Wednesday, September 15, 2010
யுத்தம் -நக்கீரன் கோபால் (88)
சீனியர் கே.எஸ்.ஸின் குரலில் அனுபவத்தின் உறுதி தெரிந்தது.
""கோபால் சரண்டரானால் அவரை அரெஸ்ட் பண்ணி, அவர் மேலே இருக்கிற கேஸையெல்லாம் பொடாவுக்குக் கொண்டு போயிடுவாங்க. கவர்மென்ட் சைடிலிருந்து எனக்கு வர்ற தகவலெல்லாம் அப்படித்தான் இருக்குது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.''
அவர் சொல்வதுபோன்ற திட்டத்தில்தான் ஜெயலலிதாவின் அரசாங்கம் இருக்கிறது என்பதை தினத்தந்தி, தினமலர், தினகரன் பத்திரிகைகளில் வெளியான செய்திகளும் உறுதிப்படுத்தின. "பொடாவில் போடப்படுவாரா நக்கீரன் கோபால்?' என்ற தலைப்பிட்டு செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
என்னைப் பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் வலை வீசித் தேடிக்கொண்டிருந்தது போலீஸ். அவர்களின் வெறி கொண்ட கைகளில் நான் சிக்காததால், நமது நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் வீடுகளுக்குச் சென்று டார்ச்சர் கொடுக்கத் தொடங்கியது காவல்துறை.
தம்பி காமராஜின் நீண்டகால நண்பர், எனக்கும் நல்ல நண்பர் இம்மி. நக்கீரன் மேல் ரொம்பவும் அக்க றை கொண்ட அரசு ஊழியர். நமக்கொரு ஆபத்து என் றால் உடனடியாக நேரிலோ லைனிலோ வந்துவிடுவார். பக்கத்துணையாக நிற்பார். அவர் மீது போலீசின் பார்வை பதிந்தது. டி.ஐ.ஜி. முகமது அலிதான் இம்மியை விசாரித்தார்.
""கோபால் எங்கே இருக்கிறார்?''
""தெரியாது.''
""உங்களுக்குத் தெரியும். அவரைப் பார்த்தீங்கன் னாலோ, பேசுனீங்கன்னாலோ அவர் மேல இருக்கிறது சின்ன கேஸ்தான்னு சொல்லுங்க. நேரிலே வந்தார்னா முடிச்சிடலாம். ஆனா அவர் வேணும்னே பெரிசாக்கிக் கொண்டே போறார். அவர் சம்பந்தப்பட்ட விஷயமெல்லாம் என் கைக்குள்ளே இருக்கு. அதனாலதான் சொல்றேன்.''
""இப்ப என்ன வழக்குக்காக அவரைத் தேடிக்கிட்டிருக்கீங்க?''
""அதைச் சொல்ல மாட்டேன். கோபால் எங்கே இருந்தாலும் அவர்கிட்டே விவரத்தைச் சொல்லுங்க. எங்களுக்கு மேலே இருந்து தொடர்ந்து நெருக்கடி வந்துக்கிட்டிருக்கு.''
""என்ன கேஸ்னு சொல்லாம எப்படி அவரை வரச் சொல்ல முடியும்?''
""சொன்னதைச் செய்யுங்க. நீங்க அவருக்குத் துணையா இருந்தீங்கன்னா, நீங்க பார்க்கிற கவர்மென்ட் வேலையிலிருந்து சஸ்பெண்ட்தான். பார்த்துக்குங்க.''
""வேலையைப் பற்றி நான் கவலைப்படலீங்க சார்..'' -நண்பர் இம்மியின் உறுதியான குரலில் ஒடுங்கிப் போனார் முகமதுஅலி.
நக்கீரன் குடும்பத்தின் மற்றொரு நண்பரான பத்திரிகையாளர் பி.பி.சி ஜெகதீசனைப் போலீசார் நெருங் கினர். அவரது வீடு தேடிச் சென்று, ""கோபாலை உங்க ளுக்கு எத்தனை வருசமா தெரியும். அவர் இங்கே வந்தாரா? வந்தார்னா சின்ன கேஸ்தான், நேரில் வந்தா முடிச்சிக்க லாம்னு சொல்லுங்க. மறுபடியும் வருவோம்'' என்று மிரட்டல் குரலில் சொல்லிவிட்டுச் சென்றது போலீஸ்.
நமது பத்திரிகைக்கான செய்திகளை டைப் செட் செய்து கொடுத்துக் கொண்டிருந் தவர் தம்பி ஜாலி பாண்டியன். அவரையும் போலீசார் விட்டுவைக்கவில்லை.
""கோபால் இங்கே வந்தாரா?''
""இல்லீங்க..''
""போன் பேசினாரா?''
""இல்லீங்க..''
""உங்ககிட்டே பேசி யிருப்பார்.. அவரோட செல்நம்பர் வேணும். கொடுங்க.''
""நெஜமா பேசலீங்க சார்..''
""சரி.. பேசுனா நம்பரை நோட் பண்ணி வையுங்க. வர்றோம்''
-எல்லா இடங்களிலும் நெருக்கடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஜெயராஜ் வீட்டில் தங்கியிருப்பதையும் போலீசார் கண்டுபிடிக்கக்கூடும் என்பதால், கொடைக்கான லுக்குப் போகலாமா என்று மீண்டும் ஆலோசித்தோம். தம்பி காமராஜின் நண்பர் கிட்டா என்ற கிருஷ்ணகுமார் ஏற்கனவே அங்கு தங்குவதற்கு ஒரு தனி வீடு பார்த்திருந்தார். வழியெங்கும் போலீஸ் நெருக்கடி இருந்ததால், அங்கு செல்வதைத் தவிர்த்துவிட்டோம். இப்போது அந்த வீடு காலியாக இல்லை. ஒரு ஓட்டலின் மேல்மாடியில் ரூம் போட்டுத் தருவதாகக் கிட்டா சொல்லியிருந்தார்.
அவரிடம், ஓட்டல் யாருடையது என்று போனில் விசாரித்தேன்.
""நடிகர் கார்த்திக் ஓட்டல்ண்ணே..''
""போச்சா..''
""ஏண்ணே?''
-எனக்கு, 99ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம்தான் சட்டென ஞாபகத்திற்கு வந்தது. அப்போது நடிகர் கார்த்திக்கின் உடல்நலனில் அக்கறை செலுத்தி நக்கீரனில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதற்கு ரியாக்ஷனாக அடையார் கேட் ஓட்டலில் நக்கீரனுக்கு எதிராக ஒரு கூட்டத்தை அப்போதைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகுமார் மூலமாகக் கூட்டினார் கார்த்திக். கமல், விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் எல்லோரையும் அழைத்திருந்தார்கள். ரஜினிக்கும் அழைப்பு போனபோது, அவர் வரமுடியாது என மறுத்துவிட்டாராம். எனக்குப் போன் செய்த ரஜினி, என்ன செய்தி என்று விவரம் கேட்டுக்கொண்டார். அதன்பின், நடிகர்கள் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்திற்குப் போய் நக்கீரனுக்கு சாதகமாகப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். கொடைக்கானலில் கார்த்திக் ஓட்டலில் ரூம் போட ஏற்பாடாகியிருப்பதாக கிட்டா சொன்னதும் பழைய ஞாபகம் வந்தது. கார்த்திக் அந்த செய்தியை மறந்திருக்கலாம். ஆனால், ஓட்டலில் நான் தங்கியிருப்பதை யாராவது பார்த்து விட்டு அவரைக் கிளறிவிட்டால்...? அதனால், கொடைக் கானல் செல்லும் திட்டத்தை மறுபடியும் கைவிட்டேன்.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் எவ்வளவு யோசிக்க வேண்டியிருந்தது! ஒவ்வொரு விஷயத் திலும் அப்படித்தான். நான் போடும் சட்டைகள் எல்லாம் சாதாரண விலையில் உள்ளவைதான். அவற்றை நன்றாக கஞ்சிப்போட்டு துவைத்து அயர்ன் செய்து போட்டுக் கொள்ளும்போது பளிச் சென இருக்கும். ஜெயராஜ் வீட்டில் இருந்து கொண்டு, வெளியே அயர்ன் செய்வதற்காக கொ டுத்தனுப்ப முடியாது. போலீஸ்காரர்கள், சந் தேகப்படும் ஏரியாவுக்குச் சென்றால் அயர்ன் செய்பவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். அயர்ன் செய்பவர்களும், வழக்கமாக அயர்ன் செய்து கொடுக்கும் வீடுகளிலிருந்து புதுத்துணிகள் வந்தால், அங்கு யாரோ புதி தாக ஒரு விருந்தினர் வந்திருக்கிறார் என்று கணித்துவிடு வார்கள். என் சட்டைகள் எப்போதும் பளிச் நிறத்தில் இருக் கும். அதை அயர்ன் செய்வதற்காக வெளியில் கொடுத்தால் உடனே அடையாளம் கண்டுபிடித்துவிடமுடியும். அதனால், ஜெயராஜ் வீட்டின் மாடி அறையில் நானே சட்டையைத் துவைத்து, காயவைத்து, அயர்ன் செய்து போட்டுக்கொள்வேன்.
காலையில் பேப்பர் வாங்கும்போதும் ஒரே இடத்தில் எல்லா பேப்பர்களையும் வாங்கினால் சந்தேகம் வரும் என்பதால் ஜெயராஜிடம் சொல்லி, ஒவ்வொரு கடையில் ஒவ்வொரு பேப்பராக வாங்கச் சொல்வேன். அவரும் இந்தத் தெருவில் உள்ள கடையில் ஒரு பேப்பர், அப்புறம் இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு கடையில் இன்னொரு பேப்பர் என வாங்குவார். அப்படித்தான் அத்தனை பேப்பர்களும் மாடி அறைக்கு வரும்.
ஜெயராஜ் வீடு இருக்கும் பகுதியிலும் அடிக்கடி போலீஸ் சுற்றிக் கொண்டிருந்தது. திடீ ரென இரண்டு பேர் புல்லட்டில் வந்து, அந்த ஏரியாவில் நிறுத்தி விட்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். போலீசா, வெளிஆட்களா என்று கண்டு பிடிக்கமுடியாதபடி தோற்றம் இருக்கும். காட்டுக்குள் இப்படிப் பட்ட ஆட்களைப் பார்த்திருக் கிறேன். போலீஸ்கட்டிங் வெட்டா மல், சாதாரணமாக முடி வளர்த் திருப்பார்கள். ஆடு, மாடு மேய்ப் பவர்போல சுற்றியபடியே வீரப்ப னின் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போலத்தான் என்னைத் தேடியும் சுற்றிக் கொண்டிருக்கிறார் களோ என சந்தேகப்பட்டு, கிட்டே நெருங்கிச் சென்றால் திடுமெனக் கிளம்பிப் போய்விடுவார்கள்.
சீனியர் கே.எஸ். ஒரு ஆலோசனையை அட்வகேட் பெருமாள் மூலம் சொல்லி அனுப்பியிருந்தார். நான் தலை மறைவாக இருப்பதாக போலீஸ் சொல்வதை முறியடிக்கும் விதத்தில், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அதைப் பதிவு செய்யவேண்டும் என்பதுதான் அந்த ஆலோசனை. சென்னையில் 2003 புத்தகக் கண்காட்சி தொடங்கியிருந்தது. நக்கீரன் வெளியீடாக 13 புத்தகங்கள் வரவிருக்கின்றன. அத்துடன், வித்வான் வே.லட்சுமணனை ஆசிரியராகக்கொண்ட "பாலஜோதிடம்' வாரஇதழையும் நக்கீரன் நிறுவனத்திலிருந்து வெளியிடுகிறோம். கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோட்டில் உள்ள ஓரியண்ட் பள்ளியில் புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கும் திட்டமிட்டிருந்தோம். இதிலெல்லாம் கலந்துகொண்டு அதைப் பதிவு செய்யவேண்டும் என முடிவெடுத்தேன்.
ஜனவரி 12.
ஒரு இடைவெளிக்குப் பிறகு, வெளியுலகைப் பார்த்தேன். முதலில் சின்னக்குத்தூசி அய்யா அறைக்குத்தான் போனேன். அங்கே தம்பி காமராஜ் வந்திருந்தார். ""அண்ணே.. நம்ம கேஸை விசாரிக்கிற ஏ.சி. ஸ்ரீதரன் என்கிட்டே போனில் பேசுனாருங் கிறதுக்காக அவரை டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. அவருக்குப் பதிலா வந்திருக்கிற எஸ்.பி. என்ன சொல் றாருன்னா, நீங்க பிரஸ் கிளப்புக்கு வந்து பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் சரண்டர் ஆகலாம்னும், எந்த வழக்குக்காக அரெஸ்ட் செய்கிறோம்ங்கிறதை பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே போலீஸ்காரங்க சொல்வாங்கன்னும் அதை மீறி வேற எந்த நடவடிக்கையும் இருக்காதுன்னும் சொல்றாரு'' என்றதும், குத்தூசி அய்யா குறுக்கிட்டார்.
""வேணாங்க.. சுப்ரீம் கோர்ட்டில் ஆர்டர் வர வரைக்கும் நீங்க வெளியே வரவேணாம். அதுதான் நல்லது'' என்றார். அப்போது தம்பி, போலீஸ் போட்ட இன்னொரு குண்டு பற்றியும் சொன்னார். என்னைத் தலைமறைவுக் குற்றவாளின்னு அறிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் கவுன்ட்டர் போடும்போது, தலைமறைவு தீவிரவாதின்னு குறிப்பிடவும் போலீஸ் தரப்பில் ஆலோசனை நடந்துகொண்டி ருப்பதை தம்பி சொன்னதும், புத்தக காட்சியில் பங்கெடுத்து, தலைமறைவாக இல்லை என்பதைக் காட்ட முடிவு செய்து கிளம்பினேன்.
சென்னைப் புத்தக காட்சியில் தம்பிகள் சுரேஷ், பிரான்சிஸ், கார்த்திகைச்செல்வன், கௌரி, சர்க்குலேசன் அன்பு உள்ளிட்டோர் இருந்தார்கள். புத்தகம் வாங்க வந்த பார்வையாளர்கள் பலரும் என்னிடம் கையெழுத்து கேட்டபோது, தேதியுடன் அவர்களுக்குக் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தேன். நக்கீரன் ஸ்டாலில் புத்தகம் வாங்குபவர்களுக்கு அவர்களின் பெயர், அட்ரசுடன் பில் போட்டுத் தரும்படி தம்பி சுரேஷிடம் சொன்னேன். நாளை அந்த முகவரிகள் தேவைப்படலாம் என்பதால்தான் இந்த முடிவு.
புத்தக காட்சியில் நான் உற்சாகமாகக் கலந்து கொண்டிருப்பதை ஒரு சில கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன. அவை, யாருடைய கண்கள்...?
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment