Saturday, September 18, 2010
காஷ்மீர் கலவரம்! டெல்லியின் பொய் முகம்! -ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
பனிப்பிரதேசமும் பற்றி எரிய முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கானப் போராட்டம். கடந்த 3 மாதமாக ஸ்ரீநகர் எரிகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு என்பது அரசியல்ரீதியான சிக்கலுக்குரிய இடம். அங்குதான் இப்போது போராட்டங்கள் தீவிரமாகி, அரசாங்கத்தால் கலவரம் என வர்ணிக்கப்படுகிறது.
1991-க்குப் பிறகு முழு பள்ளத்தாக்கும் சிக்கலுக்குள்ளாகியிருப்பது இப்போதுதான். அதேநேரத்தில் முதன்முறையாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும்தான் பிரச்சினை பெரிதாக உள்ளது. காஷ்மீரின் மற்ற இரு பகுதிகளான லடாக்கிலோ ஜம்முவிலோ இதன் தாக்கம் இல்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இளைஞர்களும் பெண்களும் வீதியில் இறங்கி, ராணுவத்தினர் மீதும் துணை ராணுவத்தினர் மீதும் கற்களை வீசுகிறார்கள். செருப்புகளால் அடிக்கிறார்கள். ராணுவத் துப்பாக்கிகளிலிருந்து தவறிப் பாயும் தோட்டாக்களால் ஒவ்வொரு நாளும் 5 முதல் 10 பேர் வரையிலான பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு காரணம், வெளிநாட்டுத் தூண்டுதல் என்கிறது மத்திய அரசு. இந்தக் காரணம் என்பது பிரச் சினையிலிருந்து மத்திய அரசு மிக சுலபமாகத் தப்பித்துக்கொள்ளக் கூடிய வழி. உண்மையில், வெளிநாட்டுத் தூண்டுதல் என்பது மிகக்குறைவான அளவிலேயே இப்பிரச்சினைக்கு காரணமாக இருக் கிறது. காஷ்மீர் பிரச்சினை குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டின் தொடர் தோல்விகள், முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு எதிராக மெகபூபாவின் பி.டி.பி.எஃப் கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உமர் அப்துல்லாவை பலவீனப்படுத்த, அவரது அப்பா பரூக் அப்துல்லா தரப்பினரே செய்து வரும் வேலைகள்... இவையெல்லாம் பிரச் சினையைத் தீவிரப்படுத்தியிருக்கும் அம்சங்களாகும்.
அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் இன்று அவற்றின் கைகளிலிருந்து நழுவி, அது காஷ்மீர் இளைஞர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. நியாயமான சுதந்திரத்தையும் அரசியல் உரிமைகளையும் கேட்டுப் போராடும் இளைஞர்களுக்கு பெண்கள் உள்ளிட்ட காஷ்மீர் பொதுமக்கள் துணை நிற்கிறார்கள். காஷ்மீர் இளைஞர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிரான கோபம்.
1989-ல் அமைந்த வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசில் தான் முதன்முறையாக உள்துறை அமைச்சர் பொறுப்பில் காஷ்மீர் முஸ்லிமான முஃப்டி முகமது சயீத் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு மத்திய அரசில் முக்கியமான துறை ஒன்று, காஷ்மீர் முஸ்லிமுக்கு ஒதுக்கப்பட்டது என்பது வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூ. அரசில்தான். 1999-ல் இந்தியாவை ஆட்சி செய்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி சேர்கிறது. அவரது மகன் உமர் அப்துல்லா வெளிவிவகாரத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
இதன்பிறகு, காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிப்போம் என இந்திய அரசு முடிவெடுக்கிறது. பேச்சுவார்த்தை மூலமாக அரசியல் தீர்வுக்கு நகர்வது என்ற அடிப்படையில் அனைத்துப் பிரிவினரும் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகியவற்றுடன், இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் உரிமை கேட்கும் காஷ்மீரின் ஹூரியத் அமைப்பையும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்துகிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
முதலாவதும், மிக முக்கியமானதுமான வாக்குறுதி என்பது, காஷ்மீரில் ராணுவத்திற்கு உள்ள சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குவ தாகும். பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தினர் என்ன குற்றம் செய்தாலும் அவர்களை எந்த சட்டத்தின் கீழும் தண்டிக்கமுடியாது என்பதுதான் இந்தச் சிறப்புச் சட்டம். காஷ்மீரில் ராணுவத்தினரின் செயல்பாடுகளுக்கு முழுமையான அதிகாரமும் சுதந்திரமும் இருக்கிறது. இந்த சட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இச்சட்டம் நீக்கப்படும் என்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை நம்பிய காஷ்மீர் மக்கள், 2002 தேர்தலில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவைச் செலுத்தினர். 1970-களுக்குப் பிறகு, மத்திய அரசுப் படையினரின் முறைகேடுகள் இல்லாமல் நடந்த இந்த தேர்தலில் காங்கிரஸ்-பி.டி.பி. கூட்டணி வெற்றி பெற்று காஷ்மீரில் ஆட்சி அமைத்தது. ஆனால், மத்திய அரசோ, தான் கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வில்லை.
தே.ஜ.கூ. அரசு வீழ்த்தப்பட்டு மன் மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ல் பொறுப்பேற்றபோதும் காஷ்மீர் மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பிரமுகராக இருந்தவர் அப்போது வெளியுறவுத் துறையைக் கவனித்து வந்த பிரணாப் முகர்ஜி. நாளாக, நாளாக ராணுவத்தின் எண்ணிக்கையை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து குறைப்போம் என்றது ஐ.மு.கூ. அரசு. ஆனால், அது நடக்க வில்லை. அரசு மிகவும் புத்திசாலித்தனமாக ஒரு பெட்டாலியன் ராணுவத்தை விலக்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப் ஆகியவற்றின் 2 பெட்டாலியனைக் கொண்டு வந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிறுத்தியது. இதனால், ஆயுதம் ஏந்திய படையினரின் எண்ணிக்கை அதிகமானது. அவர்களின் அதிகார எல்லை மீறல்களும் அதிகமானது.
2009 ஏப்ரலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஷோஃபியனில் படையினர் நடத்திய போலி என்கவுன்ட் டர் மற்றும் வல்லாதிக்க பாலுறவு ஆகியவற்றால் கொதிப்படைந்த காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இச்சம்பவங்கள் தொடர்பான நியாயமான நடவடிக்கைகளையோ, அப்பகுதியில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளையோ அரசாங்கம் எடுக்கவில்லை. அத்துடன், அரசு அளித்த 6 வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவுமில்லை.
எல்லைக்கு அப்பால் உள்ள தங்கள் உறவினர்களை ஸ்ரீநகர்- முசாபராபாத் சாலை வழியாகச் சென்று காஷ்மீர் மக்கள் சந்திப்பதற் காக போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத் தப்படும் என்று சொன்ன மத்திய அரசு, ஒரே ஒரு பஸ் மட்டுமே விட்டது. அதிலும் 9 பேருக்கு மேல் பயணிக்க அனுமதியில்லை. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை ஜம்மு வழியாக முழு இந்தியாவுக்கும் அனுப்பு வதைவிட, ஜம்மு-சியால்காட் பாதை வழியாக லாகூருக்கு அனுப்புவது எளிதாகவும் லாபகர மானதாகவும் இருக்கும் என்பது காஷ்மீர் மக்களின் கோரிக்கை. அழுகும் பொருட் களாக இருப்பதால், இதனை அருகிலுள்ள லாகூருக்கு அனுப்பினால் வீணாகாமல் இருக்கும் என்றனர். எல்லையைத் தாண்டிய வியாபாரம் என்பது நியாயமான கோரிக் கைதான் என்றும் அதை அனுமதிக்கப் போவதாகவும் ஒத்துக்கொண்ட மத்திய அரசு, இதுநாள்வரை ஒரு கண்டெய்ன ருக்கும் அனுமதி வழங்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் ரம்ஜானுக்கு முன்பாக பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னெடுப்பு நடைபெறும்.. இந்த வருடம், ரம்ஜான் மாதத்தில் பேச்சுவார்த்தைக்கான எந்த முயற்சியையும் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை. வழக்கமான பாவ னைகூட இல்லையே என்ற கோபம் காஷ்மீர் மக்களிடம் வந்துவிட்டது. இதனால் பள்ளத்தாக்குப் பகுதி போராட்டத்தால் எரியத் தொடங்கியது. காஷ்மீர் பற்றி எரிந்து உயிர்பலிகள் தொடர்ந்துகொண்டுள்ள நிலையிலும் ராணுவத்தின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவில்லை.
மிகத் தாமதமாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காஷ்மீருக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் அடங்கிய குழுவை அனுப்பும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. ராணுவ சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தொடர்பான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மத்திய அரசின் பொய் முகம்தான் வெளிப்பட்டது.
ராணுவத்தின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக 2004-ல் ஒரு கமிட்டி ஜெனரல் வி.ஆர்.ராகவன், பத்திரிகையாளர் சஞ்சய் அசாரிகா ஆகியோரைக் கொண்டு அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டி 2006-ன் தொடக்கத்திலேயே, சிறப்பு அதிகாரத்தை நீக்க வேண்டியது ஏன் என்பதை வலியுறுத்தி ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. சிறப்பு அதிகாரமே தேவை யில்லை என்றும், இதுதான் தேவை என்று அரசு கருதினால் அந்த அதிகாரத்தின் வீச்சையும் தாக்கத்தையும் குறைக்கவாவது ஆரம்பிக்கவேண்டும் என்கிறது அந்த ரிப்போர்ட். ஆனால், தான் அமைத்த கமிட்டியின் அறிக்கையின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்தியாவில் எங்கெல்லாம் மக்களின் அரசியல் ரீதியான உரிமைகளுக்கான போராட்டங்கள் வேகம் பெறுகிறதோ, அங்கே மத்திய அரசின் பார்வை பிரச்சினையைத் தீர்ப்பதைவிட சமாளிப்பதில்தான் உள்ளது. Interest in conflict management. But, not conflict resolution. பிரச்சினைக்குரிய இடங்களில், சகஜ நிலைமைக்குத் திரும்புதல் (Restoration of normalcy) என்ற வார்த்தை மட்டுமே அரசுத் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. சகஜ நிலை என்பது கல்வீச்சும் செருப்படியும் நிற்பதால் உருவாகும் சூழல் அல்ல. உரிமைகளுடன் கூடிய அரசியல் அதிகாரத் தையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதில்தான் உள்ளது. ஆனால், இந்திய அரசைப் பொறுத்தவரை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் சகஜநிலைக்குத் திரும்புதல் என்று போராட்டத்தை ராணுவத்தின் மூலம் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அது நிரந்தரத் தீர்வாகாது.
டெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் உள்ள அரசியல் தட்பவெப்ப நிலைக்கேற்றபடியே இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரைக் கையாளுகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் காஷ்மீர் மக்கள். செப்டம்பர் 18-ந் தேதி ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத்தேர்தல் நடை பெறுகிறது. இதற்கு முன் அங்கு நடந்த அதிபர் தேர்தலில் கர்சாய் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றார். 18-ந் தேதி யாருடைய விருப்பம் அதிகளவில் வெற்றி என்ற போர் இந்தியா-பாகிஸ் தானிடையே உச்சகட்டத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாக பலுசிஸ்தானில் இந்தியாவும் காஷ்மீரில் பாகிஸ்தானும் விளையாடிக்கொண்டிருக்கின்றன. இந்த ஆட்டங்களை விட, காஷ்மீர் மக்கள் உரிமைகளில் கவனம் செலுத்துவதே முக்கிய மானது.
அரசு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்றி, பேச்சுவார்த்தைகளைத் தயங்காமல் அதைத் தொடரவேண்டும். இல்லையென்றால், காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளும் அதனையொட்டிய போராட்டங்களும் தொடரவே செய்யும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment