Thursday, August 5, 2010
யுத்தம் 76 - நக்கீரன் கோபால்
கோர்ட்டுக்கு சிவாவைக் கொண்டு வரவில்லை.
என்ன ஆனார் சிவா என்று நாங்கள் பதை பதைப்புடன் இருக்கிறோம். போலீசார் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.
சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட் தன் ஆசனத்தில் அமர்ந்தார். அவரிடம், சிவாவை இன்னைக்கு புரடியூஸ் பண்ணமுடியலை என்று சொல்லி, வேறு தேதி வாங்கியது போலீஸ்தரப்பு. எனது ஆஜரை கோர்ட் பதிவு செய்துகொண்டு, அடுத்த விசாரணை நாளில் வரச் சொல்லி உத்தரவிடப்பட்டது.
சிவாவைப் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த நமக்கு ஏமாற்றம்தான். நமது வாகனம் புறப்பட்டுச் செல்வதைப் போலீசார் பார்த்துக் கொண்டே இருந்தனர். போலீஸின் முழியே சரியில்லை. நாம் புறப்பட்டு 2.30 மணி நேரம் கழித்து, சத்தியமங்கலம் கோர்ட் வளாகத்திலிருந்த நம்ம நண்பர் ஸ்டாலின் சிவக்குமார் போனில்...
""அண்ணே... சிவாவை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்து ஆஜர்படுத்திட்டாங்க.''
-நானும் சிவாவும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே, வேறு தேதியில் ஆஜர்படுத்துவதாக கோர்ட்டில் சொல்லி, தேதி வாங்கிய போலீசார், நாங்கள் புறப்பட்டுவிட்டோம் என்று தெரிந்ததும், கோவை சிறையிலிருந்து சிவாவை அழைத்து வந்து ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அதிகார பலத்தால் கோர்ட்டையும் ஏமாற்றக்கூடிய வகையிலேயே போலீசாரின் செயல்பாடு இருந்தது.
வண்டியை காங்கேயம் அருகில் உள்ள பெருங் கரணைப்பாளையம் விடச்சொன் னேன். என்னுடன் அட்வகேட் ப.பா.மோகன், தம்பி ஜீவா, டிரைவர் மோகன், செக்யூரிட்டி குண்டு பூபதி ஆகியோர் இருந்தார்கள்.
பெருங்கரணைப்பாளையத்தில் எங்கள் வண்டி நுழைகிறது. ஊரில் கோயில் திரு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டி ருந்தன. மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்த சிவா அப்பா இருக்கும் வீட்டைத் தேடிச் சென்றோம்.
எளிமையான வீடு. அதன் பின்புறம் ஒரு கொட்டகை. அதில்தான் ஒரு கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்தார் சிவாவின் அப்பா. உடல் நிலை முடியாமல் இருந்த அவரை, அந்த நிலையில் பார்த்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நாம் வந்திருப்பதை அறிந்தாலாவது அவர் சற்று தெம்பாக இருப்பார் என்று குரல் கொடுத்தேன்.
""அப்பா... ...''
""சுப்ரமணி.. சுப்ரமணி...'' (தம்பி சிவசுப்ரமணியத் தைத்தான் அப்படி சொல்கிறார்)... ""சுப்ரமணி... வந்துட்டி யாப்பா...''
எத்தனை எதிர்பார்ப்பு இருந்தால், அப்பா என்ற குரலைக் கேட்டதும், தன் ஒரே மகன் சிவசுப்ரமணியன் வந்துவிட்டான் என்ற நம்பிக்கையுடன் அழைத்திருப்பார். குடும்ப உறவுகளின் உணர்ச்சிகளைக்கூட நசுக்கிவிட்டு, பொய் வழக்கில் தம்பியை சிறைப்படுத்தியிருந்தது பேயாட்சி.
""சுப்ரமணி...'' என்றபடி படுக்கையிலிருந்து அவர் எழுந்திருக்க முயன்றார். முடியவில்லை. எனக்கும் என்னுடன் வந்திருந்தவர்களுக்கும் கண்கள் கலங்கின. நான் அவர் கால்மாட்டில் உட்கார்ந்து கொண்டேன். அப்போது சிவாவின் அம்மா வந்து, ""சுப்ரமணியோட முதலாளி வந்திருக்காங்க'' என்று கிராமத்து மொழியில் சொன்னார்.
உடனே, ""அண்ணா.. அண்ணா... சுப்ரமணி எப்படி இருக் கான்?'' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார் சிவா அப்பா. எனக்கும் ப.பா.மோகனுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
நல்லா இருக்காரு என்ற பொய்யையும், சீக்கிரமா வந்துடுவாருப்பா என்ற நம்பிக்கையையும் அவரிடம் தெரி வித்தோம். அதற்குப்பிறகு, வீட்டிலிருந்த பழைய படங்களை யெல்லாம் பார்த்தோம். சிவாவின் அம்மா நல்ல டீ போட்டுக் கொடுத்தார். வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து அதை குடித்துக் கொண்டிருந்தோம்.
அப்போது, நமது வாகனம் வாசலில் நிற்பதைப் பார்த்து ஊர்ப் பெரியவர்கள் அங்கே திரண்டுவந்தனர்.
""தம்பி எப்பங்க வருவாரு?'' -ஊர்ப் பெரியவர்கள் கேட்டார்கள்.
""தம்பி சிவா மேலே அரசாங்கம் 7 பொய் வழக்குப் போட்டி ருக்குது. அதில் 5 வழக்கில் பெயில் கிடைச்சிடிச்சி. இன்னைக்கு ஒரு வழக்கில் பெயில் கிடைச்சிடும். அப்புறம் ஒரு வழக்கு மட்டும்தான் பாக்கி இருக்குது. அதிலும் ஒன்றிரண்டு நாளில் பெயில் எடுக்கிறதுக்கு ரெடியா இருக்கோம்'' என்று விளக்கினேன்.
நான் சொன்னதைக் கேட்டதும், ஊர்ப் பெரியவர்களில் ஒருவர் என்னிடம் பேசினார். ""நக்கீரனய்யா கோவிச்சுக்காதீங்க. ஒரு விஷயம் சொல்றோம். சிவா அப்பாவோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. நாளை வரை தாங்காது. ஊருல கோயில் திருவிழாவுக்காக காப்பு கட்டிட்டோம். இதற்கப்புறம் ஊருல எந்த கெட்டதும் நடக் கக்கூடாதுன்னு சாமிகிட்டே வேண்டிக்கிட்டிருக்கோம். தப்பா நினைச்சுக்காதீங்க. ஏதாவது துக்க விஷயம் நடந்திடிச்சின்னா... பாடியை நாங்க ரொம்ப நேரம் ஊருக்குள்ளே வச்சிருக்க முடியாது. 3 மணிநேரம்தான் டயம். அதற்குள்ளே பாடிய எடுத்திடணும். அதனால, சிவா தம்பிய சீக்கிரமா வெளியே கொண்டு வரப் பாருங்க. இல்லைன்னா, ஒண்ணும் செய்ய முடியாது எங்க மேலே வருத்தப்படாதீங்க.''
-ஊர் வழக்கத்தைச் சொன்ன அந்தப் பெரியவரின் குரல் கறாராகவே ஒலித்தது. சிவாவோ குடும்பத்துக்கு ஒரே பையன். அவர் தன்னுடைய அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியாவிட்டால் எப்படி? அவரோ சிறையில் இருக்கிறார். எப்படி கொண்டு வரப்போகிறோம் என்ற யோசனை பலமாக இருந்தது. ஆனாலும், ஊர்ப்பெரியவர்களிடம் உறுதியான குரலில் சொன்னேன்.
""எப்பாடுபட்டாவது சிவாவைக் கொண்டு வந்திடுவோம். உங்க ஊர் திருவிழாவுக்கு எந்த பாதிப்பும் இல்லாம எல்லாம் நல்லபடியா நடக்கும். 3 மணி நேரம்ங்கிறதை 1 நாளா அவகாசம் கொடுங்க. சிவாவை அழைச்சிட்டு வந்திடுறேன்.''
-ஊர்ப் பெரியவர்களிடம் சொல்லிவிட்டு, சிவாவின் அம்மா பக்கம் திரும்பினேன்.
""அம்மா... நான் தம்பியோடுதான் திரும்பி வருவேன். அதுவரைக்கும் உங்க வீட்டுக்காரர் உயிரை நீங்கதான் புடிச்சி வைக்கணும். என்ன செய்வீங்கன்னு தெரியாது. நீங்கதான் அவரோட உசுருக்கு காவல்.''
நான் சொன்னதும், சிவாவின் அம்மா தன் தாலியை கண்ணில் ஒற்றிக்கொண்டார். ஊர் மக்களிடம் கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினேன்.
பொய் வழக்குகள் போட்டும், ஜாமீனில் வெளிவந்துவிடுகிறார்களே என்பதால், பொடாவை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார் ஜெயலலிதா. நக்கீரன் மீது பொடாவை ஏவுவது பற்றிய ஆலோசனைகள் கோட்டையில் நடந்துகொண்டிருந்தபோதே, வைகோ மீது முதல் பொடா பாய்ந்தது. அதையடுத்து, வேறு யார் மீதெல்லாம் பொடா போடலாம் என்ற லிஸ்ட் எடுக்கப்பட்டிருந்தது.
அதிலும், நக்கீரன் பெயர்தான் முதலிடத்தில் இருந்தது. இருந்தாலும், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ஜெ. .அரசு, வைகோவைத் தொடர்ந்து பெரியவரும், தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான பழ.நெடுமாறன் மீதும் அவரது தமிழர் தேசிய இயக்கத்தினர் மீதும் பொடா போட்டது.
2002 ஏப்ரல் 10-ம் தேதி. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் முதன்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். உலகளவிலான பத்திரிகையாளர்கள் குழுமியிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு அது. அந்த பேட்டி தொடர்பாக சென்னை ஆனந்த் திரை யரங்கத்தில் தமிழர் தேசிய இயக்கம் ஒரு விளக்கக் கூட்டம் நடத்தியது. விழாவை ஒருங்கிணைத்த தமிழ் முழக்கம் பதிப் பகத்தின் சாகுல் அமீது, விடுதலைப்புலிகள் தொடர்பான புத்தகங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொடா பாய்ந்தது.
புத்தகங்களை எழுதியவர் பழ.நெடுமாறன். அவரும் பொடாவில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார். அவரது தமிழர் தேசிய இயக்கம் தடை செய் யப்பட்டது. ஆனந்த திரையரங்கில் நடந்த விழாவில் வர வேற்புரையாற்றியவர் டாக்டர் தாயப்பன். வரவேற்புரையாற்றி யதற்காகவே அவரும் கைது செய்யப்பட, அவர் மீதும் பொடா பாய்ந்தது. இந்தக் கொடுமையை எங்க போய் சொல்வீங்க. இப்படி ஒரு கேடு கெட்ட அர சாங்கத்தத் தாங்கிப் பிடிக்க ஆயிரம் கைத் தடிகள். ஈழப்பிரச்சினை பற்றி மேடைகளில் தீவிரமாக முழங்கிய புதுக்கோட்டை பாவாணன் மீதும் பொடா பாய்ந்தது. நெடுமாறன் கட்சியைச் சேர்ந்த பரந்தாமன் என்பவரும் பொடா வுக்குத் தப்பவில்லை.
பொடாவில் கைது செய்யப் பட்டவர்களில் முக்கியமானவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். எப்போது வேண்டுமானாலும் போலீஸ் வரலாம் என்று எதிர்பார்த்தே தனது ஆழ்வார் திருநகர் வீட்டில் காத்திருந்தார் சுப.வீ.
அந்த பரபரப்பான நேரத்தில் நக்கீரன் நிருபர் தம்பி இளையசெல்வன் அவரை சந்தித்தார். கைதுக்காக காத்தி ருப்பதாகச் சொன்ன சுப.வீ, ""இப்போது ஈழத்தில் போர் எதுவும் நடக்கவில்லை. (அப்போது அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தது) இங்கும் ஈழவிடுதலைப் போராளிகளாலோ ஆதரவாளர்களாலோ எவ்வித பயங்கரமும் நிகழவில்லை. அங்கு நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை இந்திய அரசும் வரவேற்றிருக்கிறது. தமிழக அரசு இதனைப் பின்பற்றி நல்லதொரு சூழலை அங்கும் இங்கும் உருவாக்க அரிய வாய்ப்பான நேரம் இது. ஆனால், தமிழக அரசோ இல்லாத பயங்கரவாதத்தை இங்கு இருப்பதாகச் சொல்கிறது.
எங்களைப் போன்றவர்கள் விடுதலைப்புலிகளுக்கு என்ன உதவி செய்துவிடமுடியும்? எங்களிடம் உதவி பெறும் நிலையிலா விடுதலைப்புலிகள் உள்ளார்கள்? அவர்களிடம் ராணுவம் உள்ளது. கடற்படை உள்ளது. விமானங்கள்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். என்னிடம் பழைய சைக்கிள்கூட இல்லை. இந்த நிலையில் நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும்? அங்கே போராடுகின்றவர்கள் மண்ணின் விடுதைலைக்காகவும் மக்களின் விடுதலைக்காகவும் போராடும் போராளிகள்தான் விடுதலைப்புலிகள் என்ற கருத்தை இங்கே சொல்வது மட்டும்தான் எங்கள் வேலை. இதை பயங்கரவாதம் என்று கருதினால் அதில் என்ன நியாயம் இருக்க முடியும்? காலம் இதற்கு விடை சொல்லும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்'' என்றார் சுப.வீ.
மறுநாள், காலை 6 மணிக்கே விருந்தினர்கள்போல போலீசார் வந்துவிட்டனர். ""உங்களை பொடா சட்டத்தில் கைது செய்கிறோம்'' என்று போலீசார் சொன்னதும், ஏதோ பரிசுப் பொருள் தருவது போல, ""ரொம்ப மகிழ்ச்சி. வாங்க போகலாம்'' என்றபடி அவர்களுடன் சுப.வீ கிளம்பினார்.
அடுத்தது நக்கீரன்தான்.. என்று எல்லாத் தரப்பிலிருந்தும் தக வல்கள்.
பரபரப்பு அதிகமானது.
-யுத்தம் தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment