Saturday, September 11, 2010

இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள்


சென்னை: நான் எந்தப் படம் நடித்தாலும் அது தமிழர்களைப் பெருமைப்படுத்தும் விதமாகவே இருக்கும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .

ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள எந்திரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் சனிக்கிழமை காலை நடந்தது.

தயாரிப்பாளர் கலாநிதிமாறன் முன்னிலையில் படத்தின் ட்ரெய்லரை ரஜினி வெளியிட்டார். படத்தின் இயக்குனர் ஷங்கர் மற்றும் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் மற்றும் தயாரிபாளர்கள், இயக்குனர்கள் உள்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ட்ரைலரை வெளியிட்ட பிறகு ரஜினி பேசியது:

"எந்திரன்' சம்பந்தமாக இன்னும் நிறைய விழாக்கள் நடக்கப் போகிறது. அவற்றில் நான் பேச வேண்டும். அதனால் இங்கே கொஞ்சமாக பேசுகிறேன்.

எல்லா புகழும் இறைவனுக்கே. இந்த டிரெய்லரை மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே திரையிடுவதாக இருந்தோம். 'ரிலீசுக்கு இன்னும் நாள் இருக்கிறது பின்னர் வெளியிடலாமே' என்று ஷங்கர் கேட்டார். கலாநிதி மாறனும் அதற்கு சம்மதித்தார். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.

ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கிஇருக்கிறார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. 'படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்' என்று சொன்னோம்.

'அப்படியா… உங்களுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும்' என கலாநிதி கேட்டார். சொன்னோம். ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கிக் கொடுத்தார்.

இரண்டு வருஷம் முன்பு இந்த படம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, 'தென்னிந்தியாவில் பட புரமோஷனை நான் பார்த்துக் கொள்கிறேன். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்', என்று கலாநிதி மாறன் சொன்னார்.

'என் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் இவ்வளவு பெரிய படத்தை தயாரிக்கிறீர்கள். கண்டிப்பாக அதை செய்வேன்' என்று சொன்னேன்.

இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள்.

'ஒரே படத்தை பற்றி திரும்பத் திரும்ப நான் என்ன பேட்டி கொடுப்பது' என்று கலாநிதி மாறனிடம் கேட்டேன்.

அதற்கு அவர் 'நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால் போதும். ரெட் கார்பெட் எப்போதும் உங்களுக்காக விரிக்கப்பட்டிருக்கும்' என்று பதில் சொன்னார்.

படம் பற்றி முதலில் பேச்சு வந்தபோது, 'நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர்தான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன்?' என ஷங்கரிடம் கேட்டேன். நாலு நாள் செட்டுக்குப் போனேன். அதன்பின் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன்.

அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும் என்றார். ஒரு இயந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம் வொர்க் செய்து என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான்.

எளிமை ஏன்?

இங்கே வைரமுத்து பேசும்போது, 'நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன?’ என்று கேட்டார்.

அடுத்த படம் பற்றி நான் சிந்திப்பது என் வேலையில்லை. திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து எனக்கு தரும் வேலையைச் செய்வேன்.

என் எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் என்னை பெரிய சிகரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். இங்கிருந்து விழுந்தால் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும்.

இளமையாக இருக்க…

ஸ்டைலாக இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடல்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என்று இருந்தால் இளமையாக இருக்கலாம்.

இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் எந்த படத்தில் நடித்தாலும் அது தமிழர்களை பெருமைப்படுத்தும் படமாகவே இருக்கும். ‘எந்திரன்’ அத்தகைய படம்தான்…" என்றார் ரஜினி.

No comments:

Post a Comment