Monday, September 13, 2010
முரளியைக் கொன்ற வில்லன்!
"முரளி செத்துப்போனார் என்கிற செய்தி வெறும் புரளியாகவே இருக்கக்கூடாதா?'
இப்படித்தான் நினைத்தார்கள் அந்த செய்தியைக் கேள்விப்பட்ட எல்லோருமே.
கடந்த 8-ந் தேதி அதிகாலையில் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார் 46 வயதே ஆன முரளி.
அப்பா வழியில் கன்னடராக இருந்தாலும் அம்மா வழியில் தமிழரான முரளி வெகுஜன தமிழர்களின் நிறத்தையும், சாயலையும் கொண்டிருந்ததால் "அட, நம்மைப்போல் ஒருவன்' என மக்கள் கொண்டாடினார்கள். தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் முரளி. அதிலும் காதலை வெளிப்படுத்தாத கல்லூரி நாயகனாக பல படங்களில் நடித்து சாதனையே புரிந்தவர் முரளி. 96-ல் திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி பேரணி நடத்திய திரையுலகினர் அப்போதும் முதல்வராக இருந்த கலைஞ ரை சந்தித்து மனுக் கொடுக்க கோட்டையில் முதல்வர் அறையில் காத்திருந்தனர். அப்போது... ‘"நான் கலைஞர்கிட்ட தனியா ஒரு கோரிக்கை வைக்கப் போ றேன். என்ன தெரியுமா? நம்ம முரளி ரொம்ப வருஷமா காலேஜ் போய்க்கிட்டிருக்கார். அவரை எப்படியாவது பாஸ் பண்ணிவிட்ருங்கனு கேக்கப்போறேன்' என சத்யராஜ் சொன்ன போது... விழுந்து விழுந்து சிரித்தார்கள் எல்லோரும். முரளி மகன் அதர்வா நடித்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘"பாணா காத்தாடி' படத்தில் மருத்துவக் கல்லூரி ஃபைனல் இயர் ஸ்டூடண்ட்டாக முரளி கெஸ்ட்ரோல் பண்ணியிருந்தார். "டேய்... இவரு இன்னமுமாடா காலேஜ் போய்ட்டி ருக்காரு' என ஒரு கேரக்டர் கேக்கும். இந்த காட்சி வருகிறபோது ஒவ்வொரு திரை யரங்கமும் வெடித்துச் சிரிக்கிறது.
முரளியின் நிஜவாழ்க்கையில் ஏற் பட்ட காதலும் சினிமாவைவிட சுவாரஸ்ய மானதுதான். முரளியின் நண்பர் ஒரு பெண்ணை காதலித்த போது துணைக்குச் செல்வார் முரளி. அப்போது நண்பனின் காதலிக்கு துணையாக வருவார் ஷோபா. காதலர்கள் தனிமையில் பேசிக் கொள்ளட் டுமே என முரளியும் ஷோபாவும் தனியே வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இந்த நட்பு காதலாக மாறியது. இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு. முரளி ஹீரோவாக தமிழ் நாட்டுக்கு வந்துவிட்ட நேரத்தில் ஷோபா வை கோவாவில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள் ஷோபா குடும்பத்தினர். சென்னையில் ஷூட்டிங் முடிந்ததும் ஃபிளைட் பிடித்து பெங்களூர் போய் அங்கிருந்து கார் மூலம் கோவா போய் ஷோபாவை பார்த்துவிட்டு அதே பாணியில் மறுநாள் சென்னையில் படப்பிடிப்பிற்கு வந்துவிடுவார் முரளி. இப்படி போராடி தன் காதலில் வென்றவர் முரளி.
ஹீரோவாக இவர் நடித்த படங்கள் ஹிட் ஆனதும் தயாரிப்பாளர்கள் அட்வான்ஸை கொண்டுபோய் கொட்டினார்கள். ஒரேநேரத்தில் பல படங்களில் நடித்ததால் தரமில்லாமல் சில படங்கள் தோல்வியை சந்திக்க... அட்வான் ஸை திருப்பிக்கேட்டு தயாரிப்பாளர் கள் முரளியை முற்றுகையிட்டார்கள்.
"இனி நம் சினிமா வாழ்க்கையே அவ்வளவு தானா?' வேதனைப்பட்டுப் போனார். திரும்ப "புது வசந்தம்' படம் ஹிட்டான போது அவரைத்தேடி அட்வான்ஸோடு ஓடிவந்தார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால்... ஒரே நேரத்தில் ஒரு படத்திற்கு மேல் நடிப்பதில்லை என்கிற பாலிஸியை வகுத்துக் கொண்டார். "இந்தப் படம் ஓடினால் அடுத்த படத்திற்கு அட்வான்ஸ் வாங்குவோம்... இல்லேன்னா சும்மா இருப்போம்' என இருந்தார்.
"கடல் பூக்கள்', "வெற்றிக்கொடிகட்டு', "இரணி யன்' போன்ற முரளி நடித்த நல்ல படங்கள் ஃபைனான்ஸ் பிரச்சினைகளால் வெளிவரமுடியாமல் தடுமாறியபோது சம்பந்தப்பட்டவர்களின் கடனுக்காக ஜாமீன் கொடுத்தார் முரளி. அதுதான் அவரை கழுத்தை நெரித்தது. வீட்டில் நாலு கார்கள் இருந்த போதும் கூட பெட்ரோல், டீசலுக்கு பணமில்லாமல் தவித்தார். அந்தச் சமயம் ஜெயலலிதா முரளி மகளுக்கு இலவசமாக மெடிக்கல் சீட் தந்தார். அதனால் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். இருந்தும் மாற்றுக் கட்சியினரை அவர் விமர்சித்துப் பேசியதில்லை. மு.க.ஸ்டாலின் துணை முதல்வரானதும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மார்க்கெட் பீக்கில் இருந்த போதும் சரி, வீக்கில் இருந்த போதும் சரி ""என்ன பாஸ் எப்படி இருக்கீங்க?'' என மிகத்தன்மையாக பழகுவார். அதனால்தான் திரையுலகம் திரண்டு போய் முரளிக்கு அஞ்சலி செலுத்தியது. கோடம்பாக்கம் ஒருநாள் விடுப்பு விட்டு துக்கம் அனுஷ்டித்தது.
பத்து நாட்களுக்கு முன் அதர்வாவுடன் நக்கீரன் அலுவலகம் வந்த முரளி "பொண்ணு மேரேஜை சிறப்பா நடத்த முடிவு பண்ணிருக்கேன் அண்ணே' என நமது ஆசிரியரிடம் சொல்லி பூரித்தார்.
ஒருகாலத்தில் முரளி மது அருந்துவதில் அதீத மோகத்தோடு இருந்தார். ஆனால் அந்தப் பழக்கத்தை ஒரேநாளில் விட்டெறிந்த முரளியால் சிகரெட் பழக்கத்தை மட்டும் விடமுடியவில்லை. பாக்கெட் பாக்கெட்டாக ஊதித்தள்ளினார். தொடர்ந்து சிகரெட் குடிப்பதால் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்காக வாசனை பாக்கு மெல்லுவார். கசப்பு மாறியதும் மறுபடி புகைப்பார்.
சினிமாவில் வில்லாதி வில்லனையெல்லாம் ஜெயித்த இந்த கருப்பு ராஜ குமாரன் நிஜவாழ்வில் சிகரெட் என்கிற வில்லனிடம் தோற்றே போனார்.
தீவிர ரசிகர்!
நீங்கள் எந்த ஊருக்குப் போனாலும் பாலங்களின் சுவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ‘"கடவுள் முரளி வாழ்க' என கரிக்கட்டையால் எழுதப்பட்டிருக்கும். இது முரளியின் கவனத்திற்கு வந்தபோது அப்படி எழுதுவது யார் என்பதை பல வருடங்களாக தேடி கண்டுபிடித்தார். மதுரையில் புரோட்டா கடையில் வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் 15 நாட்கள் கடையில் வேலை பார்த்து பணம் சேர்ப்பார். அந்த பணத்தோடும் பை நிறைய கரிக்கட்டையோடும் ஒவ்வொரு ஊராக போவார். "கடவுள் முரளி வாழ்க' என எழுதுவார். பணமும், கரியும் தீர்ந்ததும் மறுபடி மதுரை வந்து வேலை பார்ப்பார். மறுபடியும் பணம் சேர்ந்ததும் கிளம்பிவிடுவார் கரிக்கட்டைகளோடு. அந்த ரசிகரை வரவழைத்து தன்னுடனேயே கொஞ்சநாள் வைத்திருந்து அழகு பார்த்தவர் முரளி. வெளியூர்களுக்கு படப்பிடிப்பிற்கு போகிறபோது அங்குள்ள தனது ரசிகர்களின் வீடு களுக்குப்போய் குடிசை வீடுகளிலும் பாரபட்சமில்லாமல் சாப்பிடுவார். அவ்வளவு தூரம் எளிமையான மனிதர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment