Saturday, September 4, 2010
சுடுகாட்டில் பேதம்! -மரணகானா விஜி
அது ஒரு செவ்வாக் கெழமை. ராத்திரி நேரம். ஓவரா தண்ணி அடிச்சிட்டு பிளாட்பாரம் ஓரமா விழுந்து கெடந்திருக்கான் பாபு. எனக்கு ரெண்டாவது உறவா கெடச்ச என்னோட உசுருல கலந்துட்ட என் மச்சான் பாபு.
அந்த வழியா பறந்துக்கிட்டுப் போன பிரேக் பிடிக்காத லாரி ஒண்ணு பாபுவை நசுக்கி எடுத்து ருச்சி. அதப்பாத்துப் பாத்து அழுதேன், கதறினேன், பதறினேன், புரண்டு புரண்டு விழுந்தேன். துக் கத்தை அடக்கவே முடியலை. எப்படி கதறி அழுதும் எம் மனம் ஆறவே இல்ல.
என்னோட எல்லா கஷ்டத்துல யும் கூட இருந்த மச்சான் பாபு என்னை விட்டுட்டுப் போ யிட்டான். அவன் இருந்த வரைக்கும் எனக்கு ரெண்டு காலு இல்லை யேங்கிற கொற யே தெரியாம இருந்துச்சு. எனக்கு ஊன்று கோலா இருந்தவன் அவன்.
ஜி.ஹெச்.லயிருந்து வந்த லாரி, பாபுவின் உடம்பை தூக்கிப் போட்டுக்கிட்டுப் போனது. பாபு செத்துட்டான்னு கேள்விப்பட்டு எக்மோர் ராணி வந்திருந்தா. நாங்கள்லாம் ஒன்னா இருந்த காலத்துல ஒண்ணா சேர்ந்து அவள அனுபவிச்சிருக்கோம். பாபுவை அவளுக்கு ரொம்பப் பிடிக்கும். செத்துட்டான்னு கேள்விப் பட்டதும் கதறித்துடிச்சிட்டு ஓடி வந்தா. என்னைக் கட்டிப்புடிச்சிட்டு கதறினா ராணி. எப்படி எப்படியோ அழுது பார்த்தும் அவளுக்கு மனசு ஆறவே இல்ல.
"ஏய் விஜி... நீ மீண்டும் அனாதையாயிட் டேடா...'ன்னு கதறி அழுதா. நான் அனாதை ஆயிட்டேனான்னு நெனைக்க நெனைக்க நெஞ்சு வலிச்சது எனக்கு. பாபுவோட மரணம் ரொம்ப நாளைக்கு பைத்தியக்காரனா என்னை அலைய வெச்சது. இப்படி மரணங்களை அடிக்கடி சந்திச்ச எனக்கு மனசு மரத்துப்போச்சு.
இந்த ஒலகத்துல மனுஷங்களுக்கு நிம்மதியான இடம்னா சுடுகாடுதான்னு ஒரு தத்துவம் சொல்லுவாங்க. இதுமட்டுமில்ல... பேதமில்லாத ஏரியா... சமரசம் இருக்கும் இடம்ன்னுகூட சுடுகாட்டைப் பத்தி பேசுவாங்க. ஆனா... நிஜம் அப்படி இல்ல. ஏற்றத் தாழ்வுகள் நெறஞ்ச இடமாத்தான் பொணம் பொதைக்கிற சுடுகாடும் இருக்கு. வெளி உலகத்துல மனுஷங் களுக்குள்ள எப்படி பெரியவன், தாழ்ந்தவன்னு இருக்கோ அது அத்தனையும் இங்கேயும் இருக்கு.
பொதுவா, சுடுகாட்டுல ஒரு பொணத்தை பொதைக்கணும்னா 6 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்ட குழியை வெட்டி வெச்சிருப்பாங்க. ஒரு மனுஷன் செத்துப் போனான்னா, அவங்க வூட்ல இருந்து ஒரு ஆளு வந்து வெட்டியான்கிட்டே, செத்துப்போனது பெரிய ஆளா, கொழந்தையான்னு விபரம் சொல்லிட்டுப் போவான். அதுக்கேத்த மாதிரி குழி வெட்டி வைப்பாங்க.
ராயபுரம் சுடுகாட்டுல நான் இருந்தப்ப... ஒருநாள் நல்லா வசதி படைச்ச ஆளு "பாடி'யை கொண்டு வந்தாங்க. பெரிய அளவுல அலங்கார பாடை, ஆட்டம், பாட் டம்னு அந்த பாடியை கொண்டு வந்தாங்க.
அதப்பாத்த எனக்கு "அந்த மனுஷன் உசுரோட இருந்தப்ப அந்த ஆளை இப்படி சந்தோஷமா வெச்சிருந்தானுங்களோ இல்லை யோ... செத்ததுக்குப் பெறகு எல்லா மரியாதையும் செய்றானுங்கோ'ன்னு தோணுச்சு. தயாரா தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு பாடியை கொண்டு போனாங்க. பாடியை குழிக்குள் எறக்கியப்போ... செத்துப்போனவனோட தல கொஞ்சம் கிராஸ் ஆயிடுச்சு. ஏன்னா... குழியின் நீளத்துல ஒரு அரை அடி கம்மியா இருந்ததால... பாடியை நேரா படுக்க வைக்க முடியாம தல மட்டும் கொஞ்சமோ கொஞ்சம்தான் கிராஸ் ஆனுச்சு.
அதப்பாத்து, செத்துப்போன ஆளோட மகன்களுக்கு வந்ததே கோவம் பாருங்க... அப்படியொரு கோவம். குழிவெட்டிய ஆளுங் களக் கூப்பிட்டு, "ங்கோத்தா... என்னடா குழி வெட்டிருக்கே... குழி. எங்க அப்பன் தலயப் பாருடா... க்ராஸ் ஆயிடுச்சி. எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா எங்கப்பன்?னு ஆரம்பிச்சி மெட்ராஸ் பாஸையில இருக்கிற எல்லா கெட்ட வார்த்தையாலயும் திட்டித் தீர்த்துட்டானுங்க.
மண்ணுக்குள்ளே போயிட்டா எல்லாம் மக்கிப்போயிடப் போவுது. இதுக்குப்போயி இவ்வளவு அசிங்கமா பேசணுமா வசதி படைச்ச ஆளுங்கன்னு நெனைச்சிக்கிட்டேன்.
இந்த சம்பவம் நடந்து ரெண்டு மூணு நாளைக்குப் பெறகு ஒருநா, ஜி.ஹெச். ஊழியருங்க ரெண்டுபேரு ஒரு கோணியைத் தூக்கிக்கிட்டு வந்தாங்கோ. "குழி வெட்ட றவனுங்க யாருமில்லையா?'ன்னு எங்கிட்டே கேட்டாங்க. வந்துடுவாங்க... என்ன விஷயம்னு கேட்டேன்.
"ஒரு குஷ்டரோகி செத்துப் போயிட்டான், அவன மூட்டையில கட்டி கொண்டாந்திருக்கோம். அத பொதைக்கணும்'னு சொன்னாங்க. கொஞ்ச நேரம் இருங்க... வந்துருவாங்கோன்னு அவனுங்களுக்குச் சொல்லிட்டு அந்த மூட்டையையே வெறிச்சிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.
ரெண்டு நாளைக்கு முன்னால இதே சுடுகாட்டுக்கு வந்த "பாடி'க்கு எவ்வளவு மரியாதை, ஆட்டம், பாட்டம், அலங்காரம்! அந்த மனுஷனப் போலத்தான் இந்த குஷ்டரோகியும் ஒரு மனுசன். ஆனா, இவனுக்கு எந்த மரியாதையும் இல்லே. ஏதோ குப்பைக்கூளங்களை மூட்டையில அள்ளிட்டு வர்ற மாதிரி கட்டிக்கிட்டு வந்திருக்காங்க. கொறஞ்சது ரெண்டு கழிய கெடத்தி அதுல ஒரு பாயை வெச்சி அதுல அந்த குஷ்ட ரோகியை கட்டி பொணம் சுமக்கிற வண்டியிலயாவது கொண்டு வந்திருக்கலாம். ஆனா, இல்லே! ரெண்டு "பாடி'களுக்கு ஏற்பட்ட சம்பவத்தை நெனச்சு ஏனோ மனசு வேதனைப்பட்டது.
கொஞ்ச நேரத்துல வெட்டியானுங்க வந்தாங்க. என்ன நடக்குதுன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். வெட்டியான்ங்ககிட்ட, ஜி.ஹெச். ஊழியருங்க விசயத்தைச் சொல்ல... மட மடன்னு 2-க்கு 2 அடியில குழியை வெட்டினாங்க. அதுல குஷ்டரோகி பாடியைப் போட்டு பொதைச்சிட்டு போயே போயிட் டாங்க. எல்லாம் ஒரு அரை மணி நேரத்துல முடிஞ்சுப் போயிடுச்சு.
வசதி படைச்சவனோட பாடிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் னுட்டு ஒரு மூணு மணி நேரம் அடக்கம் பண்றதுக்கே ஆனுச்சு. அப்படி மூணு மணி நேரம் ஆகவேண்டிய அந்த விசயம், ஒரு குஷ்ட ரோகியோட பாடிக்கு வெறும் 30 நிமிசத்துல முடிஞ்சுப் போயிடுச்சு. இது மட்டுமில்ல... 6 அடி நீளத்துல ஒரு அரை அடி கொறைஞ்சதுக்கே ஆத்திரப்பட்டாங்க வசதி படைச்சவனுங்க. ஆனா, இந்த பாடிக்கு மொத்தமே 2 அடிதான். குஷ்டரோகிக்காக யாரு கோவப்படறது?
உசுரு போயிட்டா எல்லா ஒடம்பும் "பாடி'தான். ஆனா, அந்த "பாடி'ய அடக்கம் பண்றதுலதான் எவ்ளோ ஏற்றத்தாழ்வுகள். இருக்கப்பட்டவனுக்கு ஒருவித ஏற்பாடும், இல்லாதவனுக்கு ஒரு ஏற்பாடும்ங்கிறதுதான் சுடுகாட்டுலயும் நெலவுது. அப்புறம் எப்படி பேதமில்லாத இடம் சுடுகாடுதான்னு சொல்றாங்களோ? செத்ததுக்குப் பெறகு பாடியை சாஸ்திர சம்பிரதாயத்தோட அடக்கம் பண்ணினாத்தான் செத்தவன் சொர்க்கத்துக்குப் போ வான், செத்தவன் மனசு சாந்தியடையும்னு செய்றாங்க இப்படி. இந்த குஷ்டரோகி என்ன பாவம் பண்ணினான்? இவன் சொர்க்கத்துக்குப் போகக்கூடாதா? இவன் மனசு சாந்தி அடைய வேணாமா?ன்னு தோணுச்சு. அப்போ, உடனே நான், குஷ்டரோகி பொதைக்கப்பட்ட குழிக்கிட்டே நகர்ந்து நகர்ந்து போயி... அந்தக் குழியை ஒட்டி 6 அடி நீளத்துக்குப் பாத்தி மாதிரி மண்ணை குவிச்சு, ஒரு பாடி பொதைக்கப்பட்டது போல செஞ்சேன். கொஞ்ச தூரம் தள்ளி வந்து... அத பார்த்தேன். எல்லாரையும்போல இங்கேயும் ஒரு பொணம் பொதைக்கப்பட்டிருக்கிற மாதிரி இருந்துச்சு. அதப் பார்த்து ஏனோ எனக்குள்ள ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்துலயே என் பறை எடுத்து...
விதவிதமா பொம்மலாட்டம்
பேசுவதெல்லாம் பித்தலாட்டம்
உறவுகள்ளாம் கழுகுக் கூட்டம்
உள்ளம் முழுக்க காசுதான்!
பணமிருந்தா செத்துப்போன
பொணத்துக்கும் பூமாலை!
பணமில்லைனா மனுசனுக்கே
இங்கு இல்லை பாமாலை!
-ன்னு அடித்தொண்டையில இருந்து பாடினேன். அந்த குஷ்டரோகிக்கான இந்த மரண தாலாட்டு... அந்தச் சுடுகாடு முழுக்க எதிரொலித்தது.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment