Saturday, September 18, 2010
மந்திரி கல்லூரிகளில் கெடுபிடி!
""ஹலோ தலைவரே... அரசாங்கம் அறிவித்த திட்டங்கள் மேலே அமைச்சர்களுக்கே நம்பிக்கையில்லாம இருக்குது.''
""என்னப்பா சொல்றே... அவங்கதானே திட்டங்களை நிறைவேற்ற வேண்டியவங்க.''
""ஒரு குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையில் பட்டதாரியாகிற மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் ஒதுக்கப்படும் இன்ஜினியரிங் சீட்டுக்கான 20ஆயிரம் ரூபாய் டியூஷன் ஃபீஸை அரசே ஏத்துக்கும்னு அறிவிக்கப்பட்டதால, பல குடும்பங்களும் சந்தோஷப்பட்டது. அதனால, 61 ஆயிரம் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இந்த வருஷம் இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்ந்திருக்காங்க.''
""அத்தனை குடும்பங்களிலும் தலை முறை தலைமுறைக்கும் விளக்கேற்றி வைக்கப்படுமே!''
""அந்த நம்பிக்கைதான் பெற்றோர்களுக்கு இருந்தது. ஆனா, இதுவரை இந்த மாணவர்களுக்கான டியூஷன் ஃபீஸை சம்பந்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அரசுத்தரப்பிலிருந்து அனுப்பி வைக்கலையாம். அதாவது, மொத்தமா 122 கோடி ரூபாய். இந்த தொகை வருமோ வராதோங்கிற பயத்தில் இருக்கும் கல்லூரி நிர்வாகங்கள், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களிடம் இப்ப நீங்க பணத்தைக் கட்டுங்க, அரசாங்கம் பணம் கொடுத்துச்சுன்னா திருப்பித் தந்திடுறோம்னு சொல்லுதாம். அதிலும் அமைச்சர்கள் நடத்துற இன்ஜினியரிங் காலேஜ்களில் இந்த நெருக்கடி அதிகமா இருப்பதால, அரசுத் திட்டத்தை நம்பி படிக்க வந்த மாணவர்களும் அவங்களோட பெற்றோரும் பணத்துக்கு பரிதவிக்கிறாங்க. அரசாங்கம் உடனடியா இதுபற்றி ஒரு முடிவெடுக்காவிட்டால் 61 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலமும் அவங்க குடும்பத்தோட நம்பிக்கையும் வீணாப்போயிடும்.''
""கல்லூரிகளில் இந்த நிலைமைன்னா, தனியார் பள்ளிக்கூட நிலைமை இன்னும் மோசம். நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்விக் கட்டணத் திற்கு ஹைகோர்ட் இடைக்காலத் தடை விதிச்சதால, ஏற்கனவே வாங்கிக்கிட்டிருந்த கூடுதல் கட்டணத்தோடு இன்னும் கூடுதலா கட்டணம் வசூலிக்கிற நிலைமை தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்குது. கால்பரீட்சை நேரத்தில், கட்டண கெடுபிடி செய்வதால பெற்றோர் பலரும் பள்ளி நிர்வாகத்தோடு முட்டி மோத முடியாம, கடனை வாங்கி கட்டணத்தைக் கட்டிக் கிட்டிருக்காங்க.''
""இந்த விவகாரம் பற்றி விசாரித்தேங்க தலைவரே... தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் ஒரு படிவத்தைக் கொடுத்து எத்தனை வகுப்புகள், எவ்வளவு ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் எப்படி என்பதையெல்லாம் கேட்ட நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி, அதனடிப்படையில் மே 17-ந் தேதியன்னைக்கு புதிய கல்விக்கட்டணத் தை நிர்ணயித்தது. இதில் உடன்பாடு இல்லைன்னு எந்தப் பள்ளியாவது நினைத்தால் உடனடியா அப்பீலையும் அப்ஜெக்ஷனையும் ஃபைல் பண்ணலாம்னும், 30 நாட்களுக்குள் இதை விசாரித்து முடிவு சொல்லப்படும்னும் கமிட்டி தெரிவித்திருந்தது. கமிட்டியின் சட்டவிதிகளும் இதைத்தான் சொல்லுது. இதன்படி, பல பள்ளிகள் அப்பீல் செய்தன. ஆனா, நீதிபதியோ மே 17-ந் தேதி அறிவித்த கட்டணமே தொடரும்னு அறிவித்துவிட்டு, சொந்தப் பயணமா அமெரிக்கா போயிட்டாராம். 30 நாளில் மனுக்களை விசாரிக்கணும்னு சட்டம் இருக்கும்போது, அது கடைப்பிடிக்கப்படலைன்னு ஹைகோர்ட்டில் தனியார் பள்ளிகள் தரப்பு வாதத்தை வைக்க, இந்த டெக்னிக்கல் பாயிண்ட்டால் , கமிட்டி நிர்ணயித்த கட்டணத்திற்கு ஹைகோர்ட் நீதிபதி வாசுகி இடைக்காலத் தடை கொடுத்திட்டார். தடை யுத்தரவு போட்ட வேகத்திலேயே தனியார் பள்ளி களில் வசூல் வேட்டையை ஆரம்பிச்சி, பணத்தை வாங்கிட்டு வான்னு பிள்ளைகளை பெற்றோர் கிட்டே விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.''
""கொடுத்திருப்பது இடைக்காலத் தடைதான். இறுதித் தீர்ப்புக்கான விசாரணை நவம்பர் 29-ந் தேதி நடக்கும்னு கோர்ட் அறிவித்திருக்குது. ஆனா, அரசியல்வாதிகள் நடத்துற பல பள்ளிக்கூடங்களில், ஸ்டேன்னா ஸ்டேதான். சொல்ற கட்டணத்தைக் கட்டுங்க. இல்லேன்னா உங்ககிட்டே இருக்கிற காசுக்கு தகுந்ததடி கவர்மென்ட் ஸ்கூலிலே போய் சேர்த்துக்குங்கன்னு மாணவர்களையும் பெற்றோரையும் விரட்டுறாங்கப்பா.''
""சரஸ்வதியை வச்சி வியாபாரம் செய்ய ஆரம்பிச்சிட்டா இப்படித்தான் நடக்குங்க தலைவரே.. நான் அரசியல் மேட்டருக்கு வர்றேன். கொடநாட்டில் ஜெ.வை பிரேமலதா சந்திச்சதா பரபரப்பு தகவல் வெளியானதைப் பற்றி விசாரித் தேன். யாரோ கொளுத்திப் போட்ட வதந்திதானாம். அதே நேரத்தில் டெல்லிக்கு விஜய காந்த்தும் பிரேமலதாவும் போயிட்டு வந்திருக்காங்க. போறதுக்கு முன்னாடியே, காங்கிரஸ் தலைவர் அகமது பட்டேலை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் வேணும்னு கேட்டிருந்தாங்களாம். டெல்லி ஓட்டலில் தங்கியிருந்த விஜயகாந்த் தம்பதியை காங்கிரஸ் தரப்பிலிருந்து 2பேர் வந்து சந்திச்சிருக்காங்க.''
""என்ன பேசினாங்களாம்?''
""காங்கிரஸ் தரப்பிடம் விஜயகாந்த், தே.மு.தி.கவும் காங்கிரசும் தனி அணி அமைக்கலாம். இந்த மூன்றாவது அணிக்கு நான்தான் தலைவர். முதல்வர் கேன்டிடேட்டும் நான்தான். உங்க முடிவைக் கேட்கத்தான் வந்திருக்கேன். இப்ப நான் தனித்து நிற்பதுபோல நிற்கிற வரைக்கும்தான் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமா இருக்கும். நான் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தால் அந்த அணிதான் ஜெயிக்கும். அதனால, நாம தனி அணி அமைக்கலாம்னு சொன்ன விஜயகாந்த் சில கண்டிஷன்களையும் போட்டிருக்கிறார்.''
""அகமது பட்டேல் அப்பாயிண்ட்மென்ட்?''
""அவரே விஜயகாந்த்கிட்டே போனில் பேசியிருக் கிறார். என்னால் உங்களை சந்திக்க முடியலை. ஏன் முடியலைங்கிறதை டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் உங்ககிட்டே நேரில் சொல்லுவார்னு சொல்லி யிருக்காரு. விஜயகாந்த்தை சந்திச்ச ஷீலாதீட்சித், உங்களை அவர் சந்தித்தால் தி.மு.க சந்தேகப்படும். நீங்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருக்கிற விஷயம் டி.ஆர்.பாலுவுக்குத் தெரிஞ்சு, அவர் இது பற்றி விசாரித்திருக்கிறார். அவர்கிட்டே, உங்களை பார்க் கிற ஐடியா இல்லைன்னு அகமது பட்டேல் சொல்லிட்டார். இதுதான் நிலைமை. நீங்க தனித்தே போட்டியிடுறது பற்றி யோசிங்க. நாங்க உங்களுக்குத் தேவை யான சப்போர்ட்டை செய்றோம்னு சொன்னாராம்.''
""சென்னை உள்பட தமிழ்நாடு முழுக்க ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை செப்டம்பர் 16-ந் தேதியன்னைக்கு தூள் பரத்தியிருக்காங்களே..''
""எல்லா இடத்திலும் பேனர் இருக்கணும்னு கார்த்தி சிதம்பரம் சொல்லியிருந்த படி ப.சியின் ஆதரவாளர்கள் செயல் பட்டிருந் தாங்க. இதில் கராத்தே தியாகராஜன் தென் சென்னையில் 1 லட்சம் வீடுகளுக்கு நேரில் போய் மரக்கன்று கொடுத்ததை போட்டி கோஷ்டி களும்கூட பாராட்டுது. அதே நேரத்தில், ப.சி தரப்பின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் புறக்கணித்த வாசன் கோஷ்டியைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ், நவம்பர் 19-ந் தேதி இந்திராகாந்தி பிறந்தநாளில் திருச்சிக்கு வரும் ராகுல்காந்தியை வரவேற்பதிலிருந்து நிகழ்ச்சிகளை சிறப்பா நடத்துறது வரைக்கும் சத்தியமூர்த்தி பவனில் உட்கார்ந்து ஆலோசனை நடத்திக்கிட்டிருந்தார்.''
""அக்டோபர் 9-ந் தேதி திருச்சிக்கு சோனியா வர்றாரே?''
""அது திருநாவுக்கரசரின் இணைப்பு விழா. அதன் பின்னணியில் இருப்பவர் ப.சி. அதனால்தான் சோனியா கூட்டத்தை ராகுல் கூட்டம் மிஞ்சணும்னு வாசன் தரப்பு செயல்படுது. தலைவரே... அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ந் தேதியன்னைக்குத்தான் கலைஞர்-தயாளு அம்மா திருமண நாள். சென்னையில் இருந்த மந்திரிகளும் சீனியர் கட்சிக்காரர்களும் கலைஞரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி னாங்க.''
""ஊழல் நெருங்க முடியாத- அரசியல் உணர்வுகளுக்கு ஆட்படாதவர் என்று பெயரெ டுத்த உமா சங்கர் ஐ.ஏ.எஸ்., சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்தாகி, டான்சி எம்.டியா பொறுப்பேற்றிருக்கிறார். தனக்காக குரல் கொடுத்த ஜெ.வை சந்தித்து நன்றி சொல்வதில் தயக்கமில்லைன்னு பேட்டி கொடுத்த உமாசங்கர், தன் சொந்த ஊரான பாளையங்கோட்டைக்குப் போற வழியில் சங்கரன்கோவில் சமூகநலக்கூடத்தில் அவரது சமுதாயத்தினர் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு பேசினார். தேர்தல் வரப்போகுது. ஓட்டுக்காகப் பணம் தருவாங்க. மக்களாகிய உங்களோட வரிப்பணம்தான் அது. தயங்காம வாங்கிக்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வையுங்கன்னு சொன்னார். அங்கே திரண்டிருந்த அ.தி.மு.க.காரங்க, உமாசங்கரின் அரசியல் கலந்த பேச்சுக்கு பலமா கைதட்டினாங்க.''
மிஸ்டுகால்!
காமன்வெல்த் போட்டிகள் நெருங்கும் நேரத்தில், பாபர் மசூதி-ராமஜென்மபூமி சம்பந்தமான வழக்கின் தீர்ப்பை வெளியிடாமல் தள்ளிவைக்கலாம் என கோரப்பட்டதற்கு, வழக்கை விசாரிக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவரில் ஒருவர் 30-ந் தேதி ரிடையர்டாவதால் 24-ந் தேதி தீர்ப்பு தந்தாக வேண்டிய நிலைமை இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காமன்வெல்த் போட்டி நடைபெறவுள்ள டெல்லியிலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய உள்துறை விடுத்த எச்சரிக்கையால் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டு வருகிறது.
பழைய தலைமைச் செயலகத்திலிருந்து புதிய தலைமைச் செயலகத்திற்கு முதல்வர், துணை முதல்வர், தலைமைச்செயலாளர் அலுவலகங்கள் செப்டம்பர் 15-ந் தேதியன்று மாறுவதாக இருந்தது. மற்ற அமைச்சர்களின் அலுவலகங்கள் பற்றி முதல்வர் விசாரிக்க, அது ரெடியாக தாமதமாகும் என்றதும், நான் மட்டும் அங்கு போய் என்னவாகப் போகிறது என்ற முதல்வர், எல்லா அலுவலகங்களும் தயாரானதும் இடமாற்றம் செய்யச் சொல்லிவிட்டாராம். நவம்பரில் தீபாவளி முடிந்து புதிய சட்டமன்றக் கட்டிடத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கவிருப்பதால் அக்டோபர் இறுதியில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரையிலான அலுவலகங்கள் புதிய தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்படவிருக்கின்றன.
போச்சம்பள்ளி தனியார் பள்ளி வாசலில் ஒரு மாணவனின் உயிரைப் பலி வாங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இதைக் கண்டித்து தமிழகத் தில் உள்ள 11 ஆயிரம் தனியார் பள்ளிகளும் வெள்ளியன்று மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னறிவிப்பின்றி பள்ளிகளை மூடுவது சட்டவிரோதம் என்பதால் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் மூலமாக மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவிக்கச் செய்தது அரசு. எந்தெந்தப் பள்ளிகள் மூடப்படுகின்றன என்பதைக் கணக்கெடுப்புச் செய்யும் பணியில் அரசு இயந்திரம் இறங்கியதையடுத்து, புதன் இரவு முதல் பல தனியார் பள்ளிகள் தங்களின் போராட்ட முடிவிலிருந்து பின்வாங்கத் தொடங்கின
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment