Monday, August 16, 2010
வேதனையில் முடிந்த சோதனை!
தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல... நாடு முழுவதுமே தீபாவளியின் தாக்கம் என்பது தெரிந்த சேதிதான். வழக்கம் போலவே, இப்பண்டிகையை மக்கள் எதிர்கொள்ள பட்டாசு தயாரிப்பில் படு பிஸியாக இருக்கின்றன சிவகாசியும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களும். அப்படி ஒரு கிராமமான துரைச்சாமிபுரத்திலிருந்து...
"அடக் கொடுமையே... அரசு அனுமதி பெறாமல் வீடுகளில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரிக்கும் கிராமங்களில் ரெய்டுக்குப் போன அதிகாரிகள் 8 பேர் வெடி விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார் கள். சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்யும் அதிகாரிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று திட்டமிட்டே தீவைத்து விபத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்' என காட்டுத் தீயாய் முதலில் பரவிய இந்தத் தகவல் விருதுநகர் மாவட்டத்தையே உலுக்க... சம்பவ இடமான சாத்தூர்-தாயிப்பட்டி அருகிலுள்ள வீ.துரைச்சாமிபுரத்துக்கு விரைந் தோம். "துவம்சம் செய்து விடுவார்கள் காக்கிகள்...' என்ற பயத்தில் எங்கும் புகைமயமாக மயான அமைதி அங்கு நிலவ... பக்கத்து கிராமமான மீனாட்சிபுரத்தில்தான் ஒரு சிலரைப் பார்க்க முடிந்தது.
""ஏதோ வயித்துப் பொழப்புக்காக இந்தத் தொழில செய்யறோம். அதுக்காக, அதிகாரிகளத் தீ வச்சுக் கொளுத்துற அளவுக்கு நாங்க மோசமானவங்க இல்ல...'' என்று பதற்றத்தோடு விவரிக்க ஆரம்பித்தார்கள்-
""இங்கே மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், ராமலிங்காபுரம் இன்னொரு மீனாட்சிபுரம்னு பல கிராமங்கள்ல திரி தயாரிக்கிறாங்க. விஜயகரிசல்குளம், கனஞ்சாம்பட்டி, கலைஞர் காலனி, எஸ்.பி.எம். தெரு, கோட்டையூர்ன்னு இன்னும் சில கிராமங்கள்ல வீடுகள்லயும், தோட்டத்துலயும் வச்சு பட்டாசு தயாரிக்கிறாங்க. இன்னைக்கு நேத்து இல்ல. காலம் காலமா இதுதான் எங்களுக்குத் தொழில்.
இங்க மட்டுமில்ல... விருதுநகர் மாவட்டத்துல உள்ள பல கிராமங்கள்ல இதுதான் நடக்கு. அந்த அளவுக்கு இந்தத் தொழில வளர்த்துவிட்டவங்க அரசியல்வாதி களும் அதிகாரிகளும்தான். எங்க மேல சீரியஸா நடவடிக்கை எடுத்தா அப்ப ஆட்சில இருக்குற கட்சிக்கு சுத்தமா ஒத்த ஓட்டு விழாது. அதனால, மறைமுகமா அரசியல் வாதிங்களோட சப்போர்ட் எங்களுக்கு எப்பவும் உண்டு. இந்த அதிகாரிங்க, குறிப்பா வெம்பக்கோட்டை போலீஸ்காரங்க மாசா மாசம் வந்து வீட்டுக்கு 200 ரூபாய் மாமூல் வாங்கிட்டு போவாங்க. அப்புறம் பெட்ரோல் செலவு, அது இதுன்னு வந்து வீட்டு வாசல்ல நிப்பாங்க. இந்த விசுவாசத்துல ரெய்டுக்கு வர்றதுக்கு முன்னாலேயே எங்களுக்குத் தகவல் சொல்லிருவாங்க. நாங்களும் வேஸ்ட் வெடிகள அங்க இங்க போட்டுட்டு ஓடிருவோம். அவங்களும் வந்து அத அள்ளிட்டுப் போயி, பல லட்சம் பெறுமான கள்ள வெடிகளைக் கைப்பற்றியதா கணக்கு காட்டிடுவாங்க.
இந்த நடைமுறைக்கு மாறா இப்ப நடந்துருச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னால இங்கே கோதைநாச்சியார் புரத்துல அரவிந்த்ன்னு எட்டு வயசு சின்னப்பய, வீட்டுல இருந்த வெடிக் குவியலப் பத்த வைக்க, அது வெடிச்சு செத்துப் போனான். ஸ்டவ் வெடிச்சு அவன் செத்ததா ரெக் கார்டு பண்ண நெனைச் சாங்க. ஆனா, அது முடி யாம... ட்ரீட்மெண்ட் டுக்குப் போன இடத்துல ஆஸ்பத்திரிக்காரங்க சொல்லி விஷயம் மேலதி காரிக்கு தெரிஞ்சிருச்சு.
உடனே, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எங்க மாவட்ட அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்., கலெக்டர் சண்முகம்னு எல்லாரும் உட் கார்ந்து மீட்டிங் போட்டு சோதனையைக் கடுமையாக்கி கள்ளவெடி தயாரிக்க விடாம பண்ணுனாங்க. ஆனாலும், வெம்பக்கோட்டை போலீசார் எங்களுக்கு அனுசரணையா இருக்குறது தெரிஞ்சு, அவங்களுக்குத் தெரியாமலேயே திடீர் சோதனை நடத்த வந்தப்பதான் இது நடந்து போச்சு.
ஆமாங்கய்யா... வந்த அதிகாரிகளுக்கு கருந்திரியப் பத்தி என்ன தெரியும்? பெரிய பெரிய பட்டாசு ஃபேக்டரியிலயே கருந்திரி கழிவுகளை அழிக்கணும்னா, ஃபேக்டரிய விட்டு அரை கிலோமீட்டர் தள்ளி, ஒத்தத் திரிய மட்டும் பிரிச்சு 300 மீட்டர் கொண்டு போயித்தான் - அதுவும் போர்மேனே வச்சுக் கொளுத்திட்டு ஓடிருவாங்க. அப்படி ஒரு டேஞ்சரான கருந்திரிக் குவியல்ல, இங்க சோதனைக்கு வந்தவங்க, ஏதோ குத்துவிளக்கு ஏத்துறமாதிரி சாதாரணமா பத்த வச்சுட்டாங்க. திரில தண்ணி ஊத்தி அத நமுத்துப் போகச் செய்யறதுதான் சரியானது. அத விட்டுட்டு, "இது சாதாரண திரிதான்... கொளுத்திட்டா புசுபுசுன்னு எரிஞ்சு சாம்பலாயிடும்'னு ஒருத்தரு சொல்ல... அப்படின்னா எரிச்சிடுங்கன்னு ஆர்.டி.ஓ. உத்தரவு போட, சுத்தி நின்னு பத்த வச்சவங்களே விபத்துல சிக்க வேண்டியதாப் போச்சு. இனிமே நாங்க என்னத்த தொழில் பண்ணுறது? இந்த வருஷம் சோக தீபாவளிதான்'' என்றார்கள் வருத்தத்தோடு.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் பேசியபோது ""வெம்பக்கோட்டை காவல்நிலையம் குறித்து புகார் எழுந்ததால்தான், அவர்களுக்குத் தெரி யாமலே சோதனைக்குப் போனார்கள் அலுவலர்கள். ஆர்.டி.ஓ. சொல்லுறத வச்சுப் பார்க்கும்போது, உராய்வில்தான் தீப்பற்றியிருக்க வேண்டும். வழக்கமாக இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும் போது சம்பந்தப் பட்ட தொழிலாளர்கள்தான் பலியாவார்கள். இங்கோ வி.ஏ.ஓ. குமார சாமி பலியாகிவிட்டார். போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆர்.ஐ., போலீஸ் காரர்கள்ன்னு இன்னும் 7 பேரு உடலெல்லாம் கருகித் துடிக்கிறத ஆஸ் பத்திரில பார்த்துட்டு...'' வார்த்தையை முடிக்க முடியாமல் கலங்கினார்.
அரசாங்கத்துக்கே ஒரு சவாலாக பட்டாசு தயாரிப்பில் கள்ளத்தன மாக ஈடுபடுவோர் குறித்து "இதுவும் தீவிரவாதம் தான்...', "தேசத்துக்கே திரி வைக்கிறார்கள்' என்னும் தலைப்புகளில் இந்த விதிமீறல்கள் குறித்து ஏற்கனவே எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது நக்கீரன். உரிய விதத்தில் நடவடிக்கை எடுக்காததன் விளைவை அரசு அலுவலர்களே சந்திக்க நேரிட்டது கொடுமையிலும் கொடுமை.
ஒவ்வொரு பட்டாசிலும் திரியைப் பற்ற வைப்பதற்கு முன் "இதைத் தயாரிக்க எந்தத் தொழிலாளியின் உயிர் போனதோ?' என ஒரு நொடி சிந்தித்தாலே போதும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment