Sunday, September 19, 2010

இலங்கையில் 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் - அமெரிக்கா


இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக கொழும்பில் வைத்து லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக முன்னரே அறிக்கைகள் வந்திருந்தன. ஆனால் இதை இலங்கை பலமாக மறுத்துவந்த நிலையில், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் இலங்கையில் பயிற்சி எடுத்து வருவதாகவும், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களைத் தொடுக்கவென ஏற்கனவே 200 லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தயாராக உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

அதோடு, மேற்படி பயிற்சி முகாம்கள் பற்றி வோஷிங்டன் கொழும்புக்கும் தகவல் கொடுத்துள்ளதாம். இந்தியா மீது தொடுக்கவுள்ள தாக்குதலில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளும் ஈடுபட்டார்கள் என்றால் அத்தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும் என்று புதுடில்லியின் ஆய்வு எச்சரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் பேக்கரியில் நடந்த தாக்குதலில் பங்கெடுத்த, பெய்க் கொழும்புக்கு 2008 இல் சென்று அங்கு லஷ்கர் ஈ-தொய்பாவைச் சந்தித்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாம். மேலும் இவர் எத்தனை தடவைகள் அங்கு விஜயம் செய்தார் மற்றும் இலங்கையை பயிற்சித் தளமாக லஷ்கர் ஈ-தொய்பா பயன்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் பொருட்டு விசாரணை நடந்துவருகிறது.

மேலும், இலங்கைக்கு அனுப்பி அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்கென அனுப்பப்பட்டுள்ள 200 பேரும் இதற்கெனத் தனியான பயிற்சிகளைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினர் தமது நிலைப்பாட்டை நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலும் பலப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள் எனக் கூறியுள்ள அவ்வறிக்கை, நேபாளத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இந்தியாவுக்குள் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்றாலும், தற்போது அவர்களின் புது இலக்காக மாலைதீவும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.

இவ்வறிக்கை இவ்வாறிருக்க, லஷ்கர் ஈ-தொய்பா இயக்கத்தினருக்கு பயிற்சி அளித்ததில் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை என்று இந்திய மஹாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் போலீஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment