Thursday, September 9, 2010

மீண்டும் சிலை சர்ச்சை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு பரபரப்பிற்கு கொம்பு சீவிக் கொண்டிருக்கிறார் தியாகி சுடலைமுத்து.

எம்.எல்.ஏ. அப்பாவு முயற்சியால், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பேருந்து நிலையத்திற்கு, கலைஞரின் பெற்றோர் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயரை நீக்கிவிட்டு, காமராஜர் பெயரை வைக்க வேண்டுமென்று, சென்னை சத்தியமூர்த்தி பவனிலும், புழல் சிறையிலும் உண்ணா விரதம் இருந்தார் தியாகி சுடலைமுத்து. இவருடைய கோரிக்கையை ஏற்று, பெயர் மாற்றத்திற்கு உத்தரவிட்டார் கலைஞர்.

இப்போது, அதே ராதாபுரம் பேருந்து நிலையத்தில், நிறுவப்பட்டி ருக்கும் கலைஞரின் பெற்றோர் சிலைக்கு அருகில், காமராஜர் மற்றும் கக்கன் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்.

இதற்கு எம்.எல்.ஏ. அப்பாவு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். மீண்டும் ஒரு பிரச்சினை கிளம்பியது.

""எதற்காக உங்கள் தரப்பு காமராஜர், கக்கன் சிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக் கிறது?'' -எம்.எல்.ஏ. அப்பாவுவிடம் கேட்டோம்.

""கலைஞரின் பெற்றோர் சிலை களையும், பெயரையும் மாற்ற வேண்டு மெனப் போராடியவர்கள்தான் இப்போதும் பிரச்சினையை உருவாக்குகிறார்கள். இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. ஆனால் நான் இதைத் தடுக்கவில்லை. தடுப்பதற்கு நான் யார்? நான் காமராஜருக்கும் கக்கனுக்கும் எதிரானவன் இல்லை. சிலை வைப்பதற்கு அனுமதி அளிப்பது அரசாங்கம். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்கிறார் அப்பாவு.

காமராஜர், கக்கன் சிலை அமைப் புக்குழு தலைவரான கே.பி.கே. ஜெயக் குமாரோ, ""இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. கலைஞரால் மிகவும் போற் றப்படக்கூடியவர்கள் இந்த இரு பெரும் தலைவர்களும்'' என்கிறார்.

எதற்காக இப்படியொரு புதிய பிரச்சினை? -தியாகி சுடலைமுத்துவிடம் கேட்டோம்.

""குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் இருந்து ராதாபுரத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து, விவசாயத்தை செழிக்கச் செய்தவர்கள் காமராஜரும் கக்கனும்தான். அந்த நன்றிக்கடனுக்காகத் தான் அவர்கள் சிலைகளை வைக்க வேண்டுமென்கிறோம். பிரச்சினையை உருவாக்குவது எம்.எல்.ஏ.தான். இந்தச் சிலைகளை கலைஞரின் பெற்றோர் சிலைக்கு அருகில் வைப்பதற்கு அனுமதி கிடைக்காவிட்டால் அக்டோபர் 2-ம் தேதியன்று டில்லியில், காந்தி சமாதி முன்பு நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம்'' என்கிறார் சுடலைமுத்து.

காமராஜர் சிலையை ராதாபுரம் பேருந்து நிலையத்தில் வைக்க வேண்டுமென்று, இந்தப் பகுதி காங்கிரசாரிடம் சொன்னதே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் என்றும், டில்லி உண்ணா விரதத்திற்கு ஏற்பாடு செய்யப்போவதும் இளங் கோவன்தான் என்றும் சொல்கிறார்கள் தியாகி சுடலைமுத்துவின் குழுவினர்.

No comments:

Post a Comment