Monday, September 20, 2010
''வைகோ என்பவன் இன்னும் உயிரோடு இருக்கிறான்!'' - இந்த வார்த்தைகளை வைகோ உச்சரித்தபோது தொண்டர்களின் கைதட் டலால் காஞ்சிபுரமே கிடுகிடுத்தது!
காஞ்சிபுரத்தில் ம.தி.மு.க. மாநாடு என்று அறிவிக்கப்பட்டதுமே, ஊரின் அனைத்துச் சுவர்களையும் வளைத்து விளம்பரங்களாக எழுதித் தள்ளினார் ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் வெங்கடேசன். ஆனால் அவர் சாராயம் விற்ற வழக்கில் கைதானார். ''திரும்பிய பக்கமெல்லாம் ம.தி.மு.க. கொடியையும், அண்ணாவையும், வைகோவையும் வரைந்து வைத்தார் வெங்கடேசன். ஸ்டாலின் இங்கு வந்து சென்ற இரண்டாவது நாளே அவர் மீது சாராய கேஸ்!
ஓய்வுபெற்ற ஹெட் கான்ஸ்டபிளின் பையனான வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவர் இருப்பது சின்னக் காஞ்சிபுரம். ஆனால், பக்கத்தில் உள்ள பாலுச்செட்டி சத்திரத்தில் சாராய வழக்கு போட்டிருக் கிறார்கள். செல்லமுத்து என்பவரை சாராயம் விற்றதாக கைது செய்து... அவருக்கு வெங்கடேசன் சப்ளை செய்ததாக
வழக்கு. கையில் விலங்கு போட்டு அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இப்போது காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அவர் இருக்கிறார்...'' என்கிறார் ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா,
போலீஸ், மாவட்ட நிர்வாகம் இடைஞ்சல் கொடுப்பது பற்றி கேள்விப்பட்ட வைகோ, ''அதிகமான தொல்லை கொடுத்தால், அண்ணா சமாதிக்குப் போய் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...'' என்று அறிவித்த பிறகுதான் அமைதியானார்களாம் அதிகாரிகள். மாநாட்டு நாளான 15-ம் தேதி காலையில் இருந்தே காஞ்சி நகருக்குள் கூட்டம் குவிய... உண்மையில் வைகோவுக்கு உற்சாகம். 'எல்லாரும் கைக் காசை செலவு பண்ணி வந்திருக்காங்க. மழை மட்டும் வராமல் இருந்தால் போதும்...' என்று சொல்லிக்கொண்டு இருந்தாராம் வைகோ. மாலை நெருங்க நெருங்க... காஞ்சிபுரம் முழுக்க மனிதத் தலைகளாகவே காட்சி அளித்தது. இதில் இன்னோர் ஆச்சர்யம், எங்கே திரும்பினாலும் அண்ணா படங்கள் மட்டுமே இருந்தன. வைகோ படம் இல்லை. ''வைகோ தனது படத்தை வைக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்...'' என்று காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் சோமு சொன்னபோது, வைகோ சிரித்தார்.
மாநாட்டைத் திறந்துவைத்துப் பேசிய செந்தில திபன் முதல் வைகோ வரை அனைவருமே முதல்வர் கருணாநிதி மீதுதான் கடும் தாக்குதல் நடத்தி னார்கள்.
''நாடாளுமன்றத்தில் தமிழ் இனத்துக்காக மட்டுமே வைகோ குரல் கொடுத்தார். 11 பிரதமர்களின் முன்னால் சிங்கத்தைக் குகையில் சந்திப்பதைப்போல பிடரியைப் பிடித்து உலுக்கியவர் வைகோ. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டைப் பார்த்து டெல்லி அஞ்சியது. ஆனால், சோனியாவுக்கு பயம் போய்விட்டது. அதற்குக் காரணம் கருணாநிதிதான். அவர் ராஜாவையே மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாறிவிட்டார்! இந்த அடிமை மனோபாவமும், குடும்பப் பாசமும் இருக்கும் வரை கருணாநிதியால் இந்த இனத்துக்கும், நாட்டுக்கும் எந்த நன்மையும் இல்லை!'' என்று செந்திலதிபன் சொன்னதற்குப் பின்னால், மைக் பிடித்த நாஞ்சில் சம்பத்தின் பேச்சு மொத்தக் கூட்டத்தையும் சிரிப்பு மழையால் நனையவைத்தது.
''இந்த மாநாட்டை நடத்தக் கூடாது என்று தாசில்தார் ஒருவர் தடுத்திருக்கிறார். உன்னைத் தூண்டிவிடுவது யார், குன்றத்தூர் குள்ளனா?'' என்று அவர் சொன்னபோது ஏதோ புரிந்தாற்போல் பலத்த விசில்.
''ஒரு குடும்பமே அனைத்துப் பதவிகளையும் பங்கு போட்டுக்கொள்கிறது. ஆனால், அந்த இயக்கத்துக்காக உழைத்த டி.ஆர்.பாலு உதாசீனப்படுத்தப்படுகிறார். நான் ம.தி.மு.க-வுக்கு மட்டுமல்ல... நொந்துபோன தி.மு.க-காரர்களுக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் தான். 'இப்படியே போங்க சம்பத்! அப்பதான் இவய்ங்களை ஒழிக்க முடியும்'னு தி.மு.க-காரனே என்னிடம் சொல் றான். ஏன்னா... பணம் ஒரே இடத்தில் குவிகிறது. ஆள்பவர் ஏழையாக இருந்தால்தான், ஆளப்படுபவன் பணக்காரனாக முடியும் என்பார்கள். அண்ணா ஏழையாக இருந்தார். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இன்று இன்ஜினீயரிங் கல்லூரி இல்லாத மந்திரி உண்டா? கருணாநிதி குடும்பம் நிலத்தை, வானத்தை, கடலை வளைத்துவிட்டது. அடுத்த தேர்தலிலும் அவர்கள் ஜெயித்தால் கறிக் கடையைக்கூட எவனும் நடத்த முடியாது. இன்னார் பெயரில் கறிக் கடை என்று ஆரம்பித்து, இன்னாரை கல்லாப்பெட்டியில் உட்காரவைத்துவிடுவார்!'' என்று சில பெயர்களைச் சொல்லி முடித்தபோது விசில்பறந்தது.
இரவு 8.45 மணிக்கு மைக் பிடித்தார் வைகோ. முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கி... முள்ளி வாய்க்காலில் நடந்த படுகொலை சம்பவங்களை அவர் விவரித்து முடிப்பது வரை மொத்தக் கூட்டத்தையும் தனது வார்த்தைகளால் கட்டிப் போட்டிருந்தார்.
''நான் தமிழ்நாட்டு மக்களின் ஊழியன். இந்த நாட்டுக்காக... மொழிக்காக உழைப்பவன். கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கும் சேர்த்து நான் முன்வைக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான், 'ஒரு குடும்பத்தின் ஆதிக்கமா... தமிழ்நாட்டின் ஜனநாயகமா? எது தேவை?' என்ற ஒரு கேள்வியின் அடிப்படையிலே இந்தத் தேர்தலே நடக்கப்போகிறது...'' என்பதை பகிரங்கமாக அறிவித்த வைகோ, இந்த மாநாட்டில் ஒரு சம்பவத்தைச் சொன்னார்.
''2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், நான் சிறையில் இருந்து வெளியே வந்த நாள். அன்று இரவில் கலைஞரை சந்தித்தேன். 'உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 'நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரே ஒரு ஸீட் அதிகம் வேண்டும். கணேச மூர்த்திக்குத் தாருங்கள்' என்றேன். உடனே கலைஞர், 'அதெல்லாம் முடியாது. அதுக்கு மேல் கொடுக்க முடியாது!' என்று சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வரப் போனார்.
பிறகு திடீரென்று நின்றவர், 'எனக்குப் பிறகு நீதான்யா... உன் கட்சிதான்யா தி.மு.க-வா இருக்கும்!' என்று தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பதறிப்போனேன். 'ஏன் அண்ணே, இப்படி எல்லாம் பேசுறீங்க! நீங்க 100 வருஷம் இருப்பீங்கண்ணே!' என்று சொன்னேன். அன்றைக்கு என்னை சமாதானப்படுத்துவதற்காக அப்படிச் சொன்ன பசப்பு வார்த்தைகள் அவை. எனவே, முக்கியஸ்தர்களுக்கு மட்டும் இதைச் சொன்னேன். கட்சித் தொண்டர்களுக்கு இதை முதல் தடவையாகச் சொல்கிறேன்!'' என்ற வைகோ....
''இன்றைக்குச் சொல்கிறேன்... கலைஞர் அவர்கள் 100 ஆண்டுகள் வரை நல்ல நலத்துடன்... திடத்துடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால், உங்களுக்கு முன்னால் உங்களது குடும்ப அரசியல் நொறுங்கிப்போகும். உண்மையான தி.மு.க-வாக ம.தி.மு.க-தான் இருக்கும். உமர் முக்தாரை தூக்கிலேற்றும்போது, அவரது மூக்குக் கண்ணாடியை எடுத்துக்கொண்டு ஒரு சிறுவன் ஓடுவான். அதைப்போல, அண்ணாவின் லட்சியத்தை நிறைவேற்ற நான் இருப்பேன். ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் குடும்பத்தினர் எனக்கு வீர வாள் ஒன்றைக் கொடுத்தார்கள். அது தங்க வாளோ, வெள்ளி வாளோ அல்ல. உண்மையான வாள். கூர்மையாக இருந்தது. இதை ஓர் அடையாளமாக எடுத்துக் கொள்கிறேன்'' என்று முடித்தபோது... தொண்டர்கள் அனைவரும் முறுக்கேறி இருந்தார்கள்!
வைகோ சொல்வது நிஜமா?
ம.தி.மு.க. அவைத் தலைவராக இருந்து விலகி, இப்போது தி.மு.க-வில் இருக்கும் எல்.கணேசன் என்ன சொல்கிறார்?
''நல்லா இருக்குதுய்யா கதை! 'தனக்குப் பிறகு நீதான்!' என எனக்குத் தெரியாமல் கலைஞர் வைகோவிடம் சொன்னாராமா? கலைஞர் அப்படிப்பட்ட வார்த்தைகளை ஏன் சொல்லணும்? 93-ம் ஆண்டு தி.மு.க-வைவிட்டுப் பிரிந்த நாங்கள், 10 வருடங்களுக்குப் பிறகு கலைஞரிடம் 2004-ல் கூட்டணிக்காகவந்தோம். 10 வருட வசைப் பாடல்களை மறந்துவிட்டு அந்த நேரத்தில் கலைஞர் அப்படிச்சொல்லி இருப்பாரா என்ன? 'தி.மு.க-வுக்கு இவர்தான் அடுத்து' என உயில் எழுதும் பழக்கம் கலைஞருக்குக் கிடையாது. தனக்குப் பின்னால் யார் என்பதை கலைஞர் தன்வாயால் இன்று வரை சொல்லவில்லை. ஆனால், அதனை அடுத்தடுத்த செயல்களால் விளக்கி விட்டார். இன்றைக்கு கலைஞரின் பாதிச் சுமை ஸ்டாலினுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்க, கலைஞரின் வார்த்தைகளாக வைகோ ஏன் இப்படிப் பேசுகிறார் என்பது புரியவில்லை!'' என்றார் எல்.ஜி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment