Tuesday, August 31, 2010

டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா?


டைனோசருக்கு பலம் அதிகமா அல்லது ஆப்பிளுக்கு பலம் அதிகமா என்று யாராவது கேட்டால், நாம் நிச்சயம் அவரைப் பார்த்து சிரித்திருப்போம்.

என்ன, சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்றிருப்பார் நம் வடிவேலு.

ஆனால், 60 மி்ல்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியை தாக்கிய மாபெரும் எரிகல்லால் ஏற்பட்ட பயங்கரமான சுற்றுச்சூழல் மாற்றங்கள் தான் (பல லட்சம் அணு குண்டுகள் வெடித்தால் ஏற்படும் அளவுக்கு சேதம் பூமியில் உண்டானது. அப்போது எழும்பிய தூசு மண்டலம், சூரிய ஒளியை பல்லாண்டுகள் மறைத்ததால் உலகின் பெரும்பாலான தாவரங்கள் அழிந்து, அதை நம்பி வாழ்ந்த மிருகங்களையும் அழித்தது, குறிப்பாக டைனோசர்களை கூண்டோடு ஒழித்துக் கட்டியது என்பது தியரி) டைனோசர்களை அழிந்தன.

ஆனால், அதில் தப்பிப் பிழைத்த ஒரு சில தாவர வகைகளில் ஒன்று ஆப்பிள் என்பது சமீபத்திய 'ஜீனோம்' ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் சுமார் 600 மில்லியன் அடிப்படை டிஎன்ஏக்களை சமீபத்தில் அக்குவேறு ஆணிவேறாக வகைப்படுத்தி (genome profiling) முடித்துள்ளனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்.

ஆப்பிளின் நிறம், சுவை, அதன் ஜூஸ் தரும் தன்மைக்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், இந்த குணங்களை அதிகரித்து மிகச் சுவையான ஆப்பிள்களை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சி தான் இது. ஆனால், இந்த ஆராய்ச்சி நம்மை டைனோசர்களின் கதையை நோக்கி கொண்டு போயுள்ளது.

ஆப்பிள்களுக்கு மிக நெருக்கமான இனத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட தாவர வகைகளில் 7 அல்லது 8 குரோமோசோம்கள் தான் உள்ளன. (நமது ஜீன்களை ஏந்திய டிஎன்ஏக்களைக் கொண்ட செல் உறுப்பு தான் குரோமோசோம்). ஆனால், ஆப்பிள்களில் 17 குரோமோசோம்கள் உள்ளது சமீபத்திய 'ஜீனோம்' ஆராய்ச்சியில் (டிஎன்ஏக்களை வரிசைப்படுத்தல்) தெரியவந்துள்ளது.

ஆப்பிளின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட இந்த குரோமோசோம்கள் இரண்டு முறை உருவாகியுள்ளன. அதாவது 'டூப்ளிகேட்' ஆகியுள்ளன. இதனால் தான் ஆப்பிள் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரங்களில் 8 குரோமோசாம்கள் இருக்க, ஆப்பிளில் மட்டும் 17 குரோமோசாம்கள் உள்ளன.

இந்த டூப்ளிகேசன் நடந்தது 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன். அந்த சமயததில் தான் பூமியில் இன்னொரு முக்கிய நிகழ்வும் நடந்தது. அந்த காலகட்டத்தில் தான் டைனோசர்கள் கூண்டோடு காலியாயின.

இந்த இரு தனித்தனி சம்பவங்களுக்கும் ஒரே காரணம் இருந்திருக்கலாம் என்பது தான் விஞ்ஞானிகள் சொல்லும் சுவாரஸ்யமான தகவல்.

எரிகல் தாக்கி தாவர இனங்கள் அழிந்தபோது, தாக்குப் பிடித்த ஓரிரு இனங்களில் ஆப்பிளும் ஒன்று என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள். அந்த காலகட்டத்தில் தப்பிப் பிழைக்க, ஆப்பிள் இனத்தில் நடந்த 'சம்பவம்' தான் குரோமோசாம் டூப்ளிகேஷன் என்கிறார்கள்.

No comments:

Post a Comment