Thursday, September 9, 2010
யுத்தம் -நக்கீரன் கோபால் (86)
நண்பர் ஜெயராஜின் வீடு. நக்கீரன் அலுவலகத்தின் கட்டிடக் கலைஞர் அவர்தான். நக்கீரன் நலனிலும் என் மீதும் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். அவர் வீட்டிற்குத்தான் நான் சென்றிருந்தேன். மாடியில் ஒரு சின்ன இடம் இருந்தது. ஒரு ஆள் மட்டுமே படுக்கக்கூடிய அளவிலான இடம். துணிமணிகளுடன் அங்கேதான் தங்கியிருந்தேன். என் குடும்பத்தினர் உள்பட யாருக்கும் நான் இருக்கும் இடம் தெரியாது.
ஜெயராஜின் வீட்டிலிருந்து மிகவும் பக்கத்தில் இருக்கிறது கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோட்டிலுள்ள நவசக்தி விநாயகர் கோயில். நக்கீரனும் அதன் வெளியீடுகளும் அங்கேதான் முதலில் வெளி யிடப்பட்டன. என் குடும்பத்தினர் அங்கே வந்து சாமி கும்பிடுவது வழக்கம். அன்றைக்கு என் மூத்த மகள் பிரபாவதிக்குப் பிறந்தநாள். என் துணைவியார் அங்கே வந்து சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஜெயராஜின் மகன் அங்கே வருகிறான். அவனைப் பார்த்து, சாதாரணமாக நலன் விசாரித்த என் துணைவியார், கோயில் பிரசாதமான குங்குமத்தை அவனிடம் கொடுத்து, "அம்மாகிட்டே கொடுப்பா' என்று அனுப்பிவைக்கிறார். ஜெயராஜின் மகன் வீட்டுக்குத் திரும்ப, அவன் கையில் குங்குமம் இருப்பதைப் பார்த்து ஜெயராஜ் விசாரிக்கிறார். விவரம் அறிந்ததும், அதை வாங்கிக்கொண்டு, மகனை அனுப்பிவிட்டு, இவர் மட்டும் மாடிக்கு வந்தார்.
என்னிடம், "அண்ணி கொடுத்தாங்கண்ணே' என்று அந்த குங்குமத்தைக் கொடுத்தார். மகள் பிறந்தாளில் வழக்கமாக கேக்கும் சாக்லேட்டும் கொடுப்போம். இந்த முறை விநாயகர் கோயில் குங்குமம். மூத்த மகள் பிரபாவுக்கு செல்போனில் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னேன்.
வீட்டைச் சுற்றி இருந்த போலீஸை, அவர்களின் திருட்டுத்தனத்தை விரட்டி விரட்டி தம்பி பிரகாஷ் தன் டூவீலரில் போட்டோகிராபர் இளங்கோவனை வைத்துக்கொண்டு திறமையா எடுத்த படங்கள் எல்லா பத்திரிகைக்கும் அனுப்பப்பட்டது. பத்திரிகைகளும் கொதித்தெழுந்தன. எல்லா அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. புகைப்படங்கள் எடுத்த தம்பிகள் பிரகாஷ், சம்பத், இளங்கோ மூவருக்கும் ஒரு சபாஷ்.
என்ன வழக்கிற்காக என்னைப் போலீஸ் தேடுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. ஒருவரிடம் தம்பி காமராஜ் விசாரித்திருக்கிறார்.
"2 கேஸ் இருக்கு. எதிலே வேணும்னாலும் நடவடிக்கை எடுக்கலாம்?'
"எந்த 2 வழக்கு?'
"கந்தவேலு கேசும், பக்தவத்சலம் கேசும் இருக்குது. இரண்டையும் சீரியஸாகவும் கொண்டு போகலாம். சாதாரணமாகவும் விட்டுடலாம். நக்கீரனுக்கு எதிரான கேஸ்களை கவனிக்கும் பொறுப்பை என்கிட்டே கொடுத்தாங்க. நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்' என்று தம்பியிடம் சொல்லியிருக்கிறார் அந்த அதிகாரி. அவரது இடத்தில், எஸ்.பி. ஸ்ரீதரை நியமித்தது ஜெ.வின் அரசாங்கம்.
இந்தத் தகவலை எனக்குத் தெரிவித்த தம்பி காமராஜ், "உங்களை ட்ரேஸ் செய்வதுதான் ஸ்ரீதரோட அசைன்மென்ட். எப்படியாவது உங்களை வெளியே வரவைக்கணும்னு வேலைகள் நடக்குது. அதற்காக, குடும்பத்தைக்கூட டிஸ்டர்ப் பண்ணுவாங்க. நாலைந்து இடங்களை நோட் பண்ணி, அங்கெல்லாம் உங்களை சர்ச் பண்ணவும் திட்டம் போட்டிருக்காங்க. ஆபீசுக்கும் வந்து ரெய்டு பண்ண ப்ளான் இருக்குது. புதுசா செல்போன் கனெக்ஷன் வாங்குறதை கண்டுபிடிச்சி அதை சீஸ் செய்யவும் ஐடியா பண்ணியிருக் காங்க. நக்கீரனை கவனிப்பதற்காகவே சி.பி.சி.ஐ.டியில் ஒரு பெரிய டீம் வேலை பார்த்துக்கிட்டிருக்குது' என்றார். புது சிம்களை சீஸ் செய்யும் சி.பி.சி.ஐ.டி.யின் வேலை தொடங்குவதற்கு முன்பாக நான்கைந்து சிம்கார்டுகளை வாங்கிவிடுவோம் என்று வாங்கி வைத்துவிட்டேன்.
2003-ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவில் பிறந்தாலும், நமது வாழ்க்கையில் விடியல் பிரகாசமாக இருக்கும் என்று மனது நம்பிக்கைக் கொள்ளும். எந்தப் பிரகாசமும் இல்லாமல் மெல்லிய வெளிச்சமும், அடர்த்தியான இருட்டும் கலந்திருந்த அறைக்குள் நான் இருந்தேன். இந்த இருள் விலகும், புதிய வெளிச்சம் பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் குறையவில்லை.
அதேநேரத்தில், அலுவலகத்தையும் வீட்டையும் நோட்டம்விடும் போலீசின் கண்காணிப்புத் தீவிரமானது. நான் எங்கே இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்பெஷல் டீம் சுற்றிக் கொண்டிருந்தது.சட்டரீதியான பாதுகாப்பைத் தேடுவதைத் தவிர நமக்கு வேறு எந்த பாதுகாப்பும் கிடையாது. அதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ரிட்மனுக்களை விரைவாக விசாரணைக்கு கொண்டு வர நமது அட்வகேட் பெருமாள் முயற்சியெடுத்தார். அரசின் அட்வகேட் ஜெனரலோ, "ஒரு வாரம் கழித்துதான் உங்கள் வழக்கு, விசாரணைக்கு வர முடியும்' என்றார். காலதாமதத்தின் மூலம், கண் காணிப்பை அதிகப்படுத்தி, பொய்வழக்கில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம். அதனால் உச்சநீதி மன்றத்தின் உதவியை நாடுவது என முடிவு செய்யப் பட்டது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தம்பி காமராஜ் டெல்லி சென்றார். நம் சார்பில் நமது அட்வகேட் பெருமாள், டெல்லி வழக்கறிஞர் அகர்வாலா இருவரும் ஜனவரி 7-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அதில், ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வீரப்பன் வழக்குகள் பலவற்றை மறுவிசாரணை என்ற பெயரில் ஓப்பன் செய்து என்னை அந்த வழக்குகளில் குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளேன். இந்நிலையில், கர்நாடக டி.ஜி.பி. தினகர் எழுதிய அவதூறு புத்தகத்திற்காக அவர் மீது வழக்குப் போட்டுள்ளேன். இந்த வழக்கு தொடரப்பட்ட பின் போலீஸ் கண்காணிப்பு தீவிரமாகியுள்ளது. கடந்த டிசம்பர் 27-ந் தேதி முதல் , போலீசார் 3 வேன்களில் என் வீட்டருகே முகாமிட்டு ரகசிய கண்காணிப்பு நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளனர். எங்கள் நிருபர் சிவசுப்ரமணியனைக் கடத்திச் சென்று பொய் வழக்குகள் போட்டதுபோல என் மீதும் பொய் வழக்குகள் போட போலீஸ் முயற்சிக்கிறது. இந்த முயற்சிகளைத் தடுத்து பத்திரிகை சுதந்திரம் காக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டதுடன்,நக்கீரன் அலுவலகத்தையும் என் வீட்டையும் போலீசார் கண்காணிக்கும் படங்களும் அந்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தன.
இந்த மனுவை நீதியரசர்கள் ராஜேந்திரபாபு, பிரிஜேஷ்குமார், ஜி.பி.மாத்தூர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு தயாரானது. நமது மனு தள்ளுபடியாகும் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ப டெல்லியில் மூவ் செய்த ஜெ அரசால், உச்சநீதிமன்றம் நமது மனுவை ஏற்றுக்கொண்டு, பத்திரிகையாளர்களின் உரிமைகள் குறித்து கருத்து தெரிவித்ததை ஏற்க முடியவில்லை. மனு மீதான விசாரணைக்கு முன்பாக, என்னைப் பிடித்து உள்ளே தள்ளிவிடவேண்டும் என்பதுதான் அரசு இயந்திரத்தின் ஒரே குறிக்கோளாக இருந்தது.
டெல்லியில் நடக்கும் மூவ்கள் பற்றி உடனுக் குடன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குத் தகவல் வர, இங்கிருந்து நக்கீரனுக்கு எதிரான நடவடிக்கைகள் வேக மெடுத்தன.
கிருஷ்ணசாமி கடத்தல் வழக்கு விசாரணைக்காக கோபி கோர்ட்டில் ஜனவரி 9-ந் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டி ருந்தது. ஊழல் வழக்குகளில் ஆஜரா காமல் வாய்தா வாங்குவதில் வரலாறு படைத்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது அரசாங்கம் நம் மீது போட்ட அத்தனை பொய் வழக்குகளுக்கும் அஞ்சாமல், வாய்தா கேட்காமல், கோர்ட்டில் ஆஜராகி விசாரணையைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, பொய் வழக்கைப் பொடிப்பொடியாக்குவது நம் வழக்கம்.
இந்த முறை, அரசும் போலீசும் போட்டுள்ள சதித்திட்டத்தால் வெளிவரமுடியாமல் இருக்கிறேன். தலைமறைவாகி 13 நாட்களாகிவிட்டன. நான் வெளியே வந்தால், தூக்கிச் சென்றுவிடவேண்டும் என்ற வெறியோடு போலீசார் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். கோர்ட்டை மதித்து நடப்பவன் என்பதால் எப்படியும் நான் கோபியில் ஆஜராவேன் என்றும், அப்போது கைது செய்துவிடலாம் என்றும் காவல்துறை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
நான் அட்வகேட் ப.பா.மோகனிடம் பேசினேன். "சார்.. இந்த முறை நான் கோர்ட்டுக்கு வந்தா அரெஸ்ட் பண்ணுவாங்க. வெளியே வருவது சேஃப்ட்டியா தெரியல. வாய்தா வாங்கிடலாமா?'
"சிவாவும், ஜீவாவும் இந்த முறை அப்பியர் ஆகட்டும். நீங்க, உடல் நிலை சரியில்லைன்னு ஒரு தந்தி கொடுங்க. அதோடு, ஒரு அஃபிடவிட்டும் அனுப்பி வையுங்க. நான் பார்த்துக்குறேன்.'
-ப.பா.மோகன் சொன்னது போலவே, உடல்நிலையைக் காரணம் காட்டி தந்தி கொடுத்துவிட்டு, அஃபிடவிட்டும் அனுப்பி வைத்தேன். 9-ந் தேதியன்று கோபி கோர்ட்டுக்கு ரொம்பவும் பரபரப்பாக வந்திருக்கிறார் அரசு வழக்கறிஞர் சங்கரநாராயணன்.
கோர்ட்டுக்கு வெளியில், நமது அட்வகேட் ப.பா.மோகனைப் பார்த்த சங்கரநாராயணனின் குரலில் உற்சாகம் வெளிப்பட்டிருக்கிறது.
""கோபால் வருவாரா?''
""வருவார்..''
""எங்களுக்குத் தெரிஞ்ச தகவல்படி அவர் திருச்சியிலிருந்து வந்துக்கிட்டிருக்கிறார்.''
-நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் போட்டு வாங்குவதற்காக இப்படியொரு தகவலை அவராகவே சொல்லியிருக்கிறார் அரசு வழக்கறிஞர். அவர் விடாக்கண்டர்னா, நமது ப.பா.மோகன் கொடாக் கண்டராச்சே!
""எனக்கு தெரிஞ்சு, கோவைக்கு ஃப்ளைட்டில் கோபால் வர்றாருன்னுதான் தகவல்'' என்று ப.பா.மோகன் சொன்னதும், நான் எப்படியும் வந்துவிடுவேன் என்ற எதிர்பார்ப்போடு இருந்தது அரசு தரப்பு. கோர்ட்டில் வாதங்கள் தொடங்கியபோது, என் தந்தியையும் அஃபிடவிட்டையும் நீதிபதியிடம் கொடுக்கிறார் ப.பா.மோகன். பி.பி.க்கு பி.பி. எகிறிவிட்டது.
""நோ.. நோ.. கோபால் நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருக்கிறார். கோர்ட்டை அவமதிக்கிறார். அவர் ஆஜராகாததற்கு உடனே வாரண்ட் போடுங்க'' என அவரசப்படுத்துகிறார்.
ப.பா.மோகன் விடவில்லை. ""என் கட்சிக்காரர், கோர்ட் உத்தரவுகளை மதித்து நடப்பவர். வழக்கு என்றால் காலை முதல் மாலை வரை நீதி மன்றத்தில் காத்திருப்பவர். அவர் எப்படி கோர்ட்டை அவமதிப்பார்? உடல்நலம் சரியில்லாததால் அவரால் ஆஜராக முடியவில்லை.''
""வாரண்ட் போட்டு, உடனே அதை எக்ஸிக்யூட் பண்ண ஆர்டர் போடுங்க யுவர் ஆனர்-'' பி.பியின் வேகம் குறையவில்லை. ப.பா.மோகன் பொறுமையாக வாதாடி, வேறு தேதி கேட்டார்.
""நாளைக்கே அடுத்த வாய்தா போடவேண்டும்'' என்றார் பி.பி. நீதிபதியோ 23-ந் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்தார். எனக்குத் தகவல் வந்ததும், ஒரு நெருக்கடியிலிருந்து மீண்ட பெருமூச்சு வெளிப் பட்டது.
அதற்குள் என்ன செய்யலாம் என ஜெ அரசும் போலீசும் வேகம் காட்டியது. அடுத்த அதிரடிக்காக அவர்கள் நாடியது, கோவை நீதிமன்றத்தை. அங்கே..
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment