Saturday, September 18, 2010
யுத்தம் -நக்கீரன் கோபால் (89)
அங்குதான், நக்கீரனின் அட்டைப்படம் கணினி முறையில் அப்போது வடிவமைக்கப்படும். நான் அங்கே சென்ற சிறிது நேரத்தில், புத்தக காட்சியிலிருந்து தம்பி கார்த்திகைச்செல்வன் போன் செய்தார்.
""அண்ணே.. இங்கே முகமது அலி வந்திருக் காரு''- மெல்லிய குரலில் இந்தத் தகவலை தந்தார். இது நான் எதிர்பார்த்ததுதான். நான் புத்தக காட்சிக்கு வந்திருந்த தகவலை போலீசார் உடனடியாக டி.ஐ.ஜி. முகமது அலிக்குத் தெரிவிக்க, அவரே நேரில் வந்து என்னை மடக்க நினைத்திருக்கிறார். நானோ, பிரிண்ட் சிஸ்டத்தில் இருந்தேன்.
அங்கிருந்து ஆடிட்டர் மோரீஸுக்குப் போன் செய்தேன். அவரை வரச்சொல்லி, அவரின் காரிலேயே அவர் வீட்டுக்குப் போய், ஆலோசனை செய்துகொண்டி ருந்தேன். அப்போது சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் புத்தகக் கண்காட்சியைக் காட்டி னார்கள். அதில் நான் இருப்பதும் ஒளிபரப்பானது. அது போல, விஜய் டி.வி. அப்போது என்.டி.டி.வி.யுடன் இணைந்து வழங்கிக்கொண்டிருந்த செய்தி அறிக்கை யிலும் இந்த செய்தி ஒளிபரப்பானது. அதைப் பார்த்ததும் அரசுத் தரப்பு படுடென்ஷனாகி, எப்படியும் என்னைப் பிடித்துவிடவேண்டும் என்று புத்தகக்கண்காட்சி நடந்த வளாகத்தைச் சுற்றிலும் போலீசைக் குவித்தது.
குதிரை போனபிறகு லாயத்தைப் பூட்டுவதுபோல, நான் புத்தக காட்சியிலிருந்து புறப்பட்டு வெகுநேரமான பிறகு, போலீசார் அங்கே குவிக்கப்பட்டு, "நான் வெளியே வருவேன்' என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இரவு 11 மணி. நான் ஆடிட்டர் மோரீஸ் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். நீண்ட நாட்கள் கழித்து என் குடும்பத்தா ருடன் உட்கார்ந்து சாப்பிட்டேன். அவர்களின் மனதின் ஒரு பக்கத்தில் தற்காலிக மகிழ்ச்சி. இன்னொரு பக்கத்தில், நிரந்தர கலக்கம்.
மறுநாள் காலையில் மூன்று நிகழ்ச்சிகள். கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோட்டிலுள்ள நவசக்தி விநாயகர் கோயிலில் "பால ஜோதிடம்' வார இதழ் வெளியீடு. நாம் புதிதாக வாங்கியிருந்த 407 வண்டிக்கு பூஜை. நக்கீரனால் நிர்வகிக்கப்படும் ஓரியண்ட் நர்சரி பள்ளியில் புதிய கட்டிடத் திறப்புவிழா. 5 மணிக்கெல்லாம் எழுந்து, ரெடியாகத் தொடங்கிவிட்டேன். ஜெயராஜுக்குப் போன் செய்து, பள்ளிக்கூடம் மற்றும் கோயில் உள்ள மண்டபம் ரோடு ஏரியாவில் போலீஸ் நடமாட்டம் இருக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். 15 நிமிட இடைவெளிக்குப்பிறகு ஜெயராஜிடமிருந்து போன்.
""அண்ணே... எந்த நடமாட்டமும் இல்லை.''
காலை 6 மணிக்கெல்லாம் நானும் என் துணைவியாரும் பள்ளிக்கூடத்திற்குப் போனோம். எங்களுக்கு ஆச்சரியம்..
அந்த நேரத்திலேயே டீச்சர்களையும் பிள்ளைகளையும் வரச்செய்திருந்தார் ஹெச்.எம். மகாலட்சுமி. சூரியன் உதயமாகும் பொழுதில், ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்துவைத்தோம்.
6.25 மணி. பிள்ளையார் கோயிலில் இருந்தோம். பெருசு சுந்தர், தம்பிகள் குரு, சுரேஷ், பிரான்சிஸ், ஆனந்த், சந்திரமோகன், ஓம் முருகன், மலரோன், சரவண பெருமாள், சர்க்குலேசன் அன்பு, பார்த்திபன், போட்டோ எஸ்.பி.சுந்தர், பரமேஷ் எல்லோரும் தயாராக இருந்தனர். பாலஜோதிடத்தின் ஆசிரியரான வித்வான் லட்சுமணன் வந்துவிட்டார். கண்ணன் பட்டாச்சார்யாவும் இருந்தார். சென்னை முகவர்களான அப்பு, சீனிவாசன் ஆகியோரும் இருந்தார்கள். கோயிலில் பூஜை நடத்தப்பட்டு 6.55 மணிக்கு பாலஜோதிடம் இதழ் வெளி யிடப்பட்டது. 407 புதுவண்டிக்கும் பூஜை போடப்பட்டது. கோயிலைச் சுற்றி போலீஸ் நடமாட்டம் தென்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தம்பிகள் கௌரியும், டிரைவர் கண்ணனும் வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.
"எந்த நடமாட்டமும் இல்லை' என்று அவர்கள் சிக்னல் காட்டியதும், துணைவியாரை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டு, டிரைவர்கள் மோகனையும் கணேசனையும் அழைத்துக்கொண்டு காரில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு இடைவெளிக்குப்பிறகு, பகல் நேரத்தில் சென்னை மாநகரத்திற்குள் கார் பயணம்.
8.30 மணி. மேத்தா நகரில் இருக்கும் ஜோசியரம்மா எல்சி.பாசிலின் வீடு. நக்கீரன் நலனில் ரொம்பவும் அக்கறை கொண்ட பெண்மணி. அங்கேதான் என் கார் போய் நின்றது. மோகனையும் கணேசனையும் "காரை எடுத்துக்கிட்டுப்போய் சாப்பிட்டுட்டு வந்திடுங்க' என்று சொல்லி அனுப்பிவிட்டு, நான் வீட்டுக்குள் சென்றேன். நான் எப்போது போனாலும் அன்பாக வரவேற்கும் அவர், அன்றைக்கு என்னைப் பார்த்ததும் ரொம்பவும் பதற்றமாக இருந்தார்.
""என்ன திடீர்னு வந்திருக்கீங்க?''
""இந்த சூழ்நிலையில் வெளியே வருவேன்னு நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.''
""அது இல்லே... ஜோசியம் பார்க்க போலீஸ் கமிஷனர் வர்றதா சொல்லி யிருந்தார். அவர் வரும் நேரம்.. .. ..''
எனக்கு நிலைமை புரிந்துவிட்டது. "போச்சுடா' என தலையில் கைவைத்து உட்கார்ந்தேன். ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாக, போலீஸ் பிடியில் சிக்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் நான், கமிஷனர் வரும் வீட்டிற்கு வந்திருப்பதை நினைத்துக்கொண்டேன். அப்போது செல்போன் என்பது காஸ்ட்லி சமாச்சாரம். மோகனிடம் செல் இல்லை. கமிஷனர் வரும் நேரம் பார்த்து, என் காரை ஓட்டிக்கொண்டு மோகன் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதட்டம் எனக்கும் தொற்றிக்கொண் டது. அம்பாசிடர் கார் நம்பர் 666 என்பதால் போலீசா ரால் அதை நன்றாக அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும். நான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தி லேயே மோகனும் கணேசனும் டிபன் சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்துவிட்டார்கள். அப்பாடா என்று நிம்மதி. எனக்கு மட்டுமல்ல, ஜோசியரம்மாவுக்கும்தான். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினேன்.
""தாம்பரத்துக்குப் போ கணேசா''
-சும்மா ஓட்டம் காட்டுவதற்காகத்தான் அங்கே போகச் சொன்னேன். அங்கே பெரிதாக எந்த வேலையுமில்லை. தாம்பரம் போனதும், திருவான்மியூ ருக்குப் போங்க என்றேன். அங்கே தம்பி அய்யப் பனின் ஹோட்டலுக்குப் போய் அவரை நலம் விசாரித்துவிட்டு, அடையாறில் நண்பர் சவுந்தர் வீட்டுக்குப் போகச் சொன்னேன். சவுந்தர் வீட்டில் அம்பாசிடரை நிறுத்திவிட்டு, சவுந்த ருடைய காரிலேயே உத்தண்டிக்குப் போனோம். உத்தண்டியில் சவுந்தர் வாங்கிய நிலத்தைப் பார்த்து விட்டு, மறுபடியும் அடையாறுக்குத் திரும்பினோம். சவுந்தரிடம் விடைபெற்றுக்கொண்டு, மீண்டும் அம்பா சிடர் பயணம். சின்னக்குத்தூசி அய்யா அறைக்குப் போகும்படி மோகனிடம் சொன்னேன். சாந்தோம் சிக்னல் தாண்டி, ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே வரும்போது, டிராஃபிக் அதிகமாக இருந்தது.
அப்போதுதான், தம்பி மோகன் அந்த நபரை பார்த்துவிட்டு, ""அண்ணே.. அந்த ஆளைப் பாருங்க'' என் றார். ஒரு டூவீலர் நம் காருக்கு முன்னாடி நின்று கொண்டிருந்தது. அதிலிருந்தவர் நமது கார் நம்பரைப் பார்த்துவிட்டு, யாருக் கோ செல்போனில் பேசத்தொடங்கினார். எனக்குப் புரிந்துவிட்டது.
அவர், போலீசின் ஆள்தான். அடையாறில் அம்பாசிடரை நிறுத்தி விட்டுச் சென்றபோதே போலீசார் நோட்டம் விட்டுவிட்டார்கள். நான் எந்தப் பக்கம் செல்கிறேன் என்ப தை கவனித்து, தகவல் பாஸ் செய் திருக்கிறார்கள். அதை வெரிஃபை செய்துதான் டூவீலர்காரர் யாரோ ஒரு உயரதிகாரிக்குப் பேசுகிறார். டிராஃபிக்கில் அம்பாசிடர் நின்று கொண்டிருந்த, ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷனிலிருந்து மிக அருகில் இருக்கிறது டி.ஜி.பி. ஆபீஸ். தகவல் கிடைத்தவுடன் நமது காரை மடக்கி விடமுடியும்.
""அடடா... குண்டக்க மண்டக்க மாட்டிக்கிட்டோம் னா நம்ம கத கந்தலாகிவிடும்''.
""அப்படியே வண்டியை லெஃப்ட்டில் விடு கணேசா'' என்றேன். காரணீஸ்வரர் கோயில் பகுதி வழியாக லஸ், மயிலாப்பூர் என க்ரீன்வேஸ் சாலை நோக்கிச் சென்றது அம்பாசிடர். க்ரீன்வேஸ் சாலைக்கு முன்பாக வண்டியை ஓரங்கட்டச் சொன்னேன்.
காரிலிருந்து மங்க்கி கேப் (ம்ர்ய்ந்ங்ஹ் ஸ்ரீஹல்)பை எடுத்து அணிந்துகொண்டு, கீழே இறங்கினேன்.
""நீங்க வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்புங்க'' என்று மோகனிடம் சொல்லிவிட்டு, நான் ஒரு ஆட் டோவை கைநீட்டி நிறுத்தி அதில் ஏறிக்கொண்டேன்.
""எங்கே போகணும் சார்?''
""அடையாறு பாலம்...''
""சாருக்கு உடம்பு சரியில்லையா..''
""ம்.. குளிர் ஜுரம்''.
""மலர் ஹாஸ்பிட்டல் போகணுமா?''
நான் எதுவும் சொல்லவில்லை. அடையாறு பாலத்தருகே ஆட்டோ வந்ததும், ராஜ்பவன் பக்கம் போகச் சொன்னேன். அங்கிருந்து கிண்டி நேரு சிலை அருகே போகச் சொன்னேன்.
""எங்கே சார் நீங்க இறங்கணும். ஒவ்வொரு இடமா சுத்திக்கிட்டு இருக்கீங்க...'' ஆட்டோ டிரைவர் ஒன்றும் புரியாமல் கேட்டார்.
""ஏதோ உங்க புண்ணியத்துல ஊரை சுற்றிப் பார்த்துக்கிட்டிருக்கேன். நீங்கபாட்டுக்கு போங்க.''
அவரும் ஆட்டோவை விரட்டினார். அப்போது ஆஜானுபாகுவான ஒரு போலீஸ்காரர் டூவீலரில் எங்கள் ஆட்டோவின் பக்கத்திலேயே வந்துகொண்டிருந்தார். அடிக்கடி குனிந்து, மங்க்கி கேப் அணிந்திருக்கும் என்னை உற்றுப் பார்த்தார். நான் ஆட்டோவை வேகமாக ஓட்டச் சொன் னேன். கொஞ்ச தூரம் வரை எங்களையே பின்தொடர்ந்து வந்த அந்த போலீஸ்காரரை அதன்பிறகு காணவில்லை.
கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடுவதுபோல, சென்னையின் பல இடங் களையும் சுற்றிவிட்டு அண்ணா நகருக்கு வந்தேன்.
சோனைமுத்து மச்சான் வீடு.
முதல் வேலையாக சிவக் குமாருக்குப் போன் செய்து, ""தம்பி.. மோகனும் கணேசனும் வந்துட்டாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க'' என்றேன். அவர், ""அண்ணே.. சீனியர் அர் ஜென்ட்டா கூப்பிட்டிருக்கார். 10 நிமிடத்தில் உங்க லைனுக்கு வந்து தகவல் சொல்றேன்'' என்றார். அவர் கட் செய்ததும், தம்பி சுரேஷ் லைனில் வந்தார்.
""அண்ணே... வீட்டை சுற்றி மறுபடியும் போலீஸை குவிச்சிருக்காங்க.''
""எவ்வளவு பேர்.. எத்தனை ஜீப்.. யார் தலைமையில் வந்திருக்காங்கன்னு விசாரிங்க'' என்றேன்.
15 நிமிடம் கழித்து, சிவக்குமார் லைனுக்குப் போனேன். அவரது குரல் படபடப்புடன் இருந்தது.
""அண்ணே... சீனியர் உங்களை எங்காவது கண் காணாத இடத்துக்கு உடனடியாகப் போகச் சொல்றார். ஜெயலலிதா உங்களுக்கு 20-ந் தேதி வரைக்கும் கெடு வச்சிருக்கிறதா சொன்னார். அரசாங்கத்தோட ப்ளான் படுபயங்கரமா இருக்கு....''
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment