Thursday, September 16, 2010

தேசிய விருது... ஊக்குவிப்பு மட்டுமே : இளையராஜா கருத்து


தேசிய திரைப்பட விருதைப் பெறுவது ஊக்குவிப்புதானே தவிர, அங்கீகாரம் அல்ல," என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

மலையாள திரைப்படத்தின் பின்னணி இசைக்காக, 2009-ம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ள இளையராஜா சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், "பின்னணி இசைக்காக தேசிய விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு மூன்று முறை தேசிய விருதுகள் வாங்கியிருந்தாலும், இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இந்த விருது ஊக்குவிப்புதானே தவிர, அங்கீகாரம் இல்லை. 'பழசிராஜா' படத்துக்கு இவ்விருது கிடைத்ததில் இன்னும் மகிழ்கிறேன்.

ஏனெனில், 'பழசிராஜா' ஒரு மதம் சார்ந்த படம். இஸ்லாமியத்தைத் தழுவிய கதைக்கு எனக்கு விருது கிடைத்திருக்கிறது என்பதால், இசைக்கு மதம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

பழசிராஜாவில் நான் செய்தது கடின வேலை என்று கூற முடியாது. நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். இந்த நேரத்தில், அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்காலத்தைப் பொறுத்தவரை, மேற்கத்திய இசைக் கருவிகள்தான் இசை உலகை ஆளுகிறன்றன.

நான் இந்த இசைத் துறைக்கு யாரை நம்பியும் வரவில்லை. இது, பெரிய இசை மகான்கள் வாழ்ந்த மண். எல்லோரும் போய் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் முன்பு நிற்பதற்கே பயமாக இருக்கும். பெரிய ஜாம்பவான்கள் முன் நாம் என்ன செய்து விட போகிறோம் என நினைக்கத் தோன்றும். அவர்கள் எல்லாருமே உன்னதமான இசையைத்தான் தந்து சென்றார்கள்.

ஆனால், இப்போது இசையின் நிலை அப்படி இல்லை. இசைக்கு மொட்டை அடித்து புருவத்தையும் எடுத்து விட்டார்கள். இசை மொட்டையாக இருக்கிறது. இன்று இருந்த நிலை, இசைக்கு அன்று இருந்திருந்தால், நான் இந்தத் துறைக்கே வந்திருக்க மாட்டேன்.

என் மனம் எப்போதுமே விருதுகளை எதிர்பார்த்து வேலை செய்யாது. இசையமைப்பது மட்டுமே என் வேலை. ரசிகர்களுக்கு எப்போதும் இசையைத்தான் என்னால் அளிக்க முடியும்," என்றார் இளையராஜா.

No comments:

Post a Comment