சொல்லியிருந்தோம். உங்க வண்டின்னு தெரிஞ்சிருக்காதுன்னு சொல்லி நிலைமைய கூல் பண்ணி யிருக்கிறார். அதற்கப்புறமும் ஆய்வாளரை எம்.பி. வறுத்தெடுத்ததால கள்ளக்குறிச்சி கடைத் தெருவே பரபரப் பாயிடிச்சி.''

""திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. பொதுக் குழுவில் அன்புமணி பேசியதும் பரபரப்பாயிடிச்சாமே?''

""மாவட்டவாரியா பா.ம.க. பொதுக்குழு நடத்திக்கிட்டிருக்குது. திருவண்ணாமலையில் அன்புமணி பேசுறப்ப, 108 ஆம்புலன்ஸ் திட்டத்தையே மத்திய சுகாதார அமைச்சரா இருந்த நான்தான் கொண்டு வந்தேன்னு சொன்னதோடு, நம்மை இழிவா பேசுறவங்களை அடிங்க. அப்படி அடிக்கிற கைக்கு நான் தங்கமோதிரம் போடுறேன்னு டென்ஷனா பேசினாரு. என்ன விஷயம்னா, பென்னாகரம் இடைத்தேர்தலின்போது, அங்கே பொறுப்பாளரா இருந்த அமைச்சர் எ.வ.வேலு பா.ம.க. பற்றி கடுமையா விமர்சனம் செய்தாராம். அதை மனசிலே வச்சுதான் அன்புமணி பேசியதா பா.ம.க. நிர்வாகிகள் சொல்றாங்க.''

""மத்திய அமைச்சர் அழகிரிகிட்டேயிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்திருக்குதே?''

""தென்மாவட்ட தி.மு.க.வினர் பற்றி வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்னு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டிருப்பதோடு, வதந்தி பரப்புறவங்க யாருன்னும் விசாரிக்க சொல்லியிருக்காரு அழகிரி. அவரோடு கூட இருக்கிற மிக முக்கியமான ஒருத்தரை அடிச்சிட்டதா வெளியான வதந்தியை யடுத்துதான் இந்த அறிவிப்பு வந்திருக்குது. அழகிரியை ஆஃப் பண்ணனும்னா, அவ ரோட இருப்பவங்களை முடக்கணும்னு கார்டனில் உள்ள ஒரு உதவியாளரும், மதுரையில் சிறை சென்று மீண்ட பத்திரிகையாளரும்தான் இப்படி வதந்தி பரப்புவதா அழகிரிக்கு தெரிய வந்திருக்குது. அதோடு, வேற சிலரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதா அழகிரிக்கு சந்தேகம் இருப்பதாலதான் விசாரிக்கச் சொல்லியிருக்காரு.''

""எதிர்பார்ப்புக்குரிய ஒரு விஷயத்துக்கு எதிர்பாராத எதிர்ப்பு வந்திருப்பது பற்றி நான் சொல்றேன்... "எந்திரன்' படம் ரொம்பவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்குது. இந்தப் படம் ரிலீசாவதற்கு வெளிநாட்டு வாழ் தமிழர்கள் கடும் எதிர்ப்பு காட்டும் மனநிலையில் இருக் காங்க. இந்த எதிர்ப்பை ஒருங் கிணைக்கும் முயற்சிகளும் வெளிநாடுகளில் நடந்துக் கிட்டிருக்குது. காரணம் என்னன்னு விசாரித்தேன். ரஜினி தன்னோட இரண்டாவது மகள் சவுந்தர்யா கல்யாணத்துக்கு சோனியாவை அழைத்திருப்பதா ஒரு தகவல். அந்தத் தகவல்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்ப் புணர்வுக்கு காரணம்.''

மிஸ்டுகால்!

ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வடக்கன்குளம் எஸ்.ஏ.ராஜாவை சுப்ரீம்கோர்ட் விடுவித்ததில் அருணா குடும்பம் ரொம்பவும் அப்செட். விடுதலையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் விரைவில் ரிவியூ பெட்டிஷன் போடத் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களை ரொம்பவும் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறது காவல்துறை.

கடல்வழியே வரும் தீவிரவாதிகளைப் பிடிக்கும் வகையில் போலீசார் அலர்ட்டாக இருக்கிறார்களா என கமாண்டோ படையினர் அண்மையில் நடத்திய பரிசோதனை 80% அளவுக்கு வெற்றிகரமாக நடந்தது. ரயில்வே ஸ்டேஷனிலும், மாயாஜாலிலும் தீவிரவாதிகள் போல நுழைந்த கமாண்டோக்களை மட்டும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒத்திகையில் 80% வெற்றி என்றாலும், உண்மையான தீவிரவாதிகள் வரும்போது, ஒத்திகை என்று அலட்சியமாக காவல்துறையினர் இருந்துவிடக்கூடாது.

சாத்தூரில் அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, மு.க.அழகிரியைப் பற்றி கூட்டத்திலிருந்து விமர்சனக் குரல் கிளம்பியது. இதைக் கவனித்த ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மைக்கைப் பிடித்து, "அவர் அப்படியெல்லாம் நடந்துக்கிட்டதை நீங்க பார்த்தீங்களா? அவர் அப்படிப்பட்டவரா இருந்திருந்தா இந்நேரம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாம பண்ணியிருப்பாரு. அழகிரி ஒண்ணும் ரவுடி கிடையாது. யாரும் இப்படித் தப்பா பேசக்கூடாது' எனப் பேசி, அரசியல் நாகரிகத்தைப் பாதுகாத்தார்.

காணாமல் போனது ஏன்? குஷ்பு அதிரடி!


சொத்துக் குவிப்பு வழக்கில் 14 ஆண்டுகள் தொடர்ந்து வாய்தா வாங்கி வரும் ஜெயலலிதாவைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது தி.மு.க. இளைஞர் அணி. தென் சென்னை மாவட்டம் சார்பில் சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்... தி.மு.க. மகளிரணி துணைத்தலைவர் விஜயாதாயன்பன், வசந்தி ஸ்டான்லி எம்.பி., இந்திரகுமாரி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், கயல்விழி அழகிரி ஆகியோர் கலந்துகொண்டு ஜெ.வை கண்டித்து முழக்கமிட்டனர்.

""இளைஞரணி மேடையில் மகளிர் அணிக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு'' என்று சுவாரஸ்ய கமெண்ட் அடித்தனர் தி.மு.க. இளைஞர்கள். ஆர்ப்பாட்ட மேடையில் மகளிர்கள் நிறைந் திருந்ததால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகை குஷ்பு வருவார் என்கிற எதிர்பார்ப்பு உ.பி.க்கள் மத்தியில் ஏகமாக எதிரொ லித்தது. ஆனால் கடைசிவரை குஷ்புவை காணவில்லை. ஆர்ப்பாட்ட முடிவில், இதனை மிகப்பெரிய "குறை'யாகவே பேசிக் கொண்டே கலைந்தனர் இளைஞரணியினர். இந்தக் கூட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை குஷ்பு.

இதுகுறித்து அவரை தொடர்புகொண்டு நாம் பேசிய போது... ""கட்சியில் நான் இணையும்போது, "எந்த கூட்டங்களில் பேசவேண்டும், எத்தகைய ஆர்ப்பாட்டங்களில், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்று தலைமை சொல்லும். அதற்கேற்ப உங்களின் புரோகிராம்களை வரையறை செய்து கொள்ளுங்கள்'னு தலைவரும் தளபதியும் எனக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால், தலைமை எதுவும் உத்தரவிடாததால் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வில்லை'' என்றார் குஷ்பு.


அவரிடம், ""வேறு சில பல காரணங்களால்தான் தலைமை உங்களை ஓரங்கட்டி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறதே?'' என்றதற்கு... மென்மையாக சிரித்துவிட்டு, ""அப்படிப்பட்ட எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை. வதந்திகளுக்கெல்லாம் எப்படி பதில் சொல்வது? ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் நான் கலந்துகொள்ள வேணாம்னு தலைமை நினைத்திருக்க லாம். இது தவிர வேறு காரணங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தேர்தல் நேரங்களில் பாருங்கள்... எனது பங்களிப்பும் வேகமும் தெரியும்'' என்றார்.

""ஒரு கட்சித் தலைவர் தன்மீதான வழக்கில் வாய்தா வாங்குவது ஒரு பிரச்சினையா? இதனைக் கண்டித்து இளைஞரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது... ""இது அவசியமான ஆர்ப்பாட்டம்தான். ஒரு கட்சியின் தலைவியான ஜெயலலிதா, நீதிக்குத் தலைவணங்க வேண்டும். அதைவிடுத்து, 14 வருடங்களாக ஏதேதோ சொத்தைக் காரணங்களையெல்லாம் சொல்லி வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிப் பது எப்படி சரியானது? மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல! வருமானத்துக்கு மீறி அதிகமாக சொத்து சேர்க்கவில்லையென்றால், துணிச்சலாக வழக்கைச் சந்தித்து, தான் நிரபராதி என்று ஜெயலலிதா நிரூபிக்கலாமே? அதனைச் செய்ய ஏன் தயங்குகிறார்? தடுமாறுகிறார்? மடியில் கனமில்லையென்றால் ஏன் ஜெயலலிதா பயப்பட வேண்டும்? வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது எப்படி தவறோ, அதேபோல வாய்தா மேல் வாய்தா வாங்கி இழுத்தடிப்பதும் தவறுதான். அதனால் இதனை மக்களிடம் கொண்டு செல்வது தி.மு.க.வின் கடமை. அதனை இளைஞரணியினர் செய்திருக்கிறார்கள். ஆரோக்கியமான ஆர்ப்பாட்டம் இது'' என்கிறார் அதிரடியாக குஷ்பு.

""ஜெ.'' சொத்து குவிப்பு வழக்கில் நடப்பது என்ன? -"ஜவ்' ரிப்போர்ட்!


தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை 14 வருடங்களாக ஜெயலலிதா, இழு... இழு... என இழுத்தடிப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. இளைஞரணியினருக்கு உத்திரவிட்டிருந்தார் மு.க.ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து 4-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. இளைஞரணியினர், ஜெ.வை கண்டித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு காரணமான, ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 14 வருடங்களாக என்னதான் நடக்கிறது என்பதை விசாரித்தோம்.

18-09-1996

முதல் தகவல் அறிக்கை வழக்கு. குற்ற எண்: 13 ஏ.சி./96/ஹெட்குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் இந்தியாவிற்குள் உள்ளவை.)

04-06-1997

சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

05-06-1997

நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை விசா ரணைக்கு ஏற்றுக் கொண்டு குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்பியது.

21-10-1997

2, 3 மற்றும் 4-ம் குற்றவாளி களான சசிகலா, சுதாகரன், இளவரசி தாக்கல் செய்த விடுவிப்பு மனுவை தள்ளுபடி செய்து 4 குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

02-09-2000

இரண்டாவது வழக்கு. குற்ற எண்: 2 ஏ.சி./2000/ஹெட் குவார்ட்டர்ஸ் Charge u/s.13(1) (e) r/w 13(2) of the P.C.Act and u/s.120-B r/w 109 IPC (கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு அதிகமான கணக்கு காட்ட முடியாத அளவில் சேர்த்த சொத்துக்கள் லண்டனில் உள்ளவை.)

23-03-2001

2-வது வழக் கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது.

17-04-2001

குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது. (முதல் குற்றவாளி ஜெயலலிதாவை தலைமையாகக் கொண்ட அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றது. முதல் குற்றவாளி ஜெயலலிதா மே 2001-ல் முதலமைச்ச ரானார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத் தால் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 21-09-2001-ல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அதே சமயம், முதல் குற்றவாளி ஜெயலலிதா 02-03-2002-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.)

நவ 2002-பிப் 2003

76 சாட்சிகள் திரும்ப அழைக்கப்பட்டு விசாரிக்கப் பட்டனர். அவர்கள் ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்திலிருந்து பல்டி அடித்தனர்.

21-02-2003

அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவுற்றது.

24-02-2003

குற்றவாளிகளிடம் 313 சி.ஆர்.பி.சி. படி கேள்விகள் கேட்கப்பட்டது.

27-02-2003

குற்றவாளிகள் தரப்பில் சாட்சிகள் 1 மற்றும் 2 விசாரிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றது.

28-02-2003

கடந்த தேதியில் நடைபெற்ற விவாதம் தொடர்ந்தது. உச்சநீதிமன்றம் டிரான்ஸ்பர் பெட்டிஷன் 77-78/2003-ல் இந்த வழக்கிற்கு தடைவிதித்தது. 18-11-2003 இரண்டு வழக்குகளும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு சிறப்பு வழக்கு எண்.208/2004 மற்றும் 209/2004 ஆக உச்சநீதிமன்றத்தால் மாற்றம் செய்யப்பட்டது.

28-03-2005

சாட்சிகளின் வாக்குமூலங்களும் வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசிற்கும் வழங்கப்பட்டது.

27-06-2005

முதல் குற்றவாளி ஜெயலலிதா 11-02-2002-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த மனுவை பெங்களூர் நீதிமன்றம் விசாரித்து 2 வழக்கையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது.





ஜூலை 2005

2 வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் எஸ்.எல்.பி. 3828/2005 என்ற மனு பேராசிரியரால் தாக்கல் செய்யப்பட்டது.

05-08-2005

உச்சநீதிமன்றம் 3828/2005 வழக்கில் பெங்களூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்தது.

07-12-2009

உயர்நீதிமன்றம் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு எண்:938/2009-ஐ ஏற்றுக் கொண்டு 2-வது வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தது.

30-01-2010

சிறப்பு அரசு வழக்கறிஞர் 45 சாட்சிகளை திரும்ப அழைப்பதற்கு அனுமதி கேட்டு மனு எண்.: 321/2010 தாக்கல் செய்தார். அதே நாளில், குற்றவாளிகள் தரப்பில் வழக்கு விசாரணைக்கு அனுமதித்த உத்தரவில் காட்டப்பட்டிருந்த 2 அறிக்கைகள் வழக்கில் தாக்கல் செய்வதற்காக அனுமதி கேட்டு மனு எண்: 322/2010 தாக்கல் செய்தது.

25-02-2010

சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு எண்:321/2010 நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனு எண்: 322/2010 நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

03-03-2010

அரசு தரப்பு சாட்சிகள் 42 பேரும் நேரில் ஆஜராகுமாறு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. சாட்சிகள் விசாரணை 18-03-2010 முதல் 26-03-2010 வரை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்தது. அதே நாளில் குற்றவாளிகள் தரப்பில் மனு எண்: 340 மற்றும் 341 தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் சம்மன்களை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும் என்று குற்றவாளிகள் கோரினர்.

04-03-2010

03-03-2010-ல் 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி (மனு எண்: 346) குற்றவாளிகள் மனு தாக்கல் செய்தனர். அதே நாளில் 340, 341 மற்றும் 346 அனைத்திலும் விவாதம் நடைபெற்றது.

05-03-2010

மனு எண்: 340, 341, 346-ஐ தள்ளுபடி செய்தது விசாரணை நீதிமன்றம்

மார்ச் 2003

05-06-1997-ல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து மனு எண்: 79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் குற்றவாளிகள்.

10-03-2010

79/2010 கர்நாடக உயர்நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

19-03-2010

மனு எண்: 79/2010 தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. 2248/2010 குற்ற வாளிகள் தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கு பற்றி சில கருத்துக்களை தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

22-03-2010

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 03-05-2010-க்கு வழக்கை மீண்டும் துவக்க நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

18-04-2010

இந்த வழக்கின், விசாரணை அதிகாரிக்கு அனு மதி வழங்கப்படவில்லை. அதனால் இதன் விசாரணை முழுவதும் சட்டவிரோதமானது என்றும் வழக்கு விசாரணை முழுவதையும் இத்துடன் நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு மனு எண்: 359-ஐ தாக்கல் செய்தனர்.

27-04-2010

ஆனால் இந்த மனுவை (மனு எண்: 359) விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

07-05-2010

11-05-2010-ல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை வருகிறது அதனால் இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் முதல் குற்றவாளி ஜெயலலிதா கோரிக்கை வைத்தார். அதனால் வழக்கு 11-05-2010-க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

11-05-2010

விசாரணை நீதிமன்றத்தில் மனு எண்: 359 தள்ளுபடி செய்யப்பட்டதால் அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி.3836/2010 மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறை சட்டம் 482-ன் படி தாக்கல் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

மே 2010

70,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கண்ட ஆவணங்களில் 3 நகல்கள் தேவையென முதல் குற்றவாளி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.

21-07-2010

3-ம் குற்றவாளி சுதாகரன் சார்பிலும் அதே மனு தாக்கல் செய்யப்பட்டது.

22-07-2010

மனு எண்: 396, விசாரணை நீதிமன்றத்தால் சில வழிகாட்டுதல்களுடன் நிராகரிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்தபோதிலும் குற்றவாளிகள் வழக்கை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டதால் வழக்கு விசாரணை 6-8-2010, 9-8-2010, 11-08-2010 மற்றும் 13-08-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

29-07-2010

மனு எண்: 396 நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து முதல் குற்றவாளி ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ( வழக்கு எண்: 3748/2010 ).

30-07-2010

மனு எண்: 396-ல் வழங்கப்பட்ட உத்தரவில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் ஒரு பகுதிக்கு அரசு சார்பில் அரசின் சிறப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார் (வழக்கு எண்: 3766/2010). கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 16-08-2010-ல் மேற்படி இரண்டு மனுக்களும் விசாரணைக்கு வருகின்றன.

இப்படி கடந்த பதினான்கு வருடங்களாக பல்வேறு காரணங்கள் கூறி விசாரணையை ஜெயலலிதா இழுத் தடித்துக் கொண்டேயிருந்தாலும் இறுதியில் இவ்வழக்கில் தனக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும் இந்த வழக்கிலிருந்து நாம் தப்பிக்க முடியாது என்பதை ஜெயலலிதா உணர்ந்தே இருப்பதாலும்தான் மனு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்துக் கொண் டிருக்கிறார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரம் கூறுகின்றது.

Saturday, August 7, 2010

கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சியடைந்தேன்: குமரன் பத்மநாதன் விசேட செவ்வி


தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரும்ஆயுதக்கொள்வனவாளரும் வே. பிரபாகரனுக்குப் பின்னர் அவ்வமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டவருமான தம்பையா செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த 05.08.2009 ஆம் திகதி கோலாலம்பூரில் 316, ஜலான் துங்கு அப்துல் ரஹ்மான் வீதியிலுள்ள பெர்ஸ்ட் ரியூன் ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டு மறுநாள் கொழும்புக் கொண்டு வரப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியான கடந்த 5 ஆம் திகதி வியாழனன்று சிரேஷ்ட ஊடகவியலாளர் shockan, www.shockan.blogspot.com பத்திரிகைக்காக தொலைபேசி மூலம் குமரன் பத்மநாதனை பிரத்தியேகமாக செவ்வி கண்டுள்ளார்.



கே: கடந்த வருடம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நீங்கள் கைது செய்யப்பட்டீர்கள். ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உங்கள் தற்போதைய சூழ்நிலை குறித்து எவ்வாறு வர்ணிப்பீர்கள்?

ப: நான் கைது செய்யப்பட்டபோது அதிர்ச்சிடைந்தேன். சுமார் ஒரு மணித்தியாலம் பெரும் திகைப்பாக இருந்தது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட போதும் கவலையடைந்தேன். ஆனால் நான் கடவுளை நம்புகிறேன். மோசமான நிலை ஏற்படலாம் என அச்சமடைந்த போதிலும் நான் அதிஷ்டசாலி. நான் கைது செய்யப்பட்டமை எனக்கு நன்மையளித்துள்ளது. துன்பப்படும் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. எமது போராட்டம் இலங்கையிலுள்ள எமது மக்களை குறிப்பாக வன்னியிலுள்ள மக்களை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது. இப்போது NERDO வின் (வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) ஊடாக சிறிய வழியிலேனும் என்னால் அவர்களுக்கு உதவ முடிகிறது.

கே: நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் சூழ்நிலை என்ன?

ப: நான் வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளேன். நான் வெளியே போக முடியாது. ஆனால் வீட்டிற்குள்ளே சுதந்திரமாக எங்கும் நடமாடலாம். தொலைபேசியில் பேசுவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. என்னை இங்கு சந்திக்க வருவதற்கு மக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான் யாரையும் சந்திப்பதென்றால் நான் அனுமதி பெற வேண்டும். அவர்களை சந்திப்பதற்கு நான் வெளியே செல்லும்போது சில அதிகாரிகள் என்னுடன் வருவார்கள். கட்டுப்பாடற்ற வகையில் மின்னஞ்சல் (ஈமெயில்) பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

கே: எந்த வழியிலாவது நீங்கள் மோசமாக நடத்தப்பட்டீர்களா?

ப: இல்லை நான் நான் மிகவும் தயைவுடன் நடத்தப்படுகிறேன். ஆரம்ப நாட்களில் சிலவகை பதற்றம் இருந்தது. ஆனால் நாட்கள் சென்றபின் நம்பிக்கையும் பரஸ்பர மரியாதையும் நிலவுகிறது.

கே: எவ்வாறு இந்த சூழ்நிலை ஏற்பட்டது? புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் நீங்கள் அரசாங்கத்துடன் உடன்பாடொன்றைச் செய்துகொண்டதாகவும் உங்கள் கைது ஒரு நாடகம் எனவும் கூறுகிறார்கள். எவ்வாறு நீங்கள் கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள்?

ப: எனக்கெதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எனக்குத் தெரியும். ஆனால் நான் எப்படி கைது செய்யப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது கைது குறித்து ஆங்கிலத்தில் விரிவாக எழுதிய முதல் நபர் நீங்கள்தான். பல நாட்களின்பின் நான் அதை வாசித்தபோது சில சிறிய விடயங்களைத் தவிர, பெரும்பாலானவை சரியாக இருந்தன. இவர்கள் என்ன சொன்னாலும் உண்மை என்னவென்றால் நான் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: நீங்கள் எவ்வாறு கைது செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டீர்கள் என்று கூறமுடியுமா?

ப: நான் ஹோட்டல் அறையில் அமர்ந்து, இங்கிலாந்திலிருந்து மலேசியாவுக்கு வந்திருந்த புலிகளின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சகோதரருடனும் அவரின் மகனுடனும் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சி.எம்.ஆர். வானொலியிலிருந்து ராகவன் பேசினார். தொலைபேசி சமிக்ஞை தெளிவாக இருக்கவில்லை. அதனால் நான் அவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றேன்.

நான் ஹோட்டல் ஓய்வரங்கப் பகுதிலுள்ள கதிரையொன்றில் அமர்ந்து தொடர்ந்தும் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென மலேசிய அதிகாரிகள் குழுவொன்று என்னை சூழ்ந்துகொண்டது. ஒருவர் "வெரி சொரி மிஸ்டர் கே.பி". என்று கூறிவிட்டு எனது தொலைபேசியை கைப்பற்றிக்கொண்டார். அது கீழே விழ மற்றொரு அதிகாரி அதை எடுத்தார். என்னை அவர்களுடன் வருமாறு கூறினர். அவர்களுடன் செல்வதைத் தவிர எனக்குத் தெரிவுகள் எதுவும் இருக்கவில்லை.

நான் கோலாலம்பூரிலுள்ள குடிவரவு தடுப்பு நிலையமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சுமர் 36 மணித்தியாலங்கள் - 2 பகல்களும் 2 இரவுகளும் அங்கு வைக்கப்பட்டிருந்தேன். தடுப்பு நிலைய அறையொன்றில் நான் உறங்கவேண்டியிருந்தது. அவர்களின் உரையாடல் மூலம் நான் அதிகாரபூர்வமாக நாடுகடத்தப்படவுள்ளேன் என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால் நான் இலங்கைக்காக, இந்தியாவுக்கா, அமெரிக்காவுக்கா அல்லது வேறெங்குமா கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

அதன்பின் நான் கோலாலம்பூர் விமான நிலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்று காத்திருந்தது. அப்போது நான் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படப் போகிறேன் என்பது தெரிந்தது. நான் விமானத்தின் சிக்கன வகுப்புக்கான வாசல் வழியாக ஏற்றப்பட்டு பின்னர் உட்புறமாக வர்த்தக வகுப்பிற்கு மாற்றப்பட்டேன். அதையடுத்து நான் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டேன்.

கே: கைது செய்யப்பட்ட காலத்தில் நீங்கள் தாய்லாந்தில் வசித்தீர்கள். இந்நிலையில் பாங்கொக்கில் அல்லாமல் கோலாலம்பூர் புறநகரில் நீங்கள் இயங்கியமைக்கான காரணம் என்ன? 2007 ஆம் ஆண்டு நீங்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதனாலா?

ப: நான், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளியே இருந்தபோது தாய்லாந்தில் பல வருடங்கள் அமைதியான வாழ்க்கையை முன்னெடுத்தேன். நான் அங்கு வசிப்பதும் அறியப்பட்டிருந்தது. மீண்டும் நான் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயற்படத் தொடங்கியபோது தாய்லாந்திலுள்ள எனது குடும்பத்தின்மீது மற்றவர்களின் கவனம் ஈர்க்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் நான் கோலாலம்பூருக்குச் சென்றேன். அத்துடன் எல்லர் இடங்களிலுமிருந்தும் மக்கள கோலாலம்பூருக்கு வந்து என்னை பார்ப்பதும் இலகுவாக இருந்தது. உண்மையில்நான் 2007 இல் கைது செய்யப்படவில்லை. என்னை கைதுசெய்ய ஒரு முயற்சி நடந்தது. சில அதிகாரிகள் அதிகாலை வேளையில் எனது வீட்டை சூழ்ந்துகொண்டனர். அதிஷ்டவசமாக நான் அங்கு இருக்கவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டுவிட்டதாக இலங்கையில் செய்தி கசிந்தது.

Thursday, August 5, 2010

click the link below to download endhiran song




http://www.tamilat.com/tamilsongs/newreleases/Enthiran/index.html

வெளிவராத எந்திரன் படக்கதை!


ரஜினிகாந்த், ஷங்கர், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, வைரமுத்து என வியத்தகு வித்தகர்கள் ஒண்ணுகூடி உருவாக்கி வரும் ‘"எந்திரன்'’படத்திற்கு ஏற்கனவே உள்நாடு, வெளிநாடு என ஏகப்பட்ட இண்டர்நேஷனல் எதிர்பார்ப்பு. இந்நிலையில் கடந்த 31ந் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புத்ர ஜெயா நகரின் மாநாட்டு மண்டபத்தில் ‘"எந்திரன்'’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாய் நடந்தது. இதனால் உலக சினிமா மார்க்கெட்டில் ‘"எந்திரன்' ஃபீவர்’ ஏகத்துக்கும் ஏறிப்போயிருக்கிறது.

ஐங்கரன் நிறுவன தயாரிப்பில் தொடங்கப் பட்ட "எந்திரன்'’ பொருளாதார பிரச்சினையால் நின்று போக... 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப்படத்தை சன் டி.வி. அதிபர் கலாநிதி மாறனால் மட்டுமே தயாரிக்க முடியும் என முடிவு செய்த ரஜினி, கலாநிதிமாறனிடம் பேசினார். சன் குழுமத்தின் நேரடி முதல் தயாரிப்பாக ‘"எந்திரன்'’ உருவாகிவிட்டான்.

தமிழில் உருவாகி வரும் இந்த மெகா படம் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியாக விருக்கிறது. ‘சினிமாவின் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் படம் ‘என எந்திரனின் நாயகி ஐஸ் அளித்து வரும் பேட்டி களால் வடக்கிலும் இந்தப்படத்திற்கான மவுசு கூடிக்கொண்டே இருக்கிறது.

அப்படி என்ன கதை எந்திரனின் கதை?

ஆபத்தான விஷயங்களில் இருந்து மக்களை மீட்பது உள்ளிட்ட நல்லகாரியங்களுக்காக தனது தோற்றத்தை பிரதிஎடுத்து இயந்திர மனிதனை உருவாக்குகிறார் விஞ்ஞானி ரஜினி. ஆனால் எதிர்பார்ப்பை மீறி மனிதனுக்கு உரிய காத லுணர்ச்சி, பகையுணர்ச்சியெல்லாம் எந்திரனுக்கும் வந்துவிடுகிறது. விஞ்ஞானியின் காதலியான ஐஸ்வர்யா பச்சனை எந்திர ரஜினி காதலிக்க... இதனால் பல குழப்பங்கள். இந்த காதல் கிறுக்கால் உள்ளே இருக்கும் சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டு வில்லனாக மாறு கிறான் எந்திரன். ஒரு பெரிய கப்பல் முழுக்க அதி பயங்கர நவீன ஆயுதங்களோடு சென்னையை அழிக்க வருகிறது எந்திரன். அந்தக் கப்பலை நடுவழியில் மறித்து பெரும் போராட்டம் நடத்தி கப்பலை மூழ் கடிக்கிறார் விஞ்ஞானி. சென்னைக்கு வந்த ஆபத்து நீங்குகிறது. இதுதான் எந்திரன் கதை.

ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ்தான் விவாதமாகியதாம். எந்திரன் ரஜினி வில்லனாக இருந்தாலும் அந்த ரஜினியை அழிப்பதை ரசிகர் கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்கிற தயக்கம் எந்திரன் யூனிட்டுக்கு. இதனால் இரண்டு க்ளைமாக்ஸ் ரெடி. ஒன்று எந்திரனை விஞ்ஞானி அழிப்பது. இன்னொன்று... சர்க்யூட்டில் கோளாறு ஏற்பட்டதால் தாறுமாறாக செயல்படும் எந்தி ரனை தந்திரமாக கட்டுக்குள் கொண்டுவரும் விஞ் ஞானி அந்த சர்க்யூட்டை சரி செய்து, எந்திரனை நல்லவனாக்கி நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த அனுப்பி வைப்பது. இப்படி இரண்டுமுடிவில் எதை படத்தில் சேர்ப்பது என்பதை படம் வெளியாகும் நேரத்தில் முடிவு செய்துகொள்ள தீர்மானித்திருக்கிறார்கள்.

எந்திரனுக்காக விதவிதமான தோற்றம் கொண்ட பல வாகனங்கள் உருவாக்கி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதில் ரொம்பவும் விசேஷமானது முன்பக்கமும், பின்பக்கமும் ஓட்டக்கூடிய பைக்.

படத்தில் எந்திரனின் தோற்றம் இரும்பு மனிதனாக இருக்கும். அது நடந்தால் என்ன மாதிரியான சத்தம் வரும்? இரும்பு மனிதனின் குரல் எப்படி இருக்கும்? அதை எந்த மாதிரி உருவாக்குவது... என்கிற யோசனைக்கு அதிரடி தீர்வு கண்டவர் ரசூல் பூக்குட்டி. "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ஸ்பெஷல் சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ஆஸ்கர் விருது வென்ற பூக்குட்டி பெரிய ஆராய்ச்சிக்குப் பின் ஒரு சாஃப்ட்வேரை உருவாக்கி எந்திரனின் குரலுக்கும், நடைக்குமான ஒலியை உருவாக்கினாராம். ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு இணையான படைப்பாக ‘"எந்திரன்'’ வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்திருக்கிறது ஷங்கரின் யூனிட்.

இனி... எந்திரவிழா சங்கதிகள்....

ஷங்கர் தயாரித்த ‘"ரெட்டைச்சுழி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த ஐஸ்ஸை சரிவர ரிஸீவ் பண்ணவில்லை. மேடைக்கு அழைப்பதற்கு முன்... கீழே ஐஸ் அமருவதற்கு ஒருத்தர் கூட எழுந்து இடம் தரவில்லை. அதனால் ‘எந்திரன்’ விழாவில் மேடைக்கு பின் வழியாக மேடைக்கு வர ஏற்பாடு செய்யும்படி ஐஸ் தரப்பில் கேட்டார்களாம். ஆனால் அந்த வசதி செய்து தரப்படவில்லை. ஐஸின் மேக்-அப் கிட் பாக்ஸையும் யாரோ கூட்டத்தில் ஆட்டயப் போட்டுட்டாங்களாம். ரகஸியாவும், மேக்னா நாயுடுவும் கலக்கலாக குத்தாட்டம் போட்டு குஷிப்படுத்தினார்களாம். வெள்ளிப்பனித் தலையர் போல விழாக்களுக்கு மேக்-அப் இல்லாமல் வரும் ரஜினி டை அடித்து செம ஸ்மார்ட்டாக வந்தார்.

வடிவேலு ‘அவிய்ங்க இவிய்ங்க’ பாணியில் ரஜினியின் மாஸ் குறித்து ஒரு குட்டிக் கதை சொல்லி கைதட்டல் வாங்கினார். ரஜினியின் பாடல்களுக்கு சிம்பு ஆட்டம் போட்டார். "படையப்பா' வசனத்தை மேடையில் பேசினார் ரம்யாகிருஷ்ணன். சீன கலைஞர்கள் நடத்திய நிகழ்ச்சியை ரசித்து கைதட்டி பாராட்டினார் ரஜினி. விழாவில் மலேசிய தமிழ் அமைச்சர்களும், கட்சித்தலைவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆனால் அவர்கள் யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை. தொகுத்து வழங்கிய விவேக்கும், மலேசியாவைச் சேர்ந்த புன்னகைப்பூ கீதாவும் கூட விழாவுக்கு வந்திருந்த அமைச்சர்களின் பெயரையோ, விழாவை ஏற்பாடு செய்து நடத்திய ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரையோ சொல்லவில்லை. இதனால் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் "இங்குள்ள இந்திய தலைவர்களுக்கு உரிய மரியாதை தராதது கண்டனத்திற்குரியது' எனச் சொல்லியிருக்கிறார். ஆனால் விழாவை நடத்திய ஆஸ்ட்ரோ நிறுவனமோ ‘ரஜினி, ரஹ்மான், ஐஸ்வர்யா என முக்கிய பிரமுகர்கள் வந்ததால் ஒரு பரபரப்பும், பதட்டமும் இருந்ததால் எங்களால் உங்களை சரிவர உபசரிக்க முடியவில்லை. இதை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம்’ என மந்திரியை சமாதானப்படுத்தியதாம்.

பிரமாண்ட விழாக்களில் இந்த மாதிரி சிறுசிறு வருத்தங்கள் சகஜம்தான். அதப் போயி நாம எதுக்கு பெருசுபடுத்த ணும்?

கடந்த சில வருடங்களாக உலகம் வியக்கும் ஹாலிவுட் படங்களுக்கான தொழில்நுட்ப வேலைகள் சென்னையில்தான் நடக்கிறது. இந்த நிலையில் ‘எந்திரன்’ தமிழ்ப்படம் மூலம் நமது கலைஞர்கள் ஹாலிவுட்டின் கவனத்தை ஈர்க்கப் போகிறார்கள் என்பது நிச்சயம்.

மங்காத்தா... ஆட்டத்தை ஆரம்பித்த அஜீத் - வெங்கட் பிரபு


அஜீத்தின் 50வது படமான மங்காத்தா குறித்து முதல் முறையாக அதிகார்ப்பூர்வ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஜீத்தின் மேனேஜர் - படத்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா மற்றும் விகே சுந்தர் வெளியிட்டுள்ள செய்தி:

அசல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் 50 - வது படத்திற்கு 'மங்காத்தா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழ்ப் படம்,வாரணம்ஆயிரம், பையா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து விரைவில் வெளிவர இருக்கும் 'நான் மகான் அல்ல' படத்தை தொடர்ந்து கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வரும் இந்தப் படத்தை சென்னை-600028, சரோஜா, கோவா ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்குகிறார்.

அஜித் குமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாளான ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று அவர் நடிக்கும் ஐம்பதாவது படமான மங்கத்தா படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கின் படப்பிடிப்பு தளத்தில் பூஜையுடன் தொடங்கியது. தியேட்டர்களில் திரையிடப்படும் முன்னோட்டக் காட்சிக்கான காட்சிகள் அன்று படமாக்கப்பட்டன.

படத்தைப் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு கூறுகையில், "அஜித்குமார் பதினெட்டு வருட சினிமா வாழ்க்கையின் தொடர்ச்சியாக தனது பத்தொன்பதாவது வருட சினிமா பயணத்தை தொடரும் இந்த நல்ல நாளில் நாங்கள் அவருடைய 50 - வது படமான மங்காத்தா படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளோம்.

முதல் நாளான இன்று, தியேட்டரில் பிரத்தியேகமாக திரையிடுவதற்கான ட்ரைலர் காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. மிக விரைவில் ரசிகர்கள் இந்த படத்தின் ட்ரைலரை தியேட்டரில் காணலாம்.

மங்காத்தா படத்தில் அஜித்துடன் நடிக்கும் கதாநாயகிகள் யார்? யார்? என்று இன்னும் முடிவாகவில்லை. கதாநாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தில் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாகர்ஜுனா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனுடன் மஹாத் என்ற புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். படத்தின் என்பது சதவீத காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட உள்ளன.

இம்மாத இறுதியில் இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற உள்ளது. வருகிற கோடை 2011 - ல் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது," என்றார்.

முன்னதாக படத்தின் துவக்க விழாவில் கிளவுட் நைன் மூவீஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் விவேக் ரத்னவேல், கங்கை மரன், எஸ்.பி.பி.சரண், தயாரிப்பாளர் டி.சிவா, தயாரிப்பார்கள் ஏ.வி.எம் குமரன், ஏ.வி.எம் சண்முகம் உட்பட படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவு : சக்திசரவணன், படத்தொகுப்பு : பிரவீன், இசை : யுவன் ஷங்கர் ராஜா,சண்டைப்பயிற்சி : செல்வா, கலை : விதேஷ்,

நிர்வாகத் தயாரிப்பு : கே.சுந்தர்ராஜ்,தலைமை நிர்வாகி : சுஷாந்த் பிரசாத், தயாரிப்பு : தயாநிதிஅழகிரி.

காஞ்சி மடத்தில் வாஸ்து கோளாறாம்!


காஞ்சி மடத்தில் நடத்தப்படும் யாகங்களைக் காட்டிலும், தன் தாயார் பிறந்த இருள் நீக்கியில் நடத்தப்படும் யாகங்களால்தான் தனக்கேற்பட்ட களங்கங்கள் தீருமென்றுதிடமாக நம்புகிறாராம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்.

ஜெயேந்திரரின் உடன்பிறந்த சகோதரர் சந்திரசேகரின் பெயரில் செயல்படும் ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் என்ற அமைப்புதான் ஜெயேந்திரரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28, 29, 30-ஆம் தேதிகளில் இருள்நீக்கி கிராமத்தின் நட்ட நடுவில், கணபதி ஹோமம், ஆவஹந்தி யாகம், ஆயுஸ்ய யாகம், தவபிரவ ஹோமம், மிருஞ்ஜெய ஹோமம், ரிக்வேத யாகம் ஆகிய யாகங்களை நடத்தியது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகிலுள்ள பெரியகுடி என்ற கிராமம்தான் ஜெயேந்திரரின் தந்தை யுடைய கிராமம். ஆனால், அங்கிருந்த நிலபுலன்களை விற்றுவிட்டு, ஜெயேந்திரரின் தாய் பிறந்த இருள்நீக்கி கிராமத்தில் செட்டிலாகிவிட்டது ஜெயேந்திரர் குடும்பம். இந்த இருள்நீக்கியைத் தான் தனது பிறந்த மண்ணாக்கிக் கொண்டார் ஜெயேந்திரர்.

""வருஷா வருஷம், சங்கராச்சாரியார் பிறந்த ஆடிமாத அவிட்ட நட்சத்திர நாட்களில் இருள் நீக்கியில் சாதாரணமாகத்தான் விழா கொண்டாடி னோம். ஜெயேந்திரர் மீது கேஸ் மேல கேஸா போட்டு அபகீர்த்தி ஆன பிறகுதான் கடந்த ரெண்டு வருஷமா ஸ்பெஷல் யாகம் நடத்தணும்னு சொல்லியனுப்பினார். இதே வேளையில காஞ்சி மடத்திலயும் யாகம்... பிறந்த நாள் விழா தட புடலா நடப்பதால் சங்கராச்சாரி யார் இருள்நீக்கிக்கு வர்றதில்லை. தாமரைப்பாக்கம் நாராயண சாஸ்திரிகளும், தியாகராஜ சாஸ்திரிகளும்தான் எல்லா யாகங்களையும் நடத்தினாள்... பாருங்கோ... எல்லா யாகமும் ஹோமமும் ஷேமமா நடத்திட் டோம். சங்கராச்சாரியாருக்கு வந்த சோதனையெல்லாம் பனித்துளி மாதிரி மறைஞ்சு போகப் போகுது. காஞ்சி மடத்துக்கு ஏற்பட்ட அவப்பெயரெல்லாம் ஒழிஞ்சு... மறுபடியும் மடத்தோட பெருமை பிரகாசமா ஜொலிக்கப் போகுது. காஞ்சி மடத்துல ஹோமம் பண்ணின வடநாட்டு சாஸ்திரிகள் எல்லாரும் இதைத்தான் சொல்லிருக்கா!'' என்று பூரண திருப்தியோடு சொன்னார் யாகத்தில் கலந்து கொண்ட உள்ளூர் குருக்கள் ஒருவர்.

""யாகம் மட்டுமில்லாமல், சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறு வன மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறதே... அதைப் பார்க்கவும், படமெடுக்கவும் கூட எங்களை அனு மதிக்க மறுக்கிறீர்களே?'' -டிரஸ்ட் நிர்வாகிகளிடம் கேட்டோம்.

""பொதுமக்கள் யாரும் வரலாம். எந்த சாதி, எந்த மதமானாலும் வரலாம். அனுமதிக்கச் சொல்லிவிட்டார் சங்கராச் சாரியார். ஆனால், பத்திரிகை நிருபர்களை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார். யாராவது கேமராவோடு உள்ளே வந்தால்... கேமராவை பறிக்கச் சொல்லி இருக்கிறார். தயவு செய்து போய் விடுங்கோ...!'' என்றார்கள் குருக்கள்களும் டிரஸ்ட் நிர்வாகிகளும்.

காஞ்சியிலிருந்து இருள்நீக்கிக்கு வந்த சாஸ்திரி ஒருத்தர், இருள்நீக்கி குருக்களிடம் ""யாகம் செஞ்சா மட்டும் போதாது. காஞ்சி மடமும், பெரியக்குடிக் கோயிலும் வாஸ்து சரியில்லாமல் தான் இழப்புகளும் கெட்ட பெயரும் சங்கரராமன் கொலை(!) வழக்குகளும் வந்தது. மாற்றியமைச்சுட்டு, இப்படிப்பட்ட யாகங்களை நடத்துங்கோனா... பெரியவா... வாஸ்தைப் பற்றிக் கவலைப்படவே மாட்டேங்கிறார். அனாவசியமா... லட்சம் லட்சமா செலவு செஞ்சு யாகங்களை நடத்தச் சொல்றார்!'' என்று வேதனைப்பட்டதும் நம் காதில் விழுந்தது.

ராஜபக்சேவுக்கு போன தமிழர்கள் பணம்!


""ஹலோ தலைவரே... தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி காங் கிரஸ் கட்சியிலிருந்தே கருத்துகள், விமர்சனங்கள் வந்துக் கிட்டே இருப்பதன் பின்னணி பற்றித்தான் முதல் தகவல்.''

""சோனியா முடிவு செய்த கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உத்தரவு போட்டிருக்காரே?''

""தமிழக காங்கிரசுக்குள் எத்தனை தலைவர்கள் இருக்காங்கன்னு தொண்டர்களாலேயே கணக்கு சொல்ல முடியாது. முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்துக்கொண்டிருக்கிறார். மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்திலும் அதே பாணியில் இளங்கோவன் பேச, உடனே ஆரூண் எம்.பி அதற்குப் பதில் சொல்லும்விதத்தில், இந்தக் கூட்டணிதான் வலிமையானது. இது நீடிக்கணும்னு சொன்னார். ஆரூணுக்கு எதிரா கோஷங்கள் கிளம்பிடிச்சி. தி.மு.க கூட்டணியை ஆதரித்து யார் பேசினாலும் அவங்களை எதிர்த்து கோஷம் போடுறதுக்காக ஒரு டீம் ரெடி பண்ணப்பட்டு, இளங்கோவன் பேசும் கூட்டங்களுக்கு அவரோடு அனுப்பப் படுதாம்.''

""ராகுல்காந்தி விருப்பப்படிதான் இளங்கோவன் இப்படி தொடர்ந்து பேசுறதா அவர் வட்டாரத்திலிருந்து சொல்லப்படுதே?''

""விசாரித்தவரைக்கும் அப்படி எதுவும் இல்லை. உண்மை என்னன்னா, சசிகலா கணவர் எம்.நடராஜன், கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலில் அந்த மாநில கவர்னரா இருக்கும் பிரதமரின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியிருக்கிறார். சோனியாவுக்கு எம்.கே.நாராயணன் வேண்டியவர் என்பதால, அவர்கிட்டே நடராஜன், தமிழக அரசியல் சம்பந்தமான சில சதவீத கணக்குகளைச் சொல்லி, அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வலிமையானதா இருக்கும்னு சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். நட ராஜனும் இளங்கோவனும் கான்டாக்ட்டில் இருப்பதால, நாராயணனை சந்தித்தது சம் பந்தமா இளங்கோவன்கிட்டே நடராஜன் சொல்லியிருக்காராம். எம்.பி. பதவியும் இல் லாமல் மந்திரி பதவியும் இல்லாமல் தி.மு.க. மேலே வெறுப்பா இருக்கும் இளங்கோவன், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதால ரொம்ப ஆதங்கத்தோடு அதற்கு எதிரா பேசிக்கிட்டிருக்கிறார்.''

""கட்சிக் கூட்டங்களில் மட்டும் பேசிக்கிட்டிருந்தவர் இப்ப பொதுக்கூட்டங்களிலும் காரசாரமா பேச ஆரம்பிச்சிட்டாரே?''




""மதுரையில் நடந்த முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டுவிழா பேச்சு பற்றித்தானே சொல்றீங்க தலைவரே... தி.மு.க.வை பொதுவா விமர்சிச்சிகிட்டிருந்த இளங்கோவன் அந்தக் கூட்டத்தில், மத்திய மந்திரியா ஆன ஒருவர், பார்லிமெண்ட்டுக்கே போக மாட்டேங்குறார்னு அழகிரியை மனசில் வச்சிக்கிட்டுப்பேச அது மேடையிலிருந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கே ரொம்ப தர்மசங்கடத்தை உண்டாக்கிடிச்சி. கட்சிக்கூட்டங்களில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்வேத்துற மாதிரி பேசுறது வேற, பொதுக்கூட்டங்களில் தோழமைக் கட்சியினர் பற்றி பேசுறது வேறன்னு ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு மூணு பேரும் இளங்கோவன் பேச்சு பற்றி தங்களுக்குள்ளே விவாதிச்சதோட, இதையெல்லாம் ராகுல் சொல்லித்தான் இளங்கோவன் பேசுவதாகவும் ஒரு பில்டப் நடக்குது. அ.தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டணி அமைப்பதில்லைங்கிறதில் ராகுல் 100% உறுதியா இருக்காரு. தனிச்சி நிற்கலாமான்னு யோசிச்சு அவர் மேற்கொண்ட ஆய்வுகள் சாதகமா இல்லை. அதனால, தி.மு.க.வுடன்தான் கூட்டணின்னு தன் அம்மா பாணியிலேயே ராகுல் செயல்படுறாருன்னு மூணு தலைவர்களும் டெல்லி நிலவரம் பற்றி பேசியிருக்காங்க.''

""அப்படின்னா இளங்கோவன் நிலவரம்?''

""கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாதுன்னு தங்கபாலு பேட்டி கொடுத்தது இளங்கோவனுக்காகத் தான். ஆனால், பல காரணங்களால் விரக்தியில் இருக்கும் இளங்கோவன் தரப்போ, தொடர்ந்து தி.மு.க. விமர்சனங்களை வேகப்படுத்துற ஐடியாவில் இருக்குதாம். இந்தப் பிரச்சினையை உடனடியா மேலிடத்திடம் கொண்டுபோகவும் தமிழக காங்கிரஸ் தரப்பால் முடியலை. பார்லிமெண்ட்டில் எதிர்க்கட்சிகள் அனல் கிளப்பிக்கிட்டிருக்கிற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுலும் எங்கேன்னு கட்சிக்காரர்களுக்கே தெரியாமல் இருந்தது. சோனியாவின் அம்மா உடல்நலம் சரியில்லாமல் அமெரிக்காவில் அட்மிட்டாகியிருந்தார். அவருக்கு ஃப்ளு காய்ச்சல். சீரியஸா இருக்காங்க. அதனால சொந்த நாடான இத்தாலிக்கே அனுப்பிட்டாங்க. சோனியா, பிரியங்கா, ராகுல் மூவரும் அவரைப் பார்ப்பதற்காகத்தான் ரகசிய பயணம் மேற்கொண்டாங்க. ஆயுதபேரம், மோசடின்னு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய சந்திராசாமியார் டெல்லி ஆஸ்பிட்டலில் ஐ.சி.யூ. வார்டில் அட்மிட்டாகியிருக்கிறார். அவருக்கும் ஃப்ளு காய்ச்சலாம்.''

""பரபரப்புன்னு சொன்னதும் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருதுப்பா... அரசு விழாவில் தி.மு.க. ஆட்சியைப் புகழ்ந்து பேசிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் கட்சி மாறப் போறதா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாயிடிச்சே.. ..''

""தலைவரே... .. புதுக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு மணிவிழா. அழகிரியும் நேரில் வந்து வாழ்த்தினார். ஸ்டாலினும் நேரில் வந்து வாழ்த்தினார். அன்னைக்கு சாயங்காலம் சமத்துவபுரம் திறப்பு, நலத் திட்ட உதவிகள்னு அரசு சார்பிலான விழா நடந்தது. அதில்தான் ஆலங்குடி சி.பி.ஐ. எம்.எல்.ஏ. ராஜசேகரன் பேசுறப்ப, மக்கள் நலத்திட்டங்களை அதிகம் நிறைவேற்றுவது கலைஞர் அரசுதான். அந்தத் திட்டங்கள் மக்கள்கிட்டே போய்ச் சேருது. என் தொகுதிக்கான திட்டங்கள் பற்றி கோரிக்கை வைத்தேன். அதையும் உடனடியாக நிறைவேற்றியிருக்காங்க. அதனால, இந்த அரசை நான் பாராட்டாம இருக்க முடியாது. பாராட்டுறேன்னு பொது மேடையில் சொன்னார். இதையடுத்துதான், மன்னார்குடி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ சிவபுண்ணியம் பாராட்டி யதுபோல ஆலங்குடி எம்.எல்.ஏ. பேச்சும் பரபரப்பாயிடிச்சி. அவர் கட்சி தாவுற ஐடியாவில் இல்லையாம். தன்னோட மகன் திருமணத்தை அடுத்த மாதம் நடத்துறார் எம்.எல்.ஏ. அதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் தேதியை எதிர்பார்த்துக்கிட் டிருக்கிறார். அதுதான் பேச்சின் பின்னணியாம்.''

""விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த கே.பி. என்கிற குமரன் பத்மநாபாவுக்கு இலங்கை அரசு திடீர் முக்கியத்துவம் கொடுப்பதன் பின்னணி என்னன்னு விமர்சனங்கள் கிளம்பியிருக்குதே!''

""தலைவரே.. ... புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக அனுப்பிய நிதியைக் கையாண்டவர் கே.பி. இப்ப இலங்கை அரசிடம் சிக்கியிருக்கும் கே.பி., அந்தப் பணத்தையெல்லாம் ராஜ பக்சேகிட்டே கொடுத்துட்டாராம். சிங்கள அரசிடம் சிக்கிய -சரணடைஞ்ச புலிகள் பலர் சித்ரவதைக்குட்பட்டு கொலை செய்யப் பட்டாங்க. ஆனா, கே.பி.யைப் பொறுத்தவரை அவர் உயிரோடு இருப்பதற்கும், தாய்லாந்தில் உள்ள மனைவி, மகளுடன் பேசுவதற்கும், அவர்கள் இலங்கை வந்து கே.பி.யை சந்திப்ப தற்கும் சுதந்திரம் இருக்குன்னா அதற்கு காரணம் இந்த பணம்தானாம். அதனாலதான் வடகிழக்கு மாகாணங்களில் மேம்பாடு என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் நர்டோ அமைப்பிலும் கே.பி.க்கு இடம் கொடுக்கப்பட்டிருக்குது. உலகத் தமிழர்களின் பணமெல்லாம் ராஜபக்சே கையில் சிக்கியிருக்குதாம்.''

""நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் புதுசா ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்காரே?''

""நடிகை அசின் ஒரு இந்திப் பட ஷூட்டிங்கிற்காக இலங்கைக்குப் போனது பற்றி எதிர்ப்பு கிளம்ப, கலைக்கு மொழி-இன பேதம் கிடையாதுன்னு அசினுக்கு சப்போர்ட்டா பேசினார் சரத். ஏற்கனவே இலங்கையில் நடந்த திரைப்பட விழாவை பாலிவுட் நட்சத்திரங்கள் புறக்கணிக்க ணும்னு தமிழ்த்திரையுலகம் தீர்மானம் போட்டப்ப சல்மான்கானும் விவேக் ஓபராயும் அதை மீறி கலந்துக்கிட்டாங்க. இப்ப, சல்மான்கான் நடிக்க ப்ரியதர்ஷன் டைரக்ட் செய்கிற "புல்லட் ட்ரெய்ன்' படத்தின் நாயகியாக ப்ரியாமணி புக் செய்யப்பட்டார். அதற்கு சல்மான்கான், இப்ப தான் தமிழ் நடிகை த்ரிஷாவை இந்திக்கு கொண்டுவந்தீங்க. அடுத்ததா, ப்ரியாமணியா? பாலிவுட் நடிகர்களை தமிழர்கள் புறக்கணிப்பாங்க. நீங்க தமிழ் நடிகைகளை இந்தியில் அறி முகப்படுத்துவீங்களான்னு ப்ரிய தர்ஷனிடம் எதிர்ப்பு காட்டி யிருக்கிறார். படத்தின் தயாரிப் பாளரும் தமிழ் நடிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ப்ரியா மணிக்கு பதில் கங்கனா ரண வத்தை ஒப்பந்தம் பண்ணியிருக் காங்க.''

""கலைக்கு மொழி கிடையாதுன்னு சொன்ன சரத்குமார், இந்தியில் தமிழ் நடிகை ப்ரியாமணி கலைச்சேவை செய்ய ஆதரவுக்குரல் கொடுக்கலாமே?''

""அதைத்தான் தமிழ்த் திரையுலகம் கேள்வியா எழுப்புது. தலைவரே... அடுத்த மேட்டருக்கு வர்றேன். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அவரை சில ஐ.ஏ. எஸ்.அதிகாரிகள் சந்தித்து, ஆதரவா பேசிட்டு வர்றாங்க. கிறிஸ்தவ அமைப்புகளும் இந்த விவகாரம் சம்பந்தமா முதல்வர்கிட்டே பேச முடிவு செய்திருக்குது. ஐ.ஏ.எஸ். உமாசங்கர் போலவே லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை எதிர்கொள்ளும் ஐ.பி.எஸ். அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன், ஒரு சின்ன விருந்து வைத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகளை அழைத்து தனக்கு ஆதரவாக செயல்படும்படி பேசியிருக்காரு.''

""எனக்கு கிடைச்ச ஒரு தகவலை சொல்றேம்ப்பா.. ..செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அந்த புது ஹீரோ நண்பர்களுக்கும் பேரறிஞர் பெயரிலான நகரைச் சேர்ந்த ஒரு பெண் காக்கி அதிகாரியின் மணவாளரின் நண்பர்களுக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் டான்ஸில் ஒரு பெண்ணைத் தொட்டது சம்பந்தமா அடிதடி. மணவாளர் தரப்புக்குத்தான் அதிக அடியாம். அதனால் பதிலுக்குப் பதில் ஃபைட் எப்போது வேண்டுமானாலும் நடக்க லாம்ங்கிற பயத்தில், ஸ்டார் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருக்குது.''

""நான் சொல்லப்போறது, அரசியலில் அபூர்வமான தகவல். மறைந்து 10 வருடமாகியும் கட்சிக்காரர்கள், பொதுமக்களால் மறக்கப்பட முடியாதவராக விளங்கும் நாஞ்சிலாரோட 10-வது நினைவுநாள் போன 1-ந் தேதி நடந்தது. அவரோட உதவியாளர் சின்னிகிருஷ்ணன் வழக்கம்போல் அன்னதானம், இலவச உதவிகள், கண்சிகிச்சை முகாம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய் திருந்தார். அமைச்சர்கள் நெப்போலியன், பரிதி, ஐ.பெரியசாமி, எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட கட்சிக் காரர்களும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந் தாங்க. அப்ப ஒரு கட்சிக்காரர், எனக்கு நாஞ்சிலாரைத் தெரியாது. இருந்தாலும் உதவி கேட்போம்னு ஊரிலிருந்து சிலரை அழைச்சிட்டு வந்து பார்த்தேன். எந்த ஊர்னுகூட கேட்கலை. கட்சிக் கரைவேட்டியைப் பார்த்ததும், வரவேற்று உபசரித்து கோரிக்கை மனுவை வாங்கிப் பார்த்தார். உடனே உதவியாளர் சின்னியைக் கூப்பிட்டு, இதை செஞ்சு கொடுப்பான்னாரு. காரியம் ஈஸியா முடிஞ்சிடிச்சி. நாஞ்சிலார் மாதிரி இப்ப உள்ள மந்திரிகளும் செயல்பட்டா நல்லாயிருக்குமேன்னு உருக்கமா பேசிக்கிட்டிருந்ததை கட்சிப்பிரமுகர்கள் உன்னிப்பா கேட்டுக்கிட்டிருந்தாங்க.''

விடுதலை தந்த தேதியில்லாத கையெழுத்து!


சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வரும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு போன்ற பரபரப்பான வழக்குகளில் ஒன்றான ஆலடி அருணா கொலைவழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. மாநில அமைச்சர், ஒரு பாராளுமன்றத் தேர்தல் முடிவையே தீர்மானித்த போபர்ஸ் ஊழலை வெளியுலகுக்கு தெரிவித்தவர், கல்வி தந்தை என பன்முகம் கொண்ட அரசியல் தலைவரான ஆலடி அருணாவை 2004-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி அவரது நண்பர் பொன் ராஜுவுடன் நடைபயிற்சிக்கு சென்ற நேரத்தில் சொந்த ஊரிலேயே வெட்டி கொலை செய்தது ஒரு கூலிப்படை. அந்த கூலிப்படையை ஏவியவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எஸ்.ஏ.ராஜா என்றும் அவருக்கும் ஆலடி அருணாவுக்கும் ஏற்பட்ட தொழில் போட்டிதான் காரணம் எனவும் காவல்துறை ராஜாவை கைது செய்தது.

வழக்கை விசாரித்த செஷன்ஸ் கோர்ட் கூலிப் படையாக செயல்பட்டவர்களுக்கு மரண தண்ட னையும், கடுங்காவல் தண்டனையும் விதித்துவிட்டு எஸ்.ஏ.ராஜா உட்பட ஆறுபேரை விடுதலை செய்தது. அதை எதிர்த்து அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உயர்நீதிமன்றம் எஸ்.ஏ.ராஜாதான் ஆலடி அருணாவை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார் என்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்ட ராஜா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதோடு, "எனக்கு இதய நோய் இருக்கிறது. அதற்காக கேலக்ஸி என்கிற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். சிறையில் உள்ள மருத்துவ மனையில் இதயநோய்க்கான சிறப்பு சிகிச்சையளிக்க வசதியில்லை. எனவே கேலக்ஸி மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சையளிக்க உத்தரவிடுமாறு' ஒரு வேண்டுகோளை சுப்ரீம் கோர்ட்டில் முன்வைத்தார்.

நீதிமன்றமும் "சரி' 6 வாரத் துக்கு ராஜாவுக்கு கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை அளி யுங்கள்' என உத்தரவிட்டது. சிறைத்துறை அதிகாரியாக இருந்த ஷியாம் சுந்தர் ஐ.பி.எஸ். ராஜாவின் உடல்நிலை நன்றாகத்தான் உள்ளது என்று அரசு மருத்துவமனை டாக்டர்கள் சான்றிதழ் தர, அதன் அடிப்படையில் ராஜாவை மீண்டும் சிறைக்கே அனுப்பினார்.

உடனே இது நீதிமன்ற அவமதிப்பு என ராஜா சுப்ரீம் கோர்ட்டில் கூற, நீதிபதிகள் சிறைத்துறை அதிகாரியை என்ன நடந்தது என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அவசர அவசரமாக ஷியாம் சுந்தர் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில் அவரது கையெழுத்திலும், அந்த பிரமாண வாக்குமூலம் சரிதான் என சான்றிதழ் அளித்த நோட்டரி பப்ளிக் கையெழுத்திலும் எந்த தேதியில் கையெழுத்திட்டார்கள் என தேதி குறிப்பிடவில்லை.

அதை கவனிக்காமல் தமிழக அரசின் ஜூனியர் வழக்கறிஞர் ஒருவர் கோர்ட்டில் சமர்ப்பித்து விட்டார். அதை நீதிபதிகள் கண்டுபிடித்து விட்டனர்.

""இது பொறுப்பற்ற தன்மையின் உச்ச கட்டம். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ராஜாவை பழிவாங்குகிறது'' என அந்த பிரமாண வாக்குமூலத்தை அந்த வழக்கறிஞரிடமே திருப்பி அளித்து விட்டார்கள்.

அந்த சம்பவத்தை தொடர்ந்து அரசு வைத்த வாதங்கள் எதுவும் நீதிமன்றத்தில் எடுபடவில்லை. கொலை சதியில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்ட நாளிலிருந்து கொலை நடந்த அன்று வரை குற்றவாளிகளுடன் ராஜா தொடர்பிலிருந்தார் என உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட வாதத்தில் தங்களது சந்தேகங்களை பதிவு செய்த நீதிபதிகள் அதையே தீர்ப்பாக்கி ராஜாவுக்கு விடுதலை தந்து விட்டார்கள்'' என்கிறார்கள் சீனியர் வழக்கறிஞர்கள்.

கலைஞரா, ஜெ.வா -யார் முதல்வர்?


தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், தேர்தல் களப் பிரச்சாரத்தின் கதாநாயகன் கலைஞர்தான். கூர்மையான அரசியல் வியூகம், எதிரி களை எதிர்கொள்ளும் லாவகம், சவால்கள், பதிலடிகள், வாக்குறுதிகள் என கலைஞ ரின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே இருந் துள்ளன. பூமழை பெய்வதுபோன்ற மொழிநடை, பூகம்பம் -எரிமலை -இடி -மின்னல் சேர்ந்து வந்ததுபோன்ற பதிலடி கள், தொடக்கம் முதல் இறுதிவரை பேச்சு முழுவதும் விரவியிருக்கும் நகைச்சுவை, சின்னச் சின்ன கதைகள் என அவருடைய பிரச்சாரம் மக்களை வெகுவாக கவர்ந் துள்ளது. அண்ணா, ம.பொ.சி, ஈ.வெ.கி. சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, அனந்தநாயகி என மேடைப் பேச்சில் ஜொலித்தவர்கள் இன்றில்லாத நிலையில், கலைஞருடைய பிரச்சாரம் தமிழ்ப் பேச்சுக்கலையின் இலக்கணமாக அமைந்துள் ளது. இந்தக் கலையில் அவரைத் தொடர்ந்துவரும் ஒரே அரசியல் தலைவர் வைகோ மட்டுமே.



நீண்ட அரசியல் அனு பவமும் தேர்தல் களம் பற்றிய நேரடி அனுபவமும் கலைஞ ருக்கு மட்டுமே உரியது. எந்தத் தொகுதியில் போட்டியிட் டாலும் அவர் வெற்றி பெறுகிறார் என்றால், தமி ழகத்தின் 234 தொகுதிகள் பற்றிய தேர்தல் கணக்கையும் அவர் அறிந்திருப்பதுதான் கார ணம். கூட்டணியை அமைப்ப திலும் அதனை தக்கவைப்பதிலும் கலைஞரின் சாமர்த்தியம் தனித் துவம் வாய்ந்தது. அவருடைய தேர்தல் அறிக்கைகள் இந்திய அளவில் பேசப்பட்டிருக்கின்றன. தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் தேர்தலில் தி.மு.கவின் முதல்வர் வேட்பாளராக கலைஞரே முன் னிற்பாரா, தமிழகம் முழுவதும் அவர் பிரச்சாரம் செய்வாரா, துணை முதல்வர் மு.க.ஸ்டா லினை முதல்வர் வேட்பாள ராக்கி, முக்கிய நகரங்களில் மட்டும் கலைஞர் பிரச்சாரம் செய்வாரா என்ற எதிர் பார்ப்புகள் அரசியல் தளத்தில் உள்ளன. மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை நம் கள ஆய்வில் தேடினோம்.



கலைஞரா, ஜெ.வா -யார் முதல்வர்? என்ற கேள்விக்கு மக்களிடம் முதலிடம் பெறு பவர் கலைஞர்தான். கட்சிக்கு அப்பாற்பட்ட மூத்த தலைவ ராக, தமிழர்களின் தலைவராக அவரை தமிழக மக்கள் பார்க் கிறார்கள். இந்தப் பார்வை வேறெந்த அரசியல் தலைவர் மீதும் தமிழக மக்களுக்கு இல்லை. இது தி.மு.க அணிக்கு மிகவும் சாதகமான அம்சமாக உள்ளது. எக்கட்சியையும் சாராத வாக் காளர்கள், யாருக்கு வாக்கு என முடிவெடுக்காதவர்கள் ஆகியோ ரையும்கூட இந்த சாதகமான அம்சம், தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யக்கூடியதாக இருக்கிறது. உடல் நிலையைக் காரணமாக வைத்து, ஸ்டாலினை முதல்வர் வேட் பாளராக தி.மு.க. முன்னிறுத்தி னால் ஸ்டாலினா, ஜெ.வா-யார் முதல்வர்? என்ற கேள்வி எழும். முதல்வர் வேட்பாளர் போட்டியில் கலைஞர் இல்லாத நிலையில், ஜெ.வுக்கு சாதகமான சூழல் அமையும் என்பதை நமது ஆய் வில் அறிய முடிந்தது. ஸ்டா லினுக்கு ஆதரவாக கலைஞர் பிரச்சாரம் செய்தாலும் ஜெ. முன்னிலை பெறும் வாய்ப்பு தெரிகிறது.



தி.மு.க.வில் நிகழும் வாரிசு போட்டிகளையும் மக்கள் கவ னித்தபடியே இருக்கிறார்கள் என்பதை களத்தில் நாம் அறிய முடிந்தது. தி.மு.க. அரசின் திட் டங்களை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் ஸ்டாலின் மேற் கொள்ளும் பயணங்களும், அ.தி.மு.க. கோட்டையாக இருந்த தென் மாவட்டங்களில் நடந்த இடைத் தேர்தல்களில் தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு மு.க.அழகிரி வகுத்த வியூகங்களும் மக்களின் கவனிப்பிற்குள்ளாகியுள்ளன. இவர்கள் இருவரிடையிலும் ஒற்றுமையை நிலைநிறுத்த கலைஞர் எடுக்கும் முயற்சிகள் பற்றியும் மக்கள் பேசுகின்றனர்.



கலைஞரின் காலம் வரை குடும்பத்திற்குள் எழும் எந்த வாரிசு போட்டியும் கட்சியைப் பாதிக்காது என்றும், கலைஞருக்குப் பிறகு சகோதரர்களின் செயல்பாட்டைப் பொறுத்தே தி.மு.க.வின் எதிர்காலம் அமையும் என்றும் பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கட்சிகளின் செல்வாக்கு! தேர்தல் வரலாற்று ஆய்வு!


கடந்த இதழில் தமிழக அரசியலில் கூட்டணி சித்தாந்தம் தொடங்கியபிறகு தேர்தல் களங்களில் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகளைப் பெற்றன என்ற ஆய்வினை வெளியிடத் தொடங்கினோம். காமராஜர் சகாப்தம், எம்.ஜி.ஆர். சகாப்தம் என இரு கட்டங்கள் வெளியிடப் பட்டன. எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு நடந்த தேர்தல் நிலவரத்தையும், பிளவுபட்ட அ.தி.மு.க இணைந்த பிறகு நடந்த தேர்தலின் நிலவரத்தையும் இந்த இதழில் வெளியிட்டுள்ளோம்.


எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின்


உடல்நலக்குறைவால் 1987-ல் எம்.ஜி.ஆர். மரண மடைந்தார். இதன்பின் அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்வரானார். இதனால் அ.தி.மு.க. இரண்டானது. ஜானகி அணி, ஜெயலலிதா அணி என உருவாகியது. சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்படாததால் ஜானகி அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலானது. அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டது. இந் நிலையில் 1989-ல் நடந்த பொதுத்தேர்தலில் 13 ஆண்டுகளுக்குப் பின் தி.மு.க. வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக கலைஞர் முதல்வரானார்.



அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் இரண்டாகப் பிரிந்த தாலும், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டதும் தி.மு.க.வின் நிலையான வாக்கு வங்கியும் அக்கட்சிக்கு சாதகமான அம்சங் களாயின. அ.தி.மு.க. தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் ஜெ. அணி பக்கமே இருக்கிறார்கள் என்பதை அந்தத் தேர்தல் முடிவு காட்டியது. ஜானகி அணி பெயரளவுக்கே இருந்தது. பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தமிழகத்தின் மீது தனி அக்கறை செலுத்தி பலமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததால் காங்கிரஸ் 22% வாக்குகளைப் பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள், ஜனதாதளம் ஆகியவை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற்றன.



பிரிந்து நின்றதும், கூட்டணி அமைக்காததும்தான் தோல்விக்கு காரணம் என்பதை உடனடியாக உணர்ந்த அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மீண்டும் இணைந்து, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற்று மதுரை கிழக்கு, மருங்காபுரி இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றது. 1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் 39 எம்.பி. தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மத்தியில் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, தி.மு.க. அரசைக் கலைத்தது அ.தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி.


அ.தி.மு.க. இணைந்த பிறகு...


அ.தி.மு.க. அணிகள் இணைந்தபிறகு சந்தித்த பொதுத் தேர்தலான 1991 தேர்தலில் ராஜீவ் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலை அ.தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை பெரும் வெற்றி பெறச் செய்தது. மிருகபல மெஜா ரிட்டியுடன் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமைய, தி.மு.க. சார்பில் இரண்டு எம். எல்.ஏக்கள் மட்டுமே சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டியதாயிற்று. வன்னியர் சங்கமாக இருந்து அரசியல் கட்சியான பா.ம.க. இந்தத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு 1 சீட்டைப் பெற்றது. வடமாவட்டத்தில் தனி செல்வாக் குள்ள கட்சியாக பா.ம.க. உருவானது.



1993-ல் 9 மாவட்டச் செய லாளர்களுடன் தி.மு.க.விலிருந்து வெளியேறிய வைகோ தொடங்கிய ம.தி.மு.கவினால் தி.மு.க நெருக் கடிக்குள்ளானது. கட்சியைப் பலப்படுத்த கலைஞர் எடுத்த முயற்சிகள் பலனளித்தன. ம.தி.மு.க.வால் 3.5% வாக்கு வங்கியைத் தாண்ட முடியவில்லை. இந்த காலகட்டத்தில் மேலிடத்தின் கூட்டணி முடிவால், காங்கிரசிலிருந்து பிரிந்த த.மா.கா.வுடன் கூட்டணி அமைத்த தி.மு.க., ஜெ.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. 2001 தேர்தலில் காங்கிரஸ், த.மா.கா., கம்யூனிஸ்ட்டுகள், பா.ம.க. என மெகா கூட்டணியுடன் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியமைக்க, 2006-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது.



கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் தேசிய கட்சியான பா.ஜ.க., இரு கழகங்களுடன் மாறி மாறி கூட்டணி அமைத்து தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கி, கூட்டணி இல்லாத நிலையில் அந்தக் கணக்கை மூடிவிட்டது. நடிகர் விஜயகாந்த்தின் தே.மு.தி.க. இரு கழகங்களை விரும்பாதவர்களின் விருப்பத்திற்குரிய கட்சியாக மாறியது. விடுதலைச்சிறுத்தைகள், புதியதமிழகம் ஆகிய தலித் அமைப்புகள் வட-தென் மாவட்டங்களில் முக்கிய சக்தியாக வலுவடைந்தன. சாதிக்கட்சிகள் பல தோன்றியபோதும் அவை ஒரு தேர்தலுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் முடங்கின.



தற்போதைய நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றன. இதில் காங்கிரசுடனான உறவு முக்கிய பங்கு வகித்தாலும் அக்கட்சியின் வாக்குவங்கி வளர்ச்சி காணவில்லை. 2009 நாடாளுமன்றத்தேர்தலில் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அதன் செல்வாக்கு பற்றி கேள்வியை எழுப்பியுள்ளது. தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி அரசியல் தளத்தில் முக்கியமானதாக இருக்கிறது. தலித் அமைப்புகளுடனான கூட்டணி என்பது பெரிய கட்சிகளால் தவிர்க்க முடியாத அம்சமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக இருக்கின்றன. .


தி.மு.க.-அ.தி.மு.க. இடையிலான செல்வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாகவே இருப்பதால் கூட்டணி பலமே தேர்தல் முடிவுகளில் முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தான் கூட்டணி மாற்றம் ஏற்படுமா, புதிய கட்சிகள் உள்ளே வருமா, பழைய கட்சிகள் வெளியேறுமா என்ற கேள்விகள் இரு அணிகளிலும் வலுப்பெற்று, ஊடகங்கள் வாயிலாக தமிழக மக்களிடம் விவாதப்பொருள் ஆகியுள்ளது.

தேர்தல் கள ஆய்வு இந்த இதழில்... திண்டுக்கல் மண்டலம்.


இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற எஸ்.ஒய்.குரேஷியின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி, "தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்றத் தேர்தல் வருமா' என்பதுதான். தமிழகத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இந்திய அளவில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

தமிழக அரசியல் கட்சிகள் தங்க ளின் தேர்தல் வியூகங்களை வகுத்து, கூட்டணிப் பேச்சு வார்த்தைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என இரண்டு தரப்பிலுமே போராட்டங்கள், பாராட்டு விழாக்கள், பொதுக்கூட்டங்கள் என தேர்தலை மனதில் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இரு பெரிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள கட்சிகளும் தேர்தலுக்கான தயாரிப்புகளில் மும்முர மாக இருக்கின்றன. அணி சேர்க்கைகள் எப்படி அமையும் என்கிற ஆர்வம் அரசியல் நோக்கர்களிட மும் வாக்காளர்களிட மும் இருக்கிறது. எனவே, உங்கள் நக்கீரனில் மண் டலவாரியாக வெளியிடப் படும் தேர்தல் கள ஆய்வு முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.

இந்த இதழில்... திண்டுக்கல் மண்டலம்.






மதுரை மண்டலத்தின் இரண்டாவது பகுதி என்று இதனைச் சொல்லலாம். முல்லைப் பெரியாறு அணையின் பாசனப்பகுதிகளே இம்மண்டலத்தில் அதிகளவில் உள்ளன. உணவுப்பயிர், பணப்பயிர் ஆகியவை விளைகின்ற இந்த மண்ணில் அதனைச் சார்ந்த உபதொழில்களும் நடைபெறுகின்றன. திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல், தேனி ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட திண்டுக் கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, ஒட்டன்சத்திரம், ஆண்டிபட்டி, கம்பம், போடி பெரியகுளம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 12 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

கட்சிகளின் செல்வாக்கு பற்றிய நம் கள ஆய்வின் படி இம்மண்டலத்தில் எந்த கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பது வரைபடம் மூலமாக காட்டப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கணக்கைத் தொடங்கிவைத்த நாடாளுமன்றத் தொகுதி இதுதான் என்பதால், நீண்டகாலமாக இது அ.தி.மு.க.வின் கோட்டையாகவே கருதப்பட்டு வந்தது. எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட செல்வாக்கும் அவரது அபிமானிகள் இன்றுவரை இரட்டை இலைக்கு வாக்களித்து வருவதும் இதற்கு முக்கியம் காரணம் என்றாலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகு தியில் அதிக எண்ணிக்கையில் இருந்த முக்குலத்தோர் வாக்குகளும் கூடுதல் காரணமாகும். எனினும், தொகுதி மறுசீரமைப்பிற்குப்பிறகு வெற்றி- தோல் வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக கவுண்டர் சமுதாய வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கவுண்டர்கள், முக்குலத்தோர், தாழ்த்தப் பட்டோர், பிள்ளைமார், நாயுடு, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், அம்பலம், செட்டியார் என்ற வரிசையில் இங்கு ஜாதி ஓட்டுகளின் கணக்கு அமைந்துள்ளது. கவுண்டர்கள், முக்குலத்தோ ரில் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகம். மற்ற சமுதாயத்தினரில் தி.மு.க.வுக்கு கூடுதல் செல்வாக்கு காணப்படுகிறது. எனினும், ஜாதி செல்வாக்கைக் கடந்து அரசின் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள பலன்களின் அடிப்படையில் திண்டுக்கல் எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்ட மன்றத் தொகுதிகளில் வாக்குகள் பதிவாவதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

6 தொகுதிகளில் திண்டுக்கல்லைத் தவிர மற்ற 5 தொகுதிகளிலும் ஜாதிபேதமின்றி தி.மு.க. அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றதால், அக்கூட்டணியின் காங் கிரஸ் வேட்பாளர் சித்தன் அதிக வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்றார்.

2 ஆண்டுகளாக திண் டுக்கல் நகருக்குள் நடை பெற்றுக்கொண்டிருக்கும் பாதாள சாக்கடைப் பணிகளின் ஆமை வேக மும் அதனால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதும் பொதுமக்க ளை ரொம்பவே சங்கடப் படுத்துகிறது. இதை சி.பி. எம். எம்.எல்.ஏ. பால பாரதியும் அ.தி.மு.க. நிர் வாகிகளும் மிகச் சரியா கவே கையாண்டு தங்க ளுக்கு சாதகமாக்கியிருக் கிறார்கள். மற்ற ஏரியாக் களில் அ.தி.மு.க.வில் நடக் கும் உள்கட்சிக் குழப்பங் களும் கட்சித்தாவல் களும் அந்தக் கட்சியின் செல்வாக்கில் சேதா ரத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரசுக்கு இங்கு நிலையான வாக்கு வங்கி உள்ளது. தே.மு.தி.க.வால் கடந்த எம்.பி. தேர்த லுக்குப்பிறகு பெரியள வில் வளரமுடியாவிட் டாலும் தொகுதிக்கு 15 ஆயிரம் ஓட்டுகள் வரை வாங்கக்கூடிய வலிமை யுடன் அக்கட்சி உள்ளது. சி.பி.எம். கட்சியின் வாக்கு வங்கி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைக்கல்லூரி, கூட்டுக் குடிநீர்த்திட்டம் ஆகி யவற்றை ஓட்டுகளாக மாற்ற முடியுமா என ஆளுந்தரப்பு யோசித் தாலும், பூ விளைச்ச லுக்குப் பெயர் பெற்ற நிலக்கோட்டையிலும், மாம்பழத்திற்கு பெயர் பெற்ற நத்தத்திலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்க வேண் டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலே இருப்பது ஆளுந்தரப் புக்கு பாதிப்பை உண்டாக்கும் அம்சமாகும். அ.தி. மு.க.வின் பழைய செல்வாக்கைக் குறைத்திருப்பது தான் ஆளுங்கட்சியின் கொடியை இத்தொகுதியில் கொஞ்சம் கூடுதல் உயரத்தில் பறக்க விடுகிறது.

தேனி

ஜெயலலிதாவை இரு முறை தேர்ந்தெடுத்த ஆண்டிப்பட்டி தொகுதி அடங்கியுள்ள மாவட்டம் என்பதால் அ.தி.மு.க.வினர் இங்கு எப்போதும் தெம்பாக இருப்பது வழக்கம். முக்குலத்தோர் வாக்கு கள் நிறைந்த இங்கு, ஆண்டிபட்டி, கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய 4 தொகுதிகள் தேனி மாவட்டத் தைச் சேர்ந்தவையாகவும், தொகுதி சீரமைப்புக்குப் பின் இணைந்துள்ள உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவையாக வும் உள்ளன. இந்த 2 தொகுதிகளிலும் முக்குலத்தோர் வாக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பெறப் படும் நீரைப் பயன்படுத்தி நெல், வாழை, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் இப் பகுதியில் விளைவிக்கப்படு கின்றன. விவசா யத்திற்குப் போதுமான தண்ணீரை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு பெற்றுத்தர வில்லை என்ற வருத்தம் இப்பகுதி விவசாயி களிடம் உள்ளது. அதேநேரத்தில், அரசின் இலவச திட்டங்கள் பெருமளவில் மக்க ளிடம் சேர்ந்திருக்கிறது. அதனை ஓட்டாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் ஆளுங் கட்சி மா.செ. ஆர்வம் காட்டவில்லை. ஆளுங்கட்சியில் கோஷ்டிப்பூசல் என்பது தேனி மாவட்டத்தில் தாராளமாகவே இருக்கிறது. அதே அளவுக்கு பிரதான எதிர்க்கட்சியிலும் பூசல்கள் நிலவுகின்றன.

முக்குலத்தோர் வாக்குகளில் பெரும்பாலானவை அ.தி.மு.க. வுக்கு சாதகமாக உள்ள நிலை யில், அடுத்த நிலையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தினரின் வாக்குகள் தி.மு.க.வுக்கு பக்கபலமாக இருக்கின்றன. நாயுடு, பிள்ளைமார் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினரின் ஓட்டுகள் இரு கட்சி களுக்கும் பரவலாக கிடைக்கின்றன. இம் மாவட்டத்தில் ம.தி.மு.கவுக்கென குறிப் பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. நாயுடு சமுதாயத்தினரின் வாக்குகளே இதில் முதன் மையாக உள்ளன. தே.மு.தி.கவுக்கும் கணிச மான செல்வாக்கு இங்கு காணப்படுகிறது. தேவேந்திரகுல சமுதாயத்தினர் நிறைந் துள்ள பகுதிகளில் புதிய தமிழகம் செல் வாக்குடன் உள்ளது. முக்குலத்தோர் அமைப்புகள், ஃபார்வர்டு ப்ளாக் போன்ற கட்சி களுக்கும் இங்கு வாக்கு வங்கிகள் உள்ளன.

2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் 25ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றார் ஜெ. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டி யில் அ.தி.மு.க. வேட்பாளர் 6000 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றார். இந்த இடைவெளியைக் கவனத்தில் கொண்டு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, வனப்பகுதியில் உள்ள மலைவாழ்மக்களின் வாழ்வுரிமை ஆகியவற்றை முன்வைத்து அ.தி.மு.க. அடிக்கடி போராட்டங்களை நடத்தி பழைய செல்வாக்கை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. ஜெ.வின் கோட்டையைக் காப்பாற்றவேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. வும், அந்தக் கோட்டையில் ஓட்டை போடவேண்டும் என்ற வேகத்துடன் தி.மு.க.வும் செயல்படுவதால் தேனியில் இரு கழகங்களும் வரிந்துகட்டி நிற்கும் நிலைமையை நம் கள ஆய்வில் காணமுடிந்தது.

மதுரை மண்டலத்தின் இரண்டாம் பகுதியான திண்டுக்கல் மண்டலத்தில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க.வும், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வும் செல்வாக்குடன் திகழ்கின்றன என்பதே கள ஆய்வு நிலவரம்.

(வரும் இதழில் நெல்லை மண்டலம்)

யுத்தம் 76 - நக்கீரன் கோபால்


கோர்ட்டுக்கு சிவாவைக் கொண்டு வரவில்லை.

என்ன ஆனார் சிவா என்று நாங்கள் பதை பதைப்புடன் இருக்கிறோம். போலீசார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் தன் ஆசனத்தில் அமர்ந்தார். அவரிடம், சிவாவை இன்னைக்கு புரடியூஸ் பண்ணமுடியலை என்று சொல்லி, வேறு தேதி வாங்கியது போலீஸ்தரப்பு. எனது ஆஜரை கோர்ட் பதிவு செய்துகொண்டு, அடுத்த விசாரணை நாளில் வரச் சொல்லி உத்தரவிடப்பட்டது.

சிவாவைப் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த நமக்கு ஏமாற்றம்தான். நமது வாகனம் புறப்பட்டுச் செல்வதைப் போலீசார் பார்த்துக் கொண்டே இருந்தனர். போலீஸின் முழியே சரியில்லை. நாம் புறப்பட்டு 2.30 மணி நேரம் கழித்து, சத்தியமங்கலம் கோர்ட் வளாகத்திலிருந்த நம்ம நண்பர் ஸ்டாலின் சிவக்குமார் போனில்...

""அண்ணே... சிவாவை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்திட்டாங்க.''

-நானும் சிவாவும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே, வேறு தேதியில் ஆஜர்படுத்துவதாக கோர்ட்டில் சொல்லி, தேதி வாங்கிய போலீசார், நாங்கள் புறப்பட்டுவிட்டோம் என்று தெரிந்ததும், கோவை சிறையிலிருந்து சிவாவை அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அதிகார பலத்தால் கோர்ட்டையும் ஏமாற்றக்கூடிய வகையிலேயே போலீசாரின் செயல்பாடு இருந்தது.

வண்டியை காங்கேயம் அருகில் உள்ள பெருங் கரணைப்பாளையம் விடச்சொன் னேன். என்னுடன் அட்வகேட் ப.பா.மோகன், தம்பி ஜீவா, டிரைவர் மோகன், செக்யூரிட்டி குண்டு பூபதி ஆகியோர் இருந்தார்கள்.

பெருங்கரணைப்பாளையத்தில் எங்கள் வண்டி நுழைகிறது. ஊரில் கோயில் திரு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டி ருந்தன. மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த சிவா அப்பா இருக்கும் வீட்டைத் தேடிச் சென்றோம்.

எளிமையான வீடு. அதன் பின்புறம் ஒரு கொட்டகை. அதில்தான் ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார் சிவாவின் அப்பா. உடல் நிலை முடியாமல் இருந்த அவரை, அந்த நிலையில் பார்த்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நாம் வந்திருப்பதை அறிந்தாலாவது அவர் சற்று தெம்பாக இருப்பார் என்று குரல் கொடுத்தேன்.

""அப்பா... ...''

""சுப்ரமணி.. சுப்ரமணி...'' (தம்பி சிவசுப்ரமணியத் தைத்தான் அப்படி சொல்கிறார்)... ""சுப்ரமணி... வந்துட்டி யாப்பா...''

எத்தனை எதிர்பார்ப்பு இருந்தால், அப்பா என்ற குரலைக் கேட்டதும், தன் ஒரே மகன் சிவசுப்ரமணியன் வந்துவிட்டான் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருப்பார். குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளைக்கூட நசுக்கிவிட்டு, பொய் வழக்கில் தம்பியை சிறைப்படுத்தியிருந்தது பேயாட்சி.

""சுப்ரமணி...'' என்றபடி படுக்கையிலிருந்து அவர் எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. எனக்கும் என்னுடன் வந்திருந்தவர்களுக்கும் கண்கள் கலங்கின. நான் அவர் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டேன். அப்போது சிவாவின் அம்மா வந்து, ""சுப்ரமணியோட முதலாளி வந்திருக்காங்க'' என்று கிராமத்து மொழியில் சொன்னார்.

உடனே, ""அண்ணா.. அண்ணா... சுப்ரமணி எப்படி இருக் கான்?'' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார் சிவா அப்பா. எனக்கும் ப.பா.மோகனுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

நல்லா இருக்காரு என்ற பொய்யையும், சீக்கிரமா வந்துடுவாருப்பா என்ற நம்பிக்கையையும் அவரிடம் தெரி வித்தோம். அதற்குப்பிறகு, வீட்டிலிருந்த பழைய படங்களை யெல்லாம் பார்த்தோம். சிவாவின் அம்மா நல்ல டீ போட்டுக் கொடுத்தார். வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து அதை குடித்துக் கொண்டிருந்தோம்.

அப்போது, நமது வாகனம் வாசலில் நிற்பதைப் பார்த்து ஊர்ப் பெரியவர்கள் அங்கே திரண்டுவந்தனர்.

""தம்பி எப்பங்க வருவாரு?'' -ஊர்ப் பெரியவர்கள் கேட்டார்கள்.

""தம்பி சிவா மேலே அரசாங்கம் 7 பொய் வழக்குப் போட்டி ருக்குது. அதில் 5 வழக்கில் பெயில் கிடைச்சிடிச்சி. இன்னைக்கு ஒரு வழக்கில் பெயில் கிடைச்சிடும். அப்புறம் ஒரு வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்குது. அதிலும் ஒன்றிரண்டு நாளில் பெயில் எடுக்கிறதுக்கு ரெடியா இருக்கோம்'' என்று விளக்கினேன்.

நான் சொன்னதைக் கேட்டதும், ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் என்னிடம் பேசினார். ""நக்கீரனய்யா கோவிச்சுக்காதீங்க. ஒரு விஷயம் சொல்றோம். சிவா அப்பாவோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. நாளை வரை தாங்காது. ஊருல கோயில் திருவிழாவுக்காக காப்பு கட்டிட்டோம். இதற்கப்புறம் ஊருல எந்த கெட்டதும் நடக் கக்கூடாதுன்னு சாமிகிட்டே வேண்டிக்கிட்டிருக்கோம். தப்பா நினைச்சுக்காதீங்க. ஏதாவது துக்க விஷயம் நடந்திடிச்சின்னா... பாடியை நாங்க ரொம்ப நேரம் ஊருக்குள்ளே வச்சிருக்க முடியாது. 3 மணிநேரம்தான் டயம். அதற்குள்ளே பாடிய எடுத்திடணும். அதனால, சிவா தம்பிய சீக்கிரமா வெளியே கொண்டு வரப் பாருங்க. இல்லைன்னா, ஒண்ணும் செய்ய முடியாது எங்க மேலே வருத்தப்படாதீங்க.''

-ஊர் வழக்கத்தைச் சொன்ன அந்தப் பெரியவரின் குரல் கறாராகவே ஒலித்தது. சிவாவோ குடும்பத்துக்கு ஒரே பையன். அவர் தன்னுடைய அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியாவிட்டால் எப்படி? அவரோ சிறையில் இருக்கிறார். எப்படி கொண்டு வரப்போகிறோம் என்ற யோசனை பலமாக இருந்தது. ஆனாலும், ஊர்ப்பெரியவர்களிடம் உறுதியான குரலில் சொன்னேன்.

""எப்பாடுபட்டாவது சிவாவைக் கொண்டு வந்திடுவோம். உங்க ஊர் திருவிழாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும். 3 மணி நேரம்ங்கிறதை 1 நாளா அவகாசம் கொடுங்க. சிவாவை அழைச்சிட்டு வந்திடுறேன்.''

-ஊர்ப் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு, சிவாவின் அம்மா பக்கம் திரும்பினேன்.

""அம்மா... நான் தம்பியோடுதான் திரும்பி வருவேன். அதுவரைக்கும் உங்க வீட்டுக்காரர் உயிரை நீங்கதான் புடிச்சி வைக்கணும். என்ன செய்வீங்கன்னு தெரியாது. நீங்கதான் அவரோட உசுருக்கு காவல்.''

நான் சொன்னதும், சிவாவின் அம்மா தன் தாலியை கண்ணில் ஒற்றிக்கொண்டார். ஊர் மக்களிடம் கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினேன்.

பொய் வழக்குகள் போட்டும், ஜாமீனில் வெளிவந்துவிடுகிறார்களே என்பதால், பொடாவை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. நக்கீரன் மீது பொடாவை ஏவுவது பற்றிய ஆலோசனைகள் கோட்டையில் நடந்துகொண்டிருந்தபோதே, வைகோ மீது முதல் பொடா பாய்ந்தது. அதையடுத்து, வேறு யார் மீதெல்லாம் பொடா போடலாம் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டிருந்தது.

அதிலும், நக்கீரன் பெயர்தான் முதலிடத்தில் இருந்தது. இருந்தாலும், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ஜெ. .அரசு, வைகோவைத் தொடர்ந்து பெரியவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் மீதும் அவரது தமிழர் தேசிய இயக்கத்தினர் மீதும் பொடா போட்டது.

2002 ஏப்ரல் 10-ம் தேதி. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். உலகளவிலான பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அந்த பேட்டி தொடர்பாக சென்னை ஆனந்த் திரை யரங்கத்தில் தமிழர் தேசிய இயக்கம் ஒரு விளக்கக் கூட்டம் நடத்தியது. விழாவை ஒருங்கிணைத்த தமிழ் முழக்கம் பதிப் பகத்தின் சாகுல் அமீது, விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொடா பாய்ந்தது.

புத்தகங்களை எழுதியவர் பழ.நெடுமாறன். அவரும் பொடாவில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார். அவரது தமிழர் தேசிய இயக்கம் தடை செய் யப்பட்டது. ஆனந்த திரையரங்கில் நடந்த விழாவில் வர வேற்புரையாற்றியவர் டாக்டர் தாயப்பன். வரவேற்புரையாற்றி யதற்காகவே அவரும் கைது செய்யப்பட, அவர் மீதும் பொடா பாய்ந்தது. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்வீங்க. இப்படி ஒரு கேடு கெட்ட அர சாங்கத்தத் தாங்கிப் பிடிக்க ஆயிரம் கைத் தடிகள். ஈழப்பிரச்சினை பற்றி மேடைகளில் தீவிரமாக முழங்கிய புதுக்கோட்டை பாவாணன் மீதும் பொடா பாய்ந்தது. நெடுமாறன் கட்சியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரும் பொடா வுக்குத் தப்பவில்லை.

பொடாவில் கைது செய்யப் பட்டவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். எப்போது வேண்டுமானாலும் போலீஸ் வரலாம் என்று எதிர்பார்த்தே தனது ஆழ்வார் திருநகர் வீட்டில் காத்திருந்தார் சுப.வீ.

அந்த பரபரப்பான நேரத்தில் நக்கீரன் நிருபர் தம்பி இளையசெல்வன் அவரை சந்தித்தார். கைதுக்காக காத்தி ருப்பதாகச் சொன்ன சுப.வீ, ""இப்போது ஈழத்தில் போர் எதுவும் நடக்கவில்லை. (அப்போது அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது) இங்கும் ஈழவிடுதலைப் போராளிகளாலோ ஆதரவாளர்களாலோ எவ்வித பயங்கரமும் நிகழவில்லை. அங்கு நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்திய அரசும் வரவேற்றிருக்கிறது. தமிழக அரசு இதனைப் பின்பற்றி நல்லதொரு சூழலை அங்கும் இங்கும் உருவாக்க அரிய வாய்ப்பான நேரம் இது. ஆனால், தமிழக அரசோ இல்லாத பயங்கரவாதத்தை இங்கு இருப்பதாகச் சொல்கிறது.

எங்களைப் போன்றவர்கள் விடுதலைப்புலிகளுக்கு என்ன உதவி செய்துவிடமுடியும்? எங்களிடம் உதவி பெறும் நிலையிலா விடுதலைப்புலிகள் உள்ளார்கள்? அவர்களிடம் ராணுவம் உள்ளது. கடற்படை உள்ளது. விமானங்கள்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். என்னிடம் பழைய சைக்கிள்கூட இல்லை. இந்த நிலையில் நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? அங்கே போராடுகின்றவர்கள் மண்ணின் விடுதைலைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் போராடும் போராளிகள்தான் விடுதலைப்புலிகள் என்ற கருத்தை இங்கே சொல்வது மட்டும்தான் எங்கள் வேலை. இதை பயங்கரவாதம் என்று கருதினால் அதில் என்ன நியாயம் இருக்க முடியும்? காலம் இதற்கு விடை சொல்லும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்'' என்றார் சுப.வீ.

மறுநாள், காலை 6 மணிக்கே விருந்தினர்கள்போல போலீசார் வந்துவிட்டனர். ""உங்களை பொடா சட்டத்தில் கைது செய்கிறோம்'' என்று போலீசார் சொன்னதும், ஏதோ பரிசுப் பொருள் தருவது போல, ""ரொம்ப மகிழ்ச்சி. வாங்க போகலாம்'' என்றபடி அவர்களுடன் சுப.வீ கிளம்பினார்.

அடுத்தது நக்கீரன்தான்.. என்று எல்லாத் தரப்பிலிருந்தும் தக வல்கள்.

பரபரப்பு அதிகமானது.

-யுத்தம் தொடரும்

இப்படியும் ஒரு அப்பா-மகன்!

அந்த விலங்கியல் ஆசிரியரின் வில்லங்கத்தை நினைத்தாலே பதறுகிறது மனம்.

குமரி மாவட்டத்தில் ஒரு கிழமையின் பெயரில் இருக்கும் ஊர் அது. அங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில்தான்... தன் பெயரில் ’தோணி’யை வைத்திருக்கும் அந்த விலங்குமனம் கொண்ட ஆசிரியர் வேலைபார்க்கிறார். தான் வகுப்பெடுக்கும் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்புகளில் வசதியான குடும்பத்து மாணவி யாராவது படித்தால் போதும் அக்கறை காட்டும் சாக்கில்... தன் ரூபமான மகனை அவர் களுக்கு அறிமுகப்படுத்துவார். எப்படி?

""ஏம்மா செல்லம். நிறைய மார்க் வாங்கி உங்க அப்பா-அம்மா மனசை நீ குளிரவைக்கணும். உனக்கு பிராக்டிகலில் மார்க்கை அள்ளிப்போட நான் இருக்கேன். என் பையனை அறிமுகப்படுத்தறேன். எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து அவங்கிட்ட டியூசன் படிச்சிக்க. அபாரமா பாடம் சொல்லித் தருவான். அப்புறம் பாரு. செண்டம் மார்க்குதான் உனக்கு’’ என்பார் உரிமையாய் முதுகில் தட்டி.

அவரின் மகனோ ஒரு ப்ளேபாய். அம்மாக் காரர் வேறு ஊரில் ஆசிரியையாக இருப்பதால் பகல் முழுக்க வீடு ப்ரீயாகத்தான் இருக்கும். பிறகென்ன.. ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பார்த்து வீட்டுக்கு அழைத்துப்போய்... செல்லச்செல்ல சீண்டல்கள் விளையாட்டுக்கள் மூலம் அந்த மாணவியின் உணர்வைத் தூண்டி... தன் ஆசையைத் தணித்துக்கொள்வான். காதல்போதையை அந்த மாணவிக்கு ஏற்றி.. அடிக்கடி பணத்தையும் வீட்டில் இருக்கும் நகையையும் கொண்டுவரச் செய்வான். பணமும் நகையும் அப்பாக்காரருக்கு. மாணவியின் தேகம் இவனுக்கு. அப்பாக்காரர், அடுத்த மாணவியை அறிமுகப்படுத்தியதும்... முதல் மாணவியைக் கழற்றிவிட்டு விடுவான். ஏமாந்த மாணவி பிரச்சினை செய்தால்... "பெயில் போட்டுவிடுவேன்' என அப்பாக்கார ஆசிரியர் அவளை மிரட்டி ஆஃப் செய்துவிடுவார்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக... நகை நட்டுக்காகவும் பணத்துக்காகவும் தனது மாணவி களை தன் மகனுக்கே தாரைவார்த்து வருகிறாராம் அந்த மீசைக்கார ஆசிரியர். "இவருக்கு... நேசராக இருக்கும் வேதிவினை ஆசிரியர் உடந்தையான உடந்தை' என்கிறார்கள் பலரும்.

கடந்த ஆண்டு பாதிக்கப் பட்ட அந்த மாணவியைச் சந்தித்தோம். விழி ஈரத்தோடு பேச ஆரம்பித்த அவள்...

""ஸுவாலஜி சார்... அடிக்கடி எங்க வீட்டுக்கு போன் பண்ணி.. உங்க பொண்ணு வீட்டில் எப்படி படிக்குதுன்னு விசாரிப் பார். அதனால எங்க வீட்டில் இருக்கும் அத்தனைபேருக்கும் அவர்மேல் மரியாதை. அந்த நம் பிக்கையில்தான் அவர் சொன்னபடி அவர் பையனுடன் பழக ஆரம்பிச்சேன். அவங்க வீட்டுக்குப்போக நான் தயங்கினப்ப... அவன் உனக்கு ஃபிரண்டுதாம்மா. ஏன் தயங்கறேன்னு வாத்தியார் சொல்வார். இப்படிப்போய்... அவர் மகன்கிட்ட மாட்டிக்கிட்டேன். அவனது உளறலைக் காதல்னு நம்பி ஏமாந்தேன். அவன் என்னிடம் எல்லா அசிங்கமும் பண்ணினான். நிறைய பணம்காசைக் கொடுத்திருக்கேன். அதோட ரெண்டு மோதிரம், ஒரு நெக்லஸ்னு நகைகளையும் வாங்கிக்கிட்டான்.

பிறகுதான் இது அவனும் அவன் அப்பாவும் சேர்ந்து நடத்தும் மோசடித்தனம்னு புரிஞ்சிது. அவன் கூட பழகி ஏமாந்ததை இப்ப நெனைச்சாலும் உயிரே போறமாதிரி இருக்கு. இதை யார்கிட்ட சொல்லமுடியும்? இந்த மோசக்கார வாத்தியாரைப் பத்தியும் அவர் மகனைப் பத்தியும் எல்லோருக்கும் நீங்க வெளிச்சம்போட்டுக் காட்டணும். அப்பதான் அவங்க வலையில் விழாம மற்ற மாணவி களாவது தப்பிப்பாங்க''’என்றாள் வேதனைக் குரலில்.

புனிதமான ஆசிரியர் தொழிலில் இப்படியும் ஒரு களங்கமான மனிதரா? ச்சே!

அவளுக்கு வந்த புத்தி!

""இரண்டு வருஷமாகக் காதலிக்கும் எனக்கு பெரியசாமியை கல்யாணம் செஞ்சு வைங்க!'' -நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்து கண்ணீரோடும் கடிதத்தோடும் நின்ற அந்தச் சிறுமியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்கள் மகளிர் போலீசார்.

அந்தச் சிறுமியை விசாரித்தார்கள்.

""என் பெயர் மீனா. அப்பா பூவேந்திரன், அம்மா ராமாயி. ஊர் மங்களம்மேடு. பாலப்பட்டி ஸ்கூலில் 8-ஆம் வகுப்பு படிக்கிறேன். 13 வயது நடக்கிறது. எங்க ஊர் கோபால் மாமா மகன் பெரியசாமிக்கு வயது 22. போன வருஷம் அவர்தான் என்கிட்ட வந்து காதலிக் கிறதா சொன்னார். சரினு நானும் சந்தோஷமா கரும்புக் காடு, வாழைத்தோப்புனு போய்க் காதலிச்சோம். 15 மாதமா என்னை மட்டுமே காதலிச்ச பெரியசாமி, திடீர்னு என்னை விட்டுட்டு இன்னொரு புள்ளையக் காதலிச்சு லவ் லெட்டரும் கொடுத்திருக்கான். அதனாலதான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தேன்!'' -மிகத் தெளிவாகச் சொன்னாள் அந்த 8-ஆம் வகுப்பு மாணவி.

மீனாவை அங்கேயே இருக்க வைத்துக் கொண்டு, மீனாவின் பெற்றோரையும் பெரியசாமியின் பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தார்கள் மகளிர் போலீசார் கவுன்சிலிங் கொடுத்தார்கள்.

""இந்தக் குழந்தைக்கு கல்யாணம் செய்ய முடியாது. மீறிச் செய்தால் பால்ய விவாகமா... குழந்தைத் திருமணமாகி விடும். நாங்களும் குற்றவாளியாகி விடுவோம். பொண்ணை நல்லா படிக்க வைங்க. அஞ்சாறு வருஷமானதும் நாங்களே முன்னால நின்று ஜாம் ஜாம்னு கல்யாணத்தை நடத்தி விடுகிறோம்!'' புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் மீண்டும் அடம்பிடிக்க ஆரம்பித்தாள் சிறுமி. கல்யாணம் செய்யாவிட்டால் செத்துப் போவேன் என்றாள். இரண்டு வீட்டாரும் உறவினர்களும் உட்கார்ந்து பேசினார்கள். கடைசியில்...

""போலீஸ் சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும். நாளைக் காலைல நம்ம ஊர்க் கோயில்ல கல்யாணத்தை முடிச்சிடலாம். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ரெண்டு வீட்டாரும் செய்ங்கப்பா!'' -கூட்டம் முடிவு எடுத்தது.

மறுநாள் காலையில் உள்ளூர் கோயிலில் காத்திருந்தார்கள் மீனாவும் உறவினர்களும். அப்போதுதான் இந்தச் செய்தி வந்தது. ""மாப்பிள்ளை பெரியசாமி நேற்றிரவே ஊரை விட்டு ஓடிவிட்டான்!''.

கண்ணீரும் கம்பலையுமாக வீடு திரும்பியது மீனா குடும்பம்.

அன்று மாலையில் அரளி விதைகளை அரைத்துக் குடித்து மயங்கி விழுந்தாள் மீனா. மீனாவை நாமக்கல் மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்கு வந்த தந்தை பூவேந்திரன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட்டார்.

""படிக்கிற வயசில படிக்கணும். 13 வயசில காதலிக்கக் கூடாதுனு எனக்குத் தெரியலையே... அவன் ஆசைப்பட்டான்னா... எனக்கு அறிவு இல்லாமப் போச்சே... அப்பாவை இழந்துட்டு நானும் என் அம்மாவும் அனாதையா நிக்கிறோம். இப்பத் தான் புத்தி வருது... என் நிலைமை என் மாதிரி மாணவிகள் யாருக்கும் வரக்கூடாது...!'' -தலைக்கு மேல் வெள்ளம் போனபிறகு, பெரிய மனுஷி போல கதறிக் கொண்டி ருக்கிறாள், மருத்துவமனையில் இருந்து திரும்பிய சிறுமி மீனா.