Saturday, September 18, 2010

ஆசியாவின் அதிசயம்!


அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை வருடம் முழுவதும் விமரிசையாக கொண்டாடியது தமிழக அரசு. இதன் நிறைவு விழாவாகவும் அண்ணா நூற்றாண்டின் பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் நினைவுகூரும் வகையிலும் கோட்டூர்புரத்தில் எட்டு அடுக்கு மாளிகையாக மிக பிரமாண்டமான வடிவத்தில் உயர்ந்து நிற்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார் கலைஞர்.

பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் சரியாக மாலை 5 மணிக்கு விழாவிற்கு வந்த கலைஞர், நூலக கட்டிடத்தின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணாவின் சிலையைத் திறந்து வைத்தார். கம்பீரமாக சம்மணம் போட்டு அமர்ந்து புத்தகம் படிக்கும் அண்ணாவின் சிலை அது. அந்த சிலையையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கலை ஞர், அந்த சமயத்தில் ரொம்பவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தார்.

""இந்தச் சிலையில் புத்தகத்தை அண்ணா படிக்கும்போது அவரது முகத்திற்கும் புத்தகத்திற்குமான இடைவெளி சரியாக இருக்கிறதா என்று கலைஞர் கவனித்தார். இதற்காக, 2, 3 முறை திருத்தம் செய்து சரி பார்த்தார் கலைஞர்'' என்கின்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விழாவில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர், ""இந்தியாவின் நூலகத்துறையை ஒழுங்குபடுத்தி செம்மைப்படுத்திய பெருமை தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. நூலகம் குறித்து அண்ணா கண்ட கனவை இன்று நிறைவேற்றியிருக்கிறார் கலைஞர். தெற்காசியாவிலேயே இப்படி ஒரு நூலகம் பார்த்திருக்க முடியாது. ஆசியாவின் அதிசயம் இது'' என்றார்.






சிறப்புரையாற்றிய கலைஞர், தமிழகத்தின் வீதிகள்தோறும் வீடுகள்தோறும் நூலகம் இருக்க வேண்டும் என்று அண்ணா ஆசைப்பட்டதையும், மருத்துவ மனையில் அட்மிட் ஆனபோதும் புத்தகமும் கையுமாகவே அண்ணா இருந்ததையும் நினைவுகூர்ந்தவர், ""அண்ணாவின் நினைவாக நாம் உருவாக்கியிருக்கிற இந்த நூலக எழில் மாளிகை, தம்பி தென்னரசு வின் உழைப்பால், முயற்சியால் உருவாக்கப்பட்டி ருக்கிறது. யாரிடத்தில் எந்த காரியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிந்தித்து ஒப்படைக்க நினைக்கும் போது, எனக்கு நினைவு வருபவர் தென்னரசுவின் அப்பா தங்கபாண்டியன்தான். மாவட்ட செயலாளர்களிலேயே இதுபோன்ற காரியங்களை விரைந்து, வியந்து போற்றும் வண்ணம் படைக்கும் படைப்பாளிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் தங்கபாண்டியன். அந்த தங்கபாண்டியன் பெற்ற தங்கம் தென்னரசுவை, என் சார்பாகவும் பேராசிரியர் சார்பாகவும் இந்த நூலகத்திற்கு வந்து போவோர்களின் சார்பாகவும் அவரை வாழ்த்து கிறேன்'' என்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

அண்ணா நூற்றாண்டு நினைவுகளை போற்றும்வகையில், பள்ளிக் குழந்தைகளுக்கு 5 நாளும் முட்டை வழங்குதல், அரசு துறைகள், அரசு சார்புள்ள துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட இரண்டு முக்கிய அறிவிப்புகளை செய்தார் கலைஞர்.

விழாவிற்கு திரண்ட கூட்டத்தினர் நூலகக் கட்டிடத்தை வியந்து பார்த்ததுடன், ""சென்னைக்கு அடையாளமாக அண்ணா மேம்பாலம், எல்.ஐ.சி., சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. இனி, இந்த நூலகம்தான் சென்னையின் அடையாளம்'' என்று விவாதித்துக்கொண்டே கலைந்துசென்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு, ""புதிய தலைமைச் செயலகம், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய மூன்றும் தான் எனது கனவு'' என்றார் கலைஞர். அந்த மூன்றையும் நிறைவேற்றிவிட்டார் மன நிறைவோடு.

சிறப்பம்சம்!

180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.75 லட்சம் சதுர அடியில் 8 தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது நூலகம். அனைத்து தளங்களும் ஏ.சி. வசதி செய்யப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கிறது நூலகம்.

ஆய்வாளர்கள் இங்கே தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள வசதியாக அறைகளும் நூலகத்தில் உண்டு. 12 லட்சம் நூல்கள் சேகரிக்கப் பட்டிருக்கின்றன. முதல் கட்டமாக 5 லட்சம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, சமூகம், மருத்துவம், பொறியியல், அரசியல், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட 408 தலைப்புகளில் நூல்கள் பகுக்கப்பட்டு தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. உல கெங்கிலுமுள்ள முன்னணி பதிப்பாளர்களிட மிருந்து தமிழ், ஆங்கிலம், பிறமொழிகள் அனைத்திலும் நூல்களை வாங்கியுள்ளது தமிழக அரசு. பார்வை குறையுள்ளவர்களுக்காக பிரெய்லி நூல்களும் ஒளி நூல்களும் தொகுக்கப் பட்டுள்ளன.

நூல்கள் தவிர அரசு ஆவணங்களும் தொகுக்கப்பட்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்ப தற்கு ஏற்ற வகையில் 15,000 சதுர அடி பரப்பில் குழந்தைகளுக்கான நூல் பிரிவு உருவாக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்காக மட்டுமே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், குறுந் தகடுகள் உள்ளன. நூலகத்தின் அனைத்து பயன்பாடுகளும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வகையில் கணினி மயமாக்கப் பட்டிருப்பது சிறப்பு.

கருத்தரங்கம், கூட்ட அரங்கம், கலையரங்கம், கண்காட்சி அரங்கம் ஆகியவை தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 1250 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து படிக்கும் வசதி, 1026 இரு சக்கர வாகனங்கள், 500-க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்தும் பார்க்கிங் வசதி ஆகியவை கொண்டிருக்கிறது நூலகம். நாட்டுக்கும் மக்களுக்கும் பயன்தரும் வகையில் அறிவை தருதல், எதிர்கால சந்ததியினரின் படைப்புத் திறனை நிலைநிறுத்தல், உடன் கால ஆய்வை வளர்த்தல், நூலக சேவையை பெருக்குதல், இந்தியாவிலும் வெளிநாடு களிலும் நூலகங்களுடன் இணைந்து பன் னாட்டு பண்பாட்டை உருவாக்குதல், பன் னாட்டு நூலக சங்கங்களுடனும் உலக அமைப்பு களுடனும் இணைந்து தமிழ்மொழி நூல்களின் பெருமைகளை உலக அளவில் எடுத்துச் செல்வது உள்ளிட்டவைகள் இந்த நூலகத்தின் செயல்பாடுகளாக வரையறுக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment