Wednesday, September 15, 2010

எமன் உருவில் ஸ்கூல் பஸ்!


+1 மாணவன் சுரேஷ். தனது சொந்த ஊரான சின்னக்கரடியூரில் இருந்து... 3 கி.மீ. தொலைவில் உள்ள போச்சம்பள்ளியிலுள்ள, அரசு உதவிபெறும் அண்ணா அறிவகம் தனியார் பள்ளிக்கு தினமும் சைக்கிளில்தான் வருவான்.

13.9.10 காலை 8.40 மணி.

பள்ளி காம்பவுண்ட் கேட்டருகே வந்து விட்டான் சுரேஷ். உள்ளே இருந்து சீறியபடி வந்த பஸ்ஸின் வேகத்தை கண்டு நிலைகுலைந்து சைக்கிளை நிறுத்திய அதே நேரம்... பஸ்ஸின் பாடி சுரேஷ் மீது மோதியது. பஸ்ஸின் பின் சக்கரம் சுரேஷின் தலையில் ஏறியிறங்கி விட்டது. ஸ்கூலுக்கு வந்து கொண்டிருந்த அத்தனை மாணவ மாணவிகளும் ""அய்யய்யோ... நம்ம சுரேஷை கொன்னுட்டானே படுபாவி...!'' அலறினார்கள்.

மாணவ- மாணவிகளின் அலறல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியையே திகைப்பூட்டி அதிர வைத்தது.

""எவ்வளவு சட்டம் போட்டாலும் இந்த ஸ்கூல் பஸ்காரனுங்க திருந்தவே மாட்டானுங்க. இதே பஸ்... இதே இடத்தில 6 மாதம் முன்னால ரெண்டாம் கிளாஸ் புள்ளையோட கையை பறிச்சது... இப்ப... எங்க சுரேஷை அடையாளம் தெரியாம பண்ணிட்டானே...!'' சுரேஷின் உடலைச் சுற்றி நின்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் கதறினார்கள். அக்கம் பக்க ஜனங்களும் ஆவேசத்தோடு திரண்டார்கள், அந்தப் பள்ளிக்குள் நுழைந்தார்கள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அந்த தனியார் பள்ளியின் மூன்றடுக்கு கட்டடம் கரும்புகையோடு எரியத் தொடங்கியது. பள்ளியின் அலு வலக அறை, லேப் அறைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களும் கோப்பு களும் சாம்பலானது. ஆத்திரம் குறையாத மக்கள் பள்ளி வளாகத்தில் நின்ற பஸ்கள், கார்கள், டூவீலர்களையும் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.

""டிரைவர்கள் கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுறாங்கனு எத்தனையோ முறை சொல்லியும் கொஞ்சமாச்சும் கவலைப்பட்டாரா அந்த கரஸ்பான்டண்ட்... வாங்க அவருக்கு புத்தி புகட்டுவோம்!'' -ஒரு கூட்டம் ஸ்கூல் கரஸ்பான்டண்ட் வீட்டை நோக்கிப் புறப்பட்டது.

போச்சம்பள்ளி போலீசாரால் ஆவேசமாக திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

""விபத்தில் இறந்த சுரேஷ் நல்ல மாணவன் என்று பெயரெடுத்திருக்கிறான். அவனுக்கு ஏற்பட்ட இந்தக் கொடூர விபத்தை சக மாணவ- மாணவிகளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் ஸ்கூலை கொளுத்தியது மாணவ- மாணவிகள் இல்லை. இந்த பள்ளி நிர்வாகத்திற்கும், உள்ளூரில் சிலருக்கும் ஏற்கனவே பகை இருப்பதாக தெரிகிறது. சுரேஷின் விபத்தை பயன்படுத்திக் கொண்டு ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. சரியான விசாரணைக்கு பிறகுதான் உண்மை தெரியும்!'' என்கிறது காவல்துறை வட்டாரம்.

No comments:

Post a Comment